search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோட்ட தொழிலாளர்கள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெரும்பாலான தொழிலாளர்களுக்கு நிலமும் இல்லை, சொந்த வீடும் இல்லை.
    • எங்கள் பிள்ளைகளுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்.

    மதுரை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா மாஞ்சோலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த அமுதா, ஸ்டாலின் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மாஞ்சோலை மலைப்பகுதியில் உள்ள 8,374 ஏக்கர் நிலத்தை 99 வருட குத்தகைக்கு சிங்கம்பட்டி ஜமீனிடம் இருந்து 1928-ம் ஆண்டு தனியார் நிறுவனம் பெற்றது. மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் 700 குடும்பத்தினர் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தோம். 2028-ம் ஆண்டில் குத்தகை முடிகிறது.

    ஆனால் 4 ஆண்டுகள் முன்னதாகவே தனியார் நிறுவன குத்தகை ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதால் எங்களை அங்கிருந்து காலி செய்யுமாறு தெரிவித்தனர். பல தலைமுறைகளாக தேயிலை தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றிய எங்களை திடீரென காலி செய்யுறுமாறு கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எங்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தொகை வழங்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.

    பெரும்பாலான தொழிலாளர்களுக்கு நிலமும் இல்லை, சொந்த வீடும் இல்லை. மாஞ்சோலை எஸ்டேட் முகவரியில் மட்டுமே ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளதால், அடுத்த மாதம் முதல் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. இதனால் 700 குடும்பங்களை சேர்ந்த 2,150 பேர் வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறோம்.

    எனவே எங்களுக்கு தமிழக அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு வழங்கவும், கன்னியாகுமரி ரப்பர் தோட்ட கழகத்தில் வேலை வழங்கவும் வேண்டும். அதேபோல அங்கன்வாடி, பள்ளிகளில் சமையல் உதவியாளர், அலுவலக உதவியாளர் பணிகளை வழங்க வேண்டும். எங்கள் பிள்ளைகளுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி மகா தேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் லஜபதிராய், வக்கீல் பினேகாஸ் ஆஜராகி, ஊட்டியில் புலிகள் காப்பகத்துக்காக தேயிலை தோட்ட தொழிலாளர்களை காலி செய்யும் நடவடிக்கையின்போது வனத்துறை சார்பிலும் இழப்பீடு வழங்கப்பட்டது. அதுபோல மாஞ்சோலையையும் புலிகள் காப்பகத்துக்காக கையகப்படுத்தப்படுவதால், அங்குள்ள தொழிலாளர்களுக்கும் வனத்துறை இழப்பீடு வழங்க வேண்டும் என வாதாடினர்.

    மேலும், மனுதாரர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகளை மாநில அரசு செய்து தருவது அவசியம் எனவும் கோரினர். இதை பதிவு செய்து கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு உள்ளிட்ட மறுவாழ்வு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரும் வரை மாஞ்சோலையில் இருந்து அவர்களை வெளியேற்ற தடை விதிக்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும். இந்த வழக்கு நாளை மறுநாள் ஒத்திவைக்கப்படுகிறது.

    இவ்வாறு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

    • கடந்த சில நாட்களுக்கு முன் புலி இரவில் வந்து ஆடு மற்றும் பசு மாட்டை கடித்து குதறியது.
    • தோட்ட தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண ஏற்பாடு செய்தார்கள்.

    திருவட்டார்:

    பேச்சிப்பாறை-சிற்றாறு வனப்பகுதியில் புலி நடமாடுவதாக அந்த பகுதி மக்கள் கூறியதையெடுத்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் புலி இரவில் வந்து ஆடு மற்றும் பசு மாட்டை கடித்து குதறியது.

    இதனால் மேலும் அச்சம் அடைந்த வனப்பகுதி மக்கள் தோட்ட தொழிலாளர்கள் ஆகியோர் இடையே மீண்டும் அதிகாலை வேலைக்கு செல்வதற்கு மக்கள் மத்தியில் புலியின் நடமாட்டத்தை அறிந்து பெரும் அச்சம் அடைத்தனர். வனத்துறை ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆலோசனைப்படி சுமார் 25-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி புலியின் நடமாட்டத்தை தீவிரமாக இரவு பகலாக கண்காணித்து வந்தனர். புலியின் உருவம் கேமராவில் பதியவில்லை. இதையடுத்து வனத்துறையினர் மோப்ப நாயை வரவழைத்து புலியை தேடினார்கள். ஆனால் புலியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    அரசு ரப்பர் கழகத்தில் வேலைக்கு செல்லும் தோட்ட தொழிலாளர்கள் புலியை பிடித்தால் தான், அதிகாலையில் ரப்பர் பால் வடிப்பு தொழிலுக்கு செல்ல முடியும், இல்லை என்றால் வேலைக்கு செல்ல மாட்டோம் என்று ஆண்களும், பெண்களும் கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தனர்.

    இதனால் அரசுக்கு தினமும் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து தோட்ட தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண ஏற்பாடு செய்தார்கள். தோட்ட தொழிலாளர்களின் அச்சத்தை போக்கும் வகையில் வனத்துறையினர் பல்வேறு விழிப்புணர்வை தோட்ட தொழிலாளர்களிடம் ஏற்படுத்தினார்கள்.

    அரசு ரப்பர் கழக தோட்ட தொழிலாளர்களிடம் அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி அதிகாலையில் பால் வடிப்பு தொழிலுக்கு தோட்ட தொழிலாளர்கள் செல்வதற்கு முன், வனத்துறை ஊழியர்கள் புலியின் நடமாட்டத்தை பார்த்து சென்ற பிறகு தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்வது என்றும், அதிகாலை வேலைக்கு செல்வதை தவிர்த்து சற்று தாமதமாக பணிக்கு செல்வது என்றும், தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு அருகில் அதிக மின் விளக்குகள் மாட்டுவது என்றும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

    இதையடுத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் ஆனது. அதன் பிறகு இன்று பால் வடிப்பு தொழிலுக்கு தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு சென்றார்கள். அதேவேளையில் புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் இரவு பகலாக தீவிர கண்காணித்து வருகிறார்கள். கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ×