search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvallur Municipality மருத்துவக் கழிவு"

    • முதியவர்கள், குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு மற்றும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருவதாக தெரிகின்றது.
    • மருத்துவக் கழிவுகளை மூட்டை மூட்டையாக நகராட்சி சார்பில் கொட்டி எரித்து சென்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை 4-வது வார்டில் அமைந்துள்ள எரிவாயு தகன மேடை அருகே உள்ள தலக்காஞ்சேரி குப்பை மேட்டில் கொட்டி வருகின்றனர்.

    இதனால் அப்பகுதியில் சுமார் 50,000 டன்னிற்கும் மேலாக இமயமலை போல் குப்பைகள் உயர்ந்து உள்ளது. அந்த குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என நகராட்சி நிர்வாகத்தினர் தரம் பிரிக்காமல் அங்கே கொட்டி வருகின்றனர்.

    மேலும் திருவள்ளூர் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இருந்து நாள்தோறும் 1 டன்னுக்கு மேலாக லாரிகளில் மருத்துவக் கழிவுகள் எடுத்து வந்து தலக்காஞ்சேரி பகுதியில் கொட்டப் பட்டதால் அப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டு வருகின்றது. திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பல்வேறு சிகிச்சைக்கு 500 படுக்கைகளுடன் செயல்பட்டு வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு நோயாளியின் படுக்கையில் இருந்து நாளொன்றுக்கு ஒரு கிலோ வரை கழிவுகள் சேருகின்றன.

    இந்த மருத்துவக் கழிவுகள் 4வது வார்டில் அமைந்துள்ள எரிவாயு தகன மேடை அருகே உள்ள தலக்காஞ்சேரி குப்பை மேட்டில் கொட்டி வருகின்றனர். அதில் பல்வேறு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருந்து பாட்டில்கள், சிரிஞ்சுகள், ரத்தம் உறைந்த பஞ்சுகள், கையுறைகள், முக கவசம் போன்ற மருத்துவக் கழிவுகளை மூட்டை மூட்டையாக நகராட்சி சார்பில் கொட்டி எரித்து சென்றனர்.

    4-வது வார்டை சுற்றி தலக்காஞ்சேரி, எடப்பாளையம், சின்ன ஈக்காடு உள்ளிட்ட பகுதியில் 3000 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் முதியவர் மற்றும் குழந்தைகள் வசிக்கின்றன.

    மேலும் பெரும்பாலானோர் வீட்டில் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். அந்த கால்நடைகள் மற்றும் பறவைகள் மருத்துவக் கழிவுகளை தின்பதால் நோய் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் வசித்து வரும் முதியவர்கள், குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு மற்றும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருவதாக தெரிகின்றது.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×