என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி நதிநீர்"

    • தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு திறந்துவிடும் தண்ணீரை நாளுக்கு நாள் குறைத்து வந்தது.
    • காவிரி கடைமடை பகுதிகளுக்கு போதிய தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி பயிர்கள் அனைத்தும் காய்ந்து கிடக்கின்றன.

    சென்னை:

    காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின்படி செப்டம்பர் 12-ந்தேதி வரை 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த தண்ணீர் போதாது என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இதேபோல் கர்நாடக அரசு முறையிட்டு உள்ளது.

    இந்நிலையில் தமிழ் நாட்டுக்கு கர்நாடக அரசு திறந்துவிடும் தண்ணீரை நாளுக்கு நாள் குறைத்து வந்தது.

    கடந்த 3 நாட்களில் தண்ணீர் திறப்பதை 3 ஆயிரம் கனஅடியாக கர்நாடக அரசு குறைத்துவிட்டது.

    இது தமிழக அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி கர்நாடக அரசு நடந்து கொள்வதால் வருகிற 12-ந் தேதி காவிரி நதிநீர் ஒழுங் காற்று குழுவில் தமிழக அரசு புகார் அளிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காவிரி கடைமடை பகுதிகளுக்கு போதிய தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி பயிர்கள் அனைத்தும் காய்ந்து கிடக்கின்றன.

    இந்த சூழலில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை முழுமையாக திறந்துவிடாமல் தினமும் குறைத்துக் கொண்டே வருகிறது. சனிக்கிழமை காலை கே.ஆர்.எஸ். மற்றும் கபினி நீர்த்தேக்கங்களில் இருந்து தமிழகத்துக்கு 2787 கனஅடி வீதம் தண்ணீர்தான் கர்நாடக அரசு திறந்துவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணை 21-ந்தேதிக்கு தான் வருகிறது.

    இந்நிலையில் திறந்து விடப்படும் தண்ணீரை மேலும் கர்நாடக அரசு குறைத்து வருவதால் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் வருகிற 20-ந்தேதி டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

    தமிழக அரசு காவிரி ஒழுங்காற்று குழுவில் முறையிட இருப்பதால் அதற்கு பதிலளிக்கும் வகையில் கர்நாடக அரசும் விரிவான விளக்கத்தை தயாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
    • காவிரி மேலாண்மை வாரியம் 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட உத்தரவு

    காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக கர்நாடக மாநிலம்- தமிழ்நாடு இடையே பிரச்சனை இருந்து வருகிறது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    அதேவேளையில், வழக்கமான நடைமுறையின்படி தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்கக் கூடாது. கர்நாடக அணைகளில் தண்ணீர் மோதுமான அளவில் இல்லை என கர்நாடக அரசு தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தின்போது, தமிழ்நாட்டிற்கு திறந்து விட தண்ணீர் இல்லை என்ற கருத்தை வலியுறுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

    முன்னதாக,

    காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின்படி செப்டம்பர் 12-ந்தேதி (இன்று) வரை 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த தண்ணீர் போதாது என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இதேபோல் கர்நாடக அரசு முறையிட்டு உள்ளது. இந்நிலையில் தமிழ் நாட்டுக்கு கர்நாடக அரசு திறந்துவிடும் தண்ணீரை நாளுக்கு நாள் குறைத்து வந்தது.

    கடந்த சில நாட்களில் தண்ணீர் திறப்பதை 3 ஆயிரம் கனஅடியாக கர்நாடக அரசு குறைத்துவிட்டது. இது தமிழக அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி கர்நாடக அரசு நடந்து கொள்வதால் இன்று நடைபெற காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவில் தமிழக அரசு புகார் அளிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காவிரி கடைமடை பகுதிகளுக்கு போதிய தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி பயிர்கள் அனைத்தும் காய்ந்து கிடக்கின்றன. இந்த சூழலில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை முழுமையாக திறந்துவிடாமல் தினமும் குறைத்துக் கொண்டே வருகிறது.

    கடந்த சனிக்கிழமை காலை கே.ஆர்.எஸ். மற்றும் கபினி நீர்த்தேக்கங்களில் இருந்து தமிழகத்துக்கு 2787 கனஅடி வீதம் தண்ணீர்தான் கர்நாடக அரசு திறந்துவிட்டது.

    • குடிநீருக்கு சேமித்து வைக்காமல் தண்ணீரை திறந்த விட முடியாது
    • தற்போது உள்ள தண்ணீர் குடிநீர் பயன்பாட்டிற்கே போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது

    காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் கர்நாடகா- தமிழ்நாடு அரசுகள் இடையில் பிரச்சனை இருந்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் இன்று வரை வினாடிக்கு ஐந்தாயிரம் கனஅடி நீர் திறந்துவிட உத்தரவிட்டது. அதையும் முழுமையாக கர்நாடகா செயல்படுத்தவில்லை. கடந்த சனிக்கிழமையில் இருந்து திறந்து விடும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

    இன்று காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு டெல்லியில் கூடுகிறது. தமிழக அரசு இதில் கர்நாடகா மீது புகார் அளிக்க இருக்கிறது. இதற்கிடையே தண்ணீர் திறந்து விட முடியாது எனக் கூற கர்நாடகா முடிவு செய்துள்ளது.

    இந்த நிலையில் இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார் திட்டவட்டாக தெரிவித்துள்ளார். தற்போது உள்ள தண்ணீர் குடிநீர் பயன்பாட்டிற்கே போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குடிநீருக்கு சேமித்து வைக்காமல் தண்ணீரை திறந்த விட முடியாது'' எனத் தெரிவித்துள்ளார்.

    • மாண்டியாவில் 9 நாட்களாக பல்வேறு விவசாய சங்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
    • தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டதற்கு கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    சேலம்:

    கர்நாடகத்தில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையவில்லை. இதனால் கர்நாடக அரசு கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விடவில்லை.

    இதனால் கடந்த மாதம் 29-ந்தேதி முதல் 15 நாட்களுக்கு (12-ந்தேதி வரை) தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

    அதன்படி கடந்த மாதம் 29-ந்தேதி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 293 கன அடி நீர் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் என மொத்தம் 4 ஆயிரத்து 293 கன அடி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. அதன்பிறகு 30-ந்தேதி முதல் கடந்த 7-ந்தேதி வரை 9 நாட்கள் சராசரியாக வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்டியாவில் 9 நாட்களாக பல்வேறு விவசாய சங்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்றன.

    இந்த நிலையில் கர்நாடகத்தில் காவிரி படுகையில் உள்ள அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் 8-ந்தேதி தண்ணீர் திறப்பை கர்நாடக அரசு நிறுத்தியது. குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடுகிறது. நேற்று கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 1,678 கன அடி உபரிநீர், கபினி அணையில் இருந்து 1,100 கன அடி நீர் என மொத்தம் 2,778 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

    தொடர்ந்து இன்று கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 1,684 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 97.74 அடியாகவும், நீர்வரத்து 2741 கன அடியாகவும் உள்ளது. கபினி அணையில் இருந்து 1,100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 76.08 அடியாகவும், நீர்வரத்து 4,605 கன அடியாகவும் உள்ளது.

    இந்த அணைகளில் இருந்து திறந்து விடப்படுகிற தண்ணீர் முழுவதும் முறையாக தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு பகுதிக்கு வந்து சேருகிறதா? என மத்திய நீர்வளத்துதுறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தண்ணீர் முழுவதும் தமிழக எல்லைக்கு வந்து சேருவது கடினம்.

    மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து 670 கன அடியாக இருந்த நிலையில் இன்று வெகுவாக சரிந்து வினாடிக்கு 392 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 45.90 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 45.01 அடியாக சரிந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் மேலும் குறைந்து 44.06 அடியானது. நீர்மட்டம் தினமும் 1 அடி வீதம் குறைந்து வருவதால் தமிழக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று டெல்லியில் நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக அரசு காவிரி படுகையில் உள்ள அணைகளில் நீர் இருப்பை சுட்டிக்காட்டி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில், காவிரியில் மேலும் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இன்று தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 5ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படவில்லை.

    தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டதற்கு கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை கண்டித்து மாண்டியாவில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். விவசாய சங்கத்தினர் நேற்று மாலை பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை நடுவே டயர்களை கொளுத்திப்போட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஸ்ரீரங்கப்பட்டணாவில் விவசாயிகள் காவிரி ஆற்றுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட தொடங்கி உள்ளதால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    • கடந்த சில தினங்களாக காவிரி நதியில் தண்ணீர் திறந்து விடும் அணைகளில் முழுமையாக தண்ணீர் நிறுத்தப்பட்டது.
    • தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டதற்கு கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள குறுவை சாகுபடி பயிர் தண்ணீர் கிடைக்காமல் காய்ந்து வருகின்றன.

    பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள குறுவை சாகுபடியை காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகாவை தமிழகம் கேட்டுக்கொண்டது. ஆனால் தண்ணீர் இல்லை என்று கூறி கர்நாடகா தண்ணீர் தர மறுத்தது.

    இதையடுத்து காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

    அதன்பேரில் காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டம் கடந்த மாதம் 29-ந்தேதி நடத்தப்பட்டது. தமிழகம், கர்நாடகாவின் கருத்தை கேட்ட அந்த குழு 15 நாட்களுக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது.

    காவிரி ஆணையம் உத்தரவிட்டதால் வேறு வழியின்றி கர்நாடகா அரசு அணைகளில் இருந்து தண்ணீரை திறந்தது. ஆனால் இதை எதிர்த்து கர்நாடகா விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் கர்நாடகா அரசு கடந்த 8-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கும் அளவை குறைத்தது.

    கடந்த சில தினங்களாக காவிரி நதியில் தண்ணீர் திறந்து விடும் அணைகளில் முழுமையாக தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை நீர் மட்டம் மளமளவென குறைந்தது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையில் 44 அடி தண்ணீர்தான் உள்ளது.

    இந்த நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் திருச்சி காவிரி வடிநீர் கோட்ட தலைமை பொறியாளர் எம்.சுப்பிரமணி, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் பேசுகையில், கர்நாடகம் இதுவரை 61 டி.எம்.சி. தண்ணீர் நிலுவை வைத்துள்ளது. எனவே குறுவை சாகுபடியை காப்பாற்ற தினமும் 15 ஆயிரம் கன அடி தண்ணீரை மேலும் 15 நாட்களுக்கு திறந்து விட உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    இதை கர்நாடகா பிரதிநிதிகள் ஏற்கவில்லை. அணைகளில் போதுமான தண்ணீர் இல்லாததால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட இயலாது என்று தெரிவித்தனர். ஆனால் அதை காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு உறுப்பினர்கள் ஏற்கவில்லை.

    தமிழகத்துக்கு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கூறியது. இது கர்நாடகாவுக்கு விடுக்கப்பட்ட பரிந்துரை அல்ல உத்தரவு என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு தலைவர் வினீத்குப்தா தெரிவித்தார்.

    கர்நாடகாவின் அறிவிப்புகளுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்தார். தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கும் கர்நாடக அரசின் முடிவை ஏற்க இயலாது. காவிரியில் உரிய தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    இந்த நிலையில், காவிரியில் மேலும் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இன்று தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 5ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படவில்லை.

    தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டதற்கு கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை கண்டித்து மாண்டியாவில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். விவசாய சங்கத்தினர் நேற்று மாலை பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் சாலை நடுவே டயர்களை கொளுத்திப்போட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஸ்ரீரங்கப்பட்டணாவில் விவசாயிகள் காவிரி ஆற்றுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட தொடங்கி உள்ளதால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீர் பெற வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. வருகிற 21-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் மனு மீது விசாரணை நடக்க உள்ளது. அப்போது குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தர விடும்படி தமிழகம் வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
    • காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் நடக்கிறது.

    புதுடெல்லி:

    காவிரி பிரச்சினை மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

    இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் வருகிற 18-ந்தேதி கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இந்த கூட்டம் நடக்கிறது. இதில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

    • தமிழக அரசின் அவசர மனு மீதான விசாரணை வருகிற 21-ந் தேதி நடக்கிறது.
    • அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    புதுடெல்லி:

    கர்நாடக அணைகளில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் திடீரென கர்நாடக அரசு தண்ணீரை நிறுத்தி விட்டது.

    இந்த நிலையில் 2-வது கட்டமாக 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு திறந்து விட காவிரி ஒழுங்காற்று குழு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

    மேலும் அனைத்து கட்சி அவசர ஆலோசனை கூட்டமும் நடந்தது. இதில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கூறிவிட்டனர். மேலும் இது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக அரசின் நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ் சிங் கடிதம் எழுதினார்.

    இதனிடையே தமிழக அரசின் அவசர மனு மீதான விசாரணை வருகிற 21-ந் தேதி நடக்கிறது. எனவே அதற்கு முன்னதாகவே காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலமாகவே நீர் பங்கீட்டு விவகாரத்தை தீர்த்துக்கொள்ள கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

    இதையடுத்து மத்திய மந்திரி கஜேந்திர சிங்கின் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நாளை (18-ந்தேதி) நடைபெறும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் அறிவித்துள்ளார்.

    தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகம் மறுப்பு தெரிவித்து உள்ள நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நாளை நடைபெறுவதால் அதில் தமிழகத்தின் நிலை குறித்து அதிகாரிகள் எடுத்து கூறுவார்கள்.

    சமீப காலமாக தமிழக எல்லையில் பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு ஓரளவு நீர்வரத்து அதிகரித்தப்படி உள்ளது.

    நேற்று காலையில் 2,047 கன அடியாக இருந்த நீர்வரத்து சற்று அதிகரித்து இன்று காலையில் 2,244 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று காலையில் 41.76 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 41.05 அடியாக சரிந்தது. அணையில் 12.6 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. இதில் 6 டி.எம்.சி. தண்ணீர் குடிநீர் மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும்.

    எனவே அணையில் இருந்து இன்னும் 6 நாட்களுக்கு மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும். மேலும் சம்பா, தாளடி சாகுபடிக்கு ஜனவரி 28-ந் தேதி வரை 205.06 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். இதில் மேட்டூர் அணையில் இருந்து 108.50 டி.எம்.சி.யும், 97 டி.எம்.சி.நீர் மழை மற்றும் நிலத்தடி நீரின் மூலமும் பெறப்படுகிறது. எனவே தற்போது அணையில் தண்ணீர் இல்லாததால் சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கு தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளது.

    • கர்நாடக மாநில அரசு ஒரு சொட்டு தண்ணீர் கூட, காவிரி நதிநீர் ஆணையம் கூறியபடி திறந்து விடவில்லை.
    • காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம், கண்ணை மூடிக்கொண்டு எதுவும் சொல்லவில்லை.

    ஆலந்தூர்:

    காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு, தமிழ்நாட்டுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்று தரக்கோரி, தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவினர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லி சென்று இன்று மாலை, மத்திய நீர்வளத்துறை மந்திரியை சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.

    இதற்காக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக அமைச்சர் துரைமுருகன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் கர்நாடக அரசை, தமிழ்நாட்டிற்கு உடனடியாக 5,000 கன அடி நீரை திறந்து விட உத்தரவிட்டிருந்தது. ஆனால் கர்நாடக மாநில அரசு ஒரு சொட்டு தண்ணீர் கூட, காவிரி நதிநீர் ஆணையம் கூறியபடி திறந்து விடவில்லை. காவிரி நதிநீர் ஆணையத்தை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய அரசுதான் அமைத்தது.

    எனவே இப்போது மத்திய அரசிடம் முறையிட, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் குழு டெல்லி செல்கிறது. இன்று மாலை டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, கர்நாடக மாநில அரசு, தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விடக் கோரி வலியுறுத்த இருக்கிறோம்.

    காவிரி தண்ணீர் விவகாரத்தில், கர்நாடகா மாநில அரசு ஒவ்வொன்றுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றத்தின் தயவை நாடிதான், கர்நாடக மாநிலத்திடம் இருந்து, தமிழ்நாடு தண்ணீரை பெற்று வருகிறது. இது நியாயமானது அல்ல என்பது என் கருத்து.

