search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை"

    • தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இருந்து வந்தது.
    • தொடக்கக்கல்வித் துறை அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    சென்னை:

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கான அரையாண்டு தேர்வு கடந்த 9-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இடையில் ஃபெஞ்சல் புயல் மழையால் கடந்த 12-ந்தேதி சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

    அந்த நாளில் 6-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆங்கிலத் தேர்வும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கு சில பாடங்களுக்கான தேர்வும் நடத்த முடியாமல் போனது.

    அந்த தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்த நிலையில் அதுதொடர்பான அறிவிப்பை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொடக்கக்கல்வித் துறை அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கடந்த 12-ந்தேதி கனமழையால் விடுமுறை விடப்பட்டு நடத்த முடியாமல் போன அரையாண்டு தேர்வை நாளை (சனிக்கிழமை) நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    6, 7, 8-ம் வகுப்புகளுக்கு மட்டும் சுற்றறிக்கை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், பிற வகுப்புகளுக்கும் வாய்மொழி வாயிலாக உத்தரவு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • வெள்ள பாதிப்பை மத்தியக்குழு ஆய்வு செய்துள்ளது.
    • ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரத்தை தமிழக அரசு சொந்த நிதியில் வழங்க வேண்டும்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மழை,வெள்ள நிவாரணநிதி வேண்டி அனைத்துக்கட்சி குழுவை பிரதமரை சந்திக்க அனுப்பிவைக்க வேண்டும். வெள்ள பாதிப்பை மத்தியக்குழு ஆய்வு செய்துள்ளது. இக்குழு ஆய்வு செய்து 10 நாட்கள் கடந்தும் மத்திய அரசிடம் ஆய்வறிக்கையை அளிக்க வில்லை. எனவே மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மத்தியக்குழு ஆய்வுக்கு பின்னும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாநில பேரிடர் நிவாரண நிதி 946 கோடி ரூபாயில் செலவிடப்பட்டு வருகிறது. மத்திய அரசு நிதி ஒதுக்கும்வரை காத்திருக்க இயலாது. இன்னும் முழுமையான கணக்கெடுப்பை முடித்து விரிவான அறிக்கையுடன் முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி குழு பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்தித்து நிதி வழங்க வலியுறுத்தவேண்டும்.

    விவசாயிகள் மற்றும் கால்நடை உரிமையாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவாகக்கூடிய நிலையில் ரூ.6800 என்பதை ஏற்கமுடியாது. ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரத்தை தமிழக அரசு சொந்த நிதியில் வழங்க வேண்டும். பின் மத்திய அரசு நிதியிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். அறிவிக்கப்பட்ட நிதியைக்கூட மாநில அரசு வழங்க மறுக்கிறது. விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 6 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ 6 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும்.

    தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதாக ஆட்சிக்கு வந்த தி.மு.க.கடன் வாங்குவதிலும், வட்டி கட்டுவதில் முதன்மை மாநிலமாக திக்ழ்கிறது. 8.34 லட்சம் கோடி கடனுடன் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. வட்டி கட்டுவதில் தற்போது ரூ. 54,676 கோடியுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் தமிழக அரசு திவாலாகிவிடும்.


    தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கப்பட உள்ள நிலையில் தமிழ்கட்டாயப்பாடம் என சட்டம்நிறை வேற்றப்பட்டு 19 ஆண்டுகள் கடந்தும் அதை அமல்படுத்த முடியவில்லை. இச்சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் உச்சநீதி மன்றம் சென்றும், இவ்வழக்கை விசாரணைக்கு எடுக்க தமிழக அரசு வலியிறுத்தவில்லை. இது தமிழுக்கு தி.மு.க.செய்யும் துரோகமாகும்.

    தமிழகத்தில் 26 இடங்களில் மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க தமிழக அரசுமுடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது. இந்த மணல் குவாரிகளை திறக்கக்கூடாது. மணலுக்கு மாறாக செயற்கை மணல் மற்றும் இறக்குமதி மணலை கொண்டுவர முயற்சிக்க வேண்டும். தமிழகத்தில் கவுரவ பேராசிரியர்களுக்கு ரூ 25 ஆயிரம் போதுமான தல்ல. ரூ 50 ஆயிரம் வழங்க வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ .6 ஆயிரம் வழங்குவது நியாயமல்ல.

