search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோமநாத்"

    • வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியும், திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் தற்போது எம்.பி.க்களாக உள்ளனர்.
    • தேர்தலில் யாரை போட்டியிட செய்வது? என்பதை ரகசியமாக ஆலோசித்து வருகிறது.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வருகிற ஜூன் 16-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அதற்குள் பதினெட்டாவது மக்களவை தேர்தலை நடத்த வேண்டும். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொதுத்தேர்தலை எப்போது நடத்தலாம்? என்று தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. இருந்த போதிலும் மக்களவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் வேகமாக தயாராகி வருகின்றன.

    கேரள மாநிலத்தில் தற்போதைய ஆளுங் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தொடங்கிவிட்டன. முக்கிய அரசியல் கட்சிகள் யாருடன் கூட்டணி? தேர்தலில் யாரை போட்டியிட செய்வது? என்பதை ரகசியமாக ஆலோசித்து வருகிறது.

    கேரள மாநிலத்தில் ஆலப்புழா, அட்டிங்கல், இடுக்கி, பத்தினம்திட்டா, சாலக்குடி, திருவனந்தபுரம், பொன்னானி, எர்ணாகுளம், வடகரை, கண்ணூர், மாவேலிக்கரை, கோழிக்கோடு, கொல்லம், மலப்புரம், வயநாடு, காசர்கோடு, ஆலந்தூர், திருச்சூர், கோட்டயம் பாலக்காடு ஆகிய 20 மக்களவை தொகுதிகள் இருக்கின்றன.

    வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியும், திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் தற்போது எம்.பி.க்களாக உள்ளனர். அந்த தொகுதிகள் உள்ளிட்ட பல தொகுதிகளில் வெற்றி பெறும் முனைப்பில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில் திருவனந்தபுரம் தொகுதியில் இஸ்ரோ தலைவர் சோமநாத்தை நிறுத்த பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சந்திரயானை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது உள்ளிட்ட விண்வெளி தொடர்பான பல்வேறு முயற்சிகளுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சோம்நாத்.

    இது நாடு முழுவதும் மட்டுமின்றி, சொந்த ஊரான திருவனந்தபுரத்திலும் அவரது செல்வாக்கு உயர வழிவகுத்தது. காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள திருவனந்தபுரத்தில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்த சோமநாத் தான் சரியான வேட்பாளர் என்று பாரதிய ஜனதா கருதுகிறது.

    அது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் அடங்கிய உயர்மட்ட குழு விவாதித்திருக்கிறது. திருவனந்தபுரம் தொகுதியில் தற்போது எம்.பி.யாக உள்ள சசிதரூர் 4-வது முறையாக தற்போது மீண்டும் போட்டியிடுகிறார்.

    2009 மற்றும் 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா வேட்பாளர் ராஜ கோபால், சசிதரூரிடம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியடைந்தார். இதனால் தற்போது சோம்நாத்தை வேட்பாளராக நிறுத்தினால் சசி தரூர் சோதனையை சந்திக்கக் கூடும் என்று பாரதிய ஜனதா கருதுகிறது.

    இதனால் திருவனந்தபுரம் தொகுதியில் சோமநாத்தை நிறுத்தும் முடிவில் பாரதிய ஜனதா உறுதியாக இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இஸ்ரோ தலைவர் சோமநாத் சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்.
    • அப்போது, சந்திரயான் மாடல் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.

    சென்னை:

    இஸ்ரோ தலைவர் சோமநாத் சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    முதல்வரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சந்திரயான் மாடல் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.

    குலசேகரப்பட்டினத்தில் 2வது ஏவுதளம் தயாராக உள்ளது. 2 ஆண்டுகளில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். ஏவுதளத்துக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துதர கேட்டுள்ளோம்.

    தொழிற்துறை விண்வெளி மற்றும் பாதுகாப்பில் தமிழக அரசு உறுதுணையாக உள்ளது.

    ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீரர், வீராங்கனைகள் 17 பேர் பதக்கங்கள் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இஸ்ரோ தலைவர் சோமநாத், பிரக்ஞானந்தா வீட்டுக்கு சென்று நினைவுப் பரிசு வழங்கினார்.
    • பிரக்ஞானந்தா சாதனைக்காக மிகவும் பெருமைப்படுகிறோம் என்றார்.

    சென்னை:

    இஸ்ரோ தலைவர் சோமநாத் இன்று சென்னை வந்துள்ளார். அவர், சென்னையில் உள்ள செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வீட்டுக்கு சென்றார். அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி மகிழ்ந்தார்.

