என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வைட்டமின் சி"
- வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி புரியும்.
- மழைக்காலத்தில் புரோபயாடிக் உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கோடை வெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்த நிலையில் ஆறுதல் அளிக்கும் விதமாக ஆங்காங்கே கோடை மழை பெய்து பூமியை குளிர வைத்துக்கொண்டிருக்கிறது. வெயில் அதிகரித்த சமயத்தில் ஏற்பட்ட வெப்ப அலையால் உடல் உஷ்ண பிரச்சினையை எதிர்கொண்டவர்கள், கோடை மழையால் ஏற்பட்டிருக்கும் பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்ப தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உடல்நலத்திற்கு தீங்கு விளைவித்துவிடும். என்னென்ன விஷயங்களை செய்யலாம்? செய்யக்கூடாது என்று பார்ப்போம்.
உணவில் கவனம்
உண்ணும் உணவில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அது நன்கு சமைக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் நன்கு வேகவைக்கப்படாத உணவுகள் செரிமானமாவதற்கு கூடுதல் நேரமாகும். சிலருக்கு உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும். அதனால் துரித உணவுகளை தவிருங்கள். சாலையோர உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள் தரமானதா? என்பதை உறுதி செய்துவிட்டு உட்கொள்ளுங்கள். ஏனெனில் வெயில் சுட்டெரித்த நிலையில் இருந்து ஈரப்பதமான சூழலுக்கு மாறுவதால் காற்று மூலம் கலக்கும் மாசுக்கள் உணவில் படியக்கூடும். அதனுடன் அதிக ஈரப்பதமான சூழலும் சேர்ந்து உணவு கெட்டுப்போக வழிவகுத்துவிடும். இறுதியில் உணவு விஷத்தன்மைக்கு மாறிவிடக்கூடும்.
வைட்டமின் சி உட்கொள்ளுங்கள்
வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி புரியும். குறிப்பாக கோடை காலம் முடிந்து மாறும் பருவ நிலை மாற்றத்தையும், கோடை மழையையும் எதிர்கொள்ள உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கச் செய்யும். நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவும்.
புரோபயாடிக் உணவுகளை உண்ணுங்கள்
மழைக்காலத்தில் புரோபயாடிக் உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் பருவநிலை மாற்றம் காரணமாக குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். புரோபயாடிக் உணவுகளை உட்கொண்டால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். செரிமான பிரச்சினைகளைத் தடுக்கும்.
சுற்றுப்புற தூய்மை
பருவ நிலை மாறுபாடும், மழை நீர் தேங்குவதும் கொசு உற்பத்திக்கு வித்திடும். டெங்கு, மலேரியா மற்றும் ஜிகா வைரஸ் போன்ற நோய்களை கொசுக்கள் பரவச் செய்துவிடும். கோடை மழையின்போது தாழ்வான பகுதியில்தான் மழைநீர் அதிகம் தேங்கும். அதற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கொசுக்கடியை தடுக்க கொசு விரட்டிகளை பயன்படுத்துங்கள். கைகள், உடலை முழுவதும் மூடும் வகையிலான ஆடைகளை அணியுங்கள்.
தனிப்பட்ட சுகாதாரம்
வெப்பநிலை குறைந்து ஈரப்பதத்தின் அளவு அதிகரிப்பது பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கும். உடலை எப்போதும் சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்திருப்பது முக்கியம். குறிப்பாக கால்கள் மற்றும் கை விரல்கள் உலர்வாக இருக்க வேண்டும். ஏனென்றால் விரல்களுக்கு இடையே பூஞ்சை தொற்று ஏற்பட்டு பாதிப்பை உண்டாக்கும்.
வடிகட்டிய நீரை பருகுங்கள்
கோடை காலம் முடிவுக்கு வந்து பருவ நிலை மாறுவதற்கு ஏற்ப பருகும் தண்ணீரையும் மாற்ற வேண்டும். குளிர்ந்த நீர் பருகுவதை தவிர்த்து தண்ணீரை நன்கு காய்ச்சி ஆறவைத்து பருக வேண்டும். வடிகட்டிய தண்ணீரை பருகுவதும் நல்லது. மழை சமயங்களில் குடிநீரில் அசுத்த நீர் கலந்தால் காலரா, டைபாய்டு போன்ற நீரினால் பரவும் நோய்கள் அதிகரிக்கும். அதனை கருத்தில் கொண்டு தண்ணீர் பருக வேண்டும்.
மழையில் நனையாதீர்கள்
மழையில் நனைவதை முடிந்தவரை தவிருங்கள். எதிர்பாராதவிதமாக மழையில் நனைந்து உடல் ஈரமாகிவிட்டால் வீட்டிற்கு வந்ததும் குளித்துவிட்டு ஆடையை மாற்றிவிடுங்கள். அது காய்ச்சல் உள்பட பிற நோய் பாதிப்புகளை தடுக்க உதவும்.
- சமச்சீரான உணவு கிடைக்காத போது மூளை வளர்ச்சியில் குறைபாடு ஏற்படும்.
- குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாதது வைட்டமின் சி ஆகும்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு புரோட்டின், கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் மற்றும் புத்திக் கூர்மைக்கும் தேவையானதாக இருக்கிறது.
