என் மலர்
நீங்கள் தேடியது "புனிதநீராடல்"
- காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனிதநீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
- பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபட்டனர்.
தஞ்சாவூர்:
ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய 3 அமாவாசைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாகும்.
இந்த நாட்களில் மூதாதையர்கள் பூமிக்கு வருவதாக ஐதீகம். இந்த சமயத்தில் அவர்களை வரவேற்று திதி, நீர்க்கடன் செய்ய வேண்டும். இதனால் அவர்களது ஆசி கிடைத்து குடும்பம் முன்னேறும். நாம் செய்த பாவங்கள் நீங்கும்.
நீர்நிலைகள் அருகே அமர்ந்து வேதமந்திரங்கள் சொல்லி திதி கொடுப்பது, மூதாதையர்கள் நினைவாக பிண்டம் செய்து உணவாக படைப்பது என்று செய்து வருகின்றனர். இந்த சடங்குகள் தஞ்சை மாவட்டம் திருவையாறு, நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் ஆகிய இடங்களில் சிறப்பாக நடைபெறும்.
திருவையாறு
அதன்படி, இன்று புரட்டாசி மகாளய அமாவாசை என்பதால் இன்று காலை முதலே தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திருவையாறில் உள்ள காவிரி புஷ்ய மண்டபத்தில் திரளான பொதுமக்கள் வர தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.
காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனிதநீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக ஏராளமான புரோகிதர்கள் படித்துறைக்கு வந்திருந்தனர்.
இதனால் புஷ்ய மண்டபத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இன்று ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுத்து காவிரியில் புனித நீராடினர்.
கும்பகோணம்
இதேபோல், தஞ்சாவூர் கல்லணை கால்வாய் படித்துறை, கும்பகோணம் காவிரி ஆற்றின் பகவத் படித்துறை, டபீர் படித்துறை, மேலக்காவேரி படித்துறை, அரசலாற்றங்கரை உள்ளிட்ட நீர் நிலைகளில் ஏராளமான பொதுமக்கள் இன்று காலையில் இருந்து குவியத்தொடங்கினர். அங்கு அவர்கள் தங்களது முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
மேலும் பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபட்டனர்.