search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாநிதி நூற்றாண்டு விழா"

    • கருணாநிதி பார்க்காத வெற்றி, தோல்வி, அவமானம் கிடையாது.
    • கொள்கை தீரம் கொண்டவர் கருணாநிதி.

    வேலூர்:

    வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக அரங்கத்தில் தமிழியக்கம், வி.ஐ.டி. பல்கலைக்கழகம், பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் மன்றம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது :-

    கருணாநிதி பார்க்காத வெற்றி, தோல்வி, அவமானம் கிடையாது. அவர் வாழ்நாள் மட்டுமின்றி, மறைந்த பிறகும் போராடித்தான் வெற்றியைக் கண்டார். அவரை, இளைஞர்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கருணாநிதி தனது ஆட்சிக் காலத்தில் எத்தனையோ முன்னோடி திட்டங்களைக் கொண்டுவந்தார். அவசர நிலை காலகட்டத்தில் கூட ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்து தனது ஆட்சியை இழந்தவர். அவர் தனது கொள்கைகளை எதற்காகவும், யாருக்காகவும் விட்டுக்கொடுத்ததில்லை."

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழியக்கத்தின் நிறுவனர் தலைவரும், விஐடி வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை தாங்கி பேசும்போது, "ஒரு சாதாரண மனிதரும் வளர்ந்து தலைவராகவும், சாதனைகளை செய்யவும் முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் கருணாநிதி.

    பள்ளிப் படிப்புடன் நின்றுவிட்டாலும் தனது முயற்சியால் தொல்காப்பியத்துக்கு உரை எழுதும் அளவுக்கு தன்னை உயர்த்திக்கொண்டவர்.

    மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் வாய்ப்பை பெற்றுத் தந்தவர் கருணாநிதி. தனது 14 வயதிலேயே அரசியலுக்கு வந்த கருணாநிதி, மிகச்சிறந்த பேச்சாளராக, எழுத்தாளராக, நாடகம், சினிமா வசனகர்த்தாவாகத் திகழ்ந்தார்.

    மத்திய அரசுடன் நல்ல உறவு இருக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்தாலும், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார்" என்றார்.


    நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    "இந்த நிகழ்ச்சியில் கருணாநிதியின் உதவியாளர் நித்யாவை அழைத்திருக்க வேண்டும். இன்னொன்று காருணாநிதிக்கு வி.ஐ.டி.யில் சிலை வைக்க வேண்டும்.

    சாதாரண குடும்பத்தில் பிறந்த கருணாநிதி, இன்று அகில இந்திய அளவில் போற்றக்கூடிய தலைவராக வளர்ந்துள்ளார் என்றால் அதற்கு கொள்கை பிடிப்புதான் காரணம்" என்றார்.

    'இங்கிருக்கும் இளைஞர்கள் நிகழ்கால பங்களிப்பு என்ன? எதிர்கால பயன்-என்ன என்று சிந்திக்க வேண்டும். அதற்கு கருணாநிதியை நீங்கள் பின்பற்றலாம். அவர் வயது தாண்டி சாதனை புரிந்தவர்.

    தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற அமைப்பை தனது 16 வயதில் தொடங்கினார். 23-வது வயதில் சினிமாவுக்கு வசனம் எழுத சென்றார்.

    வாழ்வில் இளம் வயதிலேயே தங்களுடைய செயல்பாட்டை தொடங்க வேண்டும். பள்ளிக்கூட படிப்பை தாண்டாதவருக்கு இன்று பல்கலைக்கழகமே விழா எடுக்கிறது. கொள்கை தீரம் கொண்டவர் கருணாநிதி. சாகும் வரை பகுத்தறிவாளராக இருந்தவர்.

    1969-ல் அண்ணாதுரை இறந்த போது அவரது உடலை வாங்க குடும்பத்தினர் வந்தனர். சமய நெறிப்படி அவரை அடக்கம் செய் யப்போவதாக கூறினார்கள். ஆனால், அதற்கு உடன்பட மறுத்து அவர் மீது படுத்து 'அண்ணாதுரை குடும்ப சொத்தல்ல, அரசாங்கத்தின் சொத்து' என்று தடுத்து அவருக்கு இறுதி மரியாதை செய்ய வைத்தவர் கருணாநிதி. அதனால்தான் அண்ணா சமாதி இருக்கிறது. கருணாநிதி இல்லை என்றால் அது இருந்திருக்காது.