குழந்தைகள் டீன் ஏஜ் வயதிற்கு வரும் வரை அவர்களை சாப்பிட வைப்பதற்கு பெற்றோர்கள் படும் பாடு சொல்லில் அடங்காது. அதுவும் ஓடி, ஆடி விளையாடும் குழந்தை பருவத்தில், அவர்களின் உடல் வளர்ச்சியானது தினம்தோறும் அதிகமாகிக் கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு புரோட்டின், கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் விட்டமின்கள் என நிறைய ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் தேவையாக இருக்கும். அவர்களின் தசை வளர்ச்சிக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் மற்றும் மூளை வளர்ச்சியினால் கிடைக்கப்பெறும் புத்தி கூர்மைக்கும் தேவையானதாக இருக்கிறது.
வளர்பருவம்:
இந்த வளர்ச்சிதை மாற்றம் நடக்கும் பருவத்தில், அவர்கள் உணவு உண்பதற்கு கோபப்படுவதோ, மறுப்பு தெரிவிப்பதோ என்பது தவிர்க்க முடியாததாக இருக்கும். இந்த தருணங்களில் தாய்மார்கள் சத்து நிறைந்த உணவை தயார் படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது.
சமச்சீரான உணவு கிடைக்காத பொழுது மூளை வளர்ச்சியில் குறைபாடு, அடிக்கடி கோபப்படுவது, படபடப்பாவது, பெண் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில், வயதுக்கு வந்த பிறகு மாதாந்திர சுழற்சியில் மாறுபாடு வருவது, ரத்த சோகை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது என எதிர்காலத்தில் உடல் ரீதியான நிறைய தொந்தரவுகளை அனுபவிக்க வேண்டி இருக்கும்.
ஆகையால் குழந்தைகளுக்கு, அவர்கள் வழியிலேயே சென்று, அவர்களுக்கு பிடித்தமான, அதே நேரத்தில் புரதம், தாது உப்புக்கள், விட்டமின்கள், கால்சியம் மற்றும் அத்தியாவசியமான கொழுப்புகளை எப்படியாவது அவர்கள் உணவில் சேர்க்க வேண்டியது பெற்றோர்களின் தலையாய கடமையாகும்.
வைட்டமின் சி:
குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாதது வைட்டமின் சி ஆகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை தருவதோடு, நோயை குணப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. மேலும் வைட்டமின் சி சாப்பிடும் உணவுப் பொருளில் இருக்கும் இரும்புச்சத்தை உடலுக்கு எடுத்து தருவதில் பெரும்பங்காற்றுகிறது. இந்த வைட்டமின் சி யை பெற சிட்ரஸ் நிறைந்த பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம், கொய்யா, பப்பாளி, தக்காளி, மிளகு என உணவுகள் நிறைய இருக்கின்றன. இவற்றில், உங்கள் குழந்தை எதை விரும்புகிறதோ, அதை கொடுத்து, வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அவர்களை சாப்பிட வைக்கலாம்.
இரும்புச்சத்து:
குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது இரும்புச் சத்தாகும். இரும்புச்சத்து குறைவதனால் ரத்த சோகை உண்டாகிறது. ரத்த சிவப்பணுக்கள் தான் ஆக்சிஜனை கொண்டு செல்கின்றன. இதற்கு இரும்புச் சத்து இன்றியமையாததாக இருக்கிறது. காய்கறிகள் இறைச்சி, முட்டை, தானிய வகைகள் போன்றவற்றில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் நிறைய காய்கறிகளை சாப்பிட கொடுப்பதன் மூலம் ஃபோலிக் ஆசிட் ஆனது உடலுக்கு கிடைக்கிறது. இதுவும் குழந்தைகள் வளர்ச்சிக்கு சிறப்பான ஒரு அமிலம் ஆகும்.
வைட்டமின் டி:
குழந்தைகளின் உறுதியான எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின் டி அவசியமாகிறது. இது நேரடியாக சூரியனில் இருந்து நமக்கு கிடைக்கிறது. ஆகையால் உங்கள் குழந்தைகளை, காலையில் அல்லது மாலை வேலைகளில் விளையாட உற்சாகப்படுத்துங்கள். தேங்காய் பால், சோயா, மத்தி மீன் மற்றும் ஆரஞ்சு பழம் போன்றவற்றிலும் விட்டமின் டி நிறைந்து காணப்படுகிறது. எனவே அவர்களை காலையில் அல்லது மாலை வேலைகளில் கட்டாயமாக விளையாட, உற்சாகப்படுத்துவதோடு, மேற்கண்ட உணவு தேர்வில் ஏதாவது ஒன்றை உங்கள் குழந்தைகளுக்கு பிடிக்குமாறு செய்து கொடுங்கள் இதன் மூலம் வைட்டமின் டியை பெற முடியும்.
புரதம்:
வளர்ந்து வரும் குழந்தைகளின் தேக ஆரோக்கியத்திற்கும் திசுக்கள் மற்றும் சதை வளர்ச்சிக்கும் புரோட்டின் எனப்படும் புரதம் இன்றியமையாததாக இருக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் இந்த புரதம் மிகவும் தேவையாக இருக்கிறது. மீன், கோழி, இறைச்சிகள், முட்டை,பால், தயிர், நெய், வெண்ணெய், கடலை பயிறு, பாசிப்பயறு, உளுந்து மற்றும் துவரம் பருப்பு, கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்கள், ஆகியவற்றிலும் இந்த புரதமானது நிறைந்து காணப்படுகிறது.
