என் மலர்
நீங்கள் தேடியது "டாக்டர் ராமதாஸ்"
- மதுவிலக்கை கொண்டுவர மத்திய அரசை கைகாட்ட கூடாது.
- ஆட்சி நிர்வாகம் முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே யுள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கை தொடர்பான வெளியுறவுக்கொள்கையை சூழலுக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் கூட்டணியில் அனுராக் திசநாயக் அதிபராக தேர்வு செய்யபட்டுள்ளார்.
இவர் சிங்களர்களையும், தமிழர்களையும் இணைத்து செயல்படுவேன் என கூறினாலும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு நன்மை கிடைக்கப்போவதில்லை.
ஜனதாமுக்தி சிங்கள பேரினத்தின் தலைவராக தற்போதைய அதிபர் இருந்துள்ளார். அவர் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை ஊக்குவித்தவர்.
இடது சாரி இயக்கம் என்று கூறிகொண்டாலும் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டவர் என்பதால் தமிழர்களுக்கு எதிரான மனநிலை கொண்ட திசநாயக் அரசு 1½ லட்சம் தமிழர்களுக்கு நீதி பெற்று எதுவும் செய்ய மாட்டார் என கூறினார்.
இந்தியா-இலங்கை உறவை வலுபடுத்த திசநாயக் இருப்பார் என்பது ஐயமாக தான் உள்ளது. சீன அரசுக்கு சாதகமாக திசநாயக் செயல்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது கவலை அளிப்பதாக உள்ளது.
தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணுதல், இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பை நிலைநிறுத்துதல், ஈழத்தமி ழர் பிரச்சனைக்கு தீர்வு காணுதல், போர் குற்றங்களுக்கு தண்டித்தல் போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு இந்திய அரசு வெளியுறவுக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டுவர மத்திய அரசை கைகாட்ட கூடாது. மதுவிலக்கு என்பது மாநில பட்டியலில் உள்ளது. மதுகடை திறப்பது, மூடுவது போன்ற அதிகாரம் மாநில அரசுக்கு உள்ள போது மதுவிலக்கு கொண்டுவர வேண்டும். தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என கூறுவது ஏமாற்று வேலை.
மதுவிலக்கு கொண்டு வருவது குறித்து அமைச்சர் முத்துசாமி மத்திய அரசு தேசிய அளவில் கொள்கை உருவாக்க கூறுவது அபத்தமானது.
மது ஆலைகளை வைத்துள்ள தி.மு.க. மதுவிலக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபடாது. 2 ஆட்சி பணிகள் அதிகாரிகள் வீட்டில் 42 மாநகராட்சி ஊழியர்கள் பயன்படுத்தியதற்கு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை அதிகாரிகள் ஆட்சி தான் நடைபெறுகிறது. ஆட்சி நிர்வாகம் முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை.
பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று தொடக்க கல்வி ஆசிரியர்களின் இயக்கங்கள் போராட்டம் செய்வதாக அறிவித்தனர்.
அதன் பின்னர் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் கைவிட்ட ஆசிரியர்களின் நியாமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
லோக் ஆயுக்தா வலுபடுத்தபட வேண்டும். ஆட்சியாளர்கள் அதிகாரிகள் மீது ஊழல் வழக்குகளை விசாரிக்க லோக் ஆயுக்தா வலிமையானதாக இருக்க வேண்டும். கர்நாடகாவில் உள்ளது போன்று தமிழகத்தில் வலிமையாக இல்லை.
முதல்வரை விசாரிக்கும் அதிகார லோக் ஆயுக்தாவிற்கு இல்லை என்பதால் லோக் ஆயுக்தா விசாரணை வரம்புக்குள் முதல்-அமைச்சரை விசாரிக்கும் அதிகாரத்தினை கொண்டு வர வேண்டும்.
செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது குறித்து கூறுவதற்கு எதுவுமில்லை. மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. புதியதாக தேர்வு செய்யப்பட்ட இலங்கை அதிபர் ஆட்சியில் இன்னும் மோசமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ஜ.க.வில் அவரை சேர்த்து திமுகவுக்கு எதிராக களமாட நினைத்தார்கள்.
- பாமகவில் தகுதியான நபர்களே இல்லையா?
சென்னை:
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தைலாபுரம் அரசியல் பயிலரங்கத்தில் பாட்டாளிகளுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர் ராமதாஸ், அரசியல் அறியாமல் அரைவேக்காடாய் அறிக்கை விட்டிருக்கிறார். செந்தில் பாலாஜி மீது உள்ள வழக்கு விவரத்தை அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலையும் முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
செந்தில் பாலாஜி மீது 2015, 2017 மற்றும் 2018-ல் மூன்று வழக்குகள் பதியப்பட்டன. 2015-ல் பதிவான வழக்கு பற்றி அப்போதிருந்த விவரங்களின் அடிப்படையில்தான் 2016 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜி குறித்துப் பேசினார்.
ஆனால், செந்தில் பாலாஜி திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்த போது, தான் குற்றமற்றவன். தன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியால்தான் இந்த வழக்குகள் புனையப்பட்டது எனச் சொன்னார். இந்த உண்மைகள் ராமதாஸ் அவர்களுக்குத் தெரியும்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர இசை ஆணைக் கேட்டு வந்த கோப்பில், எந்த தாமதமும் இல்லாமல் முதல்வர், ஆட்சி வேறு, கட்சி வேறு என்ற நிலையில் கோப்புகளில் உள்ள அம்சங்களை மட்டுமே கவனித்து தன் சொந்த விருப்பு வெறுப்புகளை கடந்து கடமையாற்றியது எல்லாம் ராமதாசுக்குப் புரியவில்லையா? இல்லை புரியாமல் நடிக்கிறாரா?
செந்தில் பாலாஜி தியாகம் செய்துவிட்டு சிறை செல்லவில்லைதான். ஆனால், பொய் வழக்குகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பணப்பரிமாற்ற வழக்கில், ஒன்றிய அரசின் எதேச்சாதிகார போக்கால் அவரை கைது செய்து, அழுத்தம் தந்து துன்புறுத்தி வாக்குமூலம் பெற்று, திமுகவின் மீது மேலும் பொய் வழக்குகள் போடலாம் என்ற கனவை அவர் பொய்யாக்கினார். அதற்காக 471 நாட்கள் சிறையில் இருந்தார்.
பா.ஜ.க.வில் அவரை சேர்த்து திமுகவுக்கு எதிராகக் களமாட நினைத்தார்கள். அதற்கு அடிபணியாமல், அஞ்சாமல் நின்ற உறுதிதான் தியாகம். அது நல்லெண்ணம் கொண்டோருக்கு மட்டுமே புரியும்.
1989 ஜூலை 16-ந்தேதி நினைவிருக்கிறதா? அன்று தான் டாக்டர் ராமதாஸ் 5 சத்தியங்களைச் செய்தார். அதில் ஒன்றுதான், 'என் வாரிசுகள் கட்சியில் எந்த பொறுப்புக்கும் வரமாட்டார்கள்' என்றார்.
இப்போது அன்புமணி கட்சியின் கடைக்கோடி உறுப்பினரா? 'சத்தியம் தவறாத உத்தமர் போல' நடிக்கும் ராமதாஸ் எதற்கெடுத்தாலும் அறிக்கைவிடுவார். ஏன் அமலாக்கத்துறையின் அடாவடிகளைக் கண்டித்து அறிக்கை விடத் தயங்குகிறார்?
மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய அன்புமணி ராமதாசுக்கு ஏன் தொடர்ச்சியாக ராஜ்ய சபா சீட் தரப்படுகிறது? பாமகவில் தகுதியான நபர்களே இல்லையா?
"ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டும் எடப்பாடி, பன்னீர்செல்வம் தலைமையிலான பினாமி அரசின் ஊழல்களையும் மறைக்க முடியாது, அதனால் ஏற்பட்ட பாவங்களைக் கழுவ முடியாது'' என முன்பு ராமதாஸ் சொன்னார். அந்த பினாமிகளோடுதான் 2019 பாராளுமன்றத் தேர்தலிலும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் ராமதாஸ் கூட்டணி வைத்தார். பா.ம.க-வின் பாவங்களை கழுவிவிட்டு, வந்து ராமதாஸ் திமுகவை விமர்சிக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குகிறார்.
- முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக வருகிற 28-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் செல்கிறார். 29-ந்தேதி வரை அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
அரசு சார்பில் நடைபெறும் விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குகிறார்.
விழுப்புரத்தில் துப்பாக்கி சூட்டில் பலியான 21 சமூக நீதி போராளிகளுக்கான மணி மண்டப திறப்பு விழா நிகழ்ச்சியும் அப்போது நடைபெறுகிறது.
29-ந் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சமூக நீதி போராளிகள் குடும்பத்தினர் சமூக நீதிக்காக குரல் கொடுத்து வரும் அரசியல் கட்சியினர் என முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராம தாஸ் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்ப ஏற்பாடு கள் நடந்து வருகிறது.
இதையொட்டி நேற்று விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், சமூக நீதி போராளிகள் மணிமண்ட பம் திறப்பு விழாவில் பங்கேற்க பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு அழைப்பு கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அவருக்கும் மற்ற பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்படும் என்றார்.
தற்போது பா.ம.க., பா.ஜனதா கூட்டணியில் இருந்து வருகிறது. தி.மு.க. எதிர்ப்பு அரசியல் செய்து வரும் பா.ம.க.க்கும் தலைவர்கள் தி.மு.க. அரசு விடுத்துள்ள அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து பா.ம.க. நிர்வாகி கூறியதாவது:-
சமூக நீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் நிகழ்ச்சி இது. பா.ம.க.வின் நீண்டகால கோரிக்கையும் கூட. அதனால் இந்த விழாவில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொள்ள போவாரா? இல்லையா? என்பது இனி மேல் தான் தெரியவரும். ஆனால் இதில் அன்புமணி ராமதாசை பங்கேற்குமாறு கண்டிப்பாக அனுப்பி வைப்பார்.
