என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சந்திர பிரியங்கா"
- நெடுங்காடு தொகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று சந்திரபிரியங்கா வாக்கு சேகரித்தார்.
- வாக்கு சேகரிப்பதை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டுக்கு சென்றார்.
திருநள்ளாறு:
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து நெடுங்காடு சட்டமன்ற தொகுதியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, வேட்பாளர் நமச்சிவாயம் ஆகியோருடன் அந்த தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான சந்திரபிரியங்கா திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது வாகனத்தில் இருந்தபடி வாக்காளர்களுக்கும், தொண்டர்களுக்கும் பறக்கும் முத்தம் கொடுத்து உற்சாகப்படுத்தினார். பதிலுக்கு அவர்களும் முத்தங்களை பறக்கவிட அதை அவர் 'கேட்ச்' பிடித்து மகிழ்ந்தார். இது பிரசாரத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று நெடுங்காடு தொகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று சந்திரபிரியங்கா வாக்கு சேகரித்தார். அப்போது கடும் வெயில் காரணமாக அவருக்கு திடீரென சோர்வு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் வாக்கு சேகரிப்பதை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டுக்கு சென்றார். அங்கு உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால் ஆதரவாளர்கள் அவரை காரில் அழைத்துச் சென்று காரைக்காலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
வெயில் தாக்கத்தால் சந்திரபிரியங்காவுக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டு உள்ளது என்றும், அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
- காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரசின் எம்.எல்.ஏ. திருமுருகன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
- புதுவை அமைச்சராக திருமுருகனை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான இந்த ஆட்சியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 அமைச்சர்களும், பா.ஜனதாவை சேர்ந்த 2 அமைச்சர்களும் பதவி வகித்து வந்தனர்.
இதில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் காரைக்கால் நெடுங்காடு (தனி) தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்ற சந்திர பிரியங்கா போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அவர் துறைகளை சரியாக கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் சந்திரபிரியங்கா பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்தநிலையில், காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரசின் எம்.எல்.ஏ. திருமுருகன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். புதுவை அமைச்சராக திருமுருகனை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். புதிய அமைச்சராக திருமுருகன் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு சட்டசபை வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவியேற்க உள்ளார். பதவி ஏற்ற பின், அவருக்கான துறை ஒதுக்கப்படும்.
- காரைக்கால் வடக்கு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் வெளியானது.
- சந்திர பிரியங்கா நீக்கப்பட்டு ஒரு மாதம் முடிவடைந்து விட்டது.
புதுச்சேரி:
புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது.
என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போக்குவரத்து துறை அமைச்சராக சந்திர பிரியங்கா இருந்து வந்தார். அவரை கடந்த அக்டோபர் 8-ந் தேதி டிஸ்மிஸ் செய்ய கவர்னர் தமிழிசையிடம் முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் அளித்தார்.
இதை அறிந்த சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். சந்திரபிரியங்கா நீக்கத்துக்கு ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் அளிக்காததால் இந்த விவகாரம் புதுவை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 13 நாட்களுக்கு பிறகு சந்திரபிரியங்கா நீக்கத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.
இதனிடையே காரைக்கால் வடக்கு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் வெளியானது.
ஆனால் அமைச்சர் நீக்கத்துக்கு காலதாமதம், சர்ச்சை எழுந்ததால் புதிய அமைச்சர் உடனடியாக நியமிக்கப்படவில்லை.
தற்போது சந்திர பிரியங்கா நீக்கப்பட்டு ஒரு மாதம் முடிவடைந்து விட்டது. ஆனால் இதுவரை புதிய அமைச்சர் நியமனத்துக்கான எந்த முகாந்திரமும் இல்லை.
புதுவை அமைச்சரவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா சார்பில் தலா ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருந்தனர்.
