search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கம்"

    • இறந்தவர்களின் ஆன்மா சுற்றி திரிவதாக அந்த பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் விபத்து நடந்த பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் கடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்-பெங்களூர் செல்லும் சாலையில் அந்தனூர் பக்கிரிப்பாளையம் கிராமங்களுக்கு அருகே அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்ற கார் விபத்தில் சிக்கியது. அதில் பயணம் செய்த குழந்தை, பெண்கள் உட்பட 7 பேர் இறந்தனர்.

    இதை தொடர்ந்து அதே பகுதியில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் கடந்த 23-ம் தேதி இரவு நடந்த சாலை விபத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.

    மேலும் இந்த பகுதியில் அடுத்தடுத்து நடந்த விபத்துகளால் 20-க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி விட்டனர்.

    விபத்து நடந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு சொந்தமான விