search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரக்கு போக்குவரத்து சேவை"

    • சரக்குகளுடன் தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு முதல் தோணி நேற்று புறப்பட்டது.
    • ஒரு தோணியில் சுமார் 250 முதல் 300 டன் வரை சரக்குகளை ஏற்றமுடியும் என்று கூறப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவுக்கு காய்கறிகள், கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தோணி மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அதுபோல் இலங்கையில் இருந்து பழைய இரும்பு பொருட்கள், பழைய காகிதங்கள் கொண்டு வரப்படுகின்றன.

    பொதுவாக தோணி போக்குவரத்து கடல் சீதோஷண நிலையை கருத்தில் கொண்டு இயக்கப்படுகிறது. அதாவது, செப்டம்பர் முதல் ஏப்ரல் 30-ந்தேதி வரை கடலில் சுமுகமான காலநிலை நிலவுவதால் தோணி போக்குவரத்து நடைபெறும்.

    இந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் கடலில் கொந்தளிப்பு அதிகமாக காணப்பட்டதால் சரக்கு போக்குவரத்து ஒரு மாதம் தாமதமாக தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு கடந்த 1-ந்தேதி முதல் தோணி போக்குவரத்து தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி, கடந்த 1-ந்தேதி மாலத்தீவுக்கு புறப்படும் தோணியில் காய்கறிகள், மண், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள், எந்திர தளவாடங்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றப்பட்டன. அந்த சரக்குகளுடன் தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு முதல் தோணி நேற்று புறப்பட்டது. இதனை தொடர்ந்து மற்றொரு தோணியில் சரக்கு ஏற்றும் பணியும் நடந்து வருகிறது. ஒரு தோணியில் சுமார் 250 முதல் 300 டன் வரை சரக்குகளை ஏற்றமுடியும் என்று கூறப்படுகிறது.

    இதேபோன்று இலங்கைக்கும் சுமுகமான காலநிலை நிலவும் காலங்களில் மட்டுமே தோணி இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்துக்கு கடல் வாணிபத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

    விரைவில் இதற்கான உத்தரவு வர இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இலங்கைக்கும் விரைவில் போக்குவரத்து தொடங்க உள்ளதாக தோணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    • ஒரே நேரத்தில் 42 சரக்கு பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலை கையாள முடியும்.
    • சரக்கு நிலைய நடைமேடை உள்பட பல்வேறு நவீன வசதிகள் ரூ.5 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    மதுரை:

    தேனி ரெயில் நிலையத்தில் சரக்கு போக்குவரத்து சேவையை தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய சரக்கு அலுவலகம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அனைத்து நாட்களிலும் செயல்படும். இங்கு பெட்ரோலிய பொருட்கள், நிலக்கரி தவிர மற்ற பொருட்களை கையாள அனுமதிக்கப்படும். இது மதுரை ரெயில்வே கோட்டத்தின் 19-வது சரக்கு முனையமாகும்.

    இந்த அலுவலகம் முழுமையாக கணினி மயமாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் சரக்கு பார்சல்களை பதிவு செய்வது, வாடிக்கையாளருக்கு பதிவு மூப்பு அடிப்படையில் வழங்குவது, சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது போன்ற தகவல்களை பதிவது, வாடிக்கையாளர்களுக்கு சரக்குகளை பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சி ரசீதுகளை வழங்குவது, சரக்கு ரெயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது போன்ற தகவல்களை அறிவது போன்ற பணிகளை கணிப்பொறி வாயிலாக செயல்படுத்த முடியும்.

    இந்த சேவை மூலம் மதுரை, திண்டுக்கல் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் சரக்குகளை அனுப்ப முடியும். சரக்கு அலுவலக ரெயில் பாதை அருகே சரக்குகளை கையாள 650 மீட்டர் நீளமும், 16.20 மீட்டர் அகலமும் கொண்ட கான்கிரீட் தளம் அமைக்கப் பட்டுள்ளது. இதனால் மழைக் காலங்களிலும் தங்கு தடையின்றி சரக்குகளை கையாள முடியும்.

    இங்கு ஒரே நேரத்தில் 42 சரக்கு பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலை கையாள முடியும். மேலும் சரக்கு போக்குவரத்திற்காக தனி ரெயில் பாதை அமைப்பு உள்ளதால் பயணிகள் ரெயில் போக்குவரத்து தங்கு தடையின்றி நடைபெற வசதி செய்யப்பட்டுள்ளது.

    இங்கு வர்த்தகர்கள் அறை மற்றும் கழிவறை குளியல் அறை வசதியுடன் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு தனித்தனி ஓய்வு அறைகள் அமைக்கப் பட்டுள்ளது. சரக்குகளை லாரிகளில் விரைவாக ஏற்றிச்செல்ல தரமான தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    போதுமான விளக்கு வசதிகளுடன் இரவு நேரத்திலும் சரக்குகளை தடையில்லாமல் கையாள போதுமான மின் விளக்குகள் மற்றும் உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சரக்கு நிலைய நடைமேடை உள்பட பல்வேறு நவீன வசதிகள் ரூ.5 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மதுரை-போடிநாயக்கனூர் மின்மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சரக்குகளை ரெயில் பாதையும் விரைவில் மின்மயமாக்கப்படும்.

    இத்தகவலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    ×