    பலர் இன்று கட்சி ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒருவர் வெற்றி பெற தொண்டர்கள், கட்டமைப்பு, பலம், பணம் என்று எதுவும் தேவையில்லை. சரியான எதிரி இருந்தால்தான் வெற்றி கிடைக்கும்.

    திராவிடம் வெற்றி பெற காரணம் ஆரியம். எம்ஜிஆர் வெற்றி பெறுவதற்கு எதிராக கருணாநிதி இருந்தார். கருணாநிதியால் தான் எம்ஜிஆர் வளர்ந்தார். அவருக்கு நண்பராகவும், எதிரியாகவும் கருணாநிதி இருந்தார்.

    சிலருக்கு எதிரி தானாக வருவார்கள், கருணாநிதி எதிரிகளை உருவாக்கினார். அதில் வெற்றியும் பெற்றார். இக்கால இளைஞர்கள் அவரிடம் எதிரியை எப்படி கையாள்வது, நீண்டநாள் வாழ்வது, துணிச்சலுடன் வாழ்வது, உழைப்பது போன்ற பாடங்களை கற்க வேண்டும்' என்றார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய வாழ்த்துக் கடிதம் வாசிக்கப்பட்டது. முன்னதாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி உடன் இருந்த அலுவலர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கருணாநிதி முதலமைச்சர் ஆவதற்கு எம்.ஜி.ஆர். தான் முழுக்க முழுக்க காரணம்.
    • முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அவர்கள் எழுதிக்கொடுத்த உரையை அப்படியே படித்துவிட்டு செல்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    அண்ணாவுக்கு பிறகு தி.மு.க.வில் யார் முதலமைச்சராக வரவேண்டும் என்ற பிரச்சனை வந்தபோது, எல்லோரும் நாவலர் நெடுஞ்செழியனை சொல்லும்போது, எம்.ஜி.ஆர்.தான், முரசொலி மாறன் உள்ளிட்டோர் வந்து கேட்டதற்கு இணங்க நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோரிடம் பேசி கருணாநிதியை முதலமைச்சராக தேர்வு செய்ய செய்தார்.

    எனவே, கருணாநிதி முதலமைச்சர் ஆவதற்கு எம்.ஜி.ஆர். தான் முழுக்க முழுக்க காரணம். இதை கருணாநிதி எங்கள் தங்கம் திரைப்பட விழாவிலேயே சொல்லி இருக்கிறார். இது தான் வரலாறு.

    ஆனால், கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், ஏதோ கருணாநிதியை புகழ வேண்டும் என்பதற்காக தவறாக வரலாற்றை மறைத்து பேசியது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதே போன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடத்தினார்கள். அங்கு 50 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்ட நிலையில் 899 பேர் தான் விழாவிற்கு வந்துள்ளனர். இதைவிட கருணாநிதியை கேவலப்படுத்தியது உலகத்தில் எதுவுமே இருக்காது. இந்த விழாவில், முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அவர்கள் எழுதிக்கொடுத்த உரையை அப்படியே படித்துவிட்டு செல்கிறார்கள். அதாவது, கருணாநிதியால் உயர்ந்தவர் தான் எம்.ஜி.ஆர். என்று கூறுகிறார்கள். இதனை தமிழ்நாடு ஏற்குமா? எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஏற்பார்களா?

    எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருக்கும் வரை கருணாநிதி பதவியில் இருந்தார். தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியே வந்த பிறகு கருணாநிதியால் அமைச்சராகவோ, முதலமைச்சராகவோ ஆகமுடியவில்லை. 11 ஆண்டுகள் வனவாசம் அனுப்பி வைத்த மாபெரும் தலைவர் தான் எம்.ஜி.ஆர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மனித உணர்வுகளில் இயல்பாய் கலந்திருப்பது கலை.
    • இசை எங்கும் நிறைந்திருப்பதைப் போல, உலகம் முழுவதும் கலைஞர் எங்கும் நிறைந்திருக்கிறார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, கலைஞர்-கலைஞர் குழு சார்பில் 'இசையாய் கலைஞர்' என்ற நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:-