ஆரோக்கியமான கொழுப்பு:
சரியான அளவில் ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை கொடுப்பது மூளை மற்றும் நரம்பு வளர்ச்சிக்கு நன்மை தரும். குறிப்பாக குழந்தைகளின் வளர்சிதை மாற்றத்தை பராமரிக்க உதவுகிறது. ரத்த உறைதல் மற்றும் வைட்டமின்களை உடலுக்கு எடுத்துக் கொள்வதற்கும் கொழுப்பானது தேவையாக இருக்கிறது. இறைச்சி, முட்டை, மஞ்சள் கரு, பால், தயிர், வெண்ணை மற்றும் நெய் போன்றவற்றில் நிறைந்து காணப்படுகிறது ஆகவே இந்த பொருட்களில் குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்றை தேர்வு செய்து நீங்கள் தயாராக வைத்திருப்பது அவர்கள் உடலின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும்.
- தாவரங்களில் இருக்கும் புரதத்தை தனியாக பிரித்து எடுத்து தயாரிக்கப்படுகிறது.
- சுவை விலங்குகளின் மாமிசத்தைப் போலவே இருக்கும்.
சைவ இறைச்சி என்பது தாவர இறைச்சி என்றும் அழைக்கப்படுகிறது. இது தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. தாவரங்களில் இருந்து, சில கூறுகள் எடுக்கப்பட்டு, இதன் மூலம் சிறப்பு தொழில்நுட்பம் மூலம் சைவ இறைச்சி தயாரிக்கப்படுகிறது
மீன், கோழி, ஆடு போன்றவற்றின் இறைச்சியைப் போலவே தாவரங்களில் இருக்கும் புரதத்தை தனியாக பிரித்து எடுத்து தயாரிக்கப்படுவதை 'தாவர இறைச்சி' அல்லது 'சைவ இறைச்சி' என்று அழைக்கிறோம். இதன் சுவை விலங்குகளின் மாமிசத்தைப் போலவே இருக்கும். தாவர இறைச்சி பெரும்பாலும் சோயா, காளான், பீன்ஸ், கோதுமை ஆகிய மூலப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
இறைச்சியின் சிவப்பு நிறத்தை பிரதிபலிக்க இதனுடன் மாதுளைப்பொடி, பீட்ரூட் சாறு, சோயா லெகிமோ குளோபின் போன்ற நிறமிகள் கலக்கப்படுகின்றன.
சமீபகாலமாகவே தாவர இறைச்சியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். சர்வதேச சந்தையிலும் இதற்கு வரவேற்பு இருக்கிறது. இருப்பினும், தாவர இறைச்சி உடலுக்கு நல்லதா என்ற கேள்வியும் பலரிடம் இருக்கிறது. இதுகுறித்த தகவல்கள் இங்கே...
மாமிச உணவை தவிர்க்க நினைப்பவர்களுக்கும், உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் அசைவ பிரியர்களுக்கும் தாவர இறைச்சி ஒரு மாற்று உணவாகும். விலங்குகளின் மூலம் கிடைக்கும் இறைச்சியின் ருசியையும் இது ஈடுசெய்யும். தாவர இறைச்சியில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
விலங்கு இறைச்சியுடன் ஒப்பிடும்போது தாவர இறைச்சியில் நார்ச்சத்து, வைட்டமின் சி. பிளேவனாய்டுகள் போன்ற சத்துகள் அதிகமாக இருக்கின்றன. அதேசமயம் விலங்கு இறைச்சியில் இருந்து பெறப்படும் இரும்பு, வைட்டமின் டி துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் தாவர இறைச்சியில் குறைந்த அளவே உள்ளன.
எனவே தாவர இறைச்சி சாப்பிடும் நாட்களில் பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது. இவ்வாறு சாப்பிடும்போது தாவர இறைச்சியில் கிடைக்காத ஊட்டச்சத்துக்களை மற்ற உணவுகள் சமன் செய்யும்.
தாவர இறைச்சியில் இருக்கும் நார்ச்சத்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும். இதன் மூலம் இதயநோய், புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும்.
சோயா, காளான், பீன்ஸ் போன்றவை மட்டுமல்லாமல் பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, உருளைக் கிழங்கு. சிலவகை தாவர எண்ணெய்கள், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை கலந்தும் தாவர இறைச்சி தயாரிக்கப்படுகிறது. எனவே தாவர இறைச்சியை வாங்கும்போது குறைந்த உப்பு, அதிக நார்ச்சத்து நிறைந்த தயாரிப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
விலங்கு இறைச்சியுடன் ஒப்பிடும்போது தாவர இறைச்சியில் உள்ள புரதத்தை மனித உடலால் குறைவான அளவே உட்கிரகிக்க முடியும். தாவர இறைச்சி செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இருப்பினும் அது செரிமானம் ஆகும் தன்மையானது.
