search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புராண கதைகள்"

    • ஈசன் ஒருர் மட்டுமே கங்கையை கட்டுப்படுத்த வல்லவர்.
    • கங்கையைப் பாதாளம் அழைத்துச் சென்றான் பகீரதன்.

    ஆதிகாலத்தில் அயோத்தியை ஆண்ட இசுவாகு குலத்தில் சகரர் என்பவர். குழந்தைப்பேறின்மையால் இறைவனை வேண்டி தவம் செய்ததின் பயனாய் அவரது முதல் மனைவி சுமதிக்கு 60 ஆயிரம் குழந்தைகளும் 2-வது மனைவி கேசினி என்பவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்தனர். சில காலம் கழித்து சகரர் அசுவமேத யாகம் செய்ய ஏற்பாடுகள் செய்தார்.

    சகரர் அசுவமேதயாகம் செய்தால் தன்னுடைய பதவி போய்விடுமோ என்று அஞ்சினான் இந்திரன். குதிரையை தூக்கிச்சென்று பாதாள லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபில மகரிஷியின் ஆசிரமத்தில் கட்டிவைத்து விட்டான்.

    அந்த குதிரையை தேடிச்சென்ற சகரரின் புதல்வர்கள் ஆறுபதாயிரம் பேரும் கபிலரின் ஆசிரமத்தில் குதிரை இருப்பதைக் கண்டு கபிலரை திட்டியதுடன் அவரை துன்புறுத்தத் தொடங்கினார்கள் கோபம் அடைந்த கபில மகரிஷி அவர்களை சபித்து சாம்பலாக்கி விட்டார்.

    அனைத்தையும் அறிந்த சகரர் மன்னன் கபிலரை வணங்கி தான் செய்யும் அஸ்வமேத யாக குதிரை தங்கள் ஆசிரமத்தில் இருந்ததினால் இந்த குழப்பங்கள் வந்தது. தன் புதல்வர்களை மன்னிக்குமாறும் அவர்களுக்கு சாப விமோசனம் தந்து நற்கதி அடைவதற்கு வழி சொல்லுமாறும் தன் குதிரையை எடுத்துச்செல்ல அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

    சகரரின் வேண்டுகோளை ஏற்ற கபிலமகரிஷி குதிரையை எடுத்துச்செல்ல அனுமதி கொடுத்து மேலுலகத்தில் இருக்கும் கங்கையை பூலோகம் வரவழைத்து இந்த சாம்பலை புனிதப்படுத்தினால் இவர்கள் நற்கதி அடைவார்கள் என்று விமோச்சனம் கூறினார். இதனை கேட்டு மகிழ்ந்த சகரர் குதிரையை எடுத்துச் சென்று அசுவமேத யாகத்தை முடித்தார்.

    முதல் மனைவியின் வாரிசுகள் அறுபதாயிரம் பேரும் சாம்பலானதால் இரண்டாவது மனைவியின் புதல்வன் நாட்டின் அரச பதவியை ஏற்றுக்கொண்டார். அவனுக்குப் பின் அவனது புதல்வன் பகீரதன் ஆட்சி பொறுப்பை ஏற்றக்கொண்ட போது தமது முன்னோர்கள் ஆறுபதாயிரம் பேருக்கு நடந்ததை தெரிந்துகொண்டார்.

    பின்பு நாட்டை துறந்து கங்கையை பூலோகம் கொண்டு வர பிரம்ம தேவரை நினைத்து காட்டில் கடும் தவம் இயற்றினான். இவரின் தவத்தில் மகிழ்ந்த பிரம்மதேவர் மகிழ்ந்து கங்கையை பூமிக்கு அனுப்ப இசைந்தார்.

    பிரம்மாவிடம் ஆலோசனை பெற்ற பகீரதன், விண்ணுலகம் சென்று அங்கே கங்கையைப் பார்த்து வணங்கித் தன் முன்னோர்களின் வரலாற்றைக் கூறி அவர்கள் நற்கதி அடைய வேண்டி கங்கை பூமிக்கு வந்து பின் பாதளத்துக்கு வந்து தன் முன்னோர்கள் மோட்சம் அடைய உதவ வேண்டும் என வேண்டிக்கொண்டான்.

    அதற்கு கங்கை பகீரதா நான் பூமிக்கு வரச் சம்மதிக்கிறேன் ஆனால் நான் விண்ணில் இருந்து பூமிக்கு வருகையில் அந்த வேகத்தை பூமி தாங்க மாட்டாள் நான் வரும் வேகத்தை என்னால் குறைக்கவும் இயலாது. என்னை எவரேனும் தாங்கிப் பிடித்து மெல்ல மெல்ல பூமியில் விட ஏற்பாடு செய்தால் நான் வருகிறேன் என்று கூறினாள்.

    பகீரதனும் விண்ணுலகத்து தேவர்களிடமும் பராக்கிரம சாலிகளிடமும் கங்கையின் வேண்டுகோளைக் கூறி அவர்களை வந்து கங்கையைத் தாங்கிப் பிடிக்க வேண்டினான். ஆனால் கங்கையின் உண்மையான வேகம் அறிந்த அனைவரும் மறுத்துவிட்டனர்.

    பகீரதன் மஹாவிஷ்ணுவை வேண்ட அவர் இச்செயல் ஈசன் ஒருவரால் மட்டுமே இயலும் அவரே கங்கையைக் கட்டுப்படுத்த வல்லவர் அவரைத் தியானித்து தவம் செய்து அவர் அருளைப் பெறு என்று கூறினார்.

     பகீரதன் ஈசனைக் குறித்துத் தவம் இருந்து வேண்டினான் மனம் மகிழ்ந்த ஈசனும் அவனுக்குக் காட்சி அளித்து பகீரதா உன் தவம் குறித்து மகிழ்ச்சி அடைந்தோம். உன் முன்னோர்களைக் கடைத்தேற்ற நீ கையாண்ட வழிகளையும் உன் விடா முயற்சியையும் உறுதியையும் பாராட்டுகிறேன். கங்கை பூமிக்கு வரும் போது எனது சடாபாரத்தை விரித்துப் பிடிக்கிறேன். கங்கை அதிலே குதிக்கட்டும் அதில் இருந்து அவளைக் கீழே பாய்ந்து தவழச் செய்து விடுகிறேன் என்றார்.

    பகீரதனும் கங்கையிடம் ஈசனின் உதவியைக் குறித்துத் தெரிவிக்க அவளும் மகிழ்வோடு சப்தமிட்டுக்கொண்டு பூமியை நோக்கி வேகமாகப் பாய்ந்து வந்தாள். ஈசன் தன் சடையை விரித்துப் பிடித்தார். அப்போது கங்கைக்குள் அகங்காரம் புகுந்தது நான் மிகவும் வேகமாக வருகின்றேன். என் ஆற்றலையும் வேகத்தையும் இந்த ஈசனால் தாங்க இயலுமா என யோசித்தாள்.

     எல்லாம் வல்ல ஈசன் கங்கையின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டார். நதி ரூபத்தில் அவளுடைய நீரோட்டத்தைத் தன் சடையிலேயே முடிந்து சுருட்டி விட்டார் திணறிப் போன கங்கை வெளிவர முடியாமல் தவித்து தன் அகங்காரத்தை போக்கிக்கொண்டாள்.

    பகீரதனோ கங்கையைக் காணாமல் கலக்கமடைந்தான் ஈசனை நோக்கி மீண்டும் ஒற்றைக்காலில் தவமிருந்தான். பகீரதன் முன் தோன்றிய ஈசன், கங்கையின் கர்வத்தை ஓடுக்க வேண்டியே தாம் இவ்விதம் செய்ததாகக் கூறிவிட்டு கங்கையை மெல்ல மெல்ல வெளியே விட்டார். அவளை அப்படியே தாங்கிக் கொண்டு இமயத்தில் நந்தியெம்பெருமான் விட கங்கை அங்கிருந்து பாயத் தொடங்கினாள்.

    பகீரதன் அவளைப் பின் தொடர்ந்தான் வழியில் ஜான்ஹவி என்னும் ரிஷியின் ஆசிரமம் இருந்தது கங்கை வந்த வேகத்தில் அந்த ஆசிரமத்தை முற்றிலும் நீரால் அழித்து முனிவரையும் உருட்டித் தள்ள ஆயத்தமானாள் கோபம் கொண்ட முனிவர் கங்கையை அப்படியே தன் கைகளால் கங்கையை எடுத்து அள்ளிக் குடித்து விட்டார் கங்கை மீண்டும் சிறைப்பட்டாள். பகீரதன் கலங்கியே போனான்.

    முனிவரின் கால்களில் வீழ்ந்து வணங்கித் தன் ஆற்றாமையையும் கங்கைக்காகத் தான் மன்னிப்புக் கோருவதாயும் தெரிவித்தான். அவன் நிலை கண்டு இரங்கிய ஜான்ஹவி முனிவர் கங்கையைத் தம் செவி வழியே மிக மிக மெதுவாக விட்டார் இதன் பிறகு தடை ஏதுமில்லாமல் பாய்ந்த கங்கையைப் பாதாளம் அழைத்துச் சென்றான் பகீரதன்.

     அங்கே கபில முனிவரை சந்தித்து ஆசிகள் பெற்றுக்கொண்டு தம் மூதாதையரின் சாம்பலை கங்கை நீரில் நனைத்துப் புனிதமாக்கினான். சகரர் புத்திரர்கள் அறுபதாயிரம் பேருக்கும் நற்கதி கிடைத்தது. அன்று முதலே கங்கை பூமியில் பாய ஆரம்பித்தது.

    • இறைவனுக்கு அனைவரும் ஒருவர் தான்.
    • இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது தூய்மையான பக்தியை தான்.

