search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறுவைசிகிச்சை"

    • ஒரு உறுப்புக்கு பதில் இன்னொரு உறுப்பை எடுத்து மாட்டும் அற்புதத்தை மருத்துவர்கள் நிகழ்த்துகிறார்கள்.
    • தசை பொருந்தாவிட்டால் விரல் அசையாது. ரத்த நாளம் வழியாக ரத்தம் சென்றால்தான் விரல் இயங்கும்.

    சென்னை:

    மருத்துவ துறையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது இயந்திரங்களின் பாகங்களை கழட்டி மாட்டுவது போல் மனிதர்களின் உறுப்புகளையும் கழட்டி பொருத்தி மருத்துவர்கள் சாதித்து வருகிறார்கள்.

    சிறுநீரகம், இதயம், கல்லீரல், கண் போன்ற உறுப்புகளில் மாற்று அறுவை சிகிச்சை சாதாரணமாகிவிட்டது. அதே போல் உடலில் அத்தியாவசிய தேவை எனும் போது ஒரு உறுப்புக்கு பதில் இன்னொரு உறுப்பை எடுத்து மாட்டும் அற்பு தத்தை மருத்துவர்கள் நிகழ்த்துகிறார்கள்.

    32 வயதான இளைஞர் ஒருவர் தான் பணிபுரியும் தொழிற்சாலையில் எந்திரத்தில் கை சிக்கியதில் வலது கை கட்டை விரலும், சுட்டு விரலும் துண்டித்து விழுந்தது.

    தனியாக துண்டிக்கப் பட்ட அந்த 2 விரல்களுடன் அந்த வாலிபர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். துண்டித்த விரலை எப்படியாவது பொருத்திவிடுவார் கள் என்ற நம்பிக்கையில் சென்றுள்ளார்.

    அந்த விரல்களை பரிசோதித்த மருத்துவமனையின் முடநீக்கியல் துறை அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் சீனிவாசன் ராஜப்பா விரல்கள் சிதைந்து பொருத்த முடியாத நிலையில் இருந்ததை பார்த்துள்ளார்.

    அதே விரல்களை மீண்டும் பொருத்துவது சாத்தியமில்லை என்று கூறியிருக்கிறார்.

    ஆனால் வலது கையில் விரல்கள் அவசியம். அதிலும் கட்டை விரல் கட்டாயம் தேவை என்பதால் மாற்று வழிகள் பற்றி மருத்துவர்களிடம் அந்த வாலிபர் கேட்டுள்ளார்.

    அதற்கு கால் விரலை எடுத்து கையில் பொருத்த முடியும் என்று டாக்டர் ராஜப்பா கூறியிருக்கிறார். காலில் ஒரு விரலை எடுப்பதால் எந்த பாதிப்பும் இல்லை என்பதால் அதற்கு ஒத்துக் கொண்டார்.

    இதையடுத்து இந்த சிக்கலான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை டாக்டர் சீனிவாசன் ராஜப்பா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தொடங்கினார்கள்.

    அந்த வாலிபரின் இடது காலின் 2-வது விரலை துண்டித்து எடுத்து கை கட்டை விரலாக பொருத்த முடிவு செய்தனர். திட்டமிட்டபடி அறுவை சிகிச்சை செய்து அந்த வாலிபரின் கட்டை விரலுக்கு பதில் கால் விரல் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு தற்போது அவர் நல்ல நிலையில் தனது வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த அறுவை சிகிச்சை பற்றி டாக்டர் சீனிவாசன் ராஜப்பா கூறியதாவது:-

    இது மிகவும் சிக்கலான ரிஸ்க் நிறைந்த அறுவை சிகிச்சை. ஏனெனில் கால் விரல் பகுதியின் ரத்த நாளங்கள் மிகவும் நுண்ணியது. கிட்டத்தட்ட ஒரு தலைமுடி அளவு விட்டம் கொண்டது. அவற்றை துல்லியமாக கண்டறிந்து துண்டித்து கையில் மிக துல்லியமாக பொருத்த வேண்டும்.

    தசை பொருந்தாவிட்டால் விரல் அசையாது. ரத்த நாளம் வழியாக ரத்தம் சென்றால்தான் விரல் இயங்கும். எலும்பு பொருந்தினால்தான் பலம் இருக்கும். இல்லாவிட்டால் அடித்தளம் இல்லாத கட்டிடம் போல் ஆகிவிடும்.

    இத்தனை ரிஸ்க்கையும் சவாலாக ஏற்று மிக துல்லியமாக கால் விரலை துண்டித்து மருத்துவ நுண்ணோக்கியில் துல்லியமாக பார்த்து பார்த்து ரத்த நாளங்களை இணைத்தோம். 8 மணி நேரம் நடந்த இந்த ஆபரேசன் வெற்றிகரமாக முடிந்தது.

    விபத்து நேரிடும் போது உறுப்புகள் துண்டிக்க நேர்ந்தால் அதை சுத்தமான பிளாஸ்டிக் உரையில் வைத்து கட்டி, ஐஸ்கட்டிகள் நிரப்பிய பாத்திரத்தில் எடுத்து வர வேண்டும். துண்டிக்கப்பட்ட பாகங்களில் ஐஸ்கட்டியோ, தண்ணீரோ நேரடியாக படக்கூடாது. இந்த மாதிரி உறுப்புகளை மாற்றுவது சாத்தியமே.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×