என் மலர்
நீங்கள் தேடியது "2 பேர் உடல்கள் மீட்பு"
- அத்தாணி கைகாட்டி பகுதியில் உள்ள பவானி ஆற்றில் குளிக்க சென்று உள்ளனர்.
- எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய நிலையில் தண்ணீரில் அடித்துச் சென்றனர்.
ஆப்பக்கூடல்,
அந்தியூர் அடுத்த புது மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (45), திருமணமாகி மனைவி மாகாளி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.அதே புது மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (46) திருமணமாகி ஜோதி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இருவரும் அந்தியூர் பகுதியில் உள்ள செங்கல் சூலையில் வேலை செய்து வந்தனர், இந்நிலையில் சின்னதுரை, மோகன்ராஜ் மற்றும்அதே பகுதியை சேர்ந்த ரவி ஆகிய மூவரும் நண்பர்கள் ஆவர்.இந்த மூன்று பேரும் நேற்று மதியம் அந்தியூர் அடுத்த அத்தாணி கைகாட்டி பகுதியில் உள்ள பவானி ஆற்றில் குளிக்க சென்று உள்ளனர்.
மூன்று பேரில் ரவி என்பவருக்கு நீச்சல் தெரியாததால் ஆற்றில் இறங்கி குளிக்காமல் கரையிலேயே இருந்து உள்ளார்.அதனால் சின்னத்துரை மற்றும் மோகன்ராஜ் இருவரும் மட்டுமே ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.அப்பொழுது ஆழமான பகுதிக்கு சென்று குளித்த இருவரும், எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய நிலையில் தண்ணீரில் அடித்துச் சென்றனர்.
கரையில் இருந்து ரவி என்பவர் சிறிது நேரத்திற்கு பிறகு குளிக்க சென்ற நண்பர்கள் இருவரை காணாமல் தேடியுள்ளார்.உடனே அதிர்ச்சி அடைந்த ரவி ஆற்றங்கரையில் இருந்து வெளியேறி வந்து அந்தியூர் தீயணைப்புத் துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் தீயணைப்புத்துறை வீரர்கள் நேற்று மாலை ஆற்றில் இறங்கி தேடிய நிலையில் சின்னத்துரை என்பவரின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரவு ஆனதை தொடர்ந்து தேடுதல் பணியை நிறுத்தி வைக்கப்பட்டது, இன்று காலை ஆற்றில் தேடுதல் பணியை தொடங்கிய தீயணைப்பு வீரர்கள் மோகன்ராஜை தேடி வந்தனர்.சில மணி நேரம் தேடுதலுக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் மோகன்ராஜை ஆற்றில் சடலமாக மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.