search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாண்புமிகு மாணவிகள் திட்டம்"

    • பொதுத்தேர்வில் மனஅழுத்தத்தை போக்கி மனவலிமையுடன் தேர்வுகள் எழுத மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
    • வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் மாணவிகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு குழந்தை திருமணங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை போலீசார் கண்டறிந்தனர்.

    இதனை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் அரசு பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் மற்றும் இவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு சமூக வாழ்வியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 'மாண்புமிகு மாணவிகள்' திட்டம் தொடங்கப்பட்டது.

    இத்திட்டத்தின் தொடக்க விழா மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு வாழப்பாடி அருகே சேசன்சாவடியில் நடைபெற்றது. சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் தொடங்கி வைத்து பேசுகையில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு போக்சோ உள்ளிட்ட சட்டங்கள் குறித்தும், எதிர்கால வாழ்க்கை முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்' என்றார்.

    கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கண்ணன், செல்வம், வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கரி ஆகியோர் பேசினர். மேலும் மாணவிகளுக்கான சுய ஒழுக்கம், தற்பாதுகாப்பு, தன்நிலை உணர்தல், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர். இதில் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் மாணவிகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திரைப்பட நடிகர் தாமு, பெண் முன்னேற்றத்திற்கான பயணம் என்ற தலைப்பில் பேசும்போது, மாதா, பிதா, குரு, தெய்வம் என பெரியோர்கள் கூறியபடி தாய், தந்தையருக்கு முதலில் மரியாதை அளிக்க வேண்டும். உங்கள் மூளையில் உள்ள அசுத்த எண்ணங்களை அகற்றி நல்லறிவை வழங்கும் ஆசிரியர்களை மதிக்க வேண்டும். தேர்வு காலம் நெருங்கி வருவதால், நவம்பர் முதல் ஏப்ரல் வரை நன்கு படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என்றார்.

    பின்னர் தனது உருக்கமான குரலால் தாமு ஒவ்வொன்றாக பெற்றோர் செய்யும் தியாகங்கள், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு போன்றவற்றை மாணவிகளிடம் எடுத்துரைத்தார். பிறப்பு முதல் கல்லூரி பருவம் வரை பிள்ளைகளை பெற்றோர்கள் பாதுகாப்பது தொடர்பாகவும், மரியாதை தருவது தொடர்பாகவும் மாணவிகளிடையே தாமு உருக்கமாக பேசிய போது, அரங்கத்தில் இருந்த ஆசிரியர்கள், பள்ளி மாணவிகள் கண் கலங்கினர்.

    மேலும் அவர், பொதுத்தேர்வில் மனஅழுத்தத்தை போக்கி மனவலிமையுடன் தேர்வுகள் எழுத மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். திரைப்பட நடிகர் தாமுவின் உருக்கமான பேச்சை கேட்டு மாணவிகள் மனம் விட்டு தேம்பி, தேம்பி அழுதனர். கண்களை மூடிக் கேட்டுக்கொண்டிருந்த மாணவிகள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். மாணவிகள் தேம்பி, தேம்பி அழுத வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் மாணவிகள் பெற்றோர், ஆசிரியர்கள், போலீசார் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர்.

    மாண்புமிகு மாணவி திட்டத்தில் நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கம் பயனுள்ள வகையில் அமைந்திருந்ததாக மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    ×