    ஒரேநாடு ஒரே தேர்தல் என நடத்தப்பட்டால் ஒரு மாநிலத்தில் ஆட்சி கவிழும்போது அந்த ஆட்சி சில மாதங்கள் மட்டுமே இருக்கும். இதை பா.ம.க. ஏற்காது. அம்பேத்கரை அமித்ஷா அவமதித்து விட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அனைத்து கட்சிகளும் அம்பேத்கரை போற்றித்தான் ஆகவேண்டும். அவரை கொச்சைபடுத்தியோ, அவமதிப்பதை ஏற்க முடியாது. ஒரே நாளில் 7 அம்பேத்கர் சிலையை நான் திறந்தேன். அம்பேத்கர் இல்லை என்றால்பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்திருக்காது. அம்பேத்கரை விமர்சிப்பதை யாராக இருந்தாலும் ஏற்க முடியாது. மது விலக்கு என்ற துறையை வைத்துக்கொண்டு மது விற்பனையை அதிகரிக்கிறார்கள். அந்த துறையை எடுத்துவிடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெற்பயிர்களில் நுனிக் கருகல் நோய் பரவி உள்ளது.
    • கிராமங்களில் பாதிக்கப்பட்டு உள்ள நெற்பயிர்களை ஆய்வு செய்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர், பொன்னேரி பகுதியில் சுமார் 33 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் பிபிடி-5204 ரகத்தை விவசாயிகள் நடவு செய்து உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த கன மழையால் பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. கோளூர், தேவம்பட்டு, கள்ளுர், மெதுர், திருப்பாலைவனம், தத்தைமஞ்சி, உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வயலில் 1000 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி உள்ளன.

    இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்

    இதற்கிடையே சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு உள்ள நெற்பயிர்களில் நுனிக் கருகல் நோய் பரவி உள்ளது. இது குறித்து விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கலா தேவி, வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) ரமேஷ், வேளாண் அறிவியல் நிலையம் திரூர் முனைவர். சுதாசா, மீஞ்சூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் டில்லி குமார் மற்றும் வட்டார வேளாண்மை அலுவலர்கள் கோளூர், மெதூர் ஆகிய கிராமங்களில் பாதிக்கப்பட்டு உள்ள நெற்பயிர்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது, நெல் பயிரில் அதிகமாக தண்ணீர் தேங்கி உள்ளதால் துத்தநாக சத்து குறைபாடு காரணமாக நுனிகருகல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ யூரியா மற்றும் ஒரு கிலோ ஜிங்க் சல்பேட்டை விசைத்தெளிப்பான் மூலம் தெளிக்குமாறு விவசாயிகளிடம் பரிந்துரை செய்து உள்ளனர்.

    • புதுவை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
    • பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் சேத மடைந்தது.

    விழுப்புரம்:

    புயல் கரையை கடந்து 2 வாரங்கள் ஆகியும் விழுப்புரம் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் வடியவில்லை.

    வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த 30-ந்தேதி புதுவை அருகே கரையை கடந்தது. அப்போது புதுவை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

    புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் சராசரியாக 55 செ.மீ. மழை பெய்தது. விழுப்புரம் நகரில் 63.5 செ.மீ. மழை பெய்தது.

    இதன் காரணமாக விழுப்புரம் புதிய பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் மழை நீர் சூழ்ந்தது. விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் சேத மடைந்தது.

    குறிப்பாக விழுப்புரம் நகரத்திற்குட்பட்ட பெரும்பா லான பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான வீடு களை மழை நீர் சூழ்ந்தது.

    அதில் விழுப்புரம் புறநகர் பகுதியான கிழக்கு பாண்டி சாலையில் உள்ள லிங்கம் நகர், ஆசிரியர் நகர், நேதாஜி நகர், கணபதி நகர் மற்றும் கீழ் பெரும்பாக்கம் பகுதியில் உள்ள பஜனை கோவில் தெரு, பெருமாள்கோவில் தெரு, ஹவுசிங் போர்டு காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கழிவு நீருடன் கலந்த மழை நீர் சுமார் 4 அடி உயரத்துக்கு தற்போதும் தேங்கி உள்ளது.

    இதனால் அப் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். அங்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அப் பகுதி பொதுமக்கள் சிலர் உறவினர்கள் வீடுகளில் தங்கி உள்ளனர்.

    புயல் பாதித்து 2 வாரங்கள் நிறைவடைந்த நிலையில் விழுப்புரம் புறநகர் பகுதியில் வெள்ளம் வடியாததால் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இது குறித்து நகராட்சி அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலக வட்டா ரங்களில் விசாரித்தபோது, ஆசிரியர் நகர், லிங்கா நகர் இடையே உள்ள மாரியம்மன் கோவில் அருகே உள்ள நீர் வழிப்பாதையில் தண்ணீ ரை வெளியேற்ற முடிவெடுத்த போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் சுமார் 800 மீட்டர் நீளத்துக்கு 2 பைப் மூலம் தொடர்ந்த னூர் ஏரியில் நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.அப் பகுதி மக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் நீரை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது என்றனர்.

    • தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இது அடுத்த இரு தினங்களில் மேலும் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

    இதன் காரணமாக வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய 9 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, அடுத்த இரு தினங்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு- வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

    இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகள், குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி காணப்படுகிறது.

    நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    அதனைத் தொடர்ந்து நீர்மட்டமும் கிடுகிடு வென உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 129.30 அடியாக உள்ளது. அணைக்கு 5531 கன அடி நீர் வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் விரைவில் 130 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கடந்த வாரம் குடிநீருக்காக 105 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டது. இதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது கூடுதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் மூலம் 126 மெகாவாட் மீண்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 4547 மி.கன அடியாக உள்ளது.

    அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்திற்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது. மேலும் மூலவைகையாறு உற்பத்தியாகும் வெள்ளிமலை, வருசநாடு, அரசரடி, கடமலைக்குண்டு, கண்டமனூர் பகுதிகளில் பெய்த கனமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 59.02 அடியை எட்டியுள்ளது. விரைவில் 60 அடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அணையில் இருந்து பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 7787 கன அடி நீர் வருகிறது. 3424 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் மீண்டும் 55 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் 665 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியான முழு கொள்ளளவை மீண்டும் எட்டியுள்ளது. வரத்தும், திறப்பும் 665 கன அடி.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 52.50 அடியாக நிரம்பி உள்ளது.அணைக்கு வரும் 45.03 அடி அப்படியே திறக்கப்படுகிறது.

    ஆண்டிபட்டி 15, அரண்மனைபுதூர் 9, வீரபாண்டி 10.8, பெரியகுளம் 31, மஞ்சளாறு 18, சோத்துப்பாறை 21.6, வைகை அணை 17.2, போடி 11.2, உத்தமபாளையம் 7.8, கூடலூர் 15.6, பெரியாறு அணை 0.2, தேக்கடி 6, சண்முகாநதி அணை 8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. 

    • அந்தமான் கடல் பகுதியில் தற்போது வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாகவே நீடிக்கிறது.
    • நாளை மற்றும் 19-ந்தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அந்தமான் கடல் பகுதியில் தற்போது வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாகவே நீடிக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அடுத்த 2 நாட்களில் தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 17, 18-ந்தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    நாளை மற்றும் 19-ந்தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

    • நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.
    • குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து 48 மணி நேரத்தில் தமிழக கடற்கரை நோக்கி நகரும்.

    வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடதமிழகம், தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை காணப்பட்டது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களில் மிக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த தாழ்வு பகுதியானது, தமிழக நிலப்பகுதியை கடந்து லட்சத்தீவு, மாலத்தீவு அருகே நகர்ந்தது. இதனால், நேற்றும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.

    லட்சத்தீவு, மாலத்தீவு அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றும் அதே பகுதிகளில் நிலவியது. இது, இன்று மேற்கு திசையில் நகர்ந்து, வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது, மேலும் வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி, அதற்கடுத்த 2 நாட்களில் நகரும். இதன்காரணமாக, நாளை ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது.

    இந்நிலையில் அந்தமான் கடல் பகுதியில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

    குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து 48 மணி நேரத்தில் தமிழக கடற்கரை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    • ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 16-ம் தேதி கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளது.
    • உ.பி., மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு குளிர் அலைகள் நிலவக்கூடும்.

    தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி 48 மணி நேரத்தில தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் நாளை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 16-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதே சமயம் ஜம்மு காஷ்மீர், லடாக், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு குளிர் அலைகள் நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதுச்சத்திரம் இருந்து திருநின்றவூர் வழியாக செல்லும் வாகனங்கள் பூந்தமல்லி சென்று செல்கின்றனர்.
    • திருவள்ளூர் மாவட்டத்தில் 581 ஏரிகள் உள்ளன.

    திருவள்ளூர்:

    வேலுார் மாவட்டத்தில், தக்கோலம் வழியாக வரும் கல்லாறு, திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு என இரு ஆறுகளாக பிரிகிறது.

    கேசாவரம் அணைக் கட்டில் நீர் நிரம்பினால் நேரடியாக கொசஸ்தலை ஆற்றில், செல்லும் நீர் பூண்டி ஏரிக்கு செல்கிறது.