    இது குறித்து பிரக்ஞானந்தா கூறுகையில், இஸ்ரோ தலைவர் சோமநாத்தை சந்திப்பதில் பெருமிதம் கொள்கிறேன். சந்திரயான் 3 புறப்பட்டு தரையிறங்குவதைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. எனது பயணம் மற்றும் பயிற்சி குறித்து விவாதித்தோம். ராக்கெட்டுகள் தயாரிக்கப்படும் திருவனந்தபுரத்திற்கும், ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் வருமாறு என்னை அவர் அழைத்துள்ளார். எனவே, நான் நிச்சயமாக அங்கு செல்வேன் என கூறினார்.

    இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறுகையில், ஒவ்வொரு இந்தியரைப் போலவே, நாமும் பிரக்ஞானந்தா சாதனைக்காக மிகவும் பெருமைப்படுகிறோம்.

    செஸ் என்பது இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒரு பழைய விளையாட்டு. நாம்தான் அதன் பிறப்பிடம். இது மனமும் புத்திசாலித்தனமும் கொண்ட விளையாட்டு.

    நிலவில் பிரக்ஞன் இருக்கிறான் என்று பெருமை கொள்கிறோம், பூமியில் இந்த பிரக்ஞன் இருக்கிறான்.

    நிலவில் இந்தியாவுக்கு நாம் என்ன செய்தோமோ அதை அவர் நிலத்தில் சாதித்திருக்கிறார். விண்வெளியை மேம்படுத்த எங்களுடன் இணைந்து பணியாற்றப் போகிறார்.

    அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் இந்தியாவை ஒரு சக்திவாய்ந்த நாடாக மாற்ற இளைஞர்களை ஊக்குவிப்பதில் எங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளார் என தெரிவித்தார்.

    • எங்களை பொறுத்தவரை சாப்ட் லேண்டிங் மட்டுமல்ல சந்திரயான்-3ன் முழு அம்சங்களும் 100 சதவீதம் வெற்றியடைந்துள்ளது.
    • சூரியனை ஆய்வு செய்யும் முதல் விண்வெளி அடிப்படையிலான ஆதித்யா-எல்-1 செயற்கை கோள் செப்டம்பர் முதல் வாரத்தில் அனுப்பப்படும்.

    திருவனந்தபுரம்:

    சந்திரயான்-3 வெற்றிக்கு பிறகு இஸ்ரோ தலைவர் சோமநாத் தனது சொந்த மாநிலமான கேரளாவுக்கு நேற்று வந்தார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நம் நாடு அதிக கிரகங்களுக்கு இடையோன பயணங்களை மேற்கொள்ளும் திறன் கொண்டது. விண்வெளித்துறையின் விரிவாக்கத்தின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றம் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் விண்வெளித் துறையை பற்றி நீண்ட கால தொலைநோக்கு பார்வை கொண்டவர்.

    எங்களை பொறுத்தவரை சாப்ட் லேண்டிங் மட்டுமல்ல சந்திரயான்-3ன் முழு அம்சங்களும் 100 சதவீதம் வெற்றியடைந்துள்ளது. இதனால் முழு நாடும் எங்களுக்கு ஆதரவை வழங்குகிறது. இதேபோல் எங்களது எதிர்கால முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும். நாங்கள், சந்திரன், செவ்வாய் அல்லது வீனஸ் ஆகியவற்றுக்கு அதிகமாக பயணிக்க முடியும். ஆனால் அதற்கான நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். அதிக முதலீடும் இருக்க வேண்டும்.

    சூரியனை ஆய்வு செய்யும் முதல் விண்வெளி அடிப்படையிலான ஆதித்யா-எல்-1 செயற்கை கோள் செப்டம்பர் முதல் வாரத்தில் அனுப்பப்படும். ஏவுதலுக்கு பிறகு பூமியில் இருந்து லாக்ரேஞ்ச் புள்ளியை அடைய 125 நாள் ஆகும். அதுவரை நாம் காத்திருக்க வேண்டும். சந்திரயான்-3ன் ரோவர் மற்றும் லேண்டர் தற்போது படங்களை அனுப்பி வருகிறது. வரும் நாட்களில் இன்னும் தரமான படங்களுக்காக இஸ்ரோ குழு காத்திருக்கிறது. தற்போது நிலவு பற்றிய அறிவியல் ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×