search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பினராய விஜயன்"

    • கேரளாவின் வரலாற்று பெருமைகளை எடுத்துரைக்க நல்ல வாய்ப்பாக கேரளீயம் அமைந்துள்ளதாக பினராயி விஜயன் கூறினார்.
    • தமிழகமும் கேரளாவும் பிரிக்க முடியாத பிணைப்பை பகிர்ந்து கொள்கின்றன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில உதய தினத்தை முன்னிட்டு கேரளீயம்-23 என்ற கலாச்சார விழா திருவனந்தபுரத்தில் நேற்று தொடங்கியது. இந்த திருவிழா 7 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. நேற்று நடந்த விழாவில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி கலாச்சார விழாவை தொடங்கி வைத்தார்.

    இதில் நடிகர்கள் கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், நடிகைகள் சோபனா, மஞ்சுவாரியர் உள்ளிட்ட திரைப்பட நட்சத்திரங்கள், கேரள தொழிலதிபர்கள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள், மத்திய மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் பேசிய கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், கேரளாவின் வரலாற்று பெருமைகளை எடுத்துரைக்க நல்ல வாய்ப்பாக கேரளீயம் அமைந்துள்ளது. தூய்மை முதல் கலாச்சாரம் வரை அனைத்திலும் தனித்துவத்துடன் விளங்கும் கேரள பாரம்பரியத்துடனான பெருமையை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை இளம் தலைமுறையினருக்கும் புகுத்த வேண்டியது கேரள மூத்த தலைமுறையினரின் கடமையாகும் என்றார்.

    அந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:-

    இங்குள்ள மக்கள் என்னை ஒரு கலைஞனாகவும், மக்கள் பிரதிநிதியாகவும் அரவணைத்துள்ளனர். இதனால் எனது இதயத்தில் கேரளா தனி இடத்தை பிடித்துள்ளது. இது எனக்கு நிறைய பாடங்களை கற்க உதவியது. ஏழாவது வயதில் நான் திரையுலகில் அறிமுகமானேன், அதன் பிறகு கேரளா எனக்கு எப்பொழுதும் நிறைய கொடுத்தது.

    இங்கிருந்து கற்றுக்கொண்ட அனைத்தையும் பின்பற்ற முயற்சித்தேன். 21 வயதுக்கு பிறகு பல்துறையுடன் இணைந்து மலையாளத்தில் மதனோல்சவம் படத்தில் நடித்தேன். 2017-ம் ஆண்டு கேரள வந்தபோது அரசியலுக்கு வர முடிவு செய்தேன்.

    மக்கள் திட்டம் மூலம் 1996-ல் தொடங்கப்பட்ட அதிகாரப்பரவலை நாடு முழுவதும் கேரளா வழி நடத்தியதால் அரசியலுக்கு வருவது குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் ஆலோசனை கேட்டேன். அவர் கூறிய அறிவுரைகளை ஏற்றுக்கொண்டேன். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளை கையாளும் போது அதை நான் எப்போதும் கவனித்து வருகிறேன்.

    தமிழகமும் கேரளாவும் பிரிக்க முடியாத பிணைப்பை பகிர்ந்து கொள்கின்றன. நடனம், இசை, உணவு என அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக கேரள திகழ்கிறது.

    இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

    ×