search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஷ்டிரிய ஜனதா தளம்"

    • பாராளுமன்ற தேர்தலில் நமது கட்சி திருப்திகரமாகவே செயல்பட்டுள்ளது.
    • அடுத்த தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார் லாலு பிரசாத்.

    பாட்னா:

    ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தொடங்கப்பட்ட தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அக்கட்சியின் தலைவரும், பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் இன்று கட்சி தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    பாராளுமன்ற மக்களவை தேர்தலில் நமது கட்சியின் செயல்பாடு குறித்து மறு ஆய்வு செய்தோம். நமது கட்சி திருப்திகரமாகவே செயல்பட்டுள்ளது.

    கட்சியின் தலைவராக நான் தேர்தெடுக்கப்பட்டிருப்பதால் கட்சியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு என்னுடையதாகும். எம்.எல்.ஏ. வேட்பாளர்களை மாற்றுவதற்கு நான் எப்போதும் தயங்கமாட்டேன்.

    அடுத்த தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே கட்சி தொண்டர்கள் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    தற்போது ஆட்சி அமைத்திருக்கும் மோடி அரசு மிகவும் பலவீனமாக உள்ளது. இந்த அரசு வரும் ஆகஸ்ட் மாதத்தில் கவிழ்ந்து விடும் என தெரிவித்தார்.

    • பாரதிய ஜனதா கட்சிக்கு 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.
    • சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரின் கட்சிகள் ஆதரவு பெற்று பிரதமர் மோடி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சிக்கு 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.

    இதனால் 16 எம்.பி.க்கள் வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் 12 எம்.பி.க்கள் வைத்துள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு பெற்று பிரதமர் மோடி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார்.

    இந்நிலையில், இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தந்தால் நிதிஷ் குமாருக்கு பிரதமர் பதவி தருவதாக கூறினார்கள் என ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் கே.சி.தியாகி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு "இதுதொடர்பாக எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை என தெரிவித்தார்.

    இதனையடுத்து, இது தொடர்பாக பேசிய பீகார் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் மிருத்யுஞ்சய திவாரி, "நிதிஷ்குமார் ஒரு 'பிரதமர் மெட்டிரியல்', ஆனால் பாஜக கூட்டணியில் அவர் தலை குனிந்து உள்ளார்" என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.

    • வாக்கு வங்கியைக் கண்டு பா.ஜ.க. பயப்படவில்லை.
    • பீகாருக்கு தேவை காட்டாட்சியல்ல. வளர்ச்சிக்கான அரசியல்தான் தேவை.

    பாட்னா:

    பீகாரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பா.ஜ.க. வெற்றி பெற்றால் சீதாமர் ஹியில் அன்னை சீதா தேவிக்கு பிரமாண்டமான முறையில் கோவில் கட்டுவோம் என வாக்குறுதி அளித்தார்.

    வாக்கு வங்கியைக் கண்டு பா.ஜ.க. பயப்படவில்லை. பிரதமர் மோடியால் தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது சாத்தியமானது. அதேபோல் சீதா அன்னை பிறந்த இடமான சீதாமர்ஹியில் அவருக்கு கோவில் கட்ட வேண்டிய கடமை நமக்கு பாக்கி இருக்கிறது. இதனை நிறைவேற்ற பிரதமர் மோடியால் மட்டும்தான் முடியும். நம்மை ஒதுக்கி வைத்தவர்கள் யாரும் இதனை செய்து முடிக்க முடியாது.

    லாலு பிரசாத் யாதவ் அதிகார அரசியலுக்காக தன் மகனை முதல்வராக்குவதற்காக பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரை எதிர்ப்பதையே வாழ்நாள் கடமையாக கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மடியில் போய் அமர்ந்துள்ளார்.

    பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்குவோம் என்று காங்கிரசும், ராஷ்டிரிய ஜனதா தளமும் ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். அதை மோடி அரசு செய்து முடித்தது. பீகாருக்கு தேவை காட்டாட்சியல்ல. வளர்ச்சிக்கான அரசியல்தான் தேவை.

    இவ்வாறு அமித்ஷா பேசினார்.

    இந்து புராணங்களின்படி, ராஜா ஜனகன் சீதாமர்ஹிக்கு அருகில் வயலில் உழுது கொண்டிருந்த போது ஒரு மண்பானையில் இருந்து ராமனின் மனைவியான சீதை உயிர்பெற்றாக கூறப்பட்டுள்ளது.

