என் மலர்
நீங்கள் தேடியது "ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம்"
- நிலவின் பாறைகளை ஆராய்வதில் ஸ்லிம் விண்கலம் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ராக்கெட்டில் பிரபஞ்சத்தின் தோற்றத்தை ஆராய எக்ஸ்ரே தொலை நோக்கியும் அனுப்பப்பட்டு உள்ளது.
டோக்கியோ:
ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் நிலவை ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்ப முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டது. அதற்காக 'ஸ்லிம்' என்ற விண்கலத்தை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கினர்.
இந்த விண்கலத்தை எச்.2-ஏ என்ற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. ஆனால் மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் ராக்கெட் ஏவுதல் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஸ்லிம் விண்கலத்தை இன்று விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று தென்மேற்கு ஜப்பானில் உள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து ராக்கெட் மூலம் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
4 அல்லது 6 மாதங்களில் விண்கலம் நிலவை சென்றடையும் என்றும் நிலவின் பாறைகளை ஆராய்வதில் ஸ்லிம் விண்கலம் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்கலத்தில் சிறிய ரக லேண்டர் உள்ளது.
இந்த ராக்கெட்டில் பிரபஞ்சத்தின் தோற்றத்தை ஆராய எக்ஸ்ரே தொலை நோக்கியும் அனுப்பப்பட்டு உள்ளது.
ராக்கெட் ஏவப்பட்ட 13 நிமிடங்களுக்கு பிறகு எக்ஸ்ரே இமேஜிங் மற்றும் ஸ்பெக்ட்ரோஸ் கோபி மிஷன் என்ற செயற்கை கோள் பூமியின் சுற்று வட்ட பாதையில் செலுத்தப்பட்டது. இது விண்மீன் திரள்களுக்கு இடையே உள்ளவற்றின் வேகத்தையும் ஆராயும். இந்த தகவல் மூலம் வான் பொருட்கள் உருவானது எப்படி என்பதை கண்டறிய உள்ளோம். மேலும் பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்ற மர்மத்தை தீர்க்க வழி வகுக்கும் என்று ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலவை ஆய்வு செய்வதற்கான இத்திட்டத்தில் வெற்றி பெற்றால் நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 5-வது நாடாக ஜப்பான் இருக்கும். ஏற்கனவே அமெரிக்கா, சீனா, ரஷியா, இந்தியா ஆகிய நாடுகள் தங்களது விண்கலங்களை நிலவில் தரையிறக்கி உள்ளன.