    நாவார் புகழ்த்தில்லை யம்பலத் தானருள் பெற்றுநாளைப்

    போவா னவனாம் புறத்திருத் தொண்டன்றன் புன்புலைபோய்

    மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதி தான்

    மாவார் பொழிறிக ழாதனூ ரென்பரிம் மண்டலத்தே

    -என்று பாடிய நந்தனாரை திருநாளைப்போவார் நாயனார் என்று அழைக்கின்றனர்.

    இறைவனுக்கு அனைவரும் ஒருவர் தான். இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது தூய்மையான பக்தியை. இறைவன் சாதியையோ, மதத்தையோ பார்ப்பதில்லை.

    அந்த காலத்தில் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்கள் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்ற நிலைமை இருந்தது. சோழநாட்டில் ஆதனூர் என்ற ஊரில் நந்தன் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் புலையர் குலத்தில் பிறந்தவர். ஆயினும் அவர் இறைவன் மீது தீராத பக்தி கொண்டிருந்தார்.

    சிவபெருமானை தன் உயிரினும் மேலாக கருதி, சிவபெருமான் மீது அளவிகடந்த பக்தியுடன் வாழ்ந்து வந்தார். கோவில் முரசுகளுக்கு தோல் தைத்து கொடுப்பது, யாழ்களுக்கு நரம்பு செய்து தருவது தான் இவருடைய வேலை. அவ்வாறு கிடைக்கும் பணத்தை தனக்காகவும், தன் குடும்பத்துக்காக செலவு செய்யாமல் ஈசனுக்கும், ஈசனின் திருப்பணிகளுக்காகவே அனைத்து பணத்தையும் செலவு செய்வார்.

    அந்த காலக்கட்டத்தில் தீண்டத்தகாதவன் என்ற கொடுமையால் அவரால் கோவிலுக்குள் செல்லமுடியாத நிலைமை இருந்தது. அதனால் சிவன் கோவிலின் வாசலில் நின்றபடிதான் சிவபெருமானை நினைத்து வணங்கி உருகுவார். எப்படியாவது கோவிலுக்குள் சென்று இறைவனை வணங்கிவிட வேண்டும் என்று நீண்டகாலமாக ஆசை அவருக்கு இருந்தது. ஆனால் சாதியின் கொடுமை அவரை தடுத்தது.

    மனிதன் சுயலாபத்திற்காக சாதியை உருவாக்கினான். அந்த சாதி தான் பக்திக்கு தடையாக இருந்தது. இந்த நிலையில் ஒருநாள் ஆதனூரை அடுத்துள்ள திருப்பங்கூரில் உள்ள சிவலோகநாதர் திருக்கோவிலில் உள்ள சிவபெருமானை சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது.

    ஆனாலும் அங்கேயும் தீண்டாமை தடுத்தது. ஆனாலும் அங்கு சென்று வணங்கிவிட்டு வரலாம் என்று நேராக அந்த ஊருக்கு சென்றார். நந்தனார். அங்கு சென்று இறைவனை வணங்கினார் நந்தனார். ஆனால் வாசலில் நின்று சிவபெருமானை அவரால் தரிசிக்க முடியவில்லை. காரணம் லிங்கத்தின் முன்பாக இருந்த நந்தி லிங்கத்தை மறைத்து நின்றது.

    அதனைப்பார்த்த நந்தன் சிவபெருமானை பார்க்கமுடியாத ஆதங்கத்தில் அழுதுபுலம்பினார். அப்போது நந்தனின் உன்னதமான பக்தியின் காரணமாக சிவபெருமான் நந்தியை சற்று விலகி இருக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

    உடனே நந்தி வலதுபக்கமாக நகர்ந்தது. உடனே கருவறையில் உள்ள ஆனந்த சுடராய் அருள்வடிவாய் இருந்த சிவபெருமானை கண்டு எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்து இறைவனைக் கண்டு ஆனந்தம் கொண்டார் நந்தனார்.

    இன்றும் இக்கோவிலில் நந்தி பகவான் சற்று விலகியே இருக்கிறார். அதாவது நந்தனாருக்கு தரிசனம் தரவேண்டும் என்பதற்காகவே ஈசன் சொற்படி நந்தி பகவான் வலது பக்கமாக நகர்ந்துள்ளார்.

    இந்த நிகழ்வுக்கு பிறகு சைவ சமயத்தின் மேன்மையான திருக்கோவிலாக கருதப்படும் சிதம்பரம் நடராஜனை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் நந்தனாருக்கு ஏற்பட்டது. ஆனால் இங்கேயும் சாதி குறுக்கே நின்றது. இருந்தாலும் எப்படியாவது தில்லை அம்பலவானனை தரிசிக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் அவரால் தில்லைக்கு செல்லமுடியாமல் போனது. இப்படி பல நாட்கள் சிதம்பரம் நடராஜரின் தரிசனம் நந்தனாருக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.

    சிதம்பரம் சென்று என் ஈசனை தரிசிக்க முடியாதென்றால் இந்த பூலோகத்தில் இருந்து என்ன பயன் என்று உறுகி நின்றார். இப்படி நந்தனாரின் ஆசை நிறைவேறாமல் தடைபட்டுக்கொண்டே இருந்தது. இப்படி நாளைக்கு சென்றுவிடுவோம் என்று எண்ணி எண்ணி நாட்கள் கடந்துகொண்டே வந்தது. இதுநாளேயே நந்தனார், திருநாளைப்போவார் என்று அழைக்கப்படுகிறார்.

    இந்த நிலை ஒருநாள் தில்லையில் நடனம் பிரியும் நடராஜரை தரிசிக்க சென்றார் நந்தன். தில்லையில் ஊருக்குள் செல்லத்தயங்கிய நந்தன், ஊருக்கு வெளியே நின்று கோபுரத்தை தரிசனம் செய்து பெரும் மகிழ்ச்சி அடைந்தார். கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என்றால் என்ன சிதம்பரமே சிவன் தானே என்று உணர்ந்து பூமியில் உள்ள மண்ணை கையில் எடுத்து நெற்றியில் திருநீராக பூசிக்கொண்டார்.

    மேலும் ஊருக்கு வெளியிலேயே தங்கி இருந்தார் நந்தனார். அன்று இரவு கோவில் முக்கியஸ்தர்கள் மற்றும் தில்லைவாழ் அந்தணரின் கனவில் தோன்றிய ஈசன், `என் அடியவன், என் பக்தன் நந்தன் ஊருக்கு வெளியே காத்துக்கொண்டிருக்கிறான். அவனை உரிய மரியாதையுடன் என்னிடம் அழைத்து வாருங்கள்' என்றார் ஈசன்.

    மறுநாள் அந்தனர்கள், ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி பூரண கும்ப மரியாதையுடன் நந்தனை கோவிலுக்குள் அழைத்து வந்தனர். அந்த நிலையில் கோவிலுக்குள் நுழையும் போது கூட்டத்தில் இருந்த அந்தணர் ஒருவர், நந்தனர் கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்தார்.

    தாழ்த்தப்பட்டவன் கோவிலுக்குள் நுழைவதை என்னால் ஏற்கமுடியாது. இறைவன் கனவில் சொன்னது உண்மையாகவே இருக்குமானால் இங்கு ஒரு அக்னிபரீட்சை வைத்து தான் நந்தனை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும். நந்தன் அக்னியில் இறங்கி திரும்பிவரட்டும். அதன்பிறகு அவரை கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்றார் அந்த அந்தணர்.

    அதனை கேட்ட நந்தன் எந்த பதட்டமும், பயமும், அதிர்ச்சியும் அடையவில்லை. என் வாழ்வில் எத்தனையோ அற்புதங்களை செய்த இறைவன் நான் சிதம்பரம் வருவதற்கும் ஒரு அற்புதம் செய்து அனுப்பி இருக்கிறான். இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்க இயலாது. இறைவன் சித்தம் இதுவென்றால் நான் எதையும் செய்ய தயார் என்றார் நந்தனார்.

    அங்கு தீ கொளுந்துவிட்டு எரிந்தது. அந்த அக்னிகுண்டத்தில் இறங்கினார் நந்தனார். தீயில் இறங்கி எந்த தீங்கும் இன்றி பட்டாடை உடுத்தி அழகிய தெய்வீகத்தோற்றத்துடன் வெளிப்பட்டார். பின்னர் கோவிலுக்குள் சென்று ஈசனை கண்குளிர கண்டு ரசித்தார். மேலும் கருவறையில் நுழைந்து அங்கு ஒரு தீப்பிழம்பு போல தோன்றி அங்கு ஒரு ஜோதியாய் இறைவனோடு ஐக்கியமானார் நந்தனார்.

    திருநாளைப்போவார் நாயனாரின் குருபூஜை ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று திருநாளைப்போவார் நாயனாரின் குருபூஜை இன்று.

    • வெங்கலராஜனுக்கு இரும்பை தங்கமாக்கும் ரகசியம் தெரிந்து இருந்தது.
    • முதன் முதலில் பனைமரம் பதித்த பொற்காசு வெளியிட்ட அரசன்

    முதலில் வனங்களில் சுற்றித்திரிந்த மனிதன், பின்னாளில் குழுக்களாக வாழத்தொடங்கினான். அந்த குழுக்களுக்கு ஒருவரை தலைவனாக நியமித்தான். இப்படி தொடங்கியதுதான் மன்னராட்சி முறை.

    சமவெளிகளுக்கு வந்த மனிதர்களை கட்டிக்காக்கும் பொறுப்பு அன்றைய காலகட்டத்தில் மன்னர்களுக்கு இருந்தது. அவர்கள் ஆட்சி பொறுப்பை பார்த்ததோடு, எதிரி நாட்டு மன்னர்களிடம் இருந்து தங்களது மக்களை பாதுகாக்க பல்வேறு படைபிரிவுகளோடு வசித்து வந்தனர்.