    இந்த அணைக்கட்டில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையில் தற்போது அணைக்கட்டில் மழைநீர் நிரம்பி நீர் வெளியேறி வருவதால் கொசஸ்தலை, கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதேபோல் இந்த அணைக்கட்டின் இன்னொருபுறம் அமைக்கப்பட்ட 16 ஷட்டர்கள் வழியாக செல்லும் நீர் கூவம் ஆறாக மாறி பேரம்பாக்கம், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம் வழியாக ஜமீன் கொரட்டூர், பருத்திப்பட்டு, மதுரவாயல், கோயம்பேடு வழியாக 75 கிலோ மீட்டர் சென்று நேப்பியர் பாலம் அருகே வங்க கடலில் கலக்கும்.

    இந்நிலையில் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை புதுச்சத்திரம் கூவம் ஆற்றின் நடுவே உள்ள புதுச்சத்திரம் தரைப்பாலம் முழ்கி நீர் செல்வதால் புதுச்சத்திரம் இருந்து திருநின்றவூர் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் புதுச்சத்திரம் இருந்து திருநின்றவூர் வழியாக செல்லும் வாகனங்கள் பூந்தமல்லி சென்று செல்கின்றனர். இதேபோல் திருநின்றவூரில் இருந்து புதுச்சத்திரம் வரும் வாகனங்கள் திருவள்ளுவர் வந்து செல்கின்றன.

    வாகனங்கள் 20 கி.மீ, துாரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 581 ஏரிகள் உள்ளன. இதில் 311 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. மேலும் 75 சதவீதமும், 185 ஏரிகள் 50 சதவீதமும், 67 ஏரிகள் 25 சதவீதம் 18 ஏரிகள் நிரம்பியுள்ளன.

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு வாணியாறு நீர்த்தேக்க பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது.
    • போலீசார் வரவழைக்கப்பட்டு இரும்பு தடுப்பு வேலி மூலம் போக்குவரத்து தடுத்து நிறுத்தப்பட்டது.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தொடர் மழை காரணமாக பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தென்கரைக்கோட்டை ஏரி நிரம்பிய நிலையில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் பாதுகாப்புக் கருதி போக்குவரத்து நிறுத்தம் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு ஏரியை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தென்கரைக்கோட்டை ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 107 ஏக்கர் பரப்பளவில் 13 மில்லி கன அடி தண்ணீர் தேக்கி வைக்கவும், 20 அடி உயரத்தைக் கொண்டது.

    ஃபெஞ்சல் புயல் மூலமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வாணியாறு நீர்த்தேக்க பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதனால் வாணியாறு அணை அதன் முழு கொள்ளளவான 63.30 அளவை எட்டியது. தற்போது அணைக்கு 375கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்புக்கு கருதி தினமும் 1125 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதன் மூலம் வெங்கட சமுத்திரம் ஏரி, ஆலாபுரம் ஏரி, பறையப்பட்டி ஏரி நிரம்பி வாணியாற்று நீர் தற்போது தென்கரைக் கோட்டை ஏரியின் முழு அளவை எட்டியுள்ளது.

    இதை அடுத்து திடீரென நேற்று அணையின் கிழக்குப் பகுதியில் சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு திடீரென விரிசல் ஏற்பட்டது. இதை அறிந்த அப்பகுதி கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில்அரூர் கோட்டாட்சியர் சின்னசாமி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி, கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஏரி பகுதிக்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டு தீவிர பாதுகாப்பு பணியை எடுக்க தொடங்கினர்.

    அதன்படி உடனடியாக ராமியமபட்டி- ஏ. பள்ளிப்பட்டி நெடுஞ்சாலை உடனடியாக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது,

    போலீசார் வரவழைக்கப்பட்டு இரும்பு தடுப்பு வேலி மூலம் போக்குவரத்து தடுத்து நிறுத்தப்பட்டது, அந்த வழியாக பொதுமக்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

    மேலும் உடனடியாக ஏரியில் தாழ்வான பகுதியில் உள்ள விவசாயிகள், கால்நடைகள், பொதுமக்கள் குடியிருப்புகளில் இருந்து வெறியேற்றப்பட்டனர். அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    தென்கரைக்கோட்டை ஏரியில் பாதுகாப்புக் கருதி ஏரிக்கு வரும் நீர் பெருமளவு உபர் வெளியேற்றும் கால்வாய் வழியாக சில அடைப்புக்களை எடுத்து விட்டு கல்லாற்றில் தண்ணீர் அனுப்பப்பட்டு அரூர் ஏரிக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    பொதுப்பணித் துறையினர் விரிசலை தடுக்கும் பொருட்டு உடனடியாக 500-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை தயார் செய்து ஏரியில் விரிசல் பகுதியில் அடுக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    தென்கரைக்கோட்டை ஏரியில் விரிசல் ஏற்பட்டு உள்ளது என்ற செய்தி காட்டுத் தீயாக இந்தப் பகுதியில் பரவியதால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

    ×