search icon
என் மலர்tooltip icon

    தைவான்

    • ஆஸ்பத்திரிக்குள் வெள்ளம் புகுந்ததால் நோயாளிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
    • படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    தைவானின் தெற்கு பிராந்தியத்தை கிராதான் புயல் கடுமையாக தாக்கியது. இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

    இதனை தொடர்ந்து பெய்த கனமழையால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. எனவே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

    இதற்கிடையே கிராதான் புயலால் பிங்டங் நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி கடுமையாக சேதமடைந்தது. அப்போது ஆஸ்பத்திரிக்குள் வெள்ளம் புகுந்ததால் நோயாளிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த உபகரணங்களை அப்புறப்படுத்தும் பணியும் நடைபெற்றது.

    அப்போது திடீரென அந்த ஆஸ்பத்திரியில் தீப்பிடித்து கரும்புகை மண்டலம் சூழ்ந்தது. இந்த புகையை சுவாசித்த பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

    எனினும் இந்த தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி பலியாகினர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், ஆஸ்பத்திரியில் உள்ள உபகரணங்களை அப்புறப்படுத்தும்போது ஏற்பட்ட மின்கசிவால் தீப்பிடித்தது தெரிய வந்துள்ளது.

    • தைவானில் ஒரே நாளில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கம், கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    தைவானின் கிழக்கு நகரான ஹூவாலியனில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.3 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்தது. ஒரே நாளில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இது ஆகும். எனினும், இதில் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை.

    நிலநடுக்கம் காரணமாக தலைநகர் தைபேவில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுரங்க சேவைகள் குறைந்த வேகத்தில் இயங்க அனுமதிக்கப்பட்டன. நிலநடுக்கம் பூமியில் இருந்து 9.7 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர். தைவானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாகி இருக்கிறது.

    முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம், அந்நாட்டு வரலாற்றில் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்படாத மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தில் ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில், 900-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

    • தைவானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • தைவான் ஜனநாயகத்தை ஆதரித்து வருபவர்களை தூக்கிலிடுமாறு வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

    தைபே நகரம்:

    சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால் சமீப காலமாக தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள சீனா துடிக்கிறது. மேலும் தைவானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே தைவான் எல்லையில் போர் விமானங்கள் மற்றும் கப்பலை அனுப்பி சீனா பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் தைவான் ஜனநாயகத்தை ஆதரித்து வருபவர்களை தூக்கிலிடுமாறு வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து சீனா மற்றும் அதன் தன்னாட்சி பிராந்தியங்களான ஹாங்காங், மக்காவோ ஆகிய பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கும்படி தைவான் நாட்டினருக்கு அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது. தைவான் நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் சீனாவில் வசித்து வருகின்றனர். எனவே இரு நாடுகள் இடையே தினமும் நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் தைவான் அரசின் இந்த அறிவிப்பு அங்குள்ள மக்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தைவானை மிரட்டுவதை சீனா நிறுத்திக்கொள்ள வேண்டும் என அதிபர் லாய் எச்சரித்தார்.
    • தைவானின் புதிய அதிபர் லாய் சிங் டேவுக்கு தலாய் லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தைபே:

    தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் சிங் டே சமீபத்தில் பதவியேற்றார். தைபே நகரத்தில் உள்ள அதிபர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

    தைவான் நாட்டை சீனா நீண்ட காலமாக உரிமை கொண்டாடி வருகிறது. சமீபகாலமாக சீனாவிடம் இருந்து தைவானுக்கு ராணுவ அழுத்தம் அதிகரித்து வருகிறது.

    இந்த சூழலில் தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் பதவியேற்றார். அவரை ஒரு பிரிவினைவாதி என சீனா விமர்சித்துள்ளது.

    இதற்கிடையே, பதவியேற்பு விழாவின்போது பேசிய வில்லியம் லாய், தைவானை மிரட்டுவதை சீனா நிறுத்திக் கொள்ளவேண்டும். தைவானின் ஜனநாயகத்தை சீனா ஏற்றுக்கொள்ள வேண்டும். சீனாவின் அச்சுறுத்தலைக் கண்டு தைவான் பின்வாங்காது. தைவானுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், தைவானின் புதிய அதிபர் லாய் சிங் டேவுக்கு தலாய் லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தலாய் லாமா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தைவானில் ஜனநாயகம் எவ்வளவு உறுதியாக வேரூன்றியுள்ளது என்பதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. தைவான் மக்கள் ஒரு செழிப்பான, வலுவான ஜனநாயகத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், பெரும் செழுமையையும் அடைந்துள்ளனர், அதே நேரத்தில் அவர்களின் வளமான கலாசார பாரம்பரியங்களையும் பாதுகாத்துள்ளனர். தைவான் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் உள்ள சவால்களை சந்திப்பதில் நீங்கள் ஒவ்வொரு வெற்றியையும் பெற விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    • அதிபர் மாளிகையில் நடந்த இந்த விழாவில் 8 நாட்டு தலைவர்கள், 51 சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    • புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள லாங் சிங் டே சீனாவுக்கு எதிரான கொள்கையினை கொண்டவர்.