    அதுமட்டுமின்றி அரசர்கள் தாங்கள் குடும்பத்துடன் வசிக்க பிரமாண்ட அரண்மனைகளை கட்டினர். அப்படி கட்டப்பட்ட அற்புதமான ஒரு அரண்மனை குமரி மாவட்டத்தில் இன்றைய மணக்குடி கடற்கரை பகுதியில் இருந்தது என்றால் நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். அது வெங்கல கோட்டை என்று அழைக்கப்பட்டது. அந்த கோட்டையில் இருந்து ஆட்சி செய்து வந்த அரசன்தான் வெங்கலராஜன்.

    தற்போது வெங்கலராஜபுரம் என்று அழைக்கப்படும் முறம்பில் அரண்மனை அமைத்து ஆண்ட குறுநில மன்னன் வெங்கலராஜன். இலங்கையில் உள்ள குறுங்கடல் சூழ்ந்த புத்தளம் என்கிற குறுநாட்டில் வீரசேகர சோழனுக்கும் தங்கப்பொன்னம்மை என்னும் காயத்ரி தேவிக்கும் மகனாக பிறந்தவர். 1525-ம் ஆண்டு (ஆங்கில ஆண்டு) பிறந்துள்ளார். அதாவது ஆவணி மாதம் 1-ந் தேதி பிறந்துள்ளார்.

    கல்வியிலும், கலையிலும் சிறந்து விளங்கிய வெங்கலராஜனுக்கு இரும்பை தங்கமாக்கும் ரகசியம் தெரிந்து இருந்தது. அதாவது இரும்பின் மேல் பச்சிலை மூலிகையை தடவி அதை தங்கமாக்கும் வித்தை அவருக்கு கைவந்த கலையாக இருந்தது.

    இலங்கையின் கண்டி மன்னனின் ஆட்சிப்பகுதிக்கு உட்பட்ட புத்தளம் என்னும் குறுநிலப்பகுதியை வெங்கலராஜன் ஆட்சி செய்தான். முதன் முதலில் பனைமரம் பதித்த பொற்காசு வெளியிட்ட அரசன் இவர் தான். இலங்கை மண்ணில் மணமுடித்த வெங்கலராஜனுக்கு துறைமுகத்தழகி, சங்குமுகத்தழகி என்று 2 மகள்கள் பிறந்தனர். இருவரும் கல்வியிலும், கலைகளிலும் தேர்ச்சி பெற்றனர்.

    அழகிலும் காண்போரை கவர்ந்திழுக்கும் வகையில் பொலிவுடன் காணப்பட்டனர். தந்தை வீரசேகரசோழன் காலமான பின்பு வெங்கல ராஜனுக்கு பல்வேறு வழிகளில் தொல்லைகள் வந்து சேர்ந்தன. குறிப்பாக வட இந்தியாவில் இருக்கும் இன்றைய ஒடிசா கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களாலும், ஆந்திர மன்னர்களாலும் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

    அந்த காலக்கட்டத்தில் இலங்கைக்கு வந்த போர்த்துக்கீசியர்கள் வட இலங்கையின் செல்வ வளங்களை கவர்ந்து செல்ல முனைந்தது. புத்தளம் என்னும் குறுநிலத்தை ஆண்டு வந்த வெங்கலராஜனிடம் தங்கப் பாளங்களும், நகைகளும் இருப்பதை அறிந்த போர்ச்சுக்கீசியர்கள், வெங்கலராஜனுக்கு தொல்லைகள் கொடுக்கத் தொடங்கினர்.

    வெங்கல ராஜனிடம் இருந்த செல்வமே அவனுக்கு எமனாக வந்தது. இதனால் தன் வம்சத்தை தன்னோடு அழிந்து போக விடாமல் தடுக்கவும், தலைமுறையை காத்திடவும் நினைத்தான். இதனால் குமரி நாட்டுக்கு வர பெரிய தோணி ஒன்றில் பொன்னையும், பொருட்களையும் ஏற்றினான். இன்னொரு தோணியில் வித்தகர்களையும், கலைஞர்களையும், வைத்தியர்களையும், அண்ணாவிகளையும், கொல்லர், பொற்கொல்லர்களையும், நிர்வாக அமைச்சர்களையும் ஏற்றினான். மூன்றாம் தோணியில் குடும்பத்தார்களையும் ஆவணங்களையும் ஏற்றினான்.

    அந்த தோணிகள் இலங்கை புத்தளத்தில் இருந்து புறப்பட்டு தென்குமரியை வந்தடைந்தன. இப்போதைய மணக்குடிக்கு வந்த அவர்கள் பாசறையையும், காயலுக்கு கிழக்கே கன்னியாகுமரி சாலையில் உள்ள முறம்பில் அரண்மனையையும், குடியிருப்பையும் அமைத்தனர்.

    முகிலன் தலைமையில் உள்ள ஆட்சியாளர்கள் தங்குவதற்கு ஒரு குடியிருப்பை நிறுவி அவர்களை அங்கே தங்க வைத்தான். இன்றும் அந்த இடம் முகிலன்குடியிருப்பு என்றே அழைக்கப்பட்டு வருகிறது. வெங்கலக் கதவுடன் அரண்மனை கட்டி ஆண்டதால் இன்றும் அந்த இடம் வெங்கலக்கதவடிவிளை என்றே அழைக்கப்படுகிறது. பத்திரப் பதிவுகளிலும் வெண்கலக்கதவடிவிளை என்றே அழைக்கப்படுகிறது.

    இப்போது இருக்கும் தலக்குளத்திற்கு அன்றைய பெயர் வாட்டக்களி பெரியகுளம் ஆகும். இன்றும் அரசு ஆவணங்களில் இந்த பெயரே உள்ளது.

    வெங்கலராஜனின் 2 மகள்களும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தனர். தன் மகள்கள் வளர வளர வெங்கலராஜன் மனதில் பயமும் வளர தொடங்கியது. அழகே ஆபத்தாகி விடுமோ? என்று அஞ்சினான். ஆகவே தன் மகள்கள் இருவரிடமும் தன்னுடைய அனுமதி இன்றி புதிய இடங்களுக்கு செல்லக்கூடாது என்றும், குறிப்பாக கோட்டையை விட்டு வெளியே போகக்கூடாது என்றும் கட்டளையிட்டான்.

    இதற்கிடையேல் வெங்கலராஜன் அரண்மனை, அதைச் சுற்றிலும் குடியிருப்புகள், அகன்ற வீதிகள் கட்டி முடித்தான். தொடர்ந்து கோட்டை ஒன்றை கட்ட விரும்பினான். இதற்கு நிறைய வேலையாட்கள் தேவைப்பட்டனர். அவனது முன்னோர்கள் ஆண்ட குரும்பூர் பகுதியில் அறிமுகமான பலர் வாழ்ந்து வந்தனர். எனவே அங்கு சென்று கோட்டை கட்ட தேவையான ஆட்களை கொண்டு வர வேண்டும் என்று தன் பரிவாரங்களோடு குரும்பூருக்கு சென்றார்.

    இன்றைய பறக்கையில் அப்போது பட்சி ராஜா கோவில் ஒன்று இருந்தது. அந்த கோவில் திருவிழா மிகவும் பிரபலமானதாக இருந்தது. அந்த விழாவுக்கு தந்தையின் கட்டளையை மீறி துறைமுகத்தழகியும், சங்கு முகத்தழகியும் சென்றனர். அதுவே பின்னால் சோதனை காலமாக அமையும் என்று அவர்கள் நினைக்கவில்லை.

    விழாவுக்கு வந்திருந்த வஞ்சி நாட்டு இளவரசன் ராமவர்மன், இருவரின் அழகைக் கண்டு மனம் மயங்கினான். இதில் அழகுக்கு அழகு சேர்க்கும் பதுமைபோல ஜொலித்த துறைமுகத்தழகியை எப்படியும் அடைய வேண்டும் என்று மனதுக்குள் மன்மத கோட்டையையே கட்டினான். திருவிழா முடிந்து சகோதரிகள் 2 பேரும் அரண்மனை திரும்பினர்.

    அதே சமயத்தில் கோட்டை கட்டும் பணியாளர்களை அழைத்து வருவதற்காக குரும்பூர் சென்ற வெங்கலராஜனும் அரண்மனை திரும்பினான். அப்போது ஓலையோடு வஞ்சி நாட்டு ஒற்றன் ஒருவன் வந்தான். அவனிடம் இருந்த ஓலையை வாங்கி வெங்கலராஜன் படித்து பார்த்த போது, அந்த சொற்கள் அவனை சுட்டு சாம்பலாக்கின.

    தான் குரும்பூர் சென்றபோது தன் மகள்கள் இருவரும் கோட்டைக்குள்தான் இருந்தார்களா? என்பதை தன் மனைவியிடம் கேட்டுத் தெரிந்தான். மகள்கள் இருவரையும் அழைத்து 'நான் இல்லாத போது என் அனுமதி பெறாமல் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்' என்று கேட்டான். அதற்கு அவர்கள் இருவரும், 'பறக்கை பட்சிராஜா கோவிலில் நடைபெற்ற ஆராட்டு விழாவுக்கு சென்றோம், தங்களை மன்னியுங்கள்' என்றனர்.

    வஞ்சி நாட்டு ஒற்றன் கொண்டு வந்த ஓலையில் தான் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று எண்ணி தந்தையை பார்த்தனர் மகள்கள். வெங்கல ராஜன் ஓலையை தன் மகள்களிடம் கொடுத்து, படித்துப் பாருங்கள் என்றான்.

    ஓலையின் வாசகம் இதுதான், 'வெங்கல ராஜனுக்கு வஞ்சி நாட்டு இளவரசன் ராமவர்மன் எழுதிக் கொள்வது. உன் மகள்கள் இருவரின் அழகிலும் நான் பெரிதும் மயங்கி நிற்கின்றேன். அதிலும் குறிப்பாக உன் மூத்த மகள் துறைமுகத்தழகியை அடைய வேண்டும் என்ற ஆசை என்னை வெகு தூரத்துக்கு கொண்டு வந்து விட்டது. ஆகவே உடனடியாக உன் மூத்த மகள் துறைமுகத்தழகியை என் அந்தப்புரத்திற்கு அனுப்பி வை' என்று எழுதப்பட்டு இருந்தது.

    மடலை படித்து முடித்த துறைமுகத்தழகியின் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்தது. ஆராட்டு விழா சென்று அகப்பட்டோம் என்று நினைத்து மனம் வருந்தினாள். தந்தை தன் மகளின் கண்ணீரை பார்த்து மனம் வருந்தினார்.

    ஓலையை கொண்டு வந்த ஒற்றனை அழைத்த வெங்கல ராஜன், 'என் மகளை வஞ்சி நாட்டு இளவரசனின் அந்தப்புர அழகியாக அனுப்பி வைக்க முடியாது என்று சொல் போ' என்று கூறி அனுப்பி வைத்தான்.

    காலம் மெல்ல மெல்ல நகர்ந்தது. குரும்பூர் நகரில் இருந்து கூட்டி வந்த பணியாட்கள் கடற்கரையில் இருந்து பொற்றையடி வரை உள்ள நிலப்பரப்பை வரையறை செய்து கோட்டை கட்டத் தொடங்கினர். இருபுறமும் இருந்து மணலை எடுத்து முதலில் கோட்டை அமைப்பை உருவாக்கினர்.

    கடற்கரையில் கற்களை கொண்டும், சுண்ணாம்பு சுதை கொண்டும் கோட்டை கட்டும் பணி சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

    ஒரு நாள் காலையில் ரவிவர்மன் தன் படைகளோடு கோட்டையை சூழ்ந்து முற்றுகையிடத் தொடங்கினான். அப்போது வெங்கல ராஜன் அஞ்சி ஓட மனமின்றி கோட்டைக்குள் இருந்தபடியே தன் குடிகளையும் உள்ளே அமர வைத்து வெண்கல கதவினை உள்ளிருந்தபடியே பூட்டிக் கொண்டான்.

    வெங்கலராஜன் உள்ளிருந்தபடியே, கோட்டைக்கு வெளியே முற்றுகையிட்டுக் கொண்டிருந்த வஞ்சி நாட்டு வீரர்களை கவனித்துக் கொண்டிருந்தான். கோட்டை கதவும் திறக்கவில்லை, வஞ்சிநாட்டு வீரர்களும் அகன்று போகவில்லை. போரும் நடக்கவில்லை. ஏன் என்றால் துறைமுகத்தழகியை உயிரோடு அழைத்துப் போக வேண்டும் என்பதே படைக்கு இடப்பட்ட கட்டளை. இதனை காப்பாற்ற வீரர்கள் பலநாட்களாக கோட்டையை சுற்றிலும் நின்றனர்.

    திடீரென்று ஒரு நாள் போர்பறை ஒலித்தது. பொறுத்தது போதும் எழுந்து போருக்கு புறப்படுங்கள் என்பது இதன் பொருளாகும். இதனை அறிந்த வெங்கலராஜனும், ஆசை மகள்களும் மிகவும் துயரப்பட்டனர். தன் தந்தையின் கலக்கத்தை உணர்ந்து கொண்ட துறைமுகத்தழகி மனம் வருந்தினாள்.

    வெங்கல ராஜனோ தன் மகளை வஞ்சி மன்னன் விரும்பும் படியாக அனுப்புவதற்கு தயாராக இல்லை. துறைமுகத்தழகி தனது தந்தையிடம் வந்து, 'ஒரு மாபெரும் வீரன் நீங்கள். வீரனுக்கு அழகு விவேகம். தாங்கள் என் தலையை வெட்டி கோட்டைக்கு வெளியே தூக்கி எறியுங்கள். அதனை பார்த்து வஞ்சி மன்னன் அஞ்சி ஓடுவான்' என்று தைரியமாக தந்தையிடம் கூறினாள்.

    எண்ணற்ற கேள்விகளுக்கு இடையே ஒரு முடிவோடு வாளை எடுத்த வெங்கல ராஜன் தன் மகளை வெட்டி தலையை தூக்கி கோட்டைக்கு வெளியே எறிந்தான். வருவாள் என்று எண்ணி மகிழ்ந்து நின்ற வஞ்சி நாட்டு மன்னன் கைகளில் தலை ஒன்று விழுவதைக் கண்டு தலைதெறிக்க ஓடினான். கண்ணியத்தையும், தான் விரும்பும் கற்பையும் காத்து நிற்க வேண்டும் என்கிற உணர்வு உடைய பெண்ணை நான் இப்போதுதான் பார்க்கிறேன் என்று புலம்பிக்கொண்டே தன் படைகளோடு அஞ்சி விடைபெற்றான் வஞ்சி மன்னன்.

    பின்னர் வெங்கலக்கோட்டை கதவு திறந்து மக்களும், மன்னனும் தன் இளவரசியின் தலையை தூக்கி வைத்து அழுது புலம்பினர். பின்னர் வெங்கலராஜன், மகளின் உடலையும், தலையையும் கொண்டு சென்று சந்தனக் கட்டைகளை அடுக்கி அதன் மேல் வைத்து எரியூட்டி காடாற்றி முடித்தான். இன்றும் இந்த பகுதிக்கு காடேற்றி என்னும் பெயரே நிலைத்திருக்கிறது.

    பின்னர் மகள் இறந்த துக்கம் தாளாமல் வெங்கலராஜனும் தனது மார்பில் வாளை பாய்ச்சி உயிர் துறந்தான் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து ஒரு நாள் இரவு 60 அடி உயரத்துக்கு அரபிக்கடல் ஆர்ப்பரித்து எழுந்து உலகையே விழுங்க வந்தது. இன்று சுனாமி என்று அழைக்கப்படும் ஆழிப்பேரலையின் சீற்றத்தால் அரண்மனையும், கோட்டையும் குடிகள் வாழ்ந்த வீடுகளும் அழிந்து முடிந்தது.

    மன்னன் வெங்கலராஜன் அறக்கட்டளை தலைவர் கவிஞர் நீலம் மதுமயன், இந்த மன்னன் வெங்கல ராஜன் அறக்கட்டளையை சுமார் 10 ஆண்டுகளாக வெங்கல ராஜபுரம் (கோவில்விளை) என்னும் முகவரியில் நடத்தி வருகிறோம். இந்த அறக்கட்டளையின் நோக்கம் மன்னன் வெங்கல ராஜனின் புகழைப் பரப்புவது ஆகும். அவரைப்பற்றி அறியாதவர்கள் மத்தியில் அவரது பெருமைகளையும், வரலாற்றையும் தெரியப்படுத்துவதை பணியாக செய்து வருகிறோம்.

    • தாரகாசுரன் எனக்கு எந்த நிலையிலும் மரணம் நேரக்கூடாது என்று வரம் கேட்டான்.
    • தேவர்கள், மனிதர்கள் என எல்லோருக்கும் துன்பம் விளைவித்துக்கொண்டிருந்தான்.

    ஒருசமயம் தாரகாசுரன் என்னும் அரக்கன் சிவபெருமானை நோக்கி கடுமையாக தவம்புரிந்தார். அவனுடைய தவத்திற்கு மனமிறங்கிய சிவபெருமான் தாரகாசுரன் முன்னால் தோன்றினார். அவனை பார்த்து உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார் சிவபெருமான். உடனே தாரகாசுரன் இறைவனை பார்த்து எனக்கு எந்த நிலையிலும் மரணம் நேரக்கூடாது என்று வரம் கேட்டான்.

    இந்த வரத்தை கேட்டதும் சிவபெருமான் இந்த உலகத்தில் பிறக்கும் எல்லா உயிர்களுக்கும் இறப்பு உண்டு. அதனால் இந்த வரத்தை தர இயலாது. வேண்டுமென்றால் இன்னொரு வரம் கேள் என்றார்.

    தாரகாசுரன் சிவபெருமானிடம் எனக்கு மணம் முடிக்காத இளம் மங்கை அகோர முகத்துடன் ஆடை, அணிகலன்கள் எதுவும் இன்றி என்னோடு யுத்தம் செய்து என்னை வீழ்த்த வேண்டும் என்று கேட்டான். இறைவனாகிய சிவபெருமானும், வரத்தை தந்தோம் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

    உடனே தாரகாசுரனுக்கு ஒரே மகிழ்ச்சி நாம் வரம் வாங்கிவிட்டோம். இதனால் நமக்கு இப்பிறவில் மரணம் இல்லை என்று எண்ணிக்கொண்டு மகிழ்ச்சியுடன் இருந்தார். இதனால் தேவர்கள், மனிதர்கள் என எல்லோருக்கும் துன்பம் விளைவித்துக்கொண்டிருந்தான்.

    தாரகாசுரனின் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரவே தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவபெருமானிடம் சென்று தாரகாசுரனிடம் இருந்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று முறையிட்டனர். உடனே சிவபெருமான் பக்கத்தில் இருக்கும் தன்னுடைய மனைவியான பார்வதிதேவியை பார்த்தார்.

    உடனே பார்வதி தேவியின் மேனியில் இருந்து தனது சாயலுடன் அனல்கொண்ட பார்வையும், ஆங்கார ரூபமும் கொண்ட காளி தேவி பிறந்தாள். இந்த காளிதேவிதான் தாரகாசுரனை அழிக்க புறப்பாட்டாள். அதனைக்கண்ட தாரகாசுரன், தனது உதவியாளரான சண்ட, முண்டாவை காளிதேவியிடம் யுத்தம் புரிய அனுப்பி வைத்தான். அவர்களும் காளிதேவியுடன் யுத்தம் செய்தனர்.

    யுத்தத்தின் போது காளிதேவி தனது வலதுகரத்து வாளால் சண்டனை வெட்ட அவனது உடலில் இருந்து கொட்டிய ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்து ஒரு அசுரன் தோன்றினான். உடனே காளிதேவி ஆக்ரோஷம் பொங்க தனது சடைமுடியை எடுத்தெறிந்தாள். அதில் இருந்து கருங்காளி தோன்றினாள்.

