என் மலர்
நீங்கள் தேடியது "கோத்ரேஜ் நிறுவனம்"
- கோத்ரேஜ் நிறுவனம், மறைமலை நகரில் ஒரு உற்பத்தி மையத்தினை ஏற்கனவே நிறுவி உள்ளது.
- புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தொழில்துறை அதிகாரிகளும் கோத்ரேஜ் குழும அதிகாரிகளும் கையெழுத்திட்டனர்.
சென்னை:
'கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம் செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.515 கோடி முதலீட்டில் 446 பேர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த புதிய உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க உள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுக்கும், கோத்ரேஜ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.
கோத்ரேஜ் நிறுவனம், மறைமலை நகரில் ஒரு உற்பத்தி மையத்தினை ஏற்கனவே நிறுவி உள்ளது. இப்போது ஒரு புதிய ஆலையை நிறுவ திட்டமிட்டு உள்ளது.
அதன்படி, இந்நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 515 கோடி ரூபாய் முதலீட்டில் சோப்புகள், முகஅழகு க்ரீம்கள், தலை முடி பராமரிப்பு சாதனங்கள் மற்றும் கொசு ஒழிப்பான் போன்றவற்றிற்கு ஒரு உற்பத்தி மையத்தை நிறுவ உள்ளது.
இந்த திட்டத்தில், 50 சதவிகிதம் அளவிற்கு பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க உள்ளதாகவும் மேலும், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகவும் கோத்ரேஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தொழில்துறை அதிகாரிகளும் கோத்ரேஜ் குழும அதிகாரிகளும் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.