search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடநாடு எஸ்டேட்"

    • கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலையும் போலீசார் கைது செய்தனர்.
    • அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் கார் டிரைவர் கனகராஜ். இவர் தலைமையிலான கும்பலைச் சேர்ந்தவர்கள் கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் பங்களாவில் கொள்ளை அடிக்க சென்றனர். அப்போது காவலாளியை கொன்று விட்டு கொள்ளையடித்து சென்றனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்த நிலையில் கனகராஜ் ஆத்தூர் அருகே மர்மமான முறையில் இறந்தார். இந்த கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலையும் போலீசார் கைது செய்தனர். இவர் கனகராஜின் சிம்கார்டை எரித்து சாட்சியங்களை அழித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது.

    இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தாரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் அழகு துரையின் சட்டையை பிடித்து தள்ளியதாக போலீசார் தனபாலை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் நேற்று தனபாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது . அவரை உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சிறையில் இருந்த போதும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கொடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன் தோஸ் கடந்த 2007 ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
    • கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வின்போது நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய, கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கொடநாடு எஸ்டேட்டில், அனுமதியின்றி கட்டடம் கட்டுப்பட்டுள்ளதால் அதற்கு வரி செலுத்த வேண்டும், விதிகளை மீறிய கட்டடத்தை இடிக்க வேண்டும் என கொடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன் தோஸ் கடந்த 2007 ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

    இதனை எதிர்த்து கொடநாடு எஸ்டேட் மேலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கொடநாடு எஸ்டேட்டில் எந்த விதி மீறலும் இல்லை எனக்கூறி கோத்தகிரி பஞ்சாயத்து தலைவர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து கடந்த 2008 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த உத்தரவை எதிர்த்து கொடநாடு பஞ்சாய்த்து தலைவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது.


    இந்த மேல் முறையீட்டு மனு நீதிபரிகள் அமர்வில் இன்று இறுதி விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசு தலைமை வழக்கறிஞர், சொத்து வரி விதிப்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மட்டுமே கொடநாடு எஸ்டேட்டுக்குள் நுழைய அனுமதி கேட்பதாகவும், 2008 ஆம் ஆண்டிலிருந்து கொடநாடு எஸ்டேட்டுக்குள் யாரும் உள்ளே நுழைய முடியாத நிலை இருப்பதாகவும், கூடுதல் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டிருந்தால் என்ன செய்வது? எனவும் ஆய்வு செய்தால் தானே அது தெரிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 2023 ஆம் ஆண்டு வரை சொத்து வரி செலுத்தப்பட்டுதாகக் கூறி, அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும், கொடநாடு எஸ்டேட்டுக்குள் விதிகளை மீறி எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளவில்லை என தனி நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறினார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆய்வு செய்தால் தானே விதிமுறைகள் மீறப்பட்டிருக்கிறதா? என தெரியவரும் அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.

    இதையடுத்து கொடநாடு எஸ்டேட்டில் கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆய்வின்போது நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கொடநாடு எஸ்டேட்டுக்கு நானும், ஜெயலலிதாவும் ஒன்றாகவே இதுவரை வந்துள்ளோம்.
    • ஆகஸ்டு மாதத்துக்குள் பணியை முடித்து திறப்பு விழா நடைபெறும்.

    கோத்தகிரி:

    தமிழக அரசியலில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வலிமைமிக்க தலைவராக வலம் வந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அவரது நிழலாக பின் தொடர்ந்தவர் சசிகலா.

    இவர்களுக்கு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இருவரும் ஓய்வெடுப்பதற்காக கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு செல்வதற்கு வழக்கம்.

    கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர், ஜெயலலிதாவும், சசிகலாவும் கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்று ஓய்வெடுத்தனர்.

    அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜெயலலிதா உயிரிழந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா ஜெயிலுக்கு சென்றார். இதற்கிடையே கடந்த 2017-ம் ஆண்டு கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தது. இதில் இன்னும் மர்மம் விலகவில்லை.

    இதையடுத்து ஜெயிலில் இருந்து வெளியில் வந்த சசிகலா, கொடநாடு எஸ்டேட் செல்வதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சசிகலா கொடநாடு எஸ்டேட்டுக்கு வருகை தந்தார்.

    சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், அங்கிருந்து கார் மூலமாக கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்றார். அவரை அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் வரவேற்றனர்.

    இதனை தொடர்ந்து சசிகலா நேற்று இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுத்தார்.

    தொடர்ந்து இன்று காலை கொடநாடு எஸ்டேட் வளாகத்தில் மறைந்த ஜெயலலிதாவின் நினைவாக நினைவு மண்டபம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இந்த பூஜையில் சசிகலா கலந்து கொண்டு மண்டபம் அமைப்பதற்கான பணியை தொடங்கி வைத்தார். இந்த பூஜையில் எஸ்டேட்டில் பணியாற்றும் அதிகாரிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மணிமண்டபத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலை அமைக்கப்பட உள்ளது.

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கொடநாடு மிகவும் பிடித்த இடமாக இருந்தது. இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களும், நாங்களும் ஒரு குடும்பமாகவே இருந்து வந்தோம்.

    கொடநாடு எஸ்டேட்டுக்கு நானும், ஜெயலலிதாவும் ஒன்றாகவே இதுவரை வந்துள்ளோம். அவரது மறைவுக்கு பிறகு என்னால் இங்கு தனியாக வர முடியவில்லை. தற்போது தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வந்துள்ளேன்.

    இந்த நல்ல நாளில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்துள்ளேன். சுற்றுலாதலமான கொடநாடு காட்சி முனை அருகே இந்த இடம் இருப்பதால் நினைவு மண்டபத்தை பொதுமக்களும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆகஸ்டு மாதத்துக்குள் பணியை முடித்து திறப்பு விழா நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனை தொடர்ந்து, சசிகலா, கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களிடம் நலம் விசாரித்து, குறைகளையும் கேட்டறிந்தார்.

    3 நாள் பயணத்தை முடித்து கொண்டு நாளை கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காரில் புறப்பட்டு, சாலை மார்க்கமாக தஞ்சாவூர் செல்கிறார்.

    ×