சமைக்கும் முறை, சமைப்பதற்காக தாவர இறைச்சியில் சேர்க்கப்படும் பொருட்கள். சாப்பிடுபவரின் செரிமான சக்தி ஆகியவற்றை பொறுத்து மாறக்கூடும். விலங்குகளில் இருந்து கிடைக்கும் இறைச்சியுடன் ஒப்பிடும்போது. தாவர இறைச்சி சுற்றுச்சூழலில் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும்.
- முக அழகை மேம்படுத்த உதவுகின்றன.
- பெர்ரி பழங்கள் கொண்டு ஃபேஸ்பேக் மற்றும் ஃபேஸ் ஸ்கிரப் தயாரிக்கலாம்.
ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி, கிரான்பெர்ரி என பல்வேறு வகைகளில் இருக்கும் பெர்ரி பழங்கள், உடல் ஆரோக்கியயத்தை பாதுகாப்பதோடு, முக அழகையும் மேம்படுத்த உதவுகின்றன. இவற்றில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்டுகள், நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி போன்றவை சரும பிரச்சினைகளை போக்கி, முகத்தை அழகாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.
வீட்டிலேயே பெர்ரி பழங்கள் கொண்டு ஃபேஸ்பேக் மற்றும் ஃபேஸ் ஸ்கிரப் தயாரிக்கலாம். அதைப் பற்றிய குறிப்புகள் இதோ..
ஃபேஸ்பேக், தேன் பேஸ்பேக்:
முதலில் பெர்ரி பழங்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும், அந்த கூழுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இது சருமத்தை சுத்தம் செய்து, சருமம் பளபளப்பாக இருக்க உதவும்.
பெர்ரி, ரோஸ் வாட்டர் பேஸ்பேக்:
பெர்ரி பழக்கூழுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் மற்றும் கடலை மாவு கலந்து முகத்தில் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைகழுவவும். இந்த ஃபேஸ்பேக், திறந்திருக்கும் சருமத் துளைகளை இறுகச்செய்து, முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கும்.
பெர்ரி, எலுமிச்சை பேஸ்பேக்:
பெர்ரி பழக்கூழுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கெட்டியாக பசைபோல தயாரிக்கவும். இதை முகத் தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இந்த பேக்கை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை பயன்படுத்தினால், முகத்தில் இயற்கையான பொலிவு மற்றும் பளபளப்பு உண்டாகும்.
பெர்ரி அரிசி மாவு பேஸ்பேக்:
பெர்ரி பழக்கூழுடன் சிறிதளவு தயிர், அரிசி மாவு மற்றும் சில துளிகள் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவவும், இந்த ஃபேஸ்பேக் வறட்சியை நீக்கி, சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.
பெர்ரி, ஓட்ஸ் ஃபேஸ்பேக்:
பழக்கூழுடன், 2 டீஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து அரைக்கவும். அதனுடன் மண்பூன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பசைபோல தயாரிக்கவும். பின்பு அதை முகத்தில் தடவி 10 முதல் 12 நிமிடங்கள் கழிந்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
பெர்ரி, தேங்காய் எண்ணெய் ஸ்கிரப்:
பெர்ரி பழங்களுடன், அரை டீஸ்பூன் வெள்ளை சர்க்கரை மற்றும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர், அதை முகம் மற்றும் கழுத்தில் தடவவும், இந்த ஸ்கிரப் முகப்பரு, வடுக்கள் மற்றும் கறைகளை விரைவாக அகற்ற உதயும்.
- சட்டென்று பலரும் ருசிப்பது வாழைப்பழமாகத்தான் இருக்கும்.
- இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் வைட்டமின் சி உள்ளது.
திடீர் பசியைத் தணிக்க விரும்பினாலோ, பயணத்தின்போது சாப்பிட ஆசைப்பட்டாலோ சட்டென்று பலரும் ருசிப்பது வாழைப்பழமாகத்தான் இருக்கும். இதனை எந்த நேரத்திலும் சாப்பிட முடியும். தினமும் ஒரு வாழைப்பழமாவது சாப்பிட வேண்டும் என்று சுகாதார நிபுணர்களும் அறிவுறுத்துகிறார்கள். வாழைப்பழம் ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான ௧௦ காரணங்களையும், அதனால் கிடைக்கும் நன்மைகளையும் தெரிந்து கொள்வோம்.
சத்துக்கள்
எல்லா வகையான வாழைப்பழங்களிலும் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் வைட்டமின் சி, செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அத்துடன் இயற்கை சர்க்கரையும், கார்போஹைட்ரேட்டும் உள்ளன. அவை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் சிற்றுண்டி உணவாகவும் அமைந்திருக்கின்றன.
மேலும், வாழைப்பழத்தில் உள்ளடங்கி இருக்கும் மெக்னீசியம் எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். குறைந்த கலோரிகளே கொண்டிருப்பதும் வாழைப்பழத்தை பலரும் விரும்ப காரணமாக அமைந்திருக்கிறது.
பொட்டாசியம்
வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் உடலுக்கு தேவையான சிறந்த இயற்கை ஆதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதயம் மற்றும் தசைகளின் செயல்பாட்டை பராமரிக்க பொட்டாசியம் முக்கியமானது. அதனால் தினமும் ஒரு வாழைப்பழமாவது தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
ஆற்றல்
வாழைப்பழத்தில் நிறைந்திருக்கும் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரை விரைவான மற்றும் நீடித்த ஆற்றலை உடலுக்கு அளிக்கின்றன. உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு அதிக எனர்ஜியை கொடுக்கும். உடற்பயிற்சியையும் உற்சாகமாக செய்யத் தூண்டும். மதிய உணவுக்குப் பின்பு வாழைப்பழம் சாப்பிடுவதும் நல்லது.
செரிமானம்
வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை பேண உதவும். குறிப்பாக 'பெக்டின்' குடல் இயக்கத்தை ஊக்குவித்து செரிமானம் சுமூகமாக நடைபெறுவதற்கு உதவிபுரியும். மலச்சிக்கலையும் தடுத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
வயிற்றுக் கோளாறு
வயிற்று கோளாறு அல்லது செரிமானம் சார்ந்த அசவுகரியங்களை எதிர்கொள்பவர்களுக்கு வாழைப்பழம் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் வாழைப்பழங்கள் எளிதாக ஜீரணமாகும். வயிற்றில் ஏற்படும் வலியை போக்கவும் உதவும்.
இதய ஆரோக்கியம்
பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் போன்ற உணவுப்பொருட்களை தவறாமல் உட்கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். இதய நோய் மட்டுமின்றி பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும்.
உடல் எடை
வாழைப்பழங்களில் கலோரிகள் மட்டுமின்றி கொழுப்பின் அளவும் குறைவு. அவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம் அதிக பசியை கட்டுப்படுத்திவிடலாம். அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். உடல் எடையை சீராக பராமரிக்க முயற்சிப்பவர்களுக்கு வாழைப்பழம் சிறந்த தேர்வாக அமையும்.
மனநிலை மேம்பாடு
வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 உள்ளது. இது மூளையின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. மேலும் வைட்டமின் பி6 செரோடோனின்,டோபமைன் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்களின் உற்பத்திக்கு துணைபுரியக்கூடியது. இது மனநிலையை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.
சருமம்
வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் சருமம் விரைவில் வயதான தோற்றத்திற்கு மாறுவதை தடுக்கும். தோல் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிப்பதன் மூலம் ஆரோக்கியமான சருமத்திற்கு வித்திடும்.
இயற்கை இனிப்பு
வாழைப்பழங்கள் ஆரோக்கியமான முறையில் உடலின் இனிப்பு தேவையை பூர்த்தி செய்யக்கூடியவை. ஸ்மூத்தி, பேக்கரி பொருட்கள் போன்றவற்றில் வாழைப்பழங்களை சேர்ப்பதன் மூலம் செயற்கை சர்க்கரையின் தேவையை குறைக்கலாம்.
- வைட்டமின் சி சீரமில் ஆன்டிஆக்சிடென்ட்கள் அதிகமாக இருக்கும்.
- சருமத்தை பளிச்சென்று வைத்துக் கொள்ள வைட்டமின் சி சீரம் உதவுகிறது.
வைட்டமின் சி நம்முடைய உடலுக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோல தான் நம்முடைய சருமத்துக்கும் வைட்டமின் சி அவசியம். இது சருமத்தில் உண்டாகும் இன்ஃபிளமேஷன்கள் முதல் தீவிரமான சருமப் பிரச்சினைகள் வரை தீர்க்கச் செய்யும். இந்த வைட்டமின் சி சீரமில் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் அதிகமாக இருக்கும். நம்முடைய உடலுக்கு எப்படி ஆக்சிடென்ட்கள் தேவையோ, அதேபோல தான் சருமத்திற்கும் வைட்டமின் சி அவசியம்.
சருமத்தில் உள்ள ப்ரீ - ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடி சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் புறஊதா கதிர்களின் தாக்கத்தில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதில் இந்த வைட்டமின் சி முக்கியப் பங்கு வகிக்கிறது.
சருமத்தில் அதிக சுருக்கங்கள் ஏற்படுவது இளம் வயதிலேயே வயதான தோற்றத்தைக் கொடுக்கும். நம்முடைய சருமத்தில் கொலாஜன் உற்பத்தி குறைவாக இருக்கும் போது சருமம் அதிக வறட்சி அடையும். சருமத்தை நீரேற்றத்துடனும் மென்மையாகவும் சுருக்கங்கள், மெல்லிய கோடுகள் இல்லாமல் இளமையாகவும் வைத்திருப்பதில் கொலாஜன் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த கொலாஜன் உற்பத்தி அதிகரிக்க வைட்டமின் சி சீரம் உதவி செய்கிறது.
சருமம் நெகிழ்வுத் தன்மையுடனும் இளமையாகவும் இருக்க வேண்டுமென்றால் உங்களுடைய பகல் நேர சரும பராமரிப்பில் வைட்டமின் சி சீரம் பயன்படுத்துங்கள்.
சருமத்தில் கரும்புள்ளிகள், தடிப்புகள், பருக்கள் ஆகியவை இல்லாமல் தெளிவான க்ளியர் சருமத்தையும், பளபளக்கும் சருமத்தையும் பெறுவதற்கு வைட்டமின் சி மிக முக்கியம். குறிப்பாக வைட்டமின் சி -யில் உள்ள ப்ளீச்சிங் பண்பு சருமத்தின் மேல் அடுக்குகளில் உள்ள கருமை, சன் டேன் ஆகியவற்றை போக்கி சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவி செய்யும்.
குறிப்பாக சருமத்தில் ஆங்காங்கே காணப்படும் கருந்திட்டுக்கள், பெண்களுக்கு 40 வயதிற்குமேல் ஏற்படும் மங்கு பிரச்சனை, சூரிய வெப்பத்தால் ஏற்படும் சன் டேன் அதிகரிப்பதால் ஏற்படும் பிக்மண்டேஷன்கள் ஆகியவற்றை குறைத்து சருமத்தை பளிச்சென்று வைத்துக் கொள்ள வைட்டமின் சி சீரம் உதவுகிறது.
உடலுக்கு நீர்ச்சத்து எவ்வளவு அடிப்படையோ அவசியமோ அதே அளவிற்கு சருமமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு நீர்ச்சத்துடன் இருக்க வேண்டியது மிக அவசியம். அந்த வகையில் வைட்டமின் சி சீரம் பயன்படுத்தும் போது சருமம் அதிக நீர்ச்சத்துடன் இருக்கும்.
வைட்டமின் சி சீரமில் நீர்ச்சத்துக்கான மூலக்கூறுகள் அதிக அளவில் இருக்கின்றன. இவை சருமத்தை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்வதோடு தோலின் வறட்சியைப் போக்கி நல்ல மாய்ஸ்ச்சரைசராகவும் செயல்படும்.
இயற்கையாகவே சருமத்திலுள்ள இறந்த செல்கள் நீங்கி புதிய செல்கள் உற்பத்தியாகும். அப்படி இறந்த செல்கள் நீங்கும்போது சருமத்தில் சின்ன சின்ன புள்ளிகள், கருமை, தோலுரிதல், சருமம் சிவந்து போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதிலும் குறிப்பாக நாம் சருமத்தை எக்ஸ்போலியேட் செய்வதற்கு ஸ்க்ரப் பயன்படுத்துவோம். அவ்வாறு பயன்படுத்தும்போது அழுத்தி தேய்ப்பதால் சருமத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். இவற்றை சரிசெய்து சருமம் சிவந்து போதல், தடித்தல் போன்ற பிரச்சினைகளை மிக வேகமாக ஆற்றும் ஹீலிங் பண்பு வைட்டமின் சி சீரமில் அதிகமாக இருக்கிறது.
சூரிய கதிர்வீச்சில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்களின் தாக்கத்தால் சருமத்தில் நேரடியான பாதிப்புகள் உண்டாகும். சூரியக் கதிர்வீச்சின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க தவறினால் அது சருமத்தில் சிறு சிறு பாதிப்புகள் தொடங்கி, சரும புற்றுநோய் வரை கொண்டு போய்விடும். அதனால் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதோடு சேர்த்து வைட்டமின் சி சீரமும் பயன்படுத்துவது நல்லது. இது உங்கள் சருமத்திற்கு டபுள் புரொடக்ஷனை கொடுக்கும். புற ஊதா கதிர்களின் தாக்கத்தின் தன்மையை குறைத்து இளமையாக வைத்திருக்கச் செய்யும்.
ஸ்கின் டோன் பிரச்சனை பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. முகம் மற்றும் சருமத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் ஒரு நேரத்திலும் மற்ற இடங்கள் கருமையாகவும் அதாவது வாயைச் சுற்றிய பகுதிகள், கண்ணுக்கு அடியில், கைகளில் முட்டிக்கு மேல் என சில பகுதிகள் கருமையாகவும் மற்ற பகுதிகள் வேறு நிறத்திலும் என இருப்பவர்கள் மிக அதிகம்.
இந்த பிரச்சினையை சரிசெய்வதில் வைட்டமின் சி சீரம் உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். இந்த வைட்டமின் சி சீரமில் உள்ள ப்ளீச்சிங் பண்பு சருமத்தில் ஆங்காங்கே இருக்கும் கருமை, கருத்திட்டு ஆகியவற்றைச் சரிசெய்து சருமத்தை ஒரே நிறமாக வைத்திருக்க உதவி செய்யும். எனவே சருமத்தில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனையை சரிசெய்ய உதவும்.
வைட்டமின் சி சீரமை உங்களுடைய சரும பராமரிப்பில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நீங்கள் ஏராளமான நன்மைகளை பெற முடியும்.
- அதிகம் கிடைக்கும் வகையிலான சீசன் பழங்களில் களாக்காயும் ஒன்று.
- களாக்காயை அப்படியே சாப்பிடலாம்.
தென்னிந்தியாவில் சுரைக்காய், தாய்லாத்தில் ஈரரம்பா, அங்கத்தில் திராட்சை வத்தல், மலேசியாவில் கெரெண்டா, விஞ்ஞான ரீதியாக கரோண்டா என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் களாக்காய், தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது.