    அந்த கருங்காளி தேவியை தன்னகத்தே கொண்ட காளிதேவி அகோரம் கொண்டு எழுந்தாள். உடனே அசுரர்கள் நெருங்க நெருங்க ஆயிரம் கண்ணும் கரங்களும் கொண்டவளாய் காளிதேவி ஆயிரம் பேராக நின்றாள்.

    அசுரர்களை வெட்டி வீழ்த்திய காளிதேவி மீண்டும் அசுரர்கள் பிறக்கா வண்ணம் சண்டமுண்டாவை வதம் செய்தாள். சண்ட முண்டாவின் உடலில் இருந்து வெளியேறிய ரத்தம் மண்ணில் விழாதவாறு அது அனைத்தையும் குடித்துவிட்டாள் காளிதேவி. சண்டமுண்டாவை அழித்த பின்னர் தாரகாசுரனை அழித்தாள் காளிதேவி.

    அசுரனை அழித்த மகிழ்ச்சியில் வெறிகொண்டு ஆடினாள் காளிதேவி. இப்படி மகிழ்ச்சியில் ஆடிக்கொண்டிருக்கும் காளிதேவி, பின்னால் இருக்கக்கூடிய சிவபெருமானை தள்ளிவிட்டு அவர் மீது ஏறி நின்று ஆடினாள்.

    சிறிதுநேரத்தில் தன் தவறை உணர்ந்த காளிதேவி ஞானத்தால் தன்னுடைய நாக்கை கடித்தாள். அதில் இருந்து ரத்தம் கொட்டியது. அந்த வலியின் காரணமாக நாக்கை வெளியே நீட்டினாள் காளிதேவி. இப்படி அகோர முகமும், கழுத்தில் கபாள மாலையுடன் அட்டகருப்பு நிறத்தில் கருங்காளி தோற்றத்தை தன்னிடம் இருந்து நீக்கிவிட்டாள் காளிதேவி.

    அந்த கருங்காளி தோற்றத்தில் இருந்த காளி ஒரு ரூபமாக வெளியேறி சென்றது. அதன்பிறகு காளிதேவி, சிவபெருமானுடன் நடனம் புரிந்து தில்லையில் வீற்றிந்தாள்.

    காளிதேவியிடம் இருந்து விலகிவந்த நிழல் ரூபமான கருங்காளி தேவி பொதிகை மலைக்கு வந்தாள். அதன்பிறகு நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பத்தமடையில் கருங்காளி அம்மன் நிலையம் கொண்டு இருக்கிறாள். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கவலைகளை நீக்கி மகிழ்ச்சியான வாழ்வை தருகிறாள் கருங்காளி அம்மன். நாமும் அவரை வழிபடுவோம். அவர் அருள் பெறுவோம்.

    • மேலப்புதுக்குடியில் தான் அருஞ்சுனைகாத்த அய்யனார் கோவில் உள்ளது.
    • நான் இந்த இடத்தில் சுனையாக இருக்க விரும்புகிறேன்.

     திருச்செந்தூர் அருகில் உள்ள ஊர் தான் மேலப்புதுக்குடி. இந்த பகுதியில் தான் அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் அமைந்துள்ளது. சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டத்தை தலைமையிடமாகக்கொண்டு சிங்கராஜன் என்ற மன்னன் இந்த பகுதியை ஆட்சி செய்து வந்தார்.

    இந்த பகுதியில் ஒரு தடாகம் ஒன்று இருந்தது. இந்த தடாகத்தில் இருக்கக்கூடிய நீர் பன்னீர்போல் சுவைகொண்டதாக இருக்கும்.

    ஒருதடவை கனகமணி என்ற பெண் இந்த தடாகத்துக்கு வந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு போய்க்கொண்டு இருந்தார். அவ்வாறு போகும்போது கல்தடுக்கி கீழே விழுந்தார். இப்படி கல் தட்டி கால் இடறி கீழே விழுந்ததால் இடுப்பில் வைத்துக்கொண்டிருந்த நீர் கீழே விழுந்தது.

    கீழே விழுந்ததும் அங்கு தவம் செய்துகொண்டிருந்த முனிவரை நனைத்துவிட்டது. தண்ணீர் பட்டு முனிவரை நனைத்துவிட்டதால் அவர் கோபம் அடைந்து அந்த பெண்ணை பார்த்து உன் கையால் நீர் வாங்கி அருந்தினால் அவர்கள் உயிரிழந்துவிடுவார்கள். இந்த உண்மையை நீ வெளியே தெரிவித்தால் மறுகணமே மரணம் உன்னை தழுவும். இதையெல்லாம் விட நீ எவ்வகையில் இறந்தாலும் இறக்கும் தருவாயில் செய்யாத குற்றம் சுமத்தப்பட்டு தண்டனைக்காக மறிப்பாய் என்று சாபமிட்டார் முனிவர்.

    உடனே கனகமணி முனிவரை பார்த்து அய்யனே அறியாமல் செய்த இந்த பிழைக்கு மாபெரும் தண்டனையா? என்று கேட்டாள்.

    உடனே முனிவர் பெண்ணே நீ இறக்கும் தருணத்தில் சொல்வது எல்லாம் பலிக்கும். மரணத்திற்கு பிறகு நீ சொர்க்கத்திற்கு செல்வாய் என்று கூறினார்.

    இப்படி பல நாட்கள் கடந்தது.  அந்த தடாகத்துக்கு அருகில் கனி தரக்கூடிய மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தில் இருந்து வரக்கூடிய கனியை அந்த இடத்தை ஆட்சி புரிந்து வந்த சிங்கராஜன் என்பவர் சாப்பிட்டு வந்தார். மரத்தில் இருக்கும் கனி மன்னன் வருகைக்காக அதே இடத்தில் இருக்கும். கனியை யாரும் எடுத்துவிடக்கூடாது என்பதற்காக சிங்கராஜனின் காவல்காரர்கள் 5-க்கும் மேற்பட்டோர் அங்கு காவல் காத்து நின்றனர்.

    வழக்கம்போல் கனகமணியும் தண்ணீர் எடுத்து வருவதற்காக தடாகத்திற்கு வந்தார். கனகமணி தண்ணீர் எடுத்துக்கொண்டிருக்கும் போது மரத்தில் இருக்கும் கனி அவருடைய குடத்திற்குள் விழுந்துவிட்டது. அதை காவலாளிகள் கவனிக்கவில்லை.

    கனகமணி அந்த குடத்துடன் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும்போது 21 தேவாதி தேவதைகள் கனகமணிக்கு முன்னால் வந்து நாங்கள் அனைவரும் தாகத்துடன் இருக்கிறோம். பெண்ணே... தண்ணீர் கொடு என்று கேட்டார்கள். இதைக்கேட்டதும் கனகமணி அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

    உடனே அந்த முனிவர் கொடுத்த சாபம் தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவள் யாருக்காவது தண்ணீர் கொடுத்தால் அவர்கள் மரணம் அடைவார்கள். அந்த விஷயத்தை வெளியே சொன்னால் கனகமணியும் மறித்துவிடுவாள் என்று முனிவர் கொடுத்த சாபம் அவள் கண்முன் தோன்றியது.

    அந்த சாபத்தை எண்ணி 21 தேவாதி தேவதைகளுக்கும் தண்ணீர் கொடுக்க மறுத்தாள் கனகமணி. உடனே அந்த 21 தேவாதி தேவதைகளும், கனகமணியிடம் ரொம்ப தாகமாக இருக்கிறது. தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் இறந்துவிடுவோம் என்று கெஞ்சி கேட்டனர். ஆனாலும் கனகமணி மனதை கல்லாக்கிக் கொண்டு தண்ணீர் கொடுக்க மறுத்துவிட்டாள்.

    அதன்பிறகு கனகமணி அந்த 21 தேவாதி தேவர்களை பார்த்து ரொம்ப கோபத்துடன் நான் அனுதினம் வழிபடும் ஹரிஹர புத்திரன் மீது ஆணை எனக்கு வழிவிடுங்கள் என்று சொன்னாள். உடனே தேவாதி தேவதைகளும் அவளுக்கு வழிவிட்டனர். உடனே கனகமணியும் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

    அந்த சமயத்தில் சிங்கராஜ மன்னன் அந்த கனியை தேடி தடாகத்திற்கு வந்தார். தடாகத்திற்கு பக்கத்தில் இருக்கும் மரம் அருகே வந்ததும் காவலில் இருந்தவர்கள் மன்னா கனி இன்னும் விழவே இல்லை என்று கூறினர். இதை கேட்டதும் கோபம் கொண்ட மன்னன் நேரம் தவறிவிட்டது. கனி இன்னும் விழாமல் இருக்காது. கனி விழுந்துவிட்டது. கனியை உண்டது உங்களில் யார்? என்று  கேட்டார்.

    காவலாளிகள் அனைவரும் அரசனிடம் நாங்கள் யாரும் உண்ணவில்லை மன்னா... என்று கூறினார்கள் பயத்துடன். காவலாளிகளை பார்த்து அரசன் சரி எப்படியானாலும் இன்னும் ஒரு மணிநேரத்திற்குள் அந்த கனியை நான் உட்கொள்ள வேண்டும். ஊருக்குள் செல்லுஙள் ஒரு வீடு விடாமல் தேடுங்கள் பழத்தோடு வாருங்கள். இல்லையென்றால் உங்களில் ஒருவருக்கும் தலை தப்பாது என்று கூறி எச்சரித்தார்.

    தலைவனின் கட்டளைக்கிணங்க காவலாளிகள் அனைவரும் ஊருக்குள் சென்று அனைவரது வீடுகளிலும் தேடினார்கள்.