    தைபே:

    கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடான தைவானில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக முன்னேற்ற கட்சி வெற்றி பெற்று லாங் சிங் டே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த தேர்தலில் தனி பெரும்பான்மை கிடைக்காததால் அவர் கூட்டணி கட்சி ஆதரவுடன் தைவானின் புதிய அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார்.

    அதிபர் மாளிகையில் நடந்த இந்த விழாவில் 8 நாட்டு தலைவர்கள், 51 சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கடந்த 1949-ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரில் தைவான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா கூறி வருகிறது. தங்கள் நாட்டை தனி நாடாக நிலை நிறுத்துவதில் தைவான் உறுதியாக உள்ளது.1996- ம் ஆண்டு முதல் தைவானில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

    புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள லாங் சிங் டே சீனாவுக்கு எதிரான கொள்கையினை கொண்டனர். இவர் அதிபரானது சீனாவுக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது. இவரை ஆபத்தான பிரிவினைவாதி என சீனா குற்றம் சாட்டி உள்ளது.

    • விமானம் சான்பிரான்சிஸ்கோவில் தரை இறங்கியதும் 2 பயணிகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
    • பயணிகளின் மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றது.

    பஸ், ரெயில்களில் இருக்கைகளை பிடிப்பதற்காக பயணிகள் இடையே சண்டை நடப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் விமானத்தில் இருக்கைக்காக பயணிகள் இடையே நடந்த மோதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    கிழக்கு ஆசியாவில் உள்ள தைவானில் இருந்து கலிபோர்னியா செல்லும் ஈ.வி.ஏ. விமானத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் தொடர்ந்து இருமிக்கொண்டே இருந்துள்ளார். இதனால் அவர் அருகே அமர்ந்திருந்த மற்றொரு பயணி விமானத்தில் காலியாக இருந்த மற்றொரு இருக்கைக்கு சென்று அமர்ந்துள்ளார். இந்நிலையில் இருமிக்கொண்டிருந்த பயணி எழுந்து சென்று, ஏற்கனவே தன் அருகே இருந்து விலகி சென்று அமர்ந்த பயணியின் இருக்கை அருகே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டது. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் திடீரென ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதனால் சக பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சண்டை போட்ட பயணிகளை விலக்கி விட முயன்றனர். ஆனாலும் 2 பயணிகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை சமாதானபடுத்த முடியாமல் விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விமானம் சான்பிரான்சிஸ்கோவில் தரை இறங்கியதும் 2 பயணிகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஏற்கனவே பயணிகளின் மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றது.

    வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விமான ஊழியர்களின் பொறுமை மற்றும் கடமை உணர்வை பாராட்டி பதிவிட்டனர். மேலும் மோதலில் ஈடுபட்ட பயணிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

    • தைவானில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இதனால் பல்வேறு இடங்களில் கட்டடங்கள் குலுங்கின.

    தைபே:

    தைவான் தலைநகர் தைபேயில் நேற்று நள்ளிரவு 11.35 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் தைபே மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள கட்டடங்கள் குலுங்கின. சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    ஏற்கனவே கடந்த 3-ம் தேதி தைவானின் ஹூவாலியன் நகருக்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிலநடுக்கம் நின்று நிலைமை சீராகும் வரை அந்த கட்டில்கள் மோதாமல் நர்ஸ்கள் தடுக்கும் காட்சிகளும் அதில் உள்ளது.
    • வீடியோ வைரலாகிய நிலையில், பயனர்கள் பலரும் நர்ஸ்களின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர்.

    தைவானில் கடந்த 3-ந்தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கியது தொடர்பான ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன.

    இந்நிலையில் நிலநடுக்கத்தின் போது மருத்துவமனை ஒன்றில் செவிலியர்கள் சிலர் குழந்தைகளை பாதுகாப்பதை காட்டும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

    இந்த காட்சி மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி உள்ளது. எக்ஸ் தளத்தில் வைரலான இந்த வீடியோவில் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக நர்ஸ்கள் கட்டிலை ஒன்றாக சேர்த்து பாதுகாக்கும் காட்சிகள் உள்ளது. நிலநடுக்கம் நின்று நிலைமை சீராகும் வரை அந்த கட்டில்கள் மோதாமல் நர்ஸ்கள் தடுக்கும் காட்சிகளும் அதில் உள்ளது.

    இந்த வீடியோ வைரலாகிய நிலையில், பயனர்கள் பலரும் நர்ஸ்களின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர்.

    • ஒரு பிரபல ஓட்டல் மற்றும் சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் சரிந்து விழுந்தன.
    • கட்டிட இடிபாடுகளுக்குள் 2 இந்தியர்களும் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

    தைபே நகரம்:

    தைவான் தலைநகர் தைபே நகரத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் சுமார் 32 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு உருவானது.