தற்போது சந்திர பிரியங்கா நீக்கப்பட்டு விட்டதால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அமைச்சர் இல்லை. தாழ்த்தப்பட்டோர், காரைக்கால் பிராந்தியம், பெண் என்ற 3 அம்சங்களும் பொருந்தும் வகையில்தான் சந்திரபிரியங்காவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அவர் பதவி நீக்கத்தால் சட்டசபையில் இடம் பெற்றிருந்த ஒரே பெண், காரைக்காலுக்கான முக்கியத்துவம் இழந்துள்ளது. இதனால் பாராளுமன்ற தேர்தலுக்கு 6 மாதமே உள்ளதால் புதிய அமைச்சரை நியமிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை அமைச்சராக நியமித்தால் காரைக்கால் பிராந்தியத்துக்கு முக்கியத்துவம் கிடைக்காது. காரைக்காலுக்கு முக்கியத்துவம் அளித்தால் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவருக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் பிரதிநிதித்துவம் இல்லை என்ற நிலை ஏற்படும்.
இதனை பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் பிரசார யுக்தியாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இது தேர்தலில் எதிரொலிக்கலாம் என என்.ஆர்.காங்கிரசார் முதலமைச்சர் ரங்கசாமியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனாலேயே புதிய அமைச்சர் நியமனத்தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகே புதிய அமைச்சர் நியமிக்கப்படுவார் என என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே 2011-ம் ஆண்டு கல்வி அமைச்சராக இருந்த கல்யாணசுந்தரம் பதவியை ராஜினாமா செய்தார். அப்போதும் முதலமைச்சர் ரங்கசாமி புதிய அமைச்சரை உடனடியாக நியமிக்கவில்லை. அமைச்சர் பதவிக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு சட்டமன்ற தேர்தலுக்கு நெருக்கத்தில்தான் புதிய அமைச்சரை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சந்திரப்பிரியங்காவை நீக்க முதலமைச்சர் ரங்கசாமி கவர்னருக்கு பரிந்துரைக் கடிதம் வழங்கினார்.
- நீக்கப்பட்ட பின் சந்திரபிரியங்கா முதலமைச்சர் ரங்கசாமியை அவர் சந்திக்கவில்லை.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
புதுவை அமைச்சரவையில் பெண் அமைச்சராக என்ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்திரப்பிரியங்கா இருந்தார். கடந்த அக்டோபரில் அமைச்சரவையிலிருந்து சந்திரப்பிரியங்காவை நீக்க முதலமைச்சர் ரங்கசாமி கவர்னருக்கு பரிந்துரைக் கடிதம் வழங்கினார்.
அதை அறிந்த சந்திரப்பிரியங்கா தனது பதவியை ராஜினமா செய்வதாக அறிவித்தார். சந்திரப்பிரியங்கா பதவி நீக்கம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையாக பேசப்பட்டது. இந்த நிலையில், சந்திரப்பிரியங்கா தனது கணவரிடமிருந்து விவகாரத்துக் கோரி காரைக்கால் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததாகவும் தகவல் வெளியானது.
நீக்கப்பட்ட பின் சந்திரபிரியங்கா முதலமைச்சர் ரங்கசாமியை அவர் சந்திக்கவில்லை. இந்த நிலையில், பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள்அமைச்சர் சந்திரப்பிரியங்கா நேற்று மாலை கோரிமேடு பகுதியில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி வீட்டில் அவரைச் சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக சந்திரபிரியாங்கவிடம் கேட்டதற்கு, "எனது தொகுதியில் உள்ள கோவில்களில் ஒருகால பூஜைக்கான காசோலை பெற முதலமைச்சரை சந்திக்க முடிவு செய்தேன். அதன்படி அவரது அலுவலகத்துக்கு சென்று ரங்கசாமியை சந்தித்தேன்.
- கடந்த சில மாதங்களுக்கு முன் இவருக்கும், அவரது கணவர் சண்முகத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
- சந்திரபிரியங்கா, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு காரைக்கால் குடும்பநல கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார்.
