என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்சேவை"

    • 18-ம் படி கருப்பணசாமியிடம் உத்தரவு பெற்று இன்று இரவு கள்ளழகர் மதுரை புறப்படுகிறார்.
    • நாளை காலை மூன்று மாவடியில் எதிர்சேவை நடக்கிறது.

    மதுரை

    சித்திரை மாதத்தில் முத்திரை பதிக்கும் உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த ஒரு வாரகாலமாக நடந்து வருகிறது. விழாவின் முத்தாய்ப்பாக நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நாளையுடன் முடிவடையும் நிலையில் அதன் தொடர்ச்சியாக கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா களை கட்ட தொடங்கும்.

    அதன்படி நேற்று முன்தினம் அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு சுந்தர்ராஜ பெருமாளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று தோளுக்கி னியான் பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி வீதிஉலா வந்தார்.

    சித்திரை திருவிழாவில் இன்று இரவு முக்கிய நிகழ்ச்சியாக கள்ளழகர் மதுரைக்கு புறப்படும் வைபவம் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை கள்ளழகர் கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன தொடர்ந்து காலையில் பல்லக்கில் பெருமாள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இன்று இரவு 7மணியளவில் தோளுக்கினியான் என்று அழைக்கப்படும் சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகராக வேடம் தரித்து மதுரை நோக்கி புறப்படுகிறார்.

    முன்னதாக கள்ளழகர் கோவில் காவல் தெய்வமாக கருதப்படும் பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். சன்னதி முன்பு தங்க பல்லக்கில் எழுந்தருளும் கள்ளழகர் கருப்பண்ணசாமிடம் உத்தரவு பெற்று மதுரையை நோக்கி புறப்பாடாகிறார்.

    இதில் மதுரை மட்டுமன்றி சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    கள்ளழகர் மதுரைக்கு புறப்படுவதை முன்னிட்டு அழகர் கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது. கோவில் கோபுரங்கள், மண்டபங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

    இரவு மதுரைக்கு புறப்படும் கள்ளழகர் வழிநெடுகிலும் உள்ள கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் உள்ளிட்ட பகுதியில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்த ருளி அருள் பாலிக்கிறார். இரவு முழுவதும் சுவாமி புறப்பாடு நடைபெறுவதால் அழகர் கோவில் இருந்து மதுரை வரை உள்ள கிராமங்களில் சித்திரை திருவிழா களை கட்ட தொடங்கியுள்ளது.

    நாளை எதிர் சேவை

    கள்ளழகர் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 6மணிக்கு மூன்று மாவடிக்கு தங்கப் பல்லக்கில் வருகிறார். கள்ளழகர் மதுரைக்கு வருவதை வரவேற்கும் வகையில் அங்கு அவரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    நாளை இரவு 9 மணிக்கு கள்ளழகர் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் திருமஞ்சனமாகி குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

    நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 5. 45மணி முதல் 6. 12மணிக்குள் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்ந விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள்.

    அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு வந்து மீண்டும் இருப்பிடம் சேரும் வரை வழிநெடுகிலும் உள்ள 480மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×