search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெக்டொனால்டு"

    • தங்கள் குழந்தை பட்ட அவஸ்தைக்கு நிவாரணம் கேட்டு மெக்டொனால்டு நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
    • மெக்டொனால்டு நிறுவனம் அஜாக்கிரதையாக செயல்பட்டதால் இந்த சம்பவம் நடந்ததாக குற்றச்சாட்டு.

    அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மெக்டொனால்டு உணவகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பிலானா-ஹம்பர்டோ தம்பதியர் சிக்கன் நக்கெட்ஸ் பார்சல் வாங்கி உள்ளனர். பார்சலை பெற்றுக்கொண்டு காருக்கு சென்ற அவர்கள் இருக்கையில் வைத்துள்ளனர். அதில் ஒரு சிக்கன் நக்கெட்ஸ் துண்டு இருக்கையில் சிக்கியிருக்கிறது. அதன்மீது அவர்களின் 4 வயது குழந்தை ஒலிவியாவின் கால் பட்டதால் குழந்தையின் கால் வெந்துள்ளது.

    குழந்தை வலியால் துடித்ததால் பெற்றோர் மிகவும் வேதனை அடைந்தனர். அத்துடன் சூடான சிக்கன் நக்கெட்டை சரியாக பார்சல் செய்து வழங்காத மெக்டொனால்டு நிறுவனத்தின் மீது அவர்களுக்கு கோபம் ஏற்பட்டது. தங்கள் குழந்தை பட்ட அவஸ்தைக்கு நிவாரணம் கேட்டு மெக்டொனால்டு நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    விசாரணையின்போது மெக்டொனால்டு நிறுவனம் அஜாக்கிரதையாக செயல்பட்டதால் இந்த சம்பவம் நடந்ததாகவும், 1.5 கோடி டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஆனால் எந்த தவறும் செய்யவில்லை என நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.

    கடந்த 4 ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கின் வாதங்கள் சமீபத்தில் நிறைவடைந்தது. விசாரணையின் முடிவில், மெக்டொனால்டு நிறுவனம், பாக்கெட்டில் சரியான எச்சரிக்கை வாசகத்தை அச்சிடாததும், பாதுகாப்பற்ற முறையில் உணவை கொடுத்ததும் குழந்தையின் காயத்திற்கு காரணம் என தெரியவந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 8 லட்சம் டாலர் இழப்பீடாக வழங்க வேண்டும் என மெக்டொனால்டு நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன், இனி நக்கெட்சை பாதுகாப்பாக வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    • பருவகால சிக்கல்களினால் தக்காளியை வாங்க முடியவில்லை என மெக்டொனால்டு நிறுவனம் கூறியிருக்கிறது.
    • தக்காளி விலை உயர்வை குறைக்க பல்வேறு மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

    அமெரிக்காவை தளமாக கொண்ட உலகப்புகழ் பெற்ற 'மெக்டொனால்டு' நிறுவனம், இந்தியாவில் உள்ள தனது உணவகங்களின் சில கிளைகளில் தயாரிக்கப்படும் அனைத்து ரெசிபிக்களிலும் குறுகிய காலத்திற்கு தக்காளி பயன்படுத்தப்படாது என அறிவித்திருக்கிறது.

    மெக்டொனால்டின் இந்தியா-வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியின் செய்தித்தொடர்பாளர் கூறும்போது, "தக்காளி கொள்முதலில் ஏற்பட்டிருக்கும் பருவகால சிக்கல்கள் காரணமாக, மெக்டொனால்டின் தயாரிப்புகளில் தக்காளி பயன்படுத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

    அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையில், "உணவின் தரம் மற்றும் பாதுகாப்பில் நம்பகமான ஒரு பிராண்டாக நாங்கள் இருந்து வருகிறோம். கடுமையான சோதனைகளுக்கு பின்னரே பொருட்களைப் பயன்படுத்துகிறோம். இருப்பினும், பருவகால சிக்கல்களினால் தக்காளியை எங்களால் வாங்க முடியவில்லை. எனவே, எங்களின் சில உணவகங்களில் எங்கள் மெனுவில் தக்காளியை பயன்படுத்துவதை நாங்கள் நிறுத்துகிறோம். இது ஒரு தற்காலிக பிரச்சினை. விரைவில் தக்காளியை மீண்டும் எங்கள் மெனுவில் கொண்டு வருவதற்கான அனைத்து வழிகளையும் நாங்கள் ஆராய்கிறோம்" என கூறியிருக்கிறது.