புதுச்சேரி:
புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் சந்திரபிரியங்கா. அவரது செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து முதலமைச்சர் ரங்கசாமியால் அவரது பதவி பறிக்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவருக்கும், அவரது கணவர் சண்முகத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் சந்திரபிரியங்காவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது கணவர் சண்முகம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீநிவாசை சந்தித்து சந்திரபிரியங்கா புகார் தெரிவித்தார்.
இந்தநிலையில் சந்திரபிரியங்கா, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு காரைக்கால் குடும்பநல கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார். வக்கீல்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், சந்திரபிரியங்கா தானே நேரடியாக குடும்பநல நீதிபதி அல்லி முன்பு ஆஜராகி மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தான் ஏற்கனவே வகித்த அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி பல்வேறு இடங்களில் முறைகேடுகளில் சண்முகம் ஈடுபட்டதாகவும், அதனை தட்டி கேட்டதால் அதிகார வட்ட நண்பர்கள் மற்றும் தரகர்கள் மூலம் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும், அரசியல் வாழ்க்கையில் எழுச்சி பெறுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் தன்னை சண்முகம் கட்டுப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகளை சந்திரபிரியங்கா முன் வைத்துள்ளார்.
மேலும் குடிகாரன், பெண் வெறியன், தன் மனைவிக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமை செய்யும் ஆண், தன்னைப் பற்றி கிசுகிசுக்களைப் பரப்பும் மற்றும் பேசும் ஒரு ஆணுடன் வாழ வேண்டாம் என விவாகரத்து பெற முடிவு செய்து இதை தாக்கல் செய்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கணவருடனான சந்திரபிரியங்காவின் மோதல் தற்போது விவாகரத்து கேட்டு கோர்ட்டு வரை சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சட்டசபையில் சந்திர பிரியங்கா பயன்படுத்திய அறையில் இருந்து பொருட்கள் காலி செய்யப்பட்டது
- சந்திர பிரியங்காவின் அமைச்சர் பெயர் பலகை அகற்றப்பட்டது.
புதுச்சேரி:
காரைக்கால் நெடுங்காடு தொகுதி என்.ஆர். காங்., எம்.எல்.ஏ. சந்திர பிரியங்கா போக்குவரத்து அமைச்சர் பதவி வகித்து வந்த இவர், கடந்த 10-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக கவர்னர் தமிழிசை மற்றும் முதலமைச்சர் ரங்கசாமிக்கு கடிதம் அனுப்பினார்.
ஆனால் கடந்த 8-ந் தேதியே சந்திர பிரியங்காவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய முதலமைச்சர் ரங்கசாமி, கவர்னர் தமிழிசையிடம் கடிதம் அளித்தார். ஆனால் சந்திர பிரியங்கா நீக்கம் விவகாரத்தில் கடந்த 13 நாட்களாக இழுபறி ஏற்பட்டது. முடிவாக கடந்த 21-ந் தேதி சந்திர பிரியங்கா பதவி நீக்கம் செய்ய, ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார்.
அதையடுத்து, சட்டசபையில் சந்திர பிரியங்கா பயன்படுத்திய அறையில் இருந்து பொருட்கள் காலி செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் சட்டசபை செயலர் தயாளன் அறையை பூட்டி சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினார்.
மேலும் சந்திர பிரியங்காவின் அமைச்சர் பெயர் பலகையும் அகற்றப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அந்த நோட்டீஸ் கிழித்து எறியப்பட்டு, முதலமைச்சரின் தனிச்செயலர் அமுதன் கையெழுத்திட்ட 'சீல் நோட்டீஸ்' அறை கதவில் ஒட்டப்பட்டது.
சட்டசபை வளாகம் சட்டசபை செயலர் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அமைச்சர்களின் அலுவல்கள் மற்றும் அறை ஒதுக்கீடு உள்ளிட்ட அதிகாரங்கள் முதலமைச்சரின் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ளது.
இதனால் சந்திர பிரியங்கா அறைக்கு சீல் வைக்கும் அதிகாரம் முதலமைச்சர் அலுவலகத்திற்கே உள்ளது என நிரூபிக்கும் வகையில், 2-வது முறையாக சீல் வைத்து, சந்திர பிரியங்கா அறை பூட்டப்பட்டது.
