search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டுப்புழு வளர்ப்பு"

    • விவசாயிக்கு கை கொடுத்து உதவும் தொழிலாக பட்டுப்புழு வளர்ப்பு உள்ளது
    • வீரியம் இல்லாத புழுக்களே விவசாயிகளுக்கு கிடைப்பதாக குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

    உடுமலை : 

    பல்வேறு இடர்பாடுகளால் சாகுபடி பணிகளை திறம்பட செய்ய இயலாமல் தவித்து வருகின்ற விவசாயிக்கு கை கொடுத்து உதவும் தொழிலாக பட்டுப்புழு வளர்ப்பு உள்ளது. குறைவான நாட்களில் மாதந்தோறும் வருமானம் ஈட்டலாம் என்பதால் வழிமுறை தெரிந்த விவசாயிகள் தகுந்த பயிற்சி பெற்று அதிகாரிகளின் வழிகாட்டுதல், உதவியுடன் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாக இளம்புழுக்கள் உற்பத்தி மையங்களில் மத்திய மாநில அரசு அதிகாரிகள் உரிய ஆய்வு செய்யாததால் தரமற்ற முட்டை, வீரியம் இல்லாத புழுக்களே விவசாயிகளுக்கு கிடைப்பதாக குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

    புழுக்களின் நிலையை விவசாயிகள் கண்டறிய முடியாது என்பதால் இளம்புழுக்கள் மையத்தில் கொடுக்கப்படும் முட்டை தொகுப்பை கொண்டு வந்து பராமரிப்பு செய்து வருகின்றனர்.

    அவை உற்பத்தியை எட்டும் நிலையில் கூடு கட்டாமல் இறந்து வருகிறது. இதனால் இலவு காத்த கிளி போல் இறுதியில் பலன் கிடைக்கும் என்று காத்திருந்த விவசாயிக்கு சொல்லில் அடங்காத அளவிற்கு இழப்பு ஏற்பட்டு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இது குறித்து உடுமலை கண்ணம்மநாயக்கனூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    பல்வேறு பகுதியில் இருந்து பெறப்படும் முட்டைகளை தனியார் இளம் புழுக்கள் மையம் வளர்த்து முட்டை தொகுப்பாக விவசாயிக்கு அளிக்கிறது.அதை வாங்கி வந்து இரவு பகலாக கண்விழித்து பாதுகாத்து பராமரிக்கின்றோம். சாகுபடி பணியில் நஷ்டம் அடைந்த விவசாயிகள் மாற்றுத் தொழிலாக பட்டு வளர்ப்பு உள்ளது. மாதந்தோறும் ஓரளவுக்கு வருமானம் கிடைக்கும் என்பதால் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றோம்.

    ஆனால் கடந்த சில மாதங்களாக விவசாயிகளுக்கு தரமற்ற முட்டை, வீரியமில்லாத புழுக்கள் வழங்கப்படுகிறது. புழுக்களாக வாங்கி வரும் போது விவசாயிகளுக்கு குறைபாடுகள் தெரியாது.புழுக்கள் வளர்ந்து கைக்கு வருமானத்தை அளிக்கக்கூடிய நிலையிலேயே இந்த விவரம் தெரிய வரும்.

    அப்போது விவசாயியின் மொத்த உழைப்பு, காலநேரம் வீணாகி விடுகிறது. கடந்த ஆண்டு வரை இன்சூரன்ஸ் பணத்தை அரசே செலுத்தி வந்தது. இந்த ஆண்டில் எங்கள் தரப்பில் செலுத்தினோம். ஆனால் அதுவும் முறைப்படி கிடைக்கவில்லை. இதனால் பட்டுப்புழு வளர்ப்பில் மொத்த நஷ்டமும் விவசாயிகள் சுமக்க வேண்டி உள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தால் முழுக்க முழுக்க பாதிக்கப்படுவது விவசாயிகள் தான்.துறையின் பெயரில் தான் வளர்ச்சி உள்ளது தவிர விவசாயின் உழைப்பு வாழ்வாதாரம் தேய்ந்து வருகிறது.

