search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழல் முறைகேடுகள்"

    • இந்திய ஒன்றிய அரசால் அனுமதிக்கப்பட்ட 17% ஈரப்பத அளவில் மட்டுமே தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் செய்கிறது.
    • நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஊழல் முறைகேடுகளை அரசு அனுமதிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளைக் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு அரசால் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளால் வேளாண் பெருங்குடி மக்கள் செய்வதறியாது தவித்து வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

    இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, வெயிலிலும் மழையிலும் தங்கள் கடின உழைப்பினால் விளைவித்த நெல்மணிகளுக்கு உரிய விலை வேண்டி விவசாயிகள் காலங்காலமாகப் போராடி வருகின்றனர்.

    குறைந்தபட்ச கொள்முதல் விலையாகக் குவிண்டால் ஒன்றுக்கு 3000 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிவரும் வரும் நிலையில், நெல் உற்பத்தி செலவுக்கு இணையாக, அரசு மிகக்குறைந்த கொள்முதல் விலையை மட்டுமே நிர்ணயித்து விவசாயிகள் வயிற்றில் அடித்து வருகின்றது.

    அதுமட்டுமின்றி, நெல்லின் ஈரப்பதம் 20% வரை அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில், இந்திய ஒன்றிய அரசால் அனுமதிக்கப்பட்ட 17% ஈரப்பத அளவில் மட்டுமே தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் செய்கிறது.

    இந்நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகள் விளைவித்துக் கொண்டுவரும் 17% குறைவான ஈரப்பதம் உடைய 40 கிலோ நெல் மூட்டைகளுக்கும், ஈரப்பதத்தினால் ஏற்படும் இழப்பினை காரணம் காட்டி 1½ கிலோ வரை கூடுதலாக எடை நிறுத்தே நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் எடுத்துக்கொள்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    அதாவது, சராசரியாக 1 மூட்டைக்கு 1½ கிலோவரை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகின்ற வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் பிடித்தம் செய்யப்படுகிறது.

    அதுமட்டுமின்றி, ஏற்றுக் கூலி, இறக்கு கூலி, வண்டி வாடகை என்று கூறி 1 கிலோ நெல்லுக்கு 1 ரூபாய் என ஒவ்வொரு 40 கிலோ மூட்டைக்கும் 40 ரூபாய் வரை நெல் கொள் முதல் நிலைய அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் வேளாண் பெருமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

    அதன்படி, விவசாயிகள் ஒவ்வொரு மூட்டை நெல்லுக்கும் 1½ கிலோ நெல்லும், 40 ரூபாய் பணமும் கொடுக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துவது வேளாண் பெருங்குடி மக்களின் உழைப்பை உறிஞ்சும் சிறிதும் மனச்சான்றற்ற கொடுஞ்செயலாகும்.

    ஏற்கனவே, பாசன நீர்ப் பற்றாக்குறை, இடுபொருட்கள் கிடைக்கப்பெறாமை, உரம் விலையேற்றம், வேலையாட்கள் பற்றாக்குறை, பருவகால மாற்றம் எனப் பல்வேறு தடைகளைத் தாண்டி பயிர் விளைவித்தாலும், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால், விவசாயிகள் வேளாண்மையை விட்டே வெளியேறி வருகின்றனர்.

    இத்தகு துயர்மிகு சூழலில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஊழல் முறைகேடுகளை அரசு அனுமதிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

    17% ஈரப்பதம் என்பது அரசு நிர்ணயித்துள்ள விழுக்காடுதானே? அதனால் ஏற்படும் எடை குறைவையும் அரசுதானே ஏற்க வேண்டும்? அதேபோன்று ஏற்றுக் கூலி, இறக்கு கூலி, வண்டி வாடகை ஆகியவற்றையும் நெல் கொள்முதல் செய்கின்ற தமிழ்நாடு அரசுதானே ஏற்க வேண்டும்? அவற்றையெல்லாம் விவசாயிகள் தலையில் சுமத்துவது எவ்வகையில் நியாயமாகும்? ஏற்கனவே, நெல் உற்பத்தி செலவுக்கு இணையாக, அரசு நிர்ணயித்துள்ள நெல் கொள்முதல் விலையும் உள்ளதால், வேளாண் பெருங்குடி மக்கள் சிறிதும் லாபம் இன்றியே நெல் விவசாயம் செய்து வருகின்றனர். அதனையும் அதிகாரிகள் மூலம் அரசு தட்டிப்பறிப்பது கொடுங்கோன்மையாகும்.

    ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளைத் தடுத்து, எவ்வித கையூட்டுக்கும் இடமளிக்காமல் சரியான எடையில், சரியான கொள்முதல் விலையை வேளாண் பெருங்குடி மக்களுக்கு முறையாக வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷம் எழுப்பினர்

    குடியாத்தம்:

    வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் குடியாத்தம் சித்தூர் கேட் அருகே தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம், போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதை பொருட்கள் பழக்கம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், ஆவின் முன்னாள் தலைவருமான வேலழகன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, ஒன்றிய செயலாளர்கள், சீனிவாசன், பாபுஜி, ஆனந்தன், மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.மூர்த்தி, எஸ்.அமுதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லோகநாதன், நகரமன்ற துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    குடியாத்தம் மேற்கு ஒன்றிய செயலாளர் டி.சிவா வரவேற்றார்.

    குடியாத்தம் நகர செயலாளர் ஜெ.கே.என்.பழனி துவக்க உரையாற்றினார்.

    மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வனராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் ரமேஷ்குமார், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி தலைவர் புகழேந்தி, வர்த்தக அணி செயலாளர் இமகிரிபாபு, மாவட்ட பொருளாளர் காடைமூர்த்தி, ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் கள்ளூர்பாஸ்கரன், ஒன்றிய வர்த்தக அணி பொருளாளர் கள்ளூர்பாபு உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    ×