- 40 ஆண்டுகளுக்கு பிறகு புதுவை அமைச்சரவையில் இடம் பெற்ற பெண் என்ற பெருமையை சந்திர பிரியங்கா பெற்றார்.
- சட்டசபையில் சந்திர பிரியங்காவின் அறையில் இருந்த பொருட்கள் காலி செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சந்திர பிரியங்கா.
புதுவை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்களில் ஒரே பெண் எம்.எல்.ஏ. என்ற பெருமையைப் பெற்றவர். அவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.
40 ஆண்டுகளுக்கு பிறகு புதுவை அமைச்சரவையில் இடம் பெற்ற பெண் என்ற பெருமையை சந்திர பிரியங்கா பெற்றார். ஆனால் அது நீடிக்கவில்லை. அவரது செயல்பாடுகளில் ஏற்பட்ட அதிருப்தியால் சந்திர பிரியங்காவை நீக்க கவர்னருக்கு முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரை செய்தார்.
புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் பதவி நீக்கத்திற்கு உள்துறை அமைச்சகத்தின் வழியே ஜனாதிபதியின் அனுமதியை பெற வேண்டும்.
வழக்கமாக நீக்கப்பட்ட அன்றே ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்து விடும். ஆனால் சந்திர பிரியங்கா நீக்கம் விவகாரத்தில் கடந்த 13 நாட்களாக இழுபறி ஏற்பட்டது.
முடிவாக கடந்த 2-ந் தேதி சந்திர பிரியங்கா பதவி நீக்கத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட புதுவை அரசிதழிலும் 21-ந் தேதியே வெளியிடப்பட்டது.
இதையடுத்து சட்டசபையில் சந்திர பிரியங்காவின் அறையில் இருந்த பொருட்கள் காலி செய்யப்பட்டது. அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும் அறைக்கு வெளியே இருந்த அமைச்சர் பெயர் பலகையும் அகற்றப்பட்டது. அறைக்கு வெளியே பூட்டில் சட்டமன்ற செயலர் தயாளன் என கையெழுத்திடப்பட்ட சீல் ஒட்டப்பட்டுள்ளது.
அமைச்சரின் அறைக்குள் கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் மிஷின் உட்பட பல பொருட்கள் உள்ளன. இவற்றை அலுவலக ரீதியாக இன்னும் ஒப்படைக்காத காரணத்தினால் சீல் வைக்கப்பட்டதாக சட்டமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.
- அமைச்சர் பதவியில் இருந்து சந்திர பிரியங்கா உடனடியாக நீக்கம்.
- ராஜினாமா கடிதத்தில் சாதி, பாலின தாக்குதலுக்கு உள்ளானதாக அவர் குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி மாநில அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்காவை நீக்கக் கோரி முதலமைச்சர் ரங்கசாமி வழங்கிய அறிவுரையை ஏற்றுக் கொள்வதாக குடியரசு தலைவர் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரி அரசுக்கு அனுப்பி வைத்து இருக்கிறது.
அந்த அறிக்கையில், "புதுச்சேரி முதல்வரின் அறிவுரையை தொடர்ந்து புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து, அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியில் இருந்து சந்திர பிரியங்கா உடனடியாக நீக்கம் செய்யப்படுகிறார்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதே அறிக்கையை குடியரசு தலைவரின் செயலாளர் ராஜீவ் வர்மா வெளியிட்டு உள்ளார். முன்னதாக புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்காவை நீக்க வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் அக்டோபர் 8-ம் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து இருந்தார்.
இதைத் தொடர்ந்து அக்டோபர் 10-ம் தேதி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக சந்திர பிரியங்கா அறிவித்தார். தனது ராஜினாமா கடிதத்தில் சாதி, பாலின தாக்குதலுக்கு உள்ளானதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார்.