    கர்நாடகா காவிரியில் தண்ணீர் இல்லை என்று கூறுகிறது. நாம் தண்ணீர் இருக்கிறது என்று கூறுகிறோம். ஆனால் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம், கண்ணை மூடிக்கொண்டு எதுவும் சொல்லவில்லை. அவர்கள் கர்நாடக மாநிலத்திற்கு சென்று ஆய்வு நடத்தி விட்டு, அங்கு தண்ணீர் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு தான், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடும்படி கூறியிருக்கிறார்கள். எனவே கர்நாடகா தண்ணீர் இல்லை, வறட்சி நிலவுகிறது என்று பொய்யான காரணத்தை கூறுகிறது. இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார். இதே விமானத்தில் இந்தக் குழுவில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி.யும் சென்றார். இந்தகுழுவில் உள்ள மற்ற எம்பிக்கள் ஏற்கனவே டெல்லி சென்றுவிட்டனர்.

    • காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்து விட கர்நாடக அரசை வலியுறுத்த அறிவுறுத்தினர்.
    • தண்ணீர் விடும் எண்ணம் கர்நாடக அரசுக்கு இல்லை.

    புதுடெல்லி:

    கர்நாடக அரசு, காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு போக்கு காட்டி வருகிறது. இந்த செயலை எதிர்த்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசனைப்படி தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை மற்றும் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை.

    இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்களும் ஒன்றிணைந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்திக்க முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழக எம்.பி.க்கள் குழு இன்று சந்தித்தது.

    இந்த சந்திப்பின்போது, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்து விட கர்நாடக அரசை வலியுறுத்த அறிவுறுத்தினர்.

    தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீர் பங்கீட்டை முறையாக திறந்துவிட கர்நாடகா அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

    டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் மத்திய அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.

    இதைத்தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தண்ணீர் இருந்தும் கொடுப்பதற்கு கர்நாடக அரசு மறுக்கிறது. தண்ணீர் விடும் எண்ணம் கர்நாடக அரசுக்கு இல்லை.

    தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும். காவிரி விவகாரத்தில் மத்திய அரசு என்ன செய்ய போகிறது என மத்திய அமைச்சரை சந்தித்து கேட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 7 ஆயிரத்து 7 கன அடியாக உள்ளது.
    • ஒகேனக்கல் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது.

    சேலம்:

    காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.

    இதையொட்டி காவிரி மேலாண்மை அவசர கூட்டம் டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹால்தார் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் சந்தீப்சக்சேனா தலைமையில் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    ஆனால் கர்நாடகா தரப்பில் அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை. இதில் தமிழக அதிகாரிகள் தரப்பில் 12 ஆயிரத்து 500 கன அடி வீதம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்தினர். ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

    இதைத்தொடர்ந்து ஆணைய தலைவர் ஹல்தார் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தபடி தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் கர்நாடகாக தண்ணீர் திறக்குமா? என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகளிடையே எழுந்தது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 7 ஆயிரத்து 7 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 2 ஆயிரத்து 171 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 97.06 அடியாக உள்ளது.

    கபினி அணைக்கு இன்று காலை நீர்வரத்து 3 ஆயிரத்து 525 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 1663 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 76.18 அடியாக உள்ளது.

    2 அணைகளில் இருந்தும் நேற்று தண்ணீர் திறப்பு 2 ஆயிரத்து 769 னஅடியாக இருந்த நிலையில் இன்று காலை 3 ஆயிரத்து 834 கன அடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. தற்போது அந்த பகுதிகளில் மழை குறைந்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் நேற்று முதல் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று காலை 2 ஆயிரத்து 556 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து 2 ஆயிரத்து 844 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கடந்த சில நாட்களாக காவிரியில் 6 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 40.38 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 39.75 அடியாக சரிந்தது.

    இனி வரும் நாட்களில் நீர்வரத்து சரியும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • காவிரியில் இருந்து மொத்தம் 107 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்பட வேண்டும்.
    • கர்நாடகம் நினைத்திருந்தால் நேற்றே திறந்து விட்டிருக்கலாம். அவர்களுக்கு தண்ணீர் திறந்து விடும் எண்ணம் கிடையாது.

    புதுடெல்லி:

    தமிழகத்துக்கு தேவையான காவிரி நீரை திறந்து விட கர்நாடக அரசு மறுத்து வருகிறது.

    அதுமட்டுமின்றி காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் கர்நாடக அரசு முறையாக செயல்படுத்தவில்லை.

    காவிரியில் இருந்து மொத்தம் 107 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்பட வேண்டும். இந்த நீர் வராததால் டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் காய்ந்து கிடக்கிறது.

    இதனால் தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்கள் 12 பேர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்திக்க நேற்று டெல்லி சென்று இருந்தனர்.

    நேற்று மாலை 4 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் மத்திய மந்திரியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரதமரை பார்க்க மத்திய மந்திரி சென்று விட்ட காரணத்தால் எம்.பி.க்கள் குழுவினர் நேற்று சந்திக்கவில்லை.

    இதனால் இன்று காலையில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் குழுவினர் 12 பேர் மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனாவும் உடன் சென்றிருந்தார்.

    மத்திய மந்திரியை சந்தித்த பிறகு அமைச்சர் துரைமுருகன் நிருபர்களை சந்தித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- மத்திய மந்திரி ஷெகாவத்தை சந்தித்தீர்களே? என்ன சொன்னார்?

    பதில்:- வழக்கமான சந்திப்புதான். கர்நாடகாவில் தண்ணீர் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டுக்கு தர மறுக்கிறார்கள்.

    காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டும் காவிரியில் தண்ணீர் தர மறுக்கிறார்கள். கர்நாடகாவில் கிட்டத்தட்ட 54 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருக்கிறது. ஆங்காங்கே சின்னசின்ன அணையை கட்டி கே.ஆர்.சாகர் வரும் முன்பே தண்ணீரை தேக்கி வைத்து உள்ளனர்.

    காவிரி நீர் ஒழுங்காற்று குழு 13-ந்தேதி 12,500 கனஅடி கொடுக்கலாம் என்று அவங்களே சொன்னார்கள். ஆனால் 5 ஆயிரம்தான் காவிரி மேலாண்மை ஆணையம் கொடுக்க சொல்லி உள்ளது. 5 ஆயிரம் சொன்னாலும் நேற்று கூட 3,500 கனஅடி தான் திறந்து விடப்பட்டு உள்ளது.

    கர்நாடகம் நினைத்திருந்தால் நேற்றே திறந்து விட்டிருக்கலாம். அவர்களுக்கு தண்ணீர் திறந்து விடும் எண்ணம் கிடையாது. அதனால் மத்திய அரசு என்ன செய்ய போகிறீர்கள் என கேட்க வந்தோம். நாங்கள் அணையை முழுவதும் திறந்து விடுங்கள் என்று கேட்கவில்லை.

    தண்ணீரை எப்படி பங்கீட்டு கொள்ள வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழி சொல்லி உள்ளது. அதன்படி கூட தண்ணீர் தரவில்லை. அதனால் நாங்கள் அப்பீல் செய்தோம். எனவே காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு கண்டிப்பான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். ஆனால் நாங்கள் வந்தாலும் ஒரு மனுவை வாங்குகிறீர்கள். அவர்கள் வந்தாலும் ஒரு மனுவை வாங்கி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். இதுதான் எங்களுடைய கொடுமை என்றோம்.

    உடனே மத்திய மந்திரி ஒழுங்காற்று குழு சேர்மனை கூப்பிட்டு கேட்டார். அவர் ஒரு கணக்கு சொன்னார். 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் தான் தர முடியும் என்று கூறினார். கர்நாடகாவில் குடிநீருக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவித்தார். எவ்வளவுதான் குடிநீருக்கு கொடுப்பது.

    ஏற்கனவே நாங்கள் நடுவர் மன்றத்தில் வாங்கியதில் 17 டி.எம்.சி. சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்த பிறகு அதுவும் குறைந்து விட்டது. அதற்கு பிறகும் குடிநீர் என்றால் எப்படி? உடனே நாங்கள் சொன்னோம், எங்களுக்கும் பல பகுதிகளில் குடிநீர் மையமாக உள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பகுதியான இடங்கள் காவிரி நீரை குடிநீராக பயன்படுத்துகிறார்கள். இப்போது கிராமங்களில் குடிநீர் பிரச்சினை தலை விரித்து ஆடுகிறது என்று சொன்னோம்.

    உடனே மத்திய மந்திரி நாங்கள் என்ன செய்வது என்றார். அப்படியானால் மத்திய அரசு எதற்கு இருக்கிறது என்று கேட்டோம். மத்திய அரசு நடவடிக்கை இல்லை என்றால் சுப்ரீம் கோர்ட்டுக்கு போகிறோம் என்று கூறி உள்ளோம்.

    சுப்ரீம் கோர்ட்டு என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

    கேள்வி:- சுப்ரீம் கோர்ட்டில் என்ன வாதங்கள் வைக்கப்படும்?

    பதில்:- இதுபோன்ற வாதங்கள் காவிரி நீர் ஒழுங்காற்று குழு தந்துள்ள புள்ளி விவரங்கள் படி தண்ணீர் தாருங்கள் என்கிறோம். 12,500 கனஅடி தண்ணீர் கொடுக்க வேண்டும் என கூறியபடி கேட்கிறோம்.

    நாங்கள் சேர்மனிடம் கேட்டோம், நீங்கள் இங்கிருந்து உட்கார்ந்து கொண்டு சொல்கிறீர்களா? அல்லது உங்க ஆட்கள் அங்கு மானிட்டர் செய்கிறார்களா? என கேட்டேன். அதற்கு அவர் எங்க ஆட்கள் மானிட்டர் செய்கிறார்கள் என்று கூறினார்.

    கேள்வி:- மத்திய மந்திரி கடைசியாக என்ன பதில் கூறினார்?

    பதில்:- கர்நாடகம் தண்ணீர் இல்லை என்று சொன்னாலும் நாங்கள் தமிழ்நாட்டுக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட சொல்லி உள்ளோம் என்றார்.

    நாங்களும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு வருவதால் அதுவரையாவது 5 ஆயிரம் கனஅடி திறந்து விடுங்கள் என்றோம்.

    கேள்வி:- மத்திய மந்திரி கர்நாடகம் இந்த விவகாரத்தில் நடந்து கொள்ளும் விதம் சரி என்று மத்திய மந்திரி நினைக்கிறாரா? அல்லது தவறு என நினைக்கிறாரா?

    பதில்:- அவர் என்ன நினைக்கிறார் என தெரியவில்லை. ஆனால் நீங்கள் இந்த விஷயத்தில் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நான் மத்திய மந்திரியிடம் தெரிவித்தேன்.

    கேள்வி:- கர்நாடக முதல்-மந்திரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட பேசுவதாக உங்களுக்கு உறுதிமொழி கொடுத்து உள்ளரா?

    பதில்:- அந்த மாதிரி உறுதிமொழி எதுவும் கொடுக்கவில்லை.

    கேள்வி:- மத்திய மந்திரி முடிவாக என்னதான் சொன்னார்?

    பதில்:- தண்ணீருக்கு சொல்லி உள்ளது கொடுத்திருக்காங்க மழை வந்தால் பார்க்கலாம் என்றார்.

    கேள்வி:- காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண 'ராசிமணல்' அணை கட்டப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கை உள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியவில்லையே.

    பதில்:- அதுக்கும் இதுக்கும் சம்பந்தப்படுத்தாதீர்கள். அந்த கதையே இப்போது வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கபினி அணைக்கு இன்று காலை நீர்வரத்து 3 ஆயிரத்து 166 கன அடியாக இருந்தது.
    • கர்நாடக-தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    சேலம்:

    காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது.

    இதையொட்டி காவிரி மேலாண்மை அவசர கூட்டம் டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இக்கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தபடி தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதனால் கர்நாடகா தண்ணீர் திறக்குமா? என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகளிடையே எழுந்தது.

    ஆனால் கர்நாடக அரசு முறைப்படி 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கவில்லை. ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி திறந்து விட வேண்டும் என கூறியும் தண்ணீர் திறந்து விடவில்லை. தற்போது 2-வது முறையாக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி உத்தரவிட்டும் கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை.

    இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 6 ஆயிரத்து 16 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 2 ஆயிரத்து 674 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 97.08 அடியாக உள்ளது.

    கபினி அணைக்கு இன்று காலை நீர்வரத்து 3 ஆயிரத்து 166 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 2000 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று இந்த அணையில் இருந்து 1,663 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 75.97 அடியாக உள்ளது.

    2 அணைகளில் இருந்தும் நேற்று தண்ணீர் திறப்பு 3 ஆயிரத்து 834 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை 4 ஆயிரத்து 674 கன அடியாக தண்ணீர் திறப்பு அதிகரித்து கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளது.

    இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    ×