என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாக்கு வங்கி"
- என்னை ஜாதி பார்த்து பேசியதாக கூறியது நியாயமா?
- ஒட்டுமொத்தமாக 6.20 கோடி வாக்காளர்களில் 77 சதவீத பயனாளிகளை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் திலகர் திடலில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்கிற பாராளுமன்ற தொகுதி பரப்புரை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர். பாலு எம்.பி. பேசியதாவது:-
கடந்த 2019-ம்ஆண்டில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இல்லாத காரணத்தால், அப்பலவீனத்தைப் பயன்படுத்தி பா.ஜனதா வெறும் 37 சதவீத வாக்குகள் மட்டுமே வாங்கி வெற்றி பெற்றது. அதனால்தான் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சிதறிக்கிடக்கும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் வெற்றி பெற முடியும் எனக் கூறினார். இதன் அடிப்படையில் இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. இதிலிருந்து எத்தனை பேர் விலகி சென்றாலும், இந்தியா கூட்டணியிடம் தான் வாக்கு வங்கி உள்ளது.
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை கொண்டு வருவதற்கான காலம் வந்துவிட்டது என 2011-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம், நரேந்திர மோடி கூறினார். அச்சட்டத்தைத் தயார்படுத்த அரசு வக்கீலின் ஆலோசனைப்படி உணவு பாதுகாப்பு சட்டமும், நிலம் கையகப்படுத்தும் சட்டமும் 2013-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. அடுத்து குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை கொண்டு வரும்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், நிறைவேற்ற முடியாமல் போனது. ஆனால், மோடி பிரதமராகி 10 ஆண்டுகளாகியும் அச்சட்டத்தை நிறைவேற்றாதது மட்டுமல்லாமல், 3 கருப்பு சட்டங்களை கொண்டு வந்தார்.
தமிழ்நாட்டுக்கு மெட்ரோ 2-வது திட்டம், எய்ம்ஸ் மருத்துவமனை, வெள்ளச்சேதத்துக்கு இழப்பீடு கொடுக்க மறுப்பு என பல்வேறு வகைகளில் தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்தும், வஞ்சித்தும் வருகிறது.
வெள்ள நிவாரணம் கோரி நாடாளுமன்றத்தில் நான் பேசியபோது, தனது துறைக்கு தொடர்பில்லாத மத்திய இணை மந்திரி எல். முருகன் இடையூறு செய்யும் நோக்கில் குறுக்கே, குறுக்கே பேசினார். அதனால், ஒன்றுமே தெரியாத நீங்கள் உட்காருங்கள் என கூறினேன். ஜாதி, மதம், நிறம் எதுவும் எங்கள் இயக்கத்துக்கு தெரியாது. அனைத்து சமயத்தினரும், ஜாதியினரும் எங்களுக்கு வேண்டியவர்கள்தான். என்னை ஜாதி பார்த்து பேசியதாக கூறியது நியாயமா?
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கார்ப்பரேட் நிதி 33 சதவீதம் வசூல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 22 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஒரு சதவீதத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி வீதம் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 11 சதவீதத்துக்கு எவ்வளவு இழப்பாகியுள்ளது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அவ்வளவும் பெரிய முதலாளிகளுக்கு இந்த அரசு சலுகை செய்துள்ளது.
தி.மு.க. ஆட்சியில் குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை, நான் முதல்வர் திட்டம், காலை உணவு திட்டம், நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் 4.81 கோடி பயனாளிகள் பயடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 6.20 கோடி வாக்காளர்களில் 77 சதவீத பயனாளிகளை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். எனவே, நமது முதல்வரை மக்கள் நம்பிக்கை, உறுதி, விருப்பம், வெற்றி, எதிர்காலம் எனக்கருத வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
- தேமுதிகவின் வாக்கு வங்கி ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்து வருகிறது
- முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு பிரேமலதா செல்லவில்லை
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்ந்த விஜயகாந்த், தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகியவற்றிற்கு மாற்றாக கடந்த 2005 செப்டம்பர் 14 அன்று "தேசிய முற்போக்கு திராவிட கழகம்" (DMDK) எனும் புதிய கட்சியை தொடங்கினார். இக்கட்சிக்கு முரசு சின்னம், தேர்தல் சின்னமாக கிடைத்தது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இக்கட்சியின் வாக்கு வங்கி சதவீதம், 2006 (சட்டசபை) - 8.38, 2009 (பாராளுமன்றம்) - 10.08, 2011 (சட்டசபை) - 7.88, 2014 (பாராளுமன்றம்) - 5.19, 2016 (சட்டசபை) - 2.39, 2019 (பாராளுமன்றம்) - 2.19 என தேர்தலுக்கு தேர்தல் குறைந்தவாறு உள்ளது.
