search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.1000 கோடியில் புதிய திட்டம்"

    • ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் அர.சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டார்.
    • குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் வரும் 30 ஆண்டு காலங்களுக்கு இங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. அந்த வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடன் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.

    கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் சந்தேகங்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

    அப்போது அமைச்சர் தெரிவித்ததாவது:-

    ஒட்டன்சத்திரத்தில் 500 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, கீரனூரில் 500 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில்தான் நமக்கு நாமே திட்டத்தில் அதிக எண்ணிக்கையில் சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளன.

    திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய சாலைகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒட்டன்சத்திரம், பழனி சட்டமன்ற தொகுதிக்கு காவிரி நீர் ஆதாரத்தைக்கொண்டு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த ரூ.1000 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 180 இடங்களில் மேல்நிலைத் தொட்டிக்கள் கட்டப்படவுள்ளன. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் வரும் 30 ஆண்டு காலங்களுக்கு இங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. அந்த வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் சுற்றுப்பகுதி ஊராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை ஒரு இடத்தில் குவித்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து, அந்த குப்பைகளை மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் விதமாக உரங்கள் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 48 ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பைகளை ஒரு இடத்தில் குவித்து, உரம் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ள இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    ஆறு, குளங்களில் நிலத்தடி நீர் வளத்தை பாதிக்கும் சீமைக்கருவேல மரங்கள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன. உள்ளாட்சி அமைப்பு பிரநிதிகள் தங்கள் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் சீமைக்கருவேல மரங்களை கண்டறிந்து அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டத்தில் 41 பயனாளிகளுக்கும், 16 பூ வியாபாரிகளுக்கும், 26 உணவு வியாபாரிகளுக்கும் என மொத்தம் 83 பயனாளிகளுக்கு ரூ.61 லட்சம் மதிப்பிலான உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.51 லட்சம் மதிப்பில் 7 முதல் நிலை குப்பை சேகரம் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன. மயானம் ரூ.41.10 லட்சம் மதிப்பீட்டில் எரிவாயு மயானமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

    மொத்தம் ரூ.1.53 கோடி மதிப்பீட்டிலான அரசின் திட்டங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, சுகாதாரம் போன்ற அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றிட இந்த அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    ×