search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோலையாறு அணை"

    • தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
    • 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    கோவை:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து தமிழக எல்லையில் உள்ள கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது.

    குறிப்பாக வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது.

    இன்று காலையும் மழை பெய்தது. மழையுடன் கடுமையான குளிரும் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மழை காரணமாக வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு, நடுமலையாறு, கருமலை ஆறு, சோலையாறு சுங்கம் ஆறு மற்றும் கருமலை இறைச்சல் ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகமாக காணப்படுகிறது.

    இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை காரணமாக வால்பாறை சாலையில் ஆங்காங்கே புதிது, புதிதாக நீர்வீழ்ச்சிகளும் தோன்றி தண்ணீர் கொட்டி வருகிறது.

    கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.

    இதனால் மாணவர்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். மழை பெய்து கொண்டே இருப்பதால் சாலைகளில் ஆட்கள் நடமாட்டமும் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

    தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    நேற்றுமுன்தினம் காலை அணையின் நீர்மட்டம் 32 அடியாக இருந்தது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 47 அடியாக உயர்ந்தது. இதனால் ஒரே நாளில் 15 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் 1 அடிக்கும் கீழே சென்றது.

    தற்போது சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணையின் நீர்மட்டமானது மெல்ல, மெல்ல உயர தொடங்கியுள்ளது. நேற்றுமுன்தினம் 0.72 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 0.79 ஆக உயர்ந்துள்ளது.

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் பெய்யும் மழையால் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வரை அணையின் நீர்மட்டம் 78 அடியாக இருந்தது.

    தற்போது 6 அடி உயர்ந்து இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 84 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து மின் உற்பத்தி மூலமாக 6 ஆயிரம் கன அடி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருப்பதால் ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    இதேபோல் ஆழியார், பரம்பிக்குளம் அணை, திருமூர்த்தி அணை உள்ளிட்ட அணைகளுக்கும் தண்ணீர் வரத்தானது அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அணைகள் தங்களது முழு கொள்ளளவை எட்டும் என தெரிகிறது. கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லாரில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    சின்னக்கல்லார்-106, சோலையார்-66, சின்கோனா-61, வால்பாறை பி.ஏ.பி-60, வால்பாறை தாலுகா-59, சிறுவாணி அடிவாரம்-58, மாக்கினாம்பட்டி பி.டபுள்யுடி, ஐ.பி.-40, தொண்டாமுத்தூர்-37.

    ×