search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர்சதுர்த்தி"

    • 2 பெரிய லட்டுகள் விநாயகருக்கு படைக்கப்பட்டன.
    • லட்டுகள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் கம்மம் நகர பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி ஏராளமான விநாயகர் சிலைகள் பரிதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.

    33-வது வார்டு காந்திநகர் பகுதியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு 2 பெரிய லட்டுகள் விநாயகருக்கு படைக்கப்பட்டன. இந்த லட்டுகள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த ஏலத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் வியாபாரி ஷேக் லத்தீப் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். விநாயகர் லட்டுக்களை அவர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

    கடைசியில் 2 லட்டுகளையும் ரூ.20,016 மற்றும் 11,016-க்கு லத்தீப் குடும்பத்தினர் ஏலம் எடுத்தனர். லட்டு கிடைத்த மகிழ்ச்சியில் அவர்கள் உற்சாகமடைந்தனர்.

    விநாயகர் சிலை வைத்த விழா குழுவினர் லத்தீப் குடும்பத்தினரிடம் லட்டுக்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் நடந்த இந்த விநாயகர் லட்டு ஏலம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சென்னையில் பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.
    • கிரேன் மற்றும் டிராலி வசதிகளும் கடற்கரை பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன

    சென்னை:

    தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன.

    சென்னையில் 1,500-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்றன.

    கடந்த 11-ந் தேதி அன்று 100-க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன. நேற்றும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப் பட்டது. இந்த நிலையில் இன்று சென்னையில் பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

    சென்னை மாநகர் முழு வதும் வைக்கப்பட்டிருந்த சிலைகளில் இதுவரை கரைத்தது போக 1,300 சிலைகள் இன்று 17 வழித் தடங்கள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

    பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை, நீலாங்கரை பல்கலை நகர், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை, காசிமேடு மீன்பிடி துறை முகம் ஆகிய 4 இடங்களில் சென்னை மாநகர பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்தும் ஊர் வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

    சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி பகுதியில் வைக்கப்பட்டிருந்த 600-க்கும் மேற்பட்ட சிலைகள் எண்ணூர் கடற்கரை பகுதியில் கரைக்கப்பட்டன. இதேபோன்று தாம்பரம் சுற்று வட்டாரத்தில் வைக்கப்பட்டிருந்த 600 சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டன.

    இதையொட்டி கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது. பெரிய விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக கிரேன் மற்றும் டிராலி வசதிகளும் கடற்கரை பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பவர்கள் தண்ணீரில் மூழ்காமல் இருப்பதற்காக முன்னேற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டு இருந்தனர்.

    நன்கு நீச்சல் தெரிந்த வீரர்களும், மீனவர்களும் சிலைகள் கரைக்கப்பட்ட இடங்களில் கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். மெரினா கடற்கரை பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு இருந்தது.

    சென்னை மாநகர் முழுவதும் 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணிகளை கவனித்தார்கள். சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மேற் பார்வையில் கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், நரேந்திரன் நாயர் ஆகியோரும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு இருந்தனர்.

    ஊர்வல பாதைகள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. உயர் போலீஸ் அதிகாரிகள் தாங்கள் இருக்கும் இடங்களில் இருந்து ஊர்வலத்தை கண்காணிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

    இன்று காலை 10 மணியில் இருந்தே விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பல்வேறு இடங்களில் பிற்பகலில் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

    இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த அனைத்து சிலைகளுமே கடைசி நாளான இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

    பாரத் இந்து முன்னணி சார்பில் புளியந்தோப்பு, பட்டாளம் ஆஞ்சநேயர் கோவில் அருகில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பாரத் இந்து முன்னணி மாநில தலைவர் ஆர்.டி. பிரபு ஜி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    இதேபோன்று அனைத்து இந்து இயக்க நிர்வாகிகளும் தங்களது பகுதியில் விநாய கர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். விநாயகர் ஊர் வலம் மற்றும் சிலை கரைப்பை யொட்டி சென்னை மாநகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு இருந்தனர்.

    • மாணவ, மாணவிகள் விநாயகர் போல் வேடமிட்டு விழாவை கொண்டாடி மகிழந்தனர்.
    • முடிவில் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    திருப்பூர்

    திருப்பூர் கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாணவ, மாணவிகள் விநாயகர் போல் வேடமிட்டும் அவரது பிறப்பின் வரலாற்றைக் கூறும் விதமாக நாடகம் நடத்தியும் பாடல்கள் பாடினர்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பொருளாளர் ராதா ராமசாமி , செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன் ,துணைசெயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன் மற்றும் பள்ளி முதல்வர் அனிதா கலந்து கொண்டனர்.

    விழாவின் முடிவில் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    • சதுர்த்தி விழாவையொட்டி நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. குடவரை கோவிலான இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் விழாவையொட்டி தினந்தோறும் மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூதவாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் 6-ம் திருநாளான நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவையொட்டி நேற்று மாலை 4 மணி முதல் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதன் பின்னர் மாலை 5.30 மணிக்கு உற்சவர் வெள்ளி யானை வாகனத்திலும், சண்டிகேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி கோவில் கிழக்கு கோபுர வாசல் பகுதியில் தனித்தனியான சப்பரத்தில் எழுந்தருளினர். பின்னர் மூலவரிடம் இருந்து பூஜிக்கப்பட்ட தந்தத்தை கொண்டு வந்து உற்சவர் அருகே வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு சூரனை வதம் செய்ய புறப்பட்ட கற்பகவிநாயகர் கோவிலை சுற்றி வந்து தெப்பக்குளம் எதிரே அமைக்கப்பட்ட பந்தலில் காட்சியளித்து சூரனை வதம் செய்தார். முன்னதாக சூரனை வதம் செய்ய வந்த கற்பகவிநாயகரை அப்பகுதி பெண்கள் பூக்கோலமிட்டு வரவேற்றனர். சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி காட்டப்பட்டது. 7-ம் நாளான இன்று இரவு மயில் வாகனத்திலும், 8-ம் நாளான நாளை வெள்ளி குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவில் 9-ம் திருநாளான 18-ந்தேதி மாலை தேரோட்டமும் தொடர்ந்துமாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 19-ந்தேதி 10-ம் நாளன்று காலை தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகர் கோவில் திருக்குளத்தில் எழுந்தருளி அங்கு தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் மூலவருக்கு மோதகம் (கொளுக்கட்டை) படையல் செய்யும் நிகழ்ச்சியும், இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நிகழ்ச்சியுடன் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை செட்டியார் மற்றும் காரைக்குடி சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ×