search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முடிதிருத்தும் குத்தகை ஏலம்"

    • அமைப்பினர்கள் ஏலம் நடத்த எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
    • முடிதிருத்தும் குத்தகை ஏலம் தள்ளி வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்து கலைந்து சென்றனர்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அருகே பி.மேட்டுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும். இதையொட்டி இப்பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள் பாரம்பரியமாக பொங்கல் திருவிழாவில் முடிதிருத்தும் தொழில் செய்து வருகிறார்கள்.

    இந்தாண்டு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர் சார்பில் முடி திருத்தும் குத்தகை ஏலத்தை நேற்று நடத்துவது என்று முடிவு செய்து அறிவித்திருந்தார்கள்.

    உள்ளூரில் உள்ள முடி திருத்தும் தொழிலாளர்கள் பாரம்பரியமாக நாங்கள் செய்து வரும் முடி திருத்தும் வேலையை நாங்கள் தான் செய்வோம் என்று இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலருக்கு எதிர்ப்பு தெரிவித்து டெண்டர் ஏலத்தை நடத்தக் கூடாது என்று முடி திருத்தும் தொழிலாளர்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி, பேனர் வைத்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இந்த சமய அற நிலையத்துறை அதிகாரிகள் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு வந்தார்கள். ஏலம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முடி திருத்தும் தொழிலாளர்கள், ஊர் பொதுமக்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் இன்து முன்னணி அமைப்பினர்கள் ஏலம் நடத்த எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

    பாரம்பரியமாக முடி திருத்தும் தொழிலாளிகளுக்கே விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஏலம் நடத்த எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி முடிதிருத்தும் குத்தகை ஏலம் தள்ளி வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்து கலைந்து சென்றனர்.

    முன்னெச்சரிக்கையாக கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைபாண்டி தலைமையில் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 15-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஏலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிந்த பின் ஏலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    ×