    இது 25 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆகும். இதற்கு முன்னர் கடந்த 1999-ல் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக சுமார் 2 ஆயிரத்து 400 பேர் பலியாகினர்.

    இந்தநிலையில் தற்போது மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் 100 முறை அங்கு அதிர்வுகள் ஏற்பட்டன. எனவே மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

    இதில் அங்குள்ள பல கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்த 1,000-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் அங்குள்ள ஒரு பிரபல ஓட்டல் மற்றும் சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதில் 1,000-க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டனர். அவர்களில் பலர் மீட்கப்பட்ட நிலையில் 700-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.

    அந்த கட்டிட இடிபாடுகளுக்குள் 2 இந்தியர்களும் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அங்கு சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள ஒரு பிரசவ ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தைகள் இருந்த தொட்டில்கள் உருண்டு சென்றன. அதனை அங்கிருந்த செவிலியர் இழுத்து பிடித்து அவர்களது உயிரை காப்பாற்றினர். இதுகுறித்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய அந்த நர்சுகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • தைவானில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் கட்டிடங்கள் இடிந்தன.
    • இந்தியாவை சேர்ந்த ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதிக்கு அருகில் உள்ள டாரோகோ பள்ளத்தாக்கில் கடைசியாக இருந்தனர்.

    தைபே:

    தைவானில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் கட்டிடங்கள் இடிந்தன. இதில் 9 பேர் பலியானார்கள். 1000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நிலநடுக்கத்தில் சிக்கி 2 இந்தியர்கள் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியாவை சேர்ந்த ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதிக்கு அருகில் உள்ள டாரோகோ பள்ளத்தாக்கில் கடைசியாக இருந்தனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே நிலநடுக்கத்தில் ஓட்டல் ஊழியர்கள் 42 பேர் மாயமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 1999-ம் ஆண்டு 7.2 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • அதில் 2500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.

    தைவானை இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. அந்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹூவாலியன் நகரத்தில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.

    நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. ஹூவாலியன் பகுதியில் அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்தன. தலைநகர் தைபேயில், பழைய கட்டிடங்கள், புதிய அலுவலகங்கள் சேதம் அடைந்தன.

    பயங்கர நிலநடுக்கத்தால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைக்கு ஓடிவந்தனர். பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பாலங்கள் குலுங்கின. அதில் சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தியபடி நின்றனர்.

    சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நாடு முழுவதிலும் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 25 முறை நிலஅதிர்வுகள் பதிவானது. இதனால் தைவான் முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது. நிலநடுக்கத்தில் 4 பேர் பலியாகி இருப்பதாகவும், 50 பேர் காயம் அடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது.

    ஹூவாலியன் நகரில் இடிந்து விழுந்த இரண்டு கட்டிடங்களில் சிலர் சிக்கி உள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. அவர்களை மீட்கும் பணிகள் நடந்தது. பயங்கர நிலநடுக்கத்தால் தைவானின் வடக்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். 80 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் இல்லை.

    இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தைவான், ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதில் ஜப்பானின் தெற்கு தீவை சிறிய சுனாமி அலைகள் தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஜப்பானின் யோனகுனி கடலோரத்தில் சில அடி உயரத்திற்கு அலைகள் எழும்பின. பிலிப்பைன்சின் டானஸ், ககாயன், இலோ கோஸ் நோர்டே, இசபெலா மாகாணங்களில் உள்ள கடலோரப் பகுதிகளை சுனாமி தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    அதே நேரத்தில் சீனாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. ஆனால் சீனாவின் ஷாங்காய், புஜோ, ஜியாமென், குவான்சோ, நிங்டே நகரங்களில் அதிர்வு உணரப்பட்டது. தைவான் நிலநடுக்கம் எதிரொலியாக, ஜப்பானின் ஒகிராவில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

    தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது மெட்ரோ ரெயில் குலுங்கியபடி சென்ற வீடியோ சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.

    தைவானில் 25 ஆண்டுகளில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 1999-ம் ஆண்டு 7.2 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கமே, தைவானில் அதிகபட்சமாக ஏற்பட்ட நிலநடுக்கமாகும்.

    இந்த நிலநடுக்கத்தில் 2500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பசிபிக் "ரிங் ஆப் பயர்" பகுதியில் தைவான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தைவான் மற்றும் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • 2.3 மீட்டர் அளவிற்கு சுனாமி அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜப்பான் எச்சரித்துள்ளது.

    தைவான் அருகே இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ள நிலையில் தைவான் மற்றும் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒகினாவா தீவை குறிப்பிட்டு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 3 மீட்டர் அளவிற்கு சுனாமி அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த கடுமையான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    ஆனால் தைவானில் கட்டடங்கள் இடிந்து சேதம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் தைவானின் தலைநகர் தைபேயிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலநடுக்கம் ஜப்பான் நாட்டில் உள்ள தீவுகளையும் தாக்கியுள்ளது. ஜப்பான் நாட்டின் மியாகோ மற்றும் யாயியாமா தீவுகளை முதல் அலை தாக்கியதாக நம்பப்படுகிறது.

    ×