- அமைச்சர் பதவி நீக்கத்திற்கான கோப்பு ஜனாதிபதியிடம் நிலுவையில் உள்ளது.
- டெல்லிக்கு செல்லும்போதெல்லாம் மத்திய மந்திரிகளை, சந்திர பிரியங்கா சந்தித்து வந்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநில அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா கடந்த 8-ந் தேதி நீக்கப்பட்டார்.
ஆனால் அவர் நீக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும், அரசாணையும் இன்று வரை வெளியிடப்படவில்லை. இதனால் புதுவையில் தொடர் குழப்பம் நீடித்து வருகிறது.
சந்திர பிரியங்கா ஜாதி, பாலின ரீதியில் தாக்குதலுக்கு உள்ளாவதாக தெரிவித்திருந்தார்.
இதனாலேயே பதவி நீக்க அறிவிப்பு வெளியாவது தாமதமாகிறது என கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் தனது தொகுதியில் நடந்த அரசு விழாவில் தேசியக்கொடி பொருத்திய காரில் வந்து சந்திர பிரியங்கா கலந்து கொண்டார்.
இதனால் இன்னும் அமைச்சராக நீடிக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேநேரத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சந்திர பிரியங்கா எம்.எல்.ஏ. என்ற முறையில் தனது தொகுதியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்றார். அவர் இனி எம்.எல்.ஏ.வாக மட்டும் செயல்படுவார்.
அமைச்சர் பதவி நீக்கத்திற்கான கோப்பு ஜனாதிபதியிடம் நிலுவையில் உள்ளது. அதற்கான அறிவிப்பு 2 நாளில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே சந்திர பிரியங்கா பதவி நீக்கத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் தர காலதாமதம் ஆவதற்கு மத்திய மந்திரி காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகனும் தனது பேட்டியில், சந்திர பிரியங்கா நீக்கத்தை மத்திய மந்திரி தடுப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்திருப்பதாக கூறினார்.
சந்திர பிரியங்கா நீக்கத்தை தடுக்கும் மத்திய மந்திரி யார்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
புதுவையில் சட்டசபை தேர்தலின்போது மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், அமித்ஷா, அர்ஜூன் ராம்மெக்வால் உட்பட பல மத்திய மந்திரிகள் பிரசாரம் செய்தனர்.
மத்திய மந்திரி அர்ஜூன்ராம்மெக்வால் புதுவையில் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று தேர்தல் பணியாற்றினார்.
புதுவை பா.ஜனதா பொறுப்பாளராக இருந்த ராஜூ வர்மா தேர்தலுக்கு பிறகு மத்திய மந்திரியாகியுள்ளார்.
தற்போது பாராளுமன்ற பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக மத்திய மந்திரி எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மாதத்திற்கு ஒரு முறையாவது புதுவைக்கு வந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதில் எந்த மத்திய மந்திரி, சந்திர பிரியங்கா நீக்கல் விவகாரத்தை தடுத்து வருகிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அமைச்சராக இருந்த சந்திர பிரியங்காவுக்கு அகில இந்திய பா.ஜனதாவின் நிர்வாகிகள், மத்திய மந்திரிகள் ஆகியோருடன் செல்வாக்கு இருந்துள்ளது.
டெல்லிக்கு செல்லும்போதெல்லாம் மத்திய மந்திரிகளை, சந்திர பிரியங்கா சந்தித்து வந்துள்ளார்.
மேலும் அவர்களோடு தொடர்ந்து நட்பில் இருந்து வந்துள்ளார். இதனால் சந்திர பிரியங்கா பதவி நீக்கல் காரணத்திற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
அமைச்சர் பதவி நீக்கத்துக்கு விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வைத்தால் தான் புதுவையில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.
- எம்.எல்.ஏ. என்ற முறையிலேயே சந்திர பிரியங்கா அரசு விழாவில் பங்கேற்றார்.
- சந்திர பிரியங்கா வகித்த துறைகளை முதலமைச்சர் கூடுதலாக கவனித்து வருகிறார்.