    கடைசியாக கனகமணி வீட்டுக்கு முன் வந்தனர். குடத்திற்குள் நீரோடு மன்னன் சாப்பிடும் கனியும் இருந்தது. அந்த பழத்தை எடுத்துவந்த காவலாளிகள், அந்த பெண்ணையும் இழுத்துவந்து மன்னரது முன்னால் நிறுத்தி மன்னா... நீங்கள் சாப்பிடக்கூடிய கனி இவளுடைய குடத்து நீருக்குள் இருக்கிறது என்று கூறினார்கள்.

    அப்போது அங்கு வந்த தேவாதி தேவதைகள் அரசனிடம், அரசரே நாங்கள் கூறுவதையும் ஒரு தடவை கேளுங்க. குடத்தினுள் கனியினை இவள்தான் திருடி சென்றிருக்க வேண்டும். நாங்கள் ஒரு தடவை மிகுந்த தாகத்துடன் இவளிடம் சென்று எங்களுக்கு சிறிதளவு தண்ணீர் கொடு என்று கேட்டோம். ஆனால் அவள் எங்களுக்கு தரவே இல்லை.

    அதனால் எங்களுக்கு இப்போதுதான் புரிகிறது. எதற்காக தரவில்லை என்று. நீங்கள் தினமும் சாப்பிடக்கூடிய அதிசய பழத்தை இவள் தான் திருடி இருக்கிறாள். அதனால் தான் இவள் எங்களுக்கு தண்ணீர் தரவில்லை என்று 21 தேவாதி தேவதைகளும் சொன்னார்கள்.

    அப்போது பேச்சியம்மன் முதுமை பெண் வடிவத்தில் அங்கு வந்து அரசன் முன்னால் சென்று மன்னா... அந்த கனியை இந்த பெண் களவாடவில்லை. அந்த மரத்தின் பழம் தானாகவே இவளது குடத்து நீருக்குள் விழுந்துவிட்டது என்று கூறினாள். அந்த வயதான பெண் கூறுவதை கேட்காமல் மன்னன் உடனே கனகமணிக்கு மரண தண்டனையை நிறைவேற்றுங்கள் என்று உத்தரவிட்டார்.

    மன்னனின் கட்டளையை ஏற்ற காவலாளிகள் கனகமணிக்கு மரண தண்டனையை நிறைவேற்றினார்கள். கனகமணி இறக்கும் தருவாயில் தான் வணங்கும் அய்யனே என்று ஹரிஹர புத்திரனை அழைத்தாள். கனகமணியின் பக்திக்கு மனமிறங்கி வந்தார் ஹரிஹரபுத்திரன். பெண்ணே கலங்காதே உன்னை உயிர்ப்பிக்கிறேன் என்று சொன்னார்.

    இதைக்கேட்டதும் கனகமணி வேண்டாம். நான் இந்த பிறவியில் சாபம் வாங்கிவிட்டேன். அந்த சாபத்தோடு வாழ்வதை நான் விரும்பவில்லை. நான் இறக்கும் தருவாயில் நான் எண்ணியது நிறைவேறும் என்றார் முனிவர். எந்த தண்ணீருக்காக நான் சாபம் பெற்றேனோ அதுபோல் இனி தண்ணீருக்காக அலைந்து திரிந்து சாபம் பெறக்கூடாது என்பதற்காக நான் இந்த இடத்தில் சுனையாக இருக்க விரும்புகிறேன்.

    இந்த சுனையை யாரும் அபகரிக்காமல், வேலியிட்டு தடுக்காமலும் இருக்க அய்யனே நீங்களே சுனையை காத்தருள வேண்டும் என்று கனகவல்லி ஹரிஹரபுத்திரனிடம் கேட்டார். உடனே ஹரிஹர புத்திரனும் அருமையான சுனையாக மாறும் உன்னை நான் காத்தருள்வேன் என்று உறுதியளித்தார். அதனால் தான் அருஞ்சுனைகாத்த அய்யனார் என்று அழைக்கப்படுகிறார்.

    இந்த நிகழ்ச்சியை கண்ட மன்னன் தன்னுடைய தவறுக்கு வருந்தி உயிரை மாய்த்துக்கொண்டார். உடனே 21 தேவாதி தேவதைகளும் ஹரிஹரனிடம் வந்து மன்னிப்பு கேட்டனர். அதன்பிறகு அவர்களுக்கும் தன்னுடைய இருப்பிடத்தில் இடம் கொடுத்து தன் அருகில் வைத்துக்கொண்டார் அய்யனார்.

    இங்குள்ள அய்யனார் பூரணபுஷ்கலையுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். பரிவார தெய்வங்களாக பேச்சியம்மன், பரமேஸ்வரி அம்மன், தளவாய் மாடன், வன்னியடி ராஜன் கருப்பசாமி, சுடலைமாடசுவாமி, இசக்கி அம்மன், பட்டானி சாமி, முன்னோடி முருகன் ஆகியோருடன் அருள்பாலித்து வருகிறார்கள்.

    இங்குள்ள சுனைநீரில் குளித்தால் தீராத நோய்களும் தீரும் என்ற நம்பிக்கை இன்றளவும் மக்களிடம் உள்ளது. இங்குள்ள அருஞ்சுனை காத்த அய்யனாரை வழிபட்டால் கடன் தீர்ந்து துன்பம் அனைத்தும் மாறிவிடும் என்பது இங்கு வரும் பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது. துன்பங்களை நீக்கி அருமையான வாழ்க்கையை தரும் அருஞ்சுனைகாத்த அய்யனாரை நாம் ஒவ்வொருவரும் வணங்குவோம். அவர் அருள் பெறுவோம்.

    • பாரதப்போரில் வென்றதால் அகந்தையோடும், ஆணவத்துடனும் இருந்தான் அர்ஜுனன்.
    • உன்னைவிட என் மீது அதிகமாக அன்பும், பக்தியும் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.

    கிருஷ்ணர் கூட அதிகநேரம் இருப்பவரான அர்ஜுனனுக்கு தான் தான் மிகச்சிறந்த பக்திமான் என்கிற அகந்தை இருந்தது. கிருஷ்ணர் அந்த ஆணவத்தை அர்ஜுனனிடம் இருந்து எப்படி அகற்றினார் என்பதை தான் இந்த கதையில் பார்க்கப்போகிறோம்.

    பாரத போர் நடந்து முடிந்தது. அதில் வெற்றி பஞ்சபாண்டவர்களுக்கு கிடைத்தது. பாரதப்போரில் வென்றதால் அகந்தையோடும், ஆணவத்துடனும் இருந்தான் அர்ஜுனன். நான் வெற்றிபெற்ற பிறகும், இப்போது வரைக்கும் கிருஷ்ணர் என்னுடன் தான் இருக்கிறார். என்னைவிட யாரும் கிருஷ்ணரிடம் அதிக அன்புடனும், பக்தியுடன் யாரும் இருக்கவில்லை என்று நினைத்தார் அர்ஜுனர்.

    இதைபார்த்த கிருஷ்ணர், அர்ஜுனனிடம் அப்படி நீயாகவே முடிவு செய்துவிடக்கூடாது. உன்னைவிட என் மீது அதிகமாக அன்பும், பக்தியும் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அதிலும் அர்ஜுனனின் இந்த கர்வத்தை எப்படியாவது அகற்ற வேண்டும் என்று எண்ணிய கிருஷ்ணர், அர்ஜுனனை பார்த்து என்னை அதிக பக்தியுடன் வணங்கி வருபவள் பிங்கலை. அவள் அஸ்தினாபுரத்துக்கு அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கிறாள். அவளை நாம் சென்று பார்த்து வரலாம் என்று கூறினார்.

    உடனே கிருஷ்ணர் இப்போது தான் பாரதபோர் முடிந்துள்ளது. இதே தோற்றத்தில் நாம் வெளியில் செல்ல வேண்டாம். அதனால் நான் ஒரு பெண்ணாக மாறுகிறேன். நீயும் என் தோழியாக மாறி செல்லலாம் என்றார்.

    சற்று நேரத்தில் அரண்மணையில் இருந்து கிருஷ்ணரும், அர்ஜுனரும் பெண்களாக மாறி வெளியே புறப்பட்டு வந்தனர். அஸ்தினாபுரம் வழியாக சென்று பிங்கலை வீட்டிற்கு சென்றனர்.

    அர்ஜுனரும், கிருஷ்ணரும் பிங்கலையின் வீட்டின் கதவை தட்டினர். அங்கு தெய்வீக ஒளியோட ஒரு மூதாட்டி கதவை திறந்தார். உடனே பெண்களாக உருமாரி கிருஷ்ணரும், அர்ஜுனரும் தாயே... நாங்கள் நெடுந்தூரம் செல்ல வேண்டும். மிகவும் களைப்பாக உள்ளது. சற்று நேரம் இங்கு இளைப்பாறிவிட்டு செல்லலாமா? என்று கேட்டனர்.

    அதற்கு அந்த மூதாட்டி உள்ளே வாருங்கள். நான் பூஜை செய்துகொண்டு இருக்கிறேன். பூஜை முடிந்தபிறகு நீங்களும் உணவு அருந்திவிட்டு செல்லுங்கள் என்றார். வீட்டில் உள்ள பூஜை அறையில் ஒரு பீடத்தில் கிருஷ்ணரின் விக்கிரகம் இருந்தது. அந்த கிருஷ்ணரின் விக்கிரகத்துக்கு அருகில் சிறியதாக ஒரு கத்தியும், நடுத்தரமாக ஒரு கத்தியும், மூன்றாவதாக பெரியதாக ஒரு கத்தியும் இருந்தது. மொத்தம் 3 கத்திகள் அந்த கிருஷ்ணர் விக்கிரகத்துக்கு அருகில் வைக்கப்பட்டிருந்தது.