    கலைஞரின் நூற்றாண்டையொட்டி அரசு ஒரு புறமும் தி.மு.க. இன்னொரு புறமும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கும் 'கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்' என்றே பெயரிடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இந்த மூன்று மாதங்களில், இளைஞர் அணி சார்பில், 15 கலைஞர் நூலகங்களை தமிழ்நாட்டில் உள்ள 15 சட்டமன்றத் தொகுதிகளில் திறந்திருக்கிறோம். அதற்கு இளைஞர் அணியினருக்கு இந்த நேரத்தில் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மனித உணர்வுகளில் இயல்பாய் கலந்திருப்பது கலை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவனையும் அறியாமல் ஒரு கலையுணர்வு இருக்கும் என்று சொல்வார்கள். இந்த நிகழ்ச்சிக்கு 'இசையாய் கலைஞர்' என்பது மிகமிக பொருத்தமான தலைப்பு.

    எனக்கு இதற்கு முன்பெல்லாம் புத்தகம் படிக்கும் பழக்கமில்லை. இதைச் சொல்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. கோவிட் காலத்தில் எல்லோரும் வீட்டில் அடங்கி இருந்தோம். அப்போதுதான் புத்தகங்கள் அதிகம் வாசித்தேன். இயக்குநர் கரு பழனியப்பன் நிறைய புத்தகங்கள் தந்து வாசிக்கச் சொல்வார்.

    கலைஞரின் 90-வது பிறந்தநாளின்போது, கவிப்பேரரசு வைரமுத்துவின் ஏற்பாட்டில் 90 கவிஞர்கள் கலைஞரை சந்தித்து வாழ்த்தினார்கள். அப்போது, யுகபாரதி அவர் எழுதிய 'நேற்றைய காற்று' புத்தகத்தை கலைஞருக்கு பரிசாக கொடுத்தார்.

    அந்த புத்தகத்தை வாங்கிக்கொண்ட கலைஞர், இது என்ன புத்தகம் என்று கேட்கிறார். பாடலாசிரியர்களை பற்றிய புத்தகம் என்று யுகபாரதி சொல்கிறார்.

    உடனே, 'இதில் நானிருக்கிறேனா' என்று கலைஞர் கேட்கிறார். 'நீங்க இல்லாமலா?' என்று பதில் சொல்கிறார் யுகபாரதி.

    இசைக்கு என்னென்ன குணங்கள் இருக்கிறதோ அந்த குணங்கள் அனைத்தும் கலைஞரிடம் இருந்தது.

    இசைக்கு நல்ல குரல் வளம் தேவை. ஏறத்தாழ 80 ஆண்டுகள் தமிழர்களை ஆட்கொண்டது 'உடன்பிறப்பே'என்றழைத்த கலைஞரின் வெண்கலக்குரல் தான். இசை எங்கும் நிறைந்திருப்பதைப் போல, உலகம் முழுவதும் கலைஞர் எங்கும் நிறைந்திருக்கிறார்.

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ், வாகை சந்திரசேகர், உறுப்பினர் செயலர், மேயர் பிரியாராஜன், எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், தாயகம் கவி, அரவிந்த் ரமேஷ், மயிலை வேலு, காரம்பாக்கம் கணபதி, ஜெ.கருணாநிதி, கே.பி.சங்கர், ஐட்ரீம் மூர்த்தி, எபினேசர், பிரபாகரராஜா, துணைமேயர் மகேஷ்குமார், மாவட்ட செயலாளர்கள் சிற்றரசு, இளைய அருணா, மகளிர் ஆணைய தலைவர் குமரி விஜயா, உள்பட கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கலைஞர் சினிமாவிலேயே இருந்திருந்தால், இன்னும் பல எம்.ஜி.ஆர்.களையும் சிவாஜிகளையும் உருவாக்கி இருப்பார்.
    • பிரசார காலங்களில் மு.க.ஸ்டாலினின் பேச்சை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ரசித்த ரசிகர்களில் நானும் ஒருவன்.

