search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டா மாறுதல் குறித்த மனுக்களுக்கு விரைந்து தீர்வு ஏற்படுத்த வேண்டும்"

    • விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ள நலத்திட்டங்கள் குறித்த கையேடு வெளியீடு
    • குறைதீர்வு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் கலெக்டர் பா.முருகேஷ் பேசியதாவது:-

    விவசாயிகளுக்கான பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்டத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கு நிதி பயன், பயிர் காப்பீட்டு பயன்கள் பெற்றுத்தரப்படும். அனைத்து பால் கொள்முதல் சங்கங்களிலும் மின்னணு எடை மேடை மூலம் பால் கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு அதிக விளைச்சல் தரக்கூடிய புதிய நெல் ரகங்களை வழங்க வேண்டும்.

    புதுப்பாளையம் அடுத்த ஜி என் பாளையம் கிராமத்தில் மயான பாதை மற்றும் சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும். ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறையின் சார்பில் ஏரி, குளம் மற்றும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அரசு கால்நடை மருத்துவ மனைகளில் போதிய அளவு மருந்துகள் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

    அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், உர விற்பனை நிலையங்களில் யூரியா மற்றும் உரங்கள், வேளாண் கிடங்குகளில் போதிய அளவிற்கு விதைகள் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

    விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட குறைதீர்வு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா மாறுதல் குறித்த மனுக்களுக்கு விரைந்து தீர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ள நலத்திட்டங்கள் குறித்த கையேட்டினை கலெக்டர் வெளியிட்டார்.

    கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் அரக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சோமசுந்தரம், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் செந்தில்குமார், முன்னோடி வங்கி மேலாளர் கவுரி, முன்னாள் எம்.எல்.ஏ எதிரொலிமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×