search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழங்குடி இன பெண்"

    • பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
    • பாராட்டு தெரிவிக்கும் வகையில் பணத்தை வழங்கியதாக கூறினார்.

    புதுடெல்லி:

    ஒடிசா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்ற நிலையில் மொத்தமுள்ள 147 இடங்களில் பா.ஜ.க. 78 இடங்களை கைப்பற்றியது.

    இதன் மூலம் ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளத்தின் 24 ஆண்டுகால ஆட்சியை பா.ஜ.க. முடிவுக்கு கொண்டு வந்தது. அதைத்தொடர்ந்து அங்கு மோகன் சரண்மாஜி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஒடிசாவில் சுந்தர்கர் மாவட்டத்தில் பா.ஜ.க. கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் பைஜயந்த் ஜெய்பாண்டா கலந்து கொண்டார்.

    அப்போது அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர், பைஜயந்த் ஜெய்பாண்டாவிடம் 100 ரூபாய் கொடுத்து பிரதமர் மோடிக்கு அனுப்புமாறு கூறியதோடு, பிரதமர் மோடிக்கு நன்றியையும் தெரிவித்தார்.

    அவரிடம் பைஜயந்த் ஜெய்பாண்டா பிரதமருக்கு நன்றி தெரிவித்தால் போதும், பணம் அவசியம் இல்லை என வலியுறுத்திய போதும், அந்த பெண் தனது நன்றியை தெரிவிக்க இந்த பணத்தை பிரதமருக்கு அனுப்புமாறு கூறினார்.

    மேலும், பழங்குடி சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் மோடியின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அந்த பணத்தை வழங்கியதாக அவர் கூறினார்.

    இது தொடர்பான புகைப்படத்தை பைஜயந்த் ஜெய்பாண்டா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அதோடு அந்த பெண்ணின் நேர்மையையும், அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், எங்கள் தலைமையின் மீது மக்கள் கொண்டுள்ள நல்ல மாற்றங்களுக்கும், நம்பிக்கைக்கும் இந்த சைகை ஒரு சான்றாகும் என்றார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், எப்போதும் என்னை ஆசீர்வதிக்கும் எங்கள் நாரி சக்திக்கு தலை வணங்குகிறேன். அவர்களின் ஆசீர்வாதங்கள் என்னை விக்சித் பாரதத்தை உருவாக்க உழைக்க தூண்டுகின்றன என்று பதில் அளித்துள்ளார்.

    • ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதாக பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
    • உறவினர்கள் அடித்து உதைத்து அருகில் இருந்த காட்டுப் பகுதிக்கு வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர்.

    ராஞ்சி:

    தாங்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய மறுத்ததால் 24 வயது பழங்குடி இன பெண்ணை உறவினர்கள் கொடூரமான முறையில் சித்ரவதை செய்த சம்பவம் ஜார்க்கண்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    அம்மாநிலத்தில் உள்ள பலமு அருகே ஜோகிடிஹ் கிராமத்தை சேர்ந்த 24 வயது பழங்குடி இன இளம் பெண்ணின் பெற்றோர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர்.

    இதையடுத்து அந்த பெண் தனது சகோதரர் மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வந்தனர். இதற்காக ஒரு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தனர். ஆனால் இந்த திருமணத்துக்கு இளம் பெண் மறுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் தாங்கள் பார்த்த மாப்பிள்ளையை தான் நீ திருமணம் செய்யவேண்டும் என வற்புறுத்தினார்கள். ஆனாலும் அந்த பெண் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

    இதையடுத்து அவரை உறவினர்கள் அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். தொடர்ந்து அவர்கள் தினமும் கொடுமைபடுத்தி வந்ததால் அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் ஒருவர் வீட்டில் தஞ்சம் அடைந்தார்.

    இதையறிந்த அவரது சகோதரர்கள் அவரை மீட்டு மீண்டும் தங்களது கிராமத்துக்கு அழைத்து வந்தனர். அந்த பெண் வேறு யாரையாவது காதலிக்கலாம் என்றும் அதனால் திருமணத்துக்கு மறுக்கிறார் என்றும் அந்த கிராம மக்கள் கூறினார்கள். இதையடுத்து அந்த பெண் ஊர்பஞ்சாயத்து முன்பு நிறுத்தப்பட்டார்.

    அவரிடம் உன் காதலன் யார்? அவன் பெயரை சொல். எதற்காக திருமணம் வேண்டாம் என சொல்கிறாய் என பஞ்சாயத்தார் கேட்டனர்.

    ஆனால் இதற்கு எதுவும் பதில் அளிக்காமல் பஞ்சாயத்து முன்பு அந்த பெண் அமைதியாக நின்றார். இதனால் ஊரை விட்டு அவர் ஒதுக்கி வைக்கப்படுவதாக பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன் பிறகு அவரது உறவினர்கள் செய்த செயல் தான் மிகவும் கொடூரமானது. அந்த பெண்ணின் தலையை மொட்டையடித்து கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

    இதனால் அந்த பெண் ஊரார் மத்தியில் கூனி குறுகி போனார். அவரை உறவினர்கள் அடித்து உதைத்து அருகில் இருந்த காட்டுப் பகுதிக்கு வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர்.

    அதன்பிறகு அங்குள்ள இலுப்பை மரத்தில் கட்டி வைத்துவிட்டு சென்றுவிட்டனர். இரவு முழுவதும் அந்த பெண் சாப்பாடு, தண்ணீர் எதுவும் இல்லாமல் ஆள் நடமாட்டம் அற்ற காட்டுப்பகுதிக்குள் தவித்தார்.

    சத்தம் போட்டால் உதவிக்கு யாரும் வராத அடர்ந்த காட்டுப்பகுதி அது. இந்த சூழ்நிலையில் காலை நேரம் காட்டுக்குள் சிலர் ஆடு, மாடு மேய்க்க சென்றனர். அவர்கள் இளம்பெண் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் கைகளில் கட்டப்பட்டு இருந்த கயிறை அவிழ்த்துவிட்டனர்.

    இது பற்றி உள்ளூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டனர். மிகவும் சோர்வாக இருந்த அவரை அங்குள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மருத்துவ பரிசோதனையில் அந்த பெண்ணின் உடலில் மர்ம உறுப்பு உள்பட பல இடங்களில் பலத்த காயம் இருந்தது தெரியவந்தது. இதனால் அப்பெண் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    ×