search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு திருமஞ்சனம்"

    • மதுரை நோக்கி புறப்பட்டுள்ளார் சுந்தர்ராஜ பெருமாள்.
    • மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள் செய்தார் கள்ளழகர்.

    மதுரை:

    மதுரைக்கு வடக்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் அழகர் கோவிலில் இயற்கை எழிலுடன், வற்றாத நூபுரகங்கையுடன் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற கள்ளழகர் கோவில். இந்த கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா தனி பெருமையுடையதாகும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவானது கடந்த 19-ந்தேதி தொடங்கியது.

    3-ம் நாள் விழாவான நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில், அலங்கரிக்கப்பட்ட தங்கப்பல்லக்கில் கள்ளழகர் கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் நேரிக்கம்பு ஏந்தி எழுந்தருளினார். வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வெளிபிரகாரங்கள் வழியாக மேளதாளம் முழங்க வர்ணக்குடை, தீவட்டி, பரிவாரங்கள், மற்றும் கல்யாணசுந்தரவல்லி யானை முன் செல்ல அழகர் புறப்பாடு நடந்து, 18-ம்படி கருப்பணசுவாமி கோவிலை அடைந்தது.

    அங்கிருந்து மாலை 6.10 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பட்டார். அப்போது கோவிந்தா, கோவிந்தா என முழங்கிய பக்தர்கள் கள்ளழகரை புடை சூழ்ந்து வந்தனர். முன்னதாக தானியங்களையும், பணமுடிப்புகளையும் காணிக்கையாக செலுத்தினர்.

    பொய்கைக்கரைபட்டி, கள்ளந்தரி, அப்பன் திருப்பதி உள்பட பல்வேறு ஊர்களில் மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மொத்தம் 483 மண்டபங்களில் அழகர் எழுந்தருள்கிறார்.

    இந்த நிலையில், அழகர் மலையில் இருந்து புறப்பட்ட கள்ளழகர், இன்று காலையில் மதுரை மாநகருக்குள் வந்தடைந்தார். மாநகரின் எல்லையான மூன்று மாவடி பகுதியில் 'கோவிந்தா' கோஷம் முழங்க எதிர்சேவை செய்து கள்ளழகரை திரளான பக்தர்கள் வரவேற்றனர்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியாக அதிகாலையில் மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரையில் வீற்றிருந்து கள்ளழகர் இறங்குகிறார். இதைக்காண மதுரை உள்பட தென்மாவட்டங்களில் இருந்தும், பிறமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து குவிவார்கள்.

    விழாவில் 24-ந்தேதி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்க்கும் நிகழ்ச்சியும் அன்று இரவு தசாவதார காட்சியும், 26-ந் தேதி அதிகாலை பூப்பல்லக்கு விழாவும் நடைபெற உள்ளன.

    • காஞ்சீபுரத்தில் உள்ள அஷ்டபுஜப் பெருமாள் கோவில் சிறப்பு பெற்றது.
    • 108 திவ்ய தேசங்களில் 75-வது கோவிலாக உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சீபுரத்தில் உள்ள அஷ்டபுஜப் பெருமாள் கோவில் சிறப்பு பெற்றது. 108 திவ்ய தேசங்களில் 75-வது கோவிலாக இது உள்ளது. இங்கு மூலவர் 8 திருக்க ரங்களை உடை யவராகவும், கஜேந்திர மோட்சம் நடந்த சிறப்புக்கு உரிய தலமாகவும் விளங்குகிறது.

     இந்த கோவிலில் கும்பாஷேகம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக யாகசாலை பூஜைகள், சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மூலவர், உற்வசர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்புத் திருமஞ்சனம், பெருமாள் திருவீதி புறப்பாடு ஆகியவை நடைபெற்றது.

    விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆதிகேசவலு, காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல், அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி சாந்தி, அறநிலை யத்துறை உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, உத்திரமேரூர் எம்எல்ஏ.சுந்தர். காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன். காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் திருப்பணி குழு செயலாளர் சுப்பிரமணியன், கவுன்சிலர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திவ்ய பிரபந்தங்களை பாராயணம் செய்தனர்.
    • பெரியஜீயர், சின்னஜீயர் சுவாமிகள் பல்வேறு பாசுரங்களை பாடினர்.

    திருப்பதி:

    பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று மதியம் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணிவரை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீேதவி, பூதேவி, மலையப்பசாமிக்கு விஸ்வக்சேனாராதனம், புண்யாஹவாசனம், தூப தீப நெய்வேத்தியம், ராஜோபசாரம் நடந்தது.

    முதலில் மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தேன், இளநீர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.

    திருமஞ்சனத்தின் போது வேத பண்டிதர்கள் வேதபாராயணங்கள், உபநிடதங்கள், தச சாந்தி மந்திரங்கள், புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நிலசூக்தம், விஷ்ணுசூக்தம் எனப் பஞ்சசூக்த மந்திரங்களை ஓதினர். மேலும் திவ்யப் பிரபந்தங்களை பாராயணம் செய்தனர். பெரியஜீயர், சின்னஜீயர் சுவாமிகள் பல்வேறு பாசுரங்களை பாடினர்.

    உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு பல வண்ணக் கற்களால் தயார் செய்யப்பட்ட கண்ணாடி மாலைகள், ஆப்பிரிக்கட்டு மாலைகள், வெட்டி வேர் மாலைகள், குருவெறு மாலைகள், வண்ணமயமான ரோஜா மாலைகள், மஞ்சள் ரோஜா மாலைகள், பலவகையான உலர் பழங்களால் தயாரிக்கப்பட்ட மாலைகள், வெண்முத்து மாலைகள், கிரீடங்கள், துளசி மாலைகள் ஆகியவற்றை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

    தேவஸ்தான தோட்டத்துறை துணை இயக்குனர் சீனிவாசலு தலைமையில் அனைத்து அலங்காரமும் செய்யப்பட்டது. அலங்காரத்துக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து மாலைகளை தமிழகத்தில் திருப்பூரை சேர்ந்த ராஜேந்தர் காணிக்கையாக வழங்கினார். மேலும் திருமஞ்சனம் நடத்தப்பட்ட ரெங்கநாயக்கர் மண்டபத்தில் பிரத்தியேக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அந்த மண்டபல அலங்காரத்துக்காக சம்பிரதாய பாரம்பரிய மலர்கள், அலங்கார கொய் மலர்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த அலங்கார கணிக்கையை ஐதராபாத்தை சேர்ந்த பக்தர்களான ஸ்ரீஹரி, ஸ்ரீதர், சீனிவாஸ் ஆகியோர் ஏற்றனர்.

    ×