புதுச்சேரி:
சபாநாயகரிடம் அரசு விழாவில் சந்திர பிரியங்கா பங்கேற்றது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பதில் அளித்து கூறியதாவது:-
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சந்திர பிரியங்கா இனி எம்.எல்.ஏ.வாக மட்டுமே செயல்படுவார். எம்.எல்.ஏ. என்ற முறையிலேயே அரசு விழாவில் பங்கேற்றார். எம்.எல்.ஏ.வாக சந்திர பிரியங்கா செயல்பட எந்த தடையும் இல்லை.
பதவி நீக்க கோப்பு உள்துறை ஒப்புதல் பெற்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்றுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் ஒப்புதல் கிடைக்கும். தொடர்ந்து அரசாணை வெளியாகும். மத்திய அரசு இதில் எந்த தயக்கமும் காட்டவில்லை.
சந்திர பிரியங்கா வகித்த துறைகளை முதலமைச்சர் கூடுதலாக கவனித்து வருகிறார்.
இவ்வாறு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறினார்.
- சந்திர பிரியங்கா தங்கியுள்ள அரசு இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு இன்று வரை தொடர்கிறது.
- வழக்கமாக அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டால் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசாணையில் உடனுக்குடன் வெளியிடப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரி அமைச்சரவையில் இடம் பெற்ற என்ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா கடந்த 10-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தில் சாதி, பாலின தாக்குதலுக்கு உள்ளானதாக பரபரப்பு குற்றச்சாட்டும் கூறியிருந்தார். ஆனால் அவர் ராஜினாமா செய்யும் முன்பே பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கவர்னர் தமிழிசையும், சபாநாயகர் ஏம்பலம் செல்வமும் தெரிவித்தனர்.
மேலும் அவரது பணி திருப்தி அளிக்காததால் முதலமைச்சர் ரங்கசாமி பதவி நீக்கத்துக்கு பரிந்துரை செய்தார் என்றும் கவர்னர் தெரிவித்திருந்தார்.
வழக்கமாக அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டால் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசாணையில் உடனுக்குடன் வெளியிடப்படும்
ஆனால் சந்திர பிரியங்கா விவகாரத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பும் அவர் வகித்து வந்த துறைகள் யாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்ற விவரமும் வெளியிடப்படவில்லை.
அதோடு புதுவை கடற்கரை சாலையையொட்டி சந்திர பிரியங்கா தங்கியுள்ள அரசு இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு இன்று வரை தொடர்கிறது.
இதனால் சந்திர பிரியங்கா பதவி நீக்கத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் 10 நாட்களுக்கு பிறகு நேற்றைய தினம் தனது தொகுதியில் நடந்த அரசு விழாவில் சந்திர பிரியங்கா பங்கேற்றார். காரைக்கால் பஞ்சாட்சபுரம் கிராமத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் குரும்பகரம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பு சார்பில் நடந்த மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி பொருட்காட்சி நடந்தது.
இதன் தொடக்க விழாவில் சந்திர பிரியங்கா கலந்து கொண்டார். அவரை அரசு அதிகாரிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் சந்திர பிரியங்கா வழங்கினார். விழாவுக்கு அவர் தேசிய கொடி கட்டிய காரில் வந்தார்.
மேலும் அந்த அரசு விழா குறித்த சந்திர பிரியங்காவின் செய்தி தொடர்பு வாட்ஸ்-அப் குழுவில் புதுவை போக்குவரத்து துறை அமைச்சர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கவர்னர், சபாநாயகர் நீக்கப்பட்டதாக அறிவித்த பின்னும் அரசு விழாவில் சந்திர பிரியங்கா பங்கேற்றது புதுவை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.
- கடந்த 8-ந் தேதி முதலமைச்சர் ரங்கசாமி, ராஜ்நிவாசில் கவர்னர் தமிழிசையை சந்தித்தார்.
- பெண் அமைச்சர் சந்திர பிரியங்காவுக்கு மரியாதை தருவதில் யாரும் குறை வைக்கவில்லை.