2011 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 29 சட்டசபை இடங்களை கைப்பற்றிய தேமுதிக, பதிவான வாக்குகளில் 6 சதவீதத்துக்கும் குறைவாக பெற்று, தொடர்ச்சியாக 3 தேர்தல்களில் ஒரு எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. அக்கட்சியின் சார்பில் வெற்றி பெறாததால் மாநில கட்சி அந்தஸ்தையும், முரசு சின்னத்தையும் இழக்கும் அபாய கட்டத்திற்கே வந்தது.
சமீப சில வருடங்களாக அக்கட்சியின் நிறுவனரும், தலைவருமான விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால், அக்கட்சியின் நிர்வாகிகளில் பலர் வேறு கட்சிகளுக்கு வெளியேறினர்; தொண்டர்களும் குறைய தொடங்கினர்.
இந்நிலையில், டிசம்பர் 14 அன்று தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், பொது செயலாளராக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து பிரேமலதா உரையாற்றும் போது, "பெண்களுக்கு அரசியல் ஒரு பெரும் சவால். ஜெயலலிதா சந்திக்காத சவால்களே இல்லை. விஜயகாந்திற்கு எம்.ஜி.ஆர்.தான் குரு; எனக்கு ஜெயலலிதாதான் ரோல் மாடல்" என குறிப்பிட்டார்.
மேலும், மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு செல்லவில்லை. இந்த செயல் விமர்சகர்களால் முக்கியத்துவம் அளித்து பேசப்படுகிறது
பல சவால்களை வெற்றிகரமாக எதிர் கொண்ட "இரும்பு பெண்மணி" என அழைக்கப்பட்ட மறைந்த அதிமுகவின் பொது செயலாளர் ஜெயலலிதா ஒரு ஆளுமை மிக்க தலைவராக கருதப்பட்டவர். தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் இடத்தை நிரப்பக் கூடிய பெண் அரசியல் தலைவர்கள் இன்னும் உருவாகவில்லை என்பதே அரசியல் விமர்சகர்களின் பார்வையாக உள்ளது.
இப்பின்னணியில், பிரேமலதாவின் உரையும், மறைந்த அதிமுக தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதும், ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை நிரப்ப அவர் முன்னெடுக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
அதிமுகவின் பெரும் தலைவர்களை நினைவுகூர்ந்த அவரது பேச்சிலும், நினைவகங்களுக்கு செல்வதில் திமுகவை புறந்தள்ளுவதை போல் நடந்து கொண்டதும் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளன.
பா.ஜ.க.வை உதறி விட்டு தேர்தலை சந்திக்க உள்ள அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு தேமுதிக தயாராக உள்ளதாக அதிமுக தலைவர்களுக்கு மறைமுகமாக பிரேமலதா விடுக்கும் செய்தியாக சில விமர்சகர்கள் இதை கணிக்கின்றனர்.
"கருப்பு எம்.ஜி.ஆர்." என ரசிகர்களால் அழைக்கப்பட்டு எம்.ஜி.ஆர். இடத்தை நிரப்ப விஜயகாந்த் முயன்றது போல், ஜெயலலிதாவிற்கு மாற்றாக தன்னை முன்னிறுத்தி அதிமுகவின் வாக்கு வங்கியின் ஒரு பகுதியை அறுவடை செய்ய பிரேமலதா நினைக்கலாம் என்பது சில விமர்சகர்களின் கணிப்பு.
இப்பின்னணியில், வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தல் மிக முக்கியமான தேர்தலாக எதிர்நோக்கப்படுகிறது.
ஸ்டாலினே முதல்வர் வேட்பாளராக நிற்பாரா அல்லது தனது மகன் உதயநிதியை முன்னிறுத்துவாரா என்பது தெரியவில்லை.
2017ல் சசிகலாவால் தேர்வு செய்யப்பட்டு 2021 வரை முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தி களத்தில் இறங்க போகும் முதல் தேர்தல் இதுதான்.
திமுகவையும், அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து தொடர்ந்து பிரசாரம் செய்து வரும் பா.ஜ.க. இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளிலும் என்ன சேதாரத்தை ஏற்படுத்தும் என்பதும் தற்போது தெளிவாகவில்லை.
இவர்களுக்கு நடுவே தேமுதிக பொது செயலாளரின் கணக்குகள் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்