    சென்னையில் நடந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசியதாவது:-

    கலைஞர் சினிமாவிலேயே இருந்திருந்தால், இன்னும் பல எம்.ஜி.ஆர்.களையும் சிவாஜிகளையும் உருவாக்கி இருப்பார். ஆனால் சினிமா உலகம் கொடுத்து வைக்கவில்லை. அவரை அரசியல் எடுத்துக்கொண்டது. எழுத்து, பேச்சில் வித்தகராக திகழ்ந்தவர் கலைஞர். எழுத்து இல்லையென்றால் மதம், புராணம், வரலாறு, விஞ்ஞானம், வர்த்தகம், கதை, கவிதை, அரசு என எதுவும் இல்லை. இயற்கை கொடுத்த சக்தி எழுத்து. அவரது வசனத்தில் நான் நடிக்கவே பயந்த காலம் உண்டு.

    மு.க.ஸ்டாலினை 1974-ல் இருந்து எனக்கு தெரியும். பிரசார காலங்களில் மு.க.ஸ்டாலினின் பேச்சை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ரசித்த ரசிகர்களில் நானும் ஒருவன். எம்.ஜி.ஆர்., சிவாஜியை தனது எழுத்தால் உச்ச நடிகர்களாக்கினார். மந்திரிகுமாரி, மலைக்கள்ளன் படங்கள் மூலமாக கிடைத்த வருமானத்தை கொண்டு சென்னை கோபாலபுரத்தில் வீடு வாங்கினார். அந்த வீட்டில் தான் இறுதிகாலம் வரை எளிமையாக வாழ்ந்தார். அவரை போல மு.க.ஸ்டாலினும் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார்.

    தன்னை விமர்சனம் செய்த எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு மருத்துவ உதவிக்கு பணம் கொடுத்து உதவி செய்தவர் கலைஞர். தன்னை மிக மோசமாக விமர்சனம் செய்த பத்திரிகையாளரை நலம் விசாரித்தே, தலை வணங்கச் செய்தவர் கலைஞர். அந்த பத்திரிகையாளர் பெயர் சோ ராமசாமி, பொதுக்கூட்டத்தில் அவரை விமர்சனம் செய்த கட்சிக்காரரை கண்டித்து அடக்கியவர் எம்.ஜி.ஆர். கடவுள் நம்பிக்கைக்காரரான ஆன்மீகவாதி சத்ய சாய்பாபா, கலைஞரை வீடு தேடி சென்று சந்தித்து பேசினார்.

    எல்லாவற்றையும் விட தேர்தலின்போது இரட்டை இலைக்கு ஒரு முன்னணி நடிகர் ஓட்டு போட்டார். ஆனால் அவர் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டது தெரிந்தும் அவரது புதிய படத்தை பார்க்க கலைஞர் அவருக்கு அழைப்பு விடுத்தார். குளிர் ஜுரம் என்று சொல்லியும் அந்த நடிகரை கட்டாயமாக அழைத்து படத்தைப் பார்த்தார். அந்த நடிகர் நான்தான். சூரியன் பக்கத்தில் அமர்ந்தால் குளிர் ஜுரம் போய்விடும் என்று நகைச்சுவையாக அவர் அன்று பேசியதை என்னால் மறக்கவே முடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது எனது பாக்கியம் என்று பேசினார்.

    • குறை சொல்வது நிவாரண பணிகளில் ஈடுபட்ட பல ஆயிரம் தொழிலாளர்களை கொச்சைப்படுத்துவது போன்றதாகும்.
    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசால் எவ்வளவு உதவிகள் செய்ய முடியுமோ, அத்தனையும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    கோவை:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலைக்கல்லூரியில் இன்று கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.

    இதற்காக கோவை வந்த அப்பாவு, விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கலைஞர் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் இன்று பள்ளி, கல்லூரி என 2 இடங்களில் கருத்தரங்கம் நடக்கிறது.

    சென்னையில் நடந்த மழை வெள்ள நிவாரண பணிகளை பொதுமக்கள் பாராட்டி உள்ளனர். நேற்று பாதிக்கப்பட்ட இடங்களை மத்தியக்குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி பாராட்டி உள்ளனர்.

    இதனால் குறை சொல்பவர்கள் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். குறை சொல்வது நிவாரண பணிகளில் ஈடுபட்ட பல ஆயிரம் தொழிலாளர்களை கொச்சைப்படுத்துவது போன்றதாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசால் எவ்வளவு உதவிகள் செய்ய முடியுமோ, அத்தனையும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மந்திரி, விரைவில் நிவாரண நிதியை தமிழகத்துக்கு பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மழை வெள்ளம் காரணமாக கருணாநிதி நூற்றாண்டு விழா ஜனவரி 6-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • ஜனவரி 5, 6-ந்தேதிகளில் படப்பிடிப்பு உள்பட அனைத்து பணிகளும் உள்ளூர், வெளியூர் என எங்கும் நடைபெறாது.

    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் திரையுலகம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி நடைபெறும் 'கலைஞர் - 100' என்ற விழா, வருகிற 24-ந்தேதி சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது மழை வெள்ளம் காரணமாக இந்த விழா, ஜனவரி 6-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    எனவே ஏற்கனவே விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த 23, 24-ந்தேதிகளில் படப்பிடிப்பு நடத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது. ஜனவரி 6-ந்தேதி விழா நடைபெறுவதையொட்டி, ஜனவரி 5, 6-ந்தேதிகளில் படப்பிடிப்பு உள்பட அனைத்து பணிகளும் உள்ளூர், வெளியூர் என எங்கும் நடைபெறாது

    மேலும் ஜனவரி 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடன காட்சிகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கட்டாய அவசியம் இருந்தால், சிறப்பு அனுமதி பெற்று பாடல் காட்சிகள் அமைக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி, கமல் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டது.
    • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 24-ந்தேதி நடைபெற இருந்த ‘கலைஞர் 100 விழா’ தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் 'கலைஞர் 100 விழா' பிரமாண்டமாக நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.

    அதன்படி தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும்விதமாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் 'கலைஞர் 100 விழா' பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி, கமல் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்பட்டது.

    இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 24-ந்தேதி நடைபெற இருந்த 'கலைஞர் 100 விழா' தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந்தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

    மிச்சாங் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • ஆயிரம் கொடிகள் இருந்தாலும் தி.மு.க. கொடிக்கென்று தனி சிறப்பு உண்டு.
    • இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் இருப்பதால் அவர்கள் நமக்கு அந்நியர்கள் போல் இருக்கிறார்கள்.

    திருச்சி:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்சி-கரூர் பைபாஸ்சாலையில் குடமுருட்டி அருகில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. விழாவில் தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு, கல்வெட்டை திறந்து வைத்து, கொடியை ஏற்றி வைத்தார்.

    இதனை தொடர்ந்து கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. அணிகளுக்கான கருத்துரை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசியதாவது:-

    100 அடி உயர கொடிக்கம்பத்தை முதன்முதலில் இங்கு பார்த்து அசந்து போனேன். ஆயிரம் கொடிகள் இருந்தாலும் தி.மு.க. கொடிக்கென்று தனி சிறப்பு உண்டு. இது கலைஞரின் ரத்தத்தில் உருவான கொடி என பலமுறை பேசி உள்ளேன். 100 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடி பறப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தி.மு.க. முதன்முதலில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்து அறிவிக்கப்பட்ட இடம் திருச்சி தான். திருச்சியை தலைநகராக்க வேண்டும் என எம்.ஜி.ஆர். விரும்பினார். எனக்கு அ.தி.மு.க. பிடிக்காவிட்டாலும், அந்த கருத்து பிடித்து இருந்தது.

    இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் இருப்பதால் அவர்கள் நமக்கு அந்நியர்கள் போல் இருக்கிறார்கள். இந்தியாவின் தலைநகரம் ஐதராபாத்தில் தான் இருக்க வேண்டும். அதேபோல் தமிழகத்தின் தலைநகரம் மத்தியில் தான் இருக்க வேண்டும். அதற்கு திருச்சி தான் சரியாக இருக்கும். அப்படியும் ஒரு காலத்தில் நிகழும். தி.மு.க.வுக்கு வந்த சோதனைகள் போல் மற்ற கட்சிகளுக்கு வந்து இருந்தால், இந்நேரம் அந்த கட்சிகள் அழிந்து போய் இருக்கும்.

    தி.மு.க. தொண்டர்கள் தான் கட்சியின் காவல் தெய்வங்கள். எமர்ஜென்சியை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய ஒரே கட்சி தி.மு.க.தான். தற்போதைய தி.மு.க. தலைமை வருங்கால தலைமையை உருவாக்குமானால், அந்த தலைவரையும் எனது தோள் மீது வைத்து தாங்குவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகனுக்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது.

