என் மலர்
நீங்கள் தேடியது "ஈரோடு ஈ.வி.என். சாலையில்"
- சாலையில் ஒரு பகுதி தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
- இந்த பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் முக்கியமானதாக ஈரோடு ஈ.வி.என். சாலையில் கடந்த சில மாதங்களாக மழை நீர் வடிகால் மற்றும் சாக்கடை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்காக சாலையில் ஒரு பகுதி தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பஸ்கள் ஊர்ந்து ஊர்ந்து செல்ல வேண்டி உள்ளது.
ஈரோடு மாநகராட்சியின் முக்கிய போக்குவரத்து பகுதியாக இந்த சாலை விளங்கி வருகிறது. இந்த சாலையில் தான் அரசு தலைமை மருத்துவமனை, மின்வாரிய அலுவலகம், தனியார் மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள் இருக்கின்றது.
இந்த சாலையில் எப்போதும் கூட்டம் அதிக அளவில் காணப்படும். தற்போது பகலில் நடக்கும் இந்த பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நிற்கின்றன.
தற்போது ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 106 டிகிரி வரை வெயில் பதிவாகி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த நேரத்தில் இந்த திட்டப் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சாலையில் நீண்ட தூரம் வரை அணிவகுத்து நிற்கின்றனர். அப்போது வெயிலின் தாக்கத்தால் மேலும் அவர்கள் கடும் அவதி அடைகின்றனர்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
தற்போது நமது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வருகிறது. இந்த நேரத்தில் ஈ.வி.என் சாலையில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.
இதற்காக ரோடுகள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் இந்த பகுதியை கடந்து செல்வது எங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன.
வெயிலின் தாக்கத்தால் எங்களால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. நாங்கள் சோர்வு அடைந்து விடுகிறோம். பகல் நேரத்தில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.
அதற்கு பதிலாக இரவு நேரத்தில் பணிகள் மேற்கொண்டால் எந்த ஒரு இடையூறும் இருக்காது. இதற்கு வாய்ப்பில்லை என்றால் போக்குவரத்தை சரி செய்ய இங்கு போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.