search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்பத்தூர் பஸ் நிலையம்"

    • சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள ரூ.150.05 கோடி மதிப்பிலான திட்டபணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
    • பஸ்கள் புறப்படும் நேரம், வருகை பற்றி பயணிகள் அறியும் வகையில் எல்.இ.டி. திரைகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளன.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு ஆவடி, பட்டாபிராம், திருவள்ளூர், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர்.

    இதனால் அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ்நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் பரபரப்பாக இருக்கும். இங்கிருந்து கோயம்பேடு, பிராட்வே, பூந்தமல்லி, சென்ட்ரல், எழும்பூர், அண்ணா சாலை போன்ற பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பஸ்நிலையம் அருகே போக்குவரத்து பணிமனையும் உள்ளது.

    தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் அம்பத்தூர் பஸ்நிலையம் எந்தவித நவீன வசதியும் இல்லாமல் காட்சி அளிக்கிறது. பஸ்கள் உள்ளே வரும் பகுதியும் வெளியே செல்லும் சாலையும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட வசதி, பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கை போன்ற எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. மழைக்காலங்களில் சுமார் 1 அடிக்கு மழை நீர் தேங்கி நிற்கும். இதேபோல் பஸ் நிலையத்தின் மேல் பகுதியில் உள்ள சிமெண்ட் ஓடுகள் உடைந்தும் பரிதாபமாக உள்ளது. இதையடுத்து அம்பத்தூர் பஸ் நிலையத்தை நவீனப்படுத்தி சீரமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்தது.

    இந்த நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள ரூ.150.05 கோடி மதிப்பிலான திட்டபணிகளுக்கு நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதில் அம்பத்தூர் பஸ்நிலையத்தை ரூ.13.85 கோடியில் மேம்படுத்தும் பணிகளும் நடக்க உள்ளது. இதற்கு பொது மக்களும், பயணிகளும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

    தற்போது உள்ள அம்பத்தூர் பஸ் நிலையம் முழுமையாக அகற்றப்பட்டு நவீன வசதிகளுடன் அமைய இருக்கிறது. மாநகர பஸ்கள் உள்ளே செல்லவும், வெளியே வரவும் தனித்தனி பாதை, நேரக்காப்பாளர் அறை, கழிப்பிட வசதி, பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கைகள் மற்றும் பஸ் நிலையத்தை சுற்றி எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட இருக்கிறது.

    மேலும் பஸ்கள் புறப்படும் நேரம், வருகை பற்றி பயணிகள் அறியும் வகையில் எல்.இ.டி. திரைகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளன. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் பஸ்நிலையம் பணிகள் நடைபெற உள்ளது. வாகன நிறுத்தும் இடம், கடைகளும் அமைய உள்ளன.

    இதுகுறித்து அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.ஜோசப் சாமுவேல் கூறும்போது, அம்பத்தூர் பஸ்நிலையம் ரூ.13.85 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இப்போது உள்ள பஸ் நிலையம் முழுமையாக அகற்றப்பட்டு நவீன வசதியுடன் அமையும் என்றார்.

    ×