    ரெசிபிகளில் தக்காளியை நீக்கியதற்கு விலையேற்றம் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் தக்காளியை தவிர்ப்பதற்கு, தக்காளியின் விலை உயர்வை காரணமாக மெக்டொனால்ட் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் தக்காளியின் விலை கனமழை காரணமாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தக்காளியின் விலை டெல்லி, கொல்கத்தா, மற்றூம் உத்தரப்பிரதேசம் போன்ற இடங்களில் கிலோ ரூ.130-150 எனும் அளவை எட்டியுள்ளது.

    தக்காளி விலை உயர்வை குறைக்க பல்வேறு மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி அரசு கிலோவுக்கு ரூ.115 என கிடைக்க வழி செய்திருக்கிறது. தமிழகத்தில் நியாய விலைக்கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.60 என மானிய விலையில் விற்கப்படுகிறது.

    மெக்டொனால்டு உணவகம் தக்காளியை தனது தயாரிப்புகளில் இருந்து நீக்குவது இது முதல் முறை அல்ல. 2016 ஆம் ஆண்டில், வட இந்தியா மற்றும் கிழக்கு இந்தியாவில் உள்ள மெக்டொனால்டு கிளைகள், தக்காளியின் தரம் குறைந்ததால் 'பர்கர்' தயாரிப்புகளில் அதனை பயன்படுத்துவதை சில நாட்கள் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • லூயிஸ்வில்லே உணவகத்தில் 10 வயது சிறுவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
    • வேலைக்கு அமர்த்துவதற்கான குறைந்தபட்ச வயதிற்குக் கீழ் உள்ள சிறுவர்கள் பல்வேறு பணிகளை செய்துள்ளனர்.

    அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் உள்ள மெக்டொனால்டு உணவகங்களில் சட்டவிரோதமாக குழந்தைகளை வேலைக்கு அமர்த்தியிருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் மெக்டொனால்டு உணவகங்களில் சுமார் 300 குழந்தைகள் சட்டவிரோதமாக வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து 3 மெக்டொனால்டு உணவகங்களின் உரிமையாளர்களுக்கு 2.12 லட்சம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் லூயிஸ்வில்லே உணவக உரிமையாளரும் ஒருவர்.

    இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை கூறியிருப்பதாவது:-

    லூயிஸ்வில்லே உணவகத்தில் 10 வயது சிறுவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்ததை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்தனர். லூயிஸ்வில்லே பாயர் புட் எல்எல்சி நிறுவனமானது, 10 மெக்டொனால்டு உணவகங்களை நடத்துகிறது. அங்கு 16 வயதுக்குட்பட்ட 24 சிறுவர்களை வேலைக்கு வைத்துள்ளது. அவர்களை அனுமதிக்கப்பட்டதை நேரத்தைவிட அதிக நேரம் வேலை செய்ய வைத்துள்ளது. அவர்களில் இரண்டு பேர் 10 வயது சிறுவர்கள். அவர்கள் சில நேரங்களில் அதிகாலை 2 மணி வரை வேலை செய்துள்ளனர். ஆனால் அதற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வேலைக்கு அமர்த்துவதற்கான குறைந்தபட்ச வயதிற்குக் கீழ் உள்ள சிறுவர்கள், ஆர்டர் செய்யப்படும் உணவுகளைத் தயாரித்து விநியோகிப்பது, கடையை சுத்தம் செய்வது உள்ளிட்ட பல வேலைகளை செய்துள்ளனர்.

    இவ்வாறு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

    தொழிலாளர் நலத்துறை கூறியுள்ள இரண்டு 10 வயது சிறுவர்களும், உணவகத்தின் மேலாளரை பார்க்க வந்த அவரது பிள்ளைகள் என்றும், அவர்கள் வேலை செய்யவில்லை என்றும் உணவக உரிமையாளர் சீன் பாயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    ×