    பீகாரில் உள்ள சீதாமர்ஹி தொகுதிக்கு மே 20-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 2019 பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 39 இடங்களில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • லாலு பிரசாத்தின் மூத்த மகள் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்.
    • இந்தியா கூட்டணி அதிகாரத்திற்கு வந்தால் பிரதமர் மோடி ஜெயிலில் அடைக்கப்படுவார் என தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.

    லாலு பிரசாத் யாதவின் மூத்த மகள் மிசா பாரதி. இவர் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்லிபுத்ரா தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ளார்.

    பா.ஜனதா அதிகாரத்தை இழந்தால் பிரதமர் மோடி ஜெயிலில் அடைக்கப்படுவார் என மிசா பாரதி கூறியதாக செய்திகள் வெளியானது. இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, பதிலடியும் கொடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தான் அவ்வாறு கூறவில்லை. ராஷ்டிரிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி அதிகாரத்திற்கு வந்தால், உச்சநீதிமன்றம் உத்தரவின்படி வெளியிடப்பட்டடு தேர்தல் பத்திரம் தொடர்பாக விசாரணை தேவை என்பது குறித்து கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்தேன். ஆனால் மீடியாக்கள் நான் கூறியதை திரித்து வெளியிட்டுள்ளன.

    இது தொடர்பாக மிசா பாரதி கூறுகையில் "நான் பிரதமர் பற்றி ஏதும் கூறவில்லை. என்னுடைய முழுக் கருத்தையும் வெளியிடுவதற்குப் பதிலாக, சிதைக்கப்பட்ட பகுதியை மீடியா வெளியிட்டுள்ளது. இது பா.ஜனதாவின் எஜெண்டா.

    வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், விவசாயிகள் மற்றும் பா.ஜனதா கட்சி தலைவர்கள் முன்னதாக அளித்த வாக்குறுதிகள் பற்றி பிரதமர் மோடி ஏதாவது பேசியிருக்கிறாரா?. எந்த பிரச்சனை குறித்தும் பா.ஜனதா பேசுவதில்லை." என்றார்.

    இதற்கு பா.ஜனதா தலைவர் ரவி சங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "இதுபோன்ற கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது. பிரதமர் பதவி மிகவும் மரியாதைக்குரியது. நாட்டில் இருந்து ஏதும் மறைக்கப்படவில்லை. மாட்டுத்தீவனம் ஊழலில் அவரது தந்தை தண்டிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பம் ஊழலில் மூழ்கியுள்ளது. அவள் பகல் கனவு காண்பதை நிறுத்த வேண்டும்" என்றார்.

    • யார் என்ன சொல்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம்.
    • விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. அதனால்தான் நான் அவர்களை (ஆர்.ஜே.டி.) விட்டு வெளியே வந்தேன்.

    பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஆர்.ஜே.டி. கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகி மீண்டும் பா.ஜனதாவுடன் இணைந்து கூட்டணி அமைத்து முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார்.

    இந்தியா கூட்டணியை வலிமையாக்க தான் எடுத்த முயற்சிகளுக்கு உரிய ஒத்துழைப்பு இல்லை என்பதால் அதில் இருந்து விலகியதாக நிதிஷ்குமார் தெரிவித்தார்.

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆர்.ஜே.டி. நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் பீகார் சட்டசபைக்கு வந்தார். அப்போது லாலுவும், நிதிஷ் குமாரும் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்து கை குலுக்கி கொண்டனர்.

    அப்போது ஆர்.ஜே.டி.- ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் கூட்டணி அமையுமா? என்று லாலுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு லாலு பதில் அளிக்கும்போது, "அவர் (நிதிஷ்குமார்) திரும்பி வரட்டும். பிறகு பார்ப்போம். அவருக்காக எங்கள் கதவுகள் எப்போதுமே திறந்து இருக்கும்" என்றார்.

    இதற்கிடையே லாலுவின் கோரிக்கையை நிதிஷ்குமார் நிராகரித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    யார் என்ன சொல்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. அதனால்தான் நான் அவர்களை (ஆர்.ஜே.டி.) விட்டு வெளியே வந்தேன்.

    இந்தியா கூட்டணியில் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். வேறு ஏதோ மனதில் இருந்ததால் கூட்டணிக்கு இந்த பெயரை கூட நான் ஆதரிக்கவில்லை. கூட்டணி முறிந்து நீண்ட நாட்களாகிவிட்டது. தற்போது பீகார் மக்களுக்காக உழைக்கிறேன். அதை தொடர்ந்து செய்வேன்.

    இவ்வாறு நிதிஷ்குமார் கூறி உள்ளார்.

