என் மலர்
நீங்கள் தேடியது "மரங்கள் சேதம்"
- கமுதி அருகே சூறைக்காற்று வீசியதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.
- பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோரைப்பள்ளம், ராமசாமிபட்டி, கிளாமரம், நீராவி மேலராமநதி, காவடிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சூறைக்காற்று வீசியது.
இந்த பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை மரங்கள் நடவு செய்யப்பட்டிருந்தன. அவை அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தன. நேற்று சூறைக்காற்றுடன் பெய்த மழையால் கோரை பள்ளத்தை சேர்ந்த விவசாயி ராமர் என்பவரது தோட்டத்தில் உள்ள 2 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.
இதேபோல் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளான சுப்பிரமணி, கந்தசாமி, வீரமணி ஆகியோரது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்களும் முறிந்து சேதமடைந்தன. சூறைக்காற்றால் அந்த பகுதியில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைமரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
பாறைகுளம் பகுதியில் விவசாயி கருப்பையா என்பவரின் 200-க்கும் மேற்பட்ட எலுமிச்சை மரங்களும் வேரோடு சாய்ந்து நாசமானது. இதன் காரணமாக அதனை பயிரிட்டிருந்த விவசாயிகள் கவலையடைந்தனர். அவர்கள் கூறுகையில், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20ஆயிரம் வரை-செலவு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நாட்டு வாழை மரங்கள் முறிந்தும், வேரோடு சாய்ந்தும் விழுந்து சேதம் அடைந்தன. இதனால் நாங்கள் பெரிதும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். ஆகவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.