இது புளிப்பு, இனிப்பு மற்றும் அமிலத்தன்மை கொண்ட பொரி பழத்தை ஒத்த வடிவத்தில் இருக்கும். தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் களாக்காய் மரங்கள் அதிகம் வளர்கின்றன. ஆகஸ்டு மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை அதிகம் கிடைக்கும் வகையிலான சீசன் பழங்களில் களாக்காயும் ஒன்று. இதன் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
களாக்காயில் வைட்டமின் சி, பி, இரும்புச்சத்து, நார்ச்சத்து, மாங்கனீசு, பொட்டாசியம், ஜிங்க், காப்பர், ஆன்டிஆக்சிடன்டுகளான பிளேவனாய்டுகள், ஆல்கலாய்டுகள், டான்னின்ஸ், கரீஸ்சோன், ட்ரை டெர்பினாய்ட்ஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. களாக்காயை அப்படியே சாப்பிடலாம். அதை அரைத்து முகத்தில் மாஸ்க் போல் போட சருமத்தின் நிறமிழப்பை குறைத்து. கருந்திட்டுக்களை போக்கி, முதிர்வைத் தடுக்கும். சரும பிரச்சினைகளை போக்க இயற்கை மருத்துவத்தில் களாக்காய் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
களாக்காயில் உள்ள நீர்ச்சத்து உடலில் நீரேற்றத்தை அதிகரித்து உடலின் வெப்பநிலையை சமநிலைப்படுத்துகிறது. மேலும், உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டத்துக்கு வழிவகுத்து, உடலின் உள்உறுப்புகளுக்கு தேவையான சத்துக்களும், ஆக்சிஜனும் கிடைக்க உதவுகிறது.
களாக்காயில் உள்ள புரதச்சத்துக்கள், தலைமுடியின் வேர்க்கால்களை வலிமையாக்குவதுடன், கூந்தல் ஆரோக்கியமாகவும், நீளமாகவும், பளபளப்பாகவும் வளர உதவுகிறது. முடி உதிர்வு, முடி உடைவு போன்ற பிரச்சினைகள் வருவதையும் தடுக்கிறது. களாக்காயில் உள்ள புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆகியவை கருப்பையில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, கருப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதுதவிர, சீரற்ற மாதவிடாய். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதீத ரத்தப்போக்கு போன்ற மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகளை சரிசெய்து கருப்பை புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எதிர்த்து செயல்படுகிறது.
களாக்காயில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து பெக்டின் எனும் ஸ்டார்ச் செரிமானத்தை மேம்படுத்துவதுடன், அடிக்கடி ஏற்படும் வயிற்றுவலி, மலச்சிக்கல், செரிமானமின்மையால் உண்டாகும் வாயுத்தொல்லை, எரிச்சல் மற்றும் வலியை தீர்க்கிறது. மேலும், குடலின் இயக்கத்தை சீராக்கி, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டில் ஏற்படும் இடையூறுகளையும் சரிசெய்கிறது.
களாக்காயில் உள்ள ஆன்டிஆக்சிடன்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து. நோய்த்தொற்றுகள், கிருமித்தொற்று, வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் உண்டாகும் உடல் உபாதைகளையும், அழற்சிகளையும் சரி செய்கிறது. களாக்காயில் உள்ள வைட்டமின்கள். பார்வைத் திறன் மற்றும் செவித்திறனை மேம்படுத்துகிறது. மூட்டு எலும்புகளை பலப்படுத்தி, தசைகளையும் வலுப்படுகிறது. உடலில் உள்ள கொழுப்பை கரைத்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுவதுடன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களால் உண்டாகும் மற்ற உடல் பிரச்சினைகளையும் சரி செய்ய உதவுகிறது.
களாக்காயில் உள்ள மெக்னீசியம் மற்றும் ட்ரிப் டோபான் சத்துக்கள் செரோடோனின் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து, நரம்பியல் மண்டலம் சீராக செயல்பட உதவுகிறது. ஹேப்பி ஹார்மோன் சுரப்பை தூண்டுவதுடன், மன அழுத்தத்தை குறைத்து மன அமைதியை உண்டாக்குகிறது.
- பெண்களுக்கு சிறுவயதிலேயே கைகளில் இருக்கும் தோல் சுருங்கி போய் காட்சியளிக்கும்.
- முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பை கைகளுக்கு கொடுப்பது கிடையாது.
பொதுவாக, வயதாகும்போது நமது உடலில் பல மாற்றங்கள் நிகழ்கிறது. அதில் ஒன்று தான் தோல் சுருக்கும். இது வயதாகும்போது வருவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், ஒரு சில பெண்களுக்கு சிறுவயதிலேயே கைகளில் இருக்கும் தோல் சுருங்கி போய் காட்சியளிக்கும். இதற்கு காரணம் உடலில் நீரிழப்பு, கைகளை அடிக்கடி கழுவுதல், பாத்திரங்கள் கழுவுதல் போன்றவை ஆகும். இருப்பினும், சில பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பை கைகளுக்கு கொடுப்பது கிடையாது.
ஏனென்றால், முகம் அழகாக தெரிந்தால் போதும் என்று நினைப்பது தான். அதுமட்டுமல்லாமல், அதற்கு தனியாக செலவு செய்ய வேண்டியிருக்குமே என்றும் நினைப்பார்கள். பார்லருக்கு போய் அதையும் இதையும் செய்றதுக்கு பதிலாக வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தியே கைகளில் இருக்கும் சுருக்கங்களை போக்கி அழகான சருமத்தை பெற முடியும்.