    • நிதிஷ் குமார் ஆட்சியமைக்க உரிமைக்கோரினால் தடுக்க லாலு திட்டம்.
    • நிதிஷ் குமார், லாலு கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

    நிதிஷ் குமார் எப்போது வேண்டுமென்றாலும் பா.ஜனதாவுடன் கைக்கோர்க்க வாய்ப்புள்ளது. இதனால் பீகார் அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    நிதிஷ் குமார் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து 9-வது முறையாக மீண்டும் முதல்வராக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பா.ஜனதா கட்சியின் இருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவதாகவும் பேசப்படுகிறது.

    கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுங்கள் என நிதிஷ்குமாருக்கு லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் இரண்டு கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

    ஒருவேளை லாலு கட்சி உடனான கூட்டணி முடிந்தது. பா.ஜனதா உடன் இணைந்து ஆட்சியமைக்க போகிறேன் என நிதிஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து லாலு ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

    ஒருவேளை நிதிஷ் குமார் முதல்வராக பதவி ஏற்றாலும், சட்டசபையில் பலத்தை நிரூபிக்க வேண்டும். மொத்தம் 243 இடங்களை கொண்ட பீகார் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எண்ணிக்கை தேவை.

    பா.ஜனதா மற்றும் நிதிஷ் குமார் கட்சி உறுப்பினர்கள் முறையே 78 மற்றும் 45 உள்ளனர். மொத்தம் 123 எண்ணிக்கை உள்ளது. ஒரு எண்ணிக்கை அதிகமாகத்தான் உள்ளது. ஜித்தன் ராம் மஞ்ச் ஆதரித்தால் எண்ணிக்கை 127 ஆக அதிரிக்கும்.

    தற்போது சட்டசபையில் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு 79 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளத்திற்கு 45 இடங்கள் உள்ளன. காங்கிரஸ்க்கு 19 இடங்கள் உள்ளன. சிபிஐ-எம்எல்-12, சிபிஐ-2, சிபிஐ-எம்- 2, ஒரு சுயேட்சை என்ற அளவில் உறுப்பினர்கள் உள்ளனர். ஜித்தன் ராம் மஞ்சிக்கு 4 இடங்களும் உள்ளன.

    ஒருவேளை நிதிஷ் குமார் மந்திரி சபையை கலைத்தால், தனிப்பட்ட எண்ணிக்கையில் லாலு கட்சிதான் அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது. அவர்களைத்தான் முதலில் ஆட்சியமைக்க கவர்னர் அழைக்க வேண்டும்.

    அப்படி அழைத்தால் பா.ஜனதாவுடன் இணைந்து நிதிஷ் குமார் கட்சி இணைந்து எதிர்த்து வாக்களிக்கும். இதனால் நிதிஷ் குமார் கட்சியில் இருந்து 10 எம்.எல்.ஏ.-க்கள் சட்டமன்றத்தில் கலந்து கொள்ளவிடாமல் பார்த்துக் கொண்டால் லாலு கட்சியின் வாக்கெடுப்பில் தப்பித்துக் கொள்ளும்.

    மாறாக நிதிஷ் குமாரை ஆட்சியமைக்க அழைத்தால், அவர் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும். அப்போது அனைத்து கட்சிகளுடன் சேர்ந்து லாலு கட்சி எதிர்த்து வாக்களிக்கும். அப்போது ஐக்கிய ஜனதா தளத்தின் 10 எம்.எல்.ஏ.-க்கள் சட்டமன்றத்திற்கு வராமல் இருந்தால் போதுமானது. இதற்கான வேலைகளை லாலு பார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதேவேளையில் நிதிஷ் குமார் கட்சியும், பா.ஜனதாவும் குதிரை பேரத்தில் ஈடுபடும். இதனால் பீகாரில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது.

    • குடும்ப அரசியல் குறித்து நிதிஷ் குமார் பேசியதால் லாலு மகள் கடும் விமர்சனம் செய்திருந்தார்.
    • இந்தியா கூட்டணியில் ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்காததால் அதிருப்தியில் இருந்ததாக தகவல்.

    பீகார் மாநில முதல்வரான நிதிஷ் குமார் பா.ஜனதா கூட்டணியில் இணையப் போவதாக நேற்று முன்தினம் செய்தி பரவியது. அதில் இருந்து தற்போது வரை பீகார் அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்தக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என கருதப்படுகிறது.