புதுச்சேரி:
புதுவை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சந்திரபிரியங்கா கடந்த 10-ந் தேதி திடீரென ராஜினாமா செய்தார்.
சாதி, பாலின தாக்குதலுக்கு உள்ளானதால் பதவி விலகுவதாக ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதேநேரத்தில் 11-ந் தேதி சென்னை விமான நிலையத்தில் புதுவை கவர்னர் தமிழிசை பேட்டியளித்தார்.
அப்போது புதுவை அமைச்சரவையில் இருந்து முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரையின்பேரில் சந்திர பிரியங்கா நீக்கப்பட்டதாக தெரிவித்தார்.
துறைரீதியான செயல்பாடுகளில் திருப்தியளிக்காததாலும், அதிருப்தியாலும் சந்திர பிரியங்கா நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 8-ந் தேதி முதலமைச்சர் ரங்கசாமி, ராஜ்நிவாசில் கவர்னர் தமிழிசையை சந்தித்தார். அப்போது அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்காவை நீக்க கடிதம் அளித்தார்.
இந்த கடிதத்தின்பேரில் சந்திர பிரியங்கா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.
ஆனாலும் இதுவரை சந்திர பிரியங்கா நீக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை. இதனால் சந்திர பிரியங்கா நீக்கமா? ராஜினாமாவா? என குழப்பமான நிலை நீடித்து வந்தது. அரசாணை வெளி வராதது பல்வேறு சர்ச்சைகளையும், சமூகவலைதளங்களில் விவாதங்களையும் ஏற்படுத்தியது.
தெலுங்கானா சென்ற கவர்னர் தமிழிசை ஒரு வாரத்துக்கு பிறகு நேற்று புதுவை திரும்பினார். கவர்னர் மாளிகையில் நடந்த பள்ளி மாணவர்களின் திறன் தேடல் நிகழ்ச்சிக்கு பிறகு கவர்னர் தமிழிசை நிருபர்களை சந்தித்தார்.
அப்போது, நிருபர்கள் கவர்னர் தமிழிசையிடம், சந்திர பிரியங்கா நீக்கமா? ராஜினாமாவா? அரசாணை வெளிவராதது ஏன்.? என பல கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு தமிழிசை, நான் இதற்கு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன். தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சரை சேர்க்கவோ, நீக்கவோ, அமைச்சர்களின் பணியை கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும் முதலமைச்சருக்கு உரிமை உள்ளது. சுயநலனால் நல்ல வாய்ப்பை சந்திர பிரியங்கா இழந்துள்ளார் என்று கூறினார்.
அதோடு, அரசாணை வெளிவராததற்கு நிர்வாக ரீதியாக சில சட்டதிட்டங்கள் உள்ளது என்றும், உரிய அறிவிப்பு வெளியாகும்போது பல உண்மைகள் தெரியும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், பெண் அமைச்சர் சந்திர பிரியங்காவுக்கு மரியாதை தருவதில் யாரும் குறை வைக்கவில்லை. முதலமைச்சர் தந்தை போலவும், பிற அமைச்சர்கள் சகோதரர்கள் போலவும் சந்திர பிரியங்காவை பார்த்துக்கொண்டனர்.
அவர் சாதி, பாலின ரீதியில் குற்றம் சாட்டியிருக்கக்கூடாது. நானும் சந்திர பிரியங்காவுக்கு உறுதுணையாகவே இருந்தேன் என்றும், இது என்.ஆர். காங்கிரஸ் முதலமைச்சர், அமைச்சர் இடையிலான பிரச்சினை என்றும் தெரிவித்தார்.
இதன் மூலம் சந்திர பிரியங்கா நீக்கப்பட்டதை கவர்னர் தமிழிசை மீண்டும் உறுதி செய்தார். அதோடு அரசாணை வெளிவர நிர்வாக தாமதமே காரணம் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் ஓரிரு நாளில் சந்திர பிரியங்கா நீக்கம் குறித்த அரசாணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்