    • பரமக்குடியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் தி.மு.க. கட்சி கொடியை எம்.எல்.ஏ. ஏற்றி வைத்தார்.
    • வடக்கு நகர செயலாளர் ஜீவரத்தினம் வரவேற்றார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா வடக்கு நகர் கழகம் சார்பில் 8-வது வார்டு பகுதியில் நடந்தது. இதையொட்டி தி.மு.க. கொடி கம்பம், கல்வெட்டு அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கொடி யேற்றும் நிகழ்ச்சி முருகேசன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. கட்சி கொடியினை ஏற்றி வைத்து கல்வெட்டை திறந்து வைத்தார். பின்னர் பொது மக்கள், கட்சியினருக்கு இனிப்பு களை வழங்கினார். வடக்கு நகர செயலாளர் ஜீவரத்தினம் வரவேற்றார்.

    இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் அருளானந்த், போகலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிரவன், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் செல்வி, சர்மிளா, நகர் மன்ற உறுப்பினர்கள் அப்துல் மாலிக், பாக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
    • எழுத்தாளர்-கலைஞர் குழுவின் மூலம் அவரது புகழ்பாடும் "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி தயார் செய்யபட்டு உள்ளது.

    கன்னியாகுமரி:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு நிலையான பங்களிப்பைத் தரவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்படவேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 12 குழுக்களை அமைத்து உத்தரவிட்டார். அதில், "எழுத்தாளர்-கலைஞர்" குழு, படைப்புலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிமாணங்களைப் போற்றும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில், கருணாநிதியின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு அவரது பன்முகத் தன்மையினை எடுத்து சொல்லும் வகையில், எழுத்தாளர்-கலைஞர் குழுவின் மூலம் அவரது புகழ்பாடும் "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி தயார் செய்யபட்டு உள்ளது.

    இந்த முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த முத்தமிழ் தேர்அலங்கார ஊர்தி பயணத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு உள்ள முக்கோணப்பூங்கா அருகில் இன்று காலை நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

    அமைச்சர்கள் கே.ஆர். பெரியகருப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முரசு கொட்டி அலங்கார ஊர்தி பயணத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அவர்கள் முத்தமிழ் தேர் உள்பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். அங்கு கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதனை சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் பார்த்து ரசித்தனர்.

    "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு சீரோ பாய்ண்ட், பழத்தோட்டம், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வழியாக அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந்தேதி சென்னை சென்றடைகிறது.

    தொடக்க விழாவில் விஜய் வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணை செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வக்கீல் தாமரைபாரதி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சமூகத்துறை ஆணையர் அமுதவல்லி நன்றி கூறினார்.

    • வாழ்த்தரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ் தலைமையில் கொரட்டூரில் நடைபெற்றது.
    • நடிகர், நடிகை கலந்து கொண்டு கருணாநிதியின் திரையுலக பணிகள் குறித்து பேசினர்.

    அம்பத்தூர்:

    கருணாநிதி நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு அம்பத்தூர் வடக்கு பகுதி தி. மு.க. சார்பில் "திருநாட்டின் அரும் தலைவர், "திசை மாற்றிய திரைக் கலைஞர்" என்ற தலைப்பில் வாழ்த்தரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ் தலைமையில் கொரட்டூரில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் பிரியா, திரைப்பட இயக்குனர் மிஸ்கின், நடிகர் அஜய் ரத்தினம், நடிகை கோவை சரளா, பேராசிரியர் ஜெயவர்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருணாநிதியின் திரையுலக பணிகள் குறித்து பேசினர்.

    இதில் ஜோசப் சாமூவேல் எம். எல் ஏ., மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி, தெற்கு பகுதி செயலாளர் டி.எஸ்.பி.ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் பொன்முடி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து கபடி வீரர்களுடன் கபடி விளையாடினார்.

    விழுப்புரம்:

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    விழாவிற்கு விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் பொன்முடி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து கபடி வீரர்களுடன் கபடி விளையாடினார்.

    இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஹரிதாஸ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    ×