    இந்தியா கூட்டணியின் மீதான அதிருப்தி, லாலு யாதவ் மகளின் காட்டமான சமூக வலைத்தள பதிவுகள், ராகுல் காந்தி நடைபயணத்தில் கலந்து கொள்ள மறுத்தது போன்ற காரணங்கள் அவர் பா.ஜனதா கூட்டணியில் இணைய முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    நிதிஷ் குமார் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து 9-வது முறையாக மீண்டும் பீகார் முதல்வராக பதவி ஏற்க இருப்பதாகவும், பா.ஜனதா சார்பில் இரண்டு பேர் துணை முதல்வராக பதவி ஏற்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கு முன்னோட்டமாகத்தான் அவர் 22 ஐ.ஏ.எஸ்., 79 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    அதேவேளையில் சட்டமன்றம் கலைக்கப்படாது. பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறாது எனவும் தகவல் தெரிவிக்கின்றன. அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருப்பதால் எந்த கட்சிகளும் பெரும்பாலும் அவசரம் காட்டாது எனத் தெரிகிறது.

    நேற்று நடைபெற்ற ஆளுநர் மாளிகை தேனீர் விருந்து நிகழ்ச்சியின்போது பா.ஜனதா- ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.-க்கள் சந்தித்து சலசலப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    அதேவேளையில், நிதிஷ் குமார் அவரின் நிலை என்ன? என்பது குறித்து விளக்க வேண்டும். அவர் இந்தியா கூட்டணியில் இருக்கிறாரா? அல்லது வெளியேறுகிறாரா? என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என லாலு கட்சியை சேர்ந்த மனோஜ் ஜா தெரிவித்துள்ளார்.

    ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய துணைத் தலைவரான ஷிவானந்த் திவாரி, நிதிஷ் குமார் பா.ஜனதாவில் இணைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து பின் வாங்க வேண்டும். நேற்று நிதிஷ் குமாரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். அவர் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. அதே தவறை மீண்டும் நிதிஷ் செய்வார் என்று நாங்கள் நம்பவில்லை" என்றார்.

    • முழுக்க முழுக்க இந்திய கட்டிட கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.
    • நாட்டு மக்கள் 2024ல் உங்களை அதே சவப்பெட்டியில் புதைப்பார்கள் என பாஜக கருத்து

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள பழைமை வாய்ந்த பாராளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக அதன் அருகிலேயே 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. இங்கு மக்களவை , மாநிலங்களவை கூடுவதற்காக தனித்தனி அரங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2 மிகப்பெரிய ஆலோசனை கூடங்களும் கட்டப்பட்டுள்ளன. மக்களவையில் 888 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்களும் அமரும் வகையில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    உலகின் மிகப்பெரிய பாராளுமன்றங்களில் ஒன்றாக இந்த பாராளுமன்றம் முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்திய கட்டிட கலை பாணியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

    பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த பாராளுமன்ற கட்டுமானத்தை, சவப்பெட்டியுடன் ஒப்பிட்டு ராஷ்டிரிய ஜனதா தளம் விமர்சனம் செய்தது. சவப்பெட்டி மற்றும் புதிய பாராளுமன்றம் ஆகியவற்றின் படங்களை கட்சியின் டுவிட்டரில் பதிவிட்டிருந்தது.

    இதற்கு பாஜக பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    நாட்டு மக்கள் 2024ல் உங்களை அதே சவப்பெட்டியில் புதைப்பார்கள். ஜனநாயகத்தின் புதிய கோவிலுக்குள் நுழைய உங்களுக்கு வாய்ப்பளிக்க மாட்டார்கள். பாராளுமன்ற கட்டிடம் நாட்டுக்கே சொந்தம். சவப்பெட்டி உங்களுக்குத்தான் என முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய பாராளுமன்ற திறப்பு விழா ஒரு வரலாற்று தருணத்தை குறிக்கிறது. ஆர்ஜேடி போன்ற கட்சிகள் கதறுவதை குறிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    பாஜக தலைவரின் பதலடியைத் தொடர்ந்து ஆர்ஜேடி தலைவர் சக்தி சிங் யாதவ் தனது கட்சி வெளியிட்ட டுவிட்டர் பதிவுக்கு விளக்கம் அளித்துள்ளார். தங்கள் கட்சி சார்பில் வெளியிட்டப்பட்ட ட்வீட்டில் உள்ள சவப்பெட்டி படம், ஜனநாயகம் புதைக்கப்பட்டிருப்பதை பிரதிபலிப்பதாக கூறினார்.

    இதற்கிடையே, புதிய பாராளுமன்ற கட்டிடத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்டு பேசியவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் சுஷில் மோடி கூறியுள்ளார்.

    ×