மேலும் உங்களது சருமத்தை மினுமினுப்பாகவும் பொலிவுடனும் வைத்துக்கொள்ளலாம். இவ்வாறு இயற்கை பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்தவதால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது.
எலுமிச்சை ஸ்க்ரப்:
நமது சருமத்தில் இருக்கும் அழுக்கு, இறந்த செல்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த எலுமிச்சை ஸ்க்ரப் தான். அதற்கு ஒரு கப்பில் 3 அல்லது 4 ஸ்பூன் சர்க்கரையும், 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றையும் நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர், கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவிவிட்டு, இந்த கலவை கைகளில் தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். காய்ந்தவுடன் சாதாரண தண்ணீரில் கைகளை கழுவிவிடுங்கள். இதை வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்து வர மென்மையான கைகளை பெறலாம்.
பால்
பால் ஒரு சிறந்த மாய்ஸ்ச்சரைசர். இதை சரும பராமரிப்புக்கு பயன்படுத்தும்போது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், சருமத்துக்கு ஈரப்பதம் கிடைக்கவும் உதவும். முதலில் எலுமிச்சை ஸ்க்ரப் செய்துக் கொள்ளவும். பின்னர், ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் பால், அதனுடன் பாதாம் எண்ணெய் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையில் ௧௫ அல்லது 20 நிமிடங்களுக்கு கைகளை அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் கைகளை வெளியே எடுத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு 4 அல்லது 5 முறை செய்துவர கைகளில் உள்ள சுருக்கங்கள் மறையத் தொடங்கும்.
அன்னாசி கூழ்:
வைட்டமின் சி சத்து நிரம்பியுள்ள அன்னாசி பழத்தை சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கக்கூடியது. முதலில் அன்னாசி பழத்தை நன்றாக கூழ் போன்று பிசைந்துக் கொள்ளவும். அந்த கூழை கைகள் முழுக்கத் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவி விடவும். மென்மையான மற்றும் சுருக்கமில்லாத கைக்கு இந்த ஹேண்ட் மாஸ்க்கை தினமும் பயன்படுத்தலாம்.
ஆலிவ் ஆயில்:
தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன் ஆலிவ் எண்ணெயைக் கொண்டு கைகளை மசாஜ் செய்துக் கொள்ளுங்கள். பின்னர், பருத்தி கையுறைகளை அணிந்து அவற்றை இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். மீண்டும் காலையில் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவிக் கொள்ளுங்கள். இதை தினமும் செய்துவர கைகளை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றும்.
வாழைப்பழம்:
மேற்கூறிய எதுவும் செய்ய முடியாதவர்கள் வாழைப்பழத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழைப்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, அவை சுருக்கங்களை எதிர்த்துப் போராடுவதற்கு ஏற்றதாக அமைகின்றன. வாழைப்பழத்தை நசுக்கி கூழ் போன்று செய்து கொள்ளவும். அந்த கூழை உங்கள் கைகளில் தடவி காய்ந்தவுடன் கழுவிவிடுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை செய்துவர மென்மையான கைகளை பெறலாம்.
- நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கவும் வழிவகுக்கின்றன.
- உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்க துணைபுரியும்.
கவர்ச்சிகரமான பழ இனங்களுள் ஒன்றாக காட்சி அளிக்கும் டிராகன் பழத்தின் பூர்வீகமாக மெக்சிகோ அறியப்படுகிறது. ஆரம்பத்தில் அமெரிக்கா முழுவதும் பரவி இப்போது உலகம் முழுவதும் விளைவிக்கப்படுகிறது. இந்தியாவிலும் இதனை பலர் விரும்பி ருசிக்க பழகிவிட்டார்கள். டிராகன் பழத்தை ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணத்தை தெரிந்துகொள்வோம்.
* டிராகன் பழத்தில் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை உடலில் செல்களை சேதப்படுத்தும் ப்ரீரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகின்றன. நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கவும் வழிவகுக்கின்றன.
* டிராகன் பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தக்கூடியது. நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடி உடல் பலவீனம் அடைவதை தடுக்கக்கூடியது.
* டிராகன் பழத்தில் உள்ளடங்கி இருக்கும் நார்ச்சத்து செரிமான செயல்பாடுகளையும், குடல் இயக்கங்களையும் மேம்படுத்த உதவும்.
* இதில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்சிடென்டுகள் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து சருமத்தை பாதுகாக்க வழிவகை செய்யும். விரைவிலேயே வயதான அறிகுறிகள் எட்டிப்பார்ப்பதை தடுக்கும்.
*டிராகன் பழத்தில் உள்ள நார்ச்சத்துகள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் ஆரோக்கியமான கொழுப்பின் செயல்பாடுகளை ஊக்குவிக்க உதவும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதய நோய் அபாயங்களையும் குறைக்கும்.
* டிராகன் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் வெப்பமான காலநிலையின்போது உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்க துணைபுரியும். உடற்பயிற்சி செய்த பிறகு உடலை நீரேற்றமாக வைத்திருப்பதற்கும் டிராகன் பழம் சிறந்த தேர்வாக அமையும்.
* டிராகன் பழத்தில் கலோரிகள் குறைவு. ஆனால் வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்