அடுத்து ஆளப்போகும் கட்சியுடன்தான் கூட்டணி என்று அன்புமணி தொடர்ந்து கூறி வரும் நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பா.ம.க. பங்கேற்க இருப்பது அரசியலுக்கான கூட்டணி அச்சாரம் என்று பலர் பேசுவார்கள். அது போக போகத்தான் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாடு மின் வாரியத்தின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
- அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு மின் வாரியத்தின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும். அதானி சந்திப்பு பற்றி முதலமைச்சர் விளக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாரே என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "டாக்டர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிடுவார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை" என்று காட்டமாக பதில் அளித்தார்.
- 2012-ம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் அமர்த்தப்பட்ட அவர்களுக்கு பணிநிலைப்பு வழங்கப்படவில்லை.
- 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தங்களுக்கு பணிநிலைப்பு வழங்கக்கோரி போராட்டம்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தங்களுக்கு பணிநிலைப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முயன்ற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்களை கைது செய்து அவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறைகளை தமிழக அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த அடக்குமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களை கற்றுத் தருவதற்காக 2012-ம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் அமர்த்தப்பட்ட அவர்களுக்கு, இன்றுவரை பணிநிலைப்பு வழங்கப்படவில்லை.
கடந்த 12 ஆண்டுகளில் அவர்களுக்கு ரூ.7,500 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் வலியுறுத்தல் காரணமாகத்தான் இதுவும் சாத்தியமானது.
திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவர் என்று திமுக தேர்தல் அறிக்கையில் 181-ஆம் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், இன்று வரை அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
கடந்த 4 ஆண்டுகளில் ஒரே ஒரு முறை மட்டுமே பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது. பணிநிலைப்பு வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று பகுதிநேர சிறப்பாசிரியர்கள் போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களை அழைத்து பேச்சு நடத்தியிருக்க வேண்டும்.
ஆனால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு பதிலாக மாநில திட்ட இயக்குநர் நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆசிரியர்களின் பிரச்சினை குறித்து அவர்களுடன் பேச்சு நடத்துவதற்குகூட நேரம் இல்லாத அளவுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு வேறு என்ன வேலை இருக்கிறது என்பது தெரியவில்லை. தற்காலிக ஆசிரியர்கள் எவரும் கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்கள் அல்ல. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள் என்பதால் பணிநிலைப்புப் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு உண்டு.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த திமுக, அவர்களுக்கு அளிக்கப்பட்ட பணிநிலைப்பு, ஊதிய முரண்பாடு நீக்கம், பழை ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக, போராடும் ஆசிரியர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. திமுக அரசின் துரோகம் மற்றும் அடக்குமுறைக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கடுமையான பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பகுதி நேர ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக தங்களுடைய உரிமைக்கான போராட்டத்தை முன் நிறுத்தி வருகின்றனர். ஆளும் திமுக அரசு, கொடுத்த வாக்குறுதிப்படி ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ளவில்லை.

நூறு நாட்கள் என்று கூறி, இன்றைக்கு ஆயிரம் நாட்களையும் கடந்து, இந்த ஆட்சி சென்று கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் அவர்களுடைய கோரிக்கையைச் செவி சாய்க்கவும் இல்லை, பரிசீலனை செய்து, அவர்களுக்கு ஆவணமும் செய்யவில்லை. இதுகுறித்து அவர்கள் குடும்பத்துடன் இன்றைக்கு, கோட்டையை நோக்கி பேரணி நடத்தியபோது கைது செய்து, காவல் துறையை வைத்து அடக்குமுறையை ஏவி விட்டுள்ளனர்.
பகுதி நேர ஆசிரியர்களைக் கைது செய்ததை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வு எழுதி தகுதி பெற்ற அவர்களுடைய அடிப்படை உரிமையைக் கேட்டதை அலட்சியப்படுத்தாமல், கண்ணீர் மல்க வாழந்து கொண்டிருக்கும் பல ஆயிரம் குடும்பங்களை காக்க வேண்டியது இந்த அரசின் கடமை. இந்த அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு அவர்களுக்கு உரிய ஆவணம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- உலகெங்கும் வாழும் தமிழர்களை ஓரணியில் இணைக்கும் திருநாள்.
- தமிழர்களின் பாரம்பரியமான பண்பாட்டுத் திருவிழா.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழர்களின் பாரம்பரியமான பண்பாட்டுத் திருவிழா தைப்பூசம் ஆகும். சங்க இலக்கியங்களிலும் கல்வெட்டு களிலும் போற்றப்படும், தமிழர்கள் பன்னெடுங்காலமாக கொண்டாடும் திருநாள் இதுவாகும். தை மாத பூச நட்சத்திரமும் முழுநிலாப் பருவமும் ஒன்றாக வரும் நாளில் இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், தமிழீழம், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா என தமிழர்கள் குடிகொண்டிருக்கும் அனைத்து இடங்களிலும் தைப்பூசத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்களை ஓரணியில் இணைக்கும் திருநாளாகவும் தைப்பூசம் உள்ளது.
இந்த நன்நாளில் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.