    இதைப்பார்த்தை பெண் வடிவில் இருந்த கிருஷ்ணர் தாயே... ஏன் கிருஷ்ணரின் விக்கிரகத்துக்கு அருகில் 3 கத்திகள் வைக்கப்பட்டுள்ளது. ஏன் கிருஷ்ணர் விக்கிரகத்துடன் 3 கத்துகளையும் வைத்து பூஜைசெய்கிறீர்கள். இந்த கத்திகள் யாருடையது என்று கேட்டார். அதற்கு பிங்கலை இந்த கத்திகள் என்னுடையது தான். வாய்ப்பு கிட்டும்போது கிருஷ்ணருக்கு கொடுமைசெய்த எனது விரோதிகள் மூவரையும் கொல்ல வேண்டும். அதன்பொருட்டுத்தான் இந்த பூஜை.

    உடனே கிருஷ்ணர் விரோதியா? யார் அந்த விரோதிகள் என்று கேட்டார். குசேலன், பாஞ்சாலி, அர்ஜுனன். இந்த மூவரும் தான் அந்த விரோதிகள். இந்த குசேலனை கொல்லை சின்ன கத்தியும், பாஞ்சாலிக்கு நடுத்தர கத்தி, மாவீரன் என்று தன்னைப்பற்றி பிதற்றிக்கொண்டு திரியும் அர்ஜுனனை கொல்லத்தான் இந்த பெரிய கத்தி என்று சொன்னாள் பிங்கலை.

    இதைக்கேட்டதும் பெண் உருவில் வந்த அர்ஜுனனுக்கு அதிர்ச்சியாகிவிட்டது. உடனே பெண் உருவில் இருந்த கிருஷ்ணர், பிங்கலையிடம் அந்த மூவரும் கிருஷ்ணருக்கு அப்படி என்ன தீங்கு செய்தனர் என்று கேட்டார். பிங்கலை அந்த குசேலன் தவிட்டு அவலை என்னுடைய கிருஷ்ணருக்கு கொடுக்கலாமா? கிருஷ்ணர் வெண்ணெய்யை விரும்பி உண்பவன். அந்த அவல் என்னுடைய கிருஷ்ணரின் தாமரை போன்ற இதழை பாதிக்காதா. இந்த புத்தி கூட இல்லாமல் அவலை கிருஷ்ணருக்கு கொடுக்கலாமா? என்று கேட்டாள் பிங்கலை.

    அது சரி... பாஞ்சாலி ஒரு பெண் அவள் எப்படி உங்களுக்கு விரோதியானாள்? என்று கேட்டார் கிருஷ்ணர். ஓ அதுவா.... என்னுடைய கிருஷ்ணரிடம் இருந்து புடவைகளை பெற்றாள். துவாரகையில் இருக்கும் என்னுடைய கிருஷ்ணர் அஸ்தினாபுரத்தில் உள்ள பாஞ்சாலிக்கு புடவைகளை வாரிவாரி கொடுத்தார். அந்த புடவையை இழுத்து இழுத்து துச்சாதனன் கைவலித்து மயக்கமே போட்டு விழுந்தான். புடவையை இழுத்த துச்சாதனனுக்கே அப்படி என்றால், அதை வாரி வாரி வழங்கிய என்னுடைய கிருஷ்ணருக்கு எப்படி கைவலித்திருக்கும். என்னுடைய கிருஷ்ணரின் கைகளை வலிக்கச்செய்த பாஞ்சாலையை நான் சும்மாவிடுவேனா நான் என்று கோபமாக கூறினாள்.

    இதைக்கேட்ட பெண் வடிவில் இருந்த கிருஷ்ணர். அந்த மூன்றாவது கத்தி அர்ஜுனனுக்கு என்று சொன்னீர்களே, கிருஷ்ணரின் பக்தியிலேயே சிறந்தவன் அர்ஜுனன். அர்ஜுனன் மேல் ஏன் இந்த விரோதம்? உடனே பிங்கலை அர்ஜுனனின் பக்தியை நீ தான் மெச்சிக்கொள்ள வேண்டும்.

    என் கிருஷ்ணனை தேரோட்ட சொல்வானா? தேரோட்டுவது அவ்வளது சாதாரணமானதல்ல. ஊரில் தேரோட்டிகளுக்கா பஞ்சம். ஊரில் என்றாவது ஒரு நால் என் கண்ணில் அகப்படுவான். அப்போது அன்றைக்கு அவனை பார்த்துக்கொள்கிறேன் என்றாள் பிங்கலை கோபமாக.

    இவ்வாறு பிங்கலை சொன்னவுடன், பெண் வேடமிட்டு வந்த அர்ஜுனனுக்கு பதட்டத்தில் வியர்த்து கொட்டியது. இதைப்பார்த்து கிருஷ்ணர் சிரித்துக்கொண்டு பிங்கலையை பார்த்து தாயே குசேலன் அறியாமையில் செய்தான். குசேலனிடம் அவலை தவிர வேறு எந்த ஒரு பொருளும் இல்லை. அவன் கிருஷ்ணரிடம் எந்த ஒரு பொருளையும் எதிர்பார்க்கவில்லை. அவன் கேட்காமலேயே கிருஷ்ணர் தான் அவனுக்கு அளவற்ற செல்வத்தை வழங்கினார். குசேலன் சுயநலமற்றவன் எனவே குசேலனை மன்னித்துவிடுமாறு பிங்கலையிடம் கூறினார் கிருஷ்ணர். இதைக்கேட்டதும் பிங்கலை கிருஷ்ணர் பீடத்தின் அருகில் வைக்கப்பட்டிருந்த சிறிய கத்தியை எடுத்து வீசினார்.

    பெண்வேடமிட்டு வந்திருந்த கிருஷ்ணர் மீண்டும் பாஞ்சாலிக்கு புடவையை வாரி வாரி கொடுத்து கிருஷ்ணரின் கைகள் வலித்தது உண்மைதான். ஆனாலும் ஒரு பெண்ணிற்கு மானம் பெரிதல்லவா, எனவே மானம் காக்க உதவியதால் பாஞ்சாலியையும் மன்னித்துவிடுங்கள் என்று கிருஷ்ணர் கூறினார். இதைக்கேட்டதும் பிங்கலை இரண்டாவது கத்தியையும் தூக்கி வீசிவிட்டார்.

    ஆனால் போரில் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்ற உலகியல் சுயநலத்திற்காக என்னுடைய கிருஷ்ணரை தேரோட்டச் செய்த அர்ஜுனனை மட்டும் நான் மன்னிக்கவே மாட்டேன். இந்த பெரிய கத்தி அந்த பீடத்திலேயே இருக்கட்டும் என்று சொன்னார் பிங்கலை.

    இதைக்கேட்டதும் பெண் வடிவில் இருந்த கிருஷ்ணர், பிங்கலையிடம் சுயநலம் பிடித்த அர்ஜுனனை நீங்கள் கொல்வதும் நியாயம் தான். அதை நானும் ஒப்புக்கொள்கிறேன் என்று கிருஷ்ணர் சொன்னவுடன் அர்ஜுனனுக்கு தூக்கிவாரிப்போட்டது. அர்ஜுனனுக்கு பயத்தில் வியர்த்து கொட்டியது.

    இதைப்பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணர், பிங்கலையிடம் அர்ஜுனன், கிருஷ்ணரின் மனதை கவர்ந்ததால் தான் கைவலியையும் பொருட்படுத்தாமல் தேரோட்டினார். நீங்க அர்ஜுனனை கொன்றுவிட்டால் நண்பனை இழந்து கிருஷ்ணர் வாடிவிடுவார் அல்லவா. கிருஷ்ணர் வருத்தப்பட்டால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா என்று சொன்னார் கிருஷ்ணர்.

    அடடா நீங்கள் சொன்ன கோலத்தில் நான் யோசிச்சு பார்க்கவில்லையே. நீ சொன்னதும் நியாயம் தான் என்னுடைய கிருஷ்ணர், உடல் வருத்தமோ, மன வருத்தமோ இல்லாமல் இருந்தால் அதுபோதும் எனக்கு. கிருஷ்ணருக்கு மனவருத்தம் தரக்கூடிய செயலை நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே பிங்கலை மூன்றாவது கத்தியையும் தூக்கி வீசிவிட்டார்.

    உடனே பெண் வேடத்தில் இருக்கும் அர்ஜுனன், பிங்கலையின் காலில் விழுந்து வணங்கினான். அப்போது அர்ஜுனனின் ஆணவம் அழிந்துபோனது.

    இந்த கதையில் இருந்து நாம் என்ன தெரிந்துகொண்டோம் என்றால், நம்மில் பலருக்கும் நான் என்ற ஒரு ஆணவமும், என்னால் மட்டும் தான் முடியும் என்கிற கர்வமும் என்னைக்குமே தலைதூக்கிக்கொண்டே இருக்கும். இந்த கர்வமும், ஆணவமும் நம்மிடம் இருந்து நீங்கினால் வாழ்க்கையில் வெற்றி தானாக தேடிவரும். அதைத்தான் இந்த கதை நமக்கு உணர்த்துகிறது.

    • பூலாத்தி செடிகளுக்கு இடையே கண்டெடுக்கப்பட்டதால் பூலுடையார் சாஸ்தா.
    • புத்திரபாக்கியம் அருளக்கூடிய சாஸ்தா.

    சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னாள் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி பகுதியை சேர்ந்த 7 பேர் தொழில் நிமித்தமாக கேரளாவிற்கு சென்றனர். அங்கிருந்து பொருளீட்டுக்கொண்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அந்த ஊரை சேர்ந்தவர்கள் இந்த 7 பேரும் திருடர்கள் என்று நினைத்து அவர்களை தாக்க முயன்றனர்.

    அதுமட்டுமல்லாமல் இதுநாள்வரைக்கும் அவர்கள் சேர்த்துவைத்திருந்த பொருட்களையும் எடுக்க முயன்றனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டுவந்து அவர்களை துரத்திக்கொண்டு வந்தனர். இவர்கள் அனைவரும் அந்த பகுதியில் ஓங்கி உயர்ந்து அடர்த்தியாக வளர்ந்துள்ள பூலாத்தி செடிகள் நிறைந்த புதருக்குள் நுழைந்து மறைந்து கொண்டனர்.