    இதனால் அதிகாரிகள் அரசு மற்றும் தனியார் இளம்புழுக்கள் வளர்ப்பு மையத்தில் உரிய முறையில் ஆய்வு செய்து தரமான முட்டை, வீரியம் உள்ள புழுக்களை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு முன் வர வேண்டும்.மேலும் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சர்வதேச அளவில் பட்டு உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.
    • 713 விவசாயிகள் பட்டுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தென்காசி:

    பட்டுப்புழு வளர்ப்புத் தொழில் விவசாயம் சார்ந்த மாத வருமானமும், வேலை வாய்ப்பும் தரக்கூடிய ஒரு தொழில் ஆகும். சர்வதேச அளவில் பட்டு உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. மத்திய பட்டு  வாரியம் மற்றும் தமிழக அரசு பட்டுத்தொழில் வளர்ச்சிக்கு குறிப்பாக வெண்பட்டு (பைவோல்டைன்) உற்பத்தியை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    பட்டுத்தொழில்

    தென்காசி மாவட்டம் தென்காசியை தலைமை யிடமாக கொண்டு உதவி இயக்குநர் அலுவலகமும் 4 தொழில்நுட்ப சேவை மையங்களும் செயல்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் பட்டுத்தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வருமானம் உயர்வடைவதற்கு உறுதுணை யாக இருந்து வருகிறது. இம்மாவட்டத்தில் மொத்தம் 1658.50 ஏக்கர் பரப்பளவில் 713 விவசாயிகள் மல்பெரி சாகுபடி செய்து பட்டுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குவதுடன் வங்கிக் கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    உதவித்தொகை

    அதன்படி கடந்த 2022-2023-ம் ஆண்டில் மாநிலத்திட்டத்தில் நடவு மானியம் 160.00 ஏக்கர் 79 பயனாளிகளுக்கு உதவித்தொகையாக ரூ. 16.80 லட்சம், தனிபுழு வளர்ப்பு மனை அமைத்தல் 16 பயனாளிகளுக்கு உதவித்தொகையாக ரூ. 19.20 லட்சம் மற்றும் 10.50 மதிப்பில் புழு வளர்ப்பு தளவாடங்கள் 20 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மத்திய பகுதி திட்டத்தின்கீழ் நடவு மானியம் 2000 ஏக்கர் 20 பயனாளிகளுக்கு உதவித்தொகையாக ரூ. 7.73 லட்சம், தனிபுழு வளர்ப்பு மனை அமைத்தல் 20 பயனா ளிகளுக்கு உதவித்தொகையாக ரூ. 61.80 லட்சம், 11.59 லட்சம் மதிப்பில் புழு வளர்ப்பு தளவாடங்கள் 20 பயனாளிகளுக்கும் மற்றும் 0.77 லட்சம் மதிப்பில் கிருமிநாசினிகள் 20 பயனாளி களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் பட்டுக்கூடு உற்பத்தியாளர்களே தொழில் முனைவர் நோக்கத்தை நிறைவேற்றும் வண்ணம் அடைக்கலப்பட்டணம் ஊரை சேர்ந்த ஜேக்கப் என்ற பட்டு விவசாயினை இத்துறை மூலமாக பலமுனை பட்டு நூற்பு ஆலை அமைத்திட மானியம் வழங்கப்பட்டு தரமான பட்டு நூல்கள் உற்பத்தி செய்து கூடுதலான வருமானம் ஈட்டி வருகிறார்.

    நிகழ்ச்சியில் பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நிஷாந்தி, பட்டு ஆய்வாளர் ஜெயந்தி, தொழில்நுட்ப உதவியாளர் பிரபு, உதவி பட்டு ஆய்வாளர்கள் ஆபேல்ராஜ் மற்றும் பலவேசம்மாள், இளநிலை பட்டு ஆய்வாளர்கள் சைமன் அருள்ஜீவராஜ், சங்கரன் மற்றும் காளிதாஸ் ஆகியோர்களுடன் ராமசுப்பிரமணியன் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்.

    ×