    அவர்களை துரத்திக்கொண்டு வந்தவர்கள் புதரின் அருகில் வந்து பார்த்தனர். அங்கு யாரையும் காணவில்லை. அப்போது திடீரென்று யானை ஒன்று பிளிரக்கூடிய சத்தம் ஒன்று கேட்டது. உடனே இவர்களை துரத்திவந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் அந்த இடத்தைவிட்டே சென்றுவிடுகின்றனர்.

    அதைக்கண்டதும் அந்த 7 பேரும் தப்பித்துவிட்டோம் என்று புதரில் இருந்து வெளியே வந்தனர். அப்போது அந்த 7 பேரின் கண்களுக்கு மண்ணால் ஆன சாஸ்தா சிலை தென்பட்டது. இந்த சாஸ்தா தான் நம்மை காப்பாற்றியது. யானை உருவில் வந்தது இந்த சாஸ்தான். எனவே இந்த சாஸ்தாவை நம் ஊருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று முடியு செய்தனர்.

    உடனே அந்த 7 பேரும் சாஸ்தா சிலையை எடுத்துக்கொண்டு ஊருக்கு புறப்பட்டு சென்றார்கள். அவர்கள் மலையாள நாடுவிட்டு நாஞ்சில் நாட்டிற்கு வந்தனர். அங்கிருந்து அஞ்சுகிராமம், ராதாபுரம், திசையன்விளை, சாஸ்தான் குளம் வந்தார்கள். அடுத்தது அங்கிருந்து அமுதுண்ணாகுடி கிராமத்திற்கு வந்தனர்

    அங்கு அந்த 7 பேரும் தாங்கள் கொண்டுவந்த சாஸ்தா சிலையை இறக்கி வைத்துவிட்டு உணவு சமைத்து சாப்பிட்டனர். சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுத்த பிறகு பயணத்தை தொடர்ந்தனர். அப்போது சாஸ்தா சிலையை எடுக்க முயன்றபோது அந்த பகுதியில் இருந்த சுரைக்காய் செடி காலை இடறிவிட்டது. இதனால் சாஸ்தா சிலையின் கால் பகுதி உடைந்து கீழே விழுந்தது.

    பாதம் விழுந்த சாஸ்தா சிலையுடன் அந்த 7 பேரும் பயணத்தை தொடர்ந்தனர். இப்படி ஒவ்வொரு பகுதியாக கடந்து மதியவேளையில் கடம்பாகுளம் பகுதிக்கு வந்தனர். மதிய உணவை சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பலாம் என்று நினைத்து கடம்பாகுளம் பகுதியில் சாஸ்தா சிலையை இறக்கி வைத்தனர்.

    மதிய உணவை முடித்துவிட்டு கடம்பாகுளம் பகுதியில் இருந்து கிளம்ப தாயாராகி சாஸ்தா சிலையை எடுக்கும்போது சாஸ்தா சிலையில் இடுப்பிற்கு கீழ் பகுதி அந்த இடத்திலேயே பதிந்துஇருந்தது. சாஸ்தா சிலையில் தலை மற்றும் மார்புடன் கூடிய பகுதியை மட்டும் தான் அவர்களால் எடுக்க முடிந்தது.

    அந்த பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு கடம்பாகுளம் பகுதியை விட்டு கிளம்பினார்கள். அடுத்து ஸ்ரீவல்லப ஏரியில் மறுகால் பாயக்கூடிய தலைப்பகுதியில் இருக்கக்குடிய மலைமேல் உள்ள பாறையின் மீது தாங்கள் கொண்டு வந்த சாஸ்தா சிலையை வைத்துவிட்டு அந்த 7 பேரும் அவர்களுடைய ஊருக்கு சென்றுவிட்டனர்.

    அந்த சிலையை ஊருக்குள் கொண்டுசெல்லக்கூடாது என்று சொல்லி வனப்பகுதியிலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டனர். இப்படி நாட்கள் கடந்துகொண்டே சென்றது. அப்போது ஒரு நாள் அந்த பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்த மணியாச்சி ஜமீன் பசுமாடு ஒன்று தினமும் மலைமீது ஏறி அங்குள்ள சாஸ்தா சிலையின் மீது பாலை சொறிந்துவிட்டு கீழே இறங்கி சென்றுவிடும். இப்படி தினமும் அந்த பசுமாடு பாலை சொறிந்துவிட்டு சென்றுகொண்டிருந்தது.

    ஒருவாரம் கழித்து மேய்ப்பவர் ஜமீனிடம் போய் இந்த பசுமாடு மட்டும் காலையில் தான் பால் தருகிறது. மாலையில் பசுவின் மடுவில் பாலே இல்லை என்று கூறினார். உடனே ஜமீன் அந்த மாட்டில் உள்ள பாலை யாராவது கறக்கிறார்களா? அல்லது மாடு மேய்ப்பவர்களே பாலை கறந்து விற்கிறார்களா என்று நினைத்துக்கொண்டு அவர்களை கவனிப்பதற்காக 5 நபர்களை ஜமீன் அனுப்பி வைத்தார்.

    அன்றும் வழக்கம்போல் பசு மலைமேல் உள்ள சாஸ்தா சிலையின்மீது பாலை சொறிந்துகொண்டிருந்தது. பசுவின் இந்த செயலை மாடுகளை மேய்ப்பவர்களும், அந்த 5 நபர்களும் வியப்புற்று பார்த்தனர். உடனே இந்த தகவலை ஜமீனிடம் தெரிவித்தனர்.

    மறுநாள் ஜமீன் வந்து பார்த்தார். அன்றும் பசு மலைமேல் உள்ள சாஸ்தா சிலைக்கு தானே பாலை சொறிந்தது. அவருடன் ஊராரும் அந்த செயலை வியந்து பார்த்தனர். சிலையை கொண்டுவந்து வைத்த அந்த 7 பேரும் மக்களோடு மக்களாக நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். இந்த பசுவின் செயலையும், சாஸ்தாவின் மகிமையையும் கண்டு மெய்சிலிர்த்து நிற்கும் போது கூட்டத்தில் இருந்த ஒருவர் மீது சாமி அருள் வந்து ஆடினார்.

    நான் சாஸ்தா வந்திருக்கிறேன் என்றும் எனக்கு இங்கு பூரணபுஸ்கலையுடன் சிலை அமைத்து கோவில் எழுப்ப வேண்டும் என்றும், எனது கோட்டைக்கு காவலாய் கொம்பன்மாடசாமி, கருப்பன், சுடலைமாடன் உள்ளிட்ட 21 பந்தி தெய்வங்களுக்கும் நிலையம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

    அவர்கள் சொன்னமாதிரியே கோவில் எழுப்பப்பட்டது. ஏரியின் மறுகால் பாயக்கூடிய பகுதி தலைப்பகுதி என்பதால் ஏரியின் மறுகால் பகுதியில் சாமியின் தலை இருந்ததாலும் இந்த ஊர் மறுகால்தலை என்று அழைக்கப்பட்டது. பூலாத்தி செடிகளுக்கு இடையே கண்டெடுக்கப்பட்டதால் இங்குள்ள சாஸ்தா பூலாத்தி செடியிடை கண்டெடுத்த சாஸ்தா என்றும், பூலாத்தி சாஸ்தா என்றானது. இதுவும் காலப்போக்கில் மறைந்து பூலுடையார் சாஸ்தா என்றும் அழைக்கப்பட்டது.

    இங்குள்ள பூலுடையார் சாஸ்தா தன்னை நம்பிவரும் பக்தர்களுக்கு புத்திரபாக்கியம் அருளக்கூடிய சாஸ்தாவாக இருக்கிறார். நாமும் அவரை வழிபடுவோம். அவர் அருள் பெறுவோம்.

    • பாண்டிய மன்னன் முன் அறம் வளர்த்த நாயகி அம்மன் தோன்றினாள்.
    • அம்மனுக்கு கோபம் வரும் சமயம் ஊரில் உள்ள மக்களுக்கு முத்து வாரி போடுவது தட்டத்தி அம்மனின் வழக்கம்.

    குலசேகர பாண்டிய மன்னன், சுற்றியுள்ள சிற்றரசர்களிடம் போரிட்டு வெற்றிபெற்று தம் ஆதிக்கத்தை மதுரை முழுவதும் பரப்பினார். இதன் விளைவாக கேரளா நாட்டை கைப்பற்ற எண்ணி திருவனந்தபுர மன்னனிடம் தோல்வியுற்றான். வரும் வழியில் இரவு வெகு நேரமானதால் தூங்கிவிட்டான் பாண்டிய மன்னன். அவன்முன் அறம் வளர்த்த நாயகி அம்மன் தோன்றினாள்.

    "பாண்டிய மன்னா தூங்கிவிடாதே, தூங்கி உன் நாட்டின் பெருமை இழந்து விடாதே ஒருமுறை தோற்றால் என்ன? மறுமுறை முயற்சி செய் என்று அருள்வாக்கு சொல்லி ஆசிர்வதித்து மறைந்தாள். மீண்டும் மன்னன் படையெடுத்து வெற்றி பெற்றான். இதனால் அம்மனுக்கு கோயில் கட்டினான். கோவில் அருகே ஊர் அமைந்ததால் மன்னனின் நினைவாக குலசேகர பட்டினம் என பெயர் பெற்றது.

    முத்தாரம்மனின் ஆதி பெயர் தட்டத்தி அம்மனாகும். அம்மனுக்கு கோபம் வரும் சமயம் ஊரில் உள்ள மக்களுக்கு முத்து வாரி போடுவது தட்டத்தி அம்மனின் வழக்கம். அவ்வாறு முத்துவாரி போடுவதால் அம்மனுக்கு முத்தாரம்மன் என்று பெயர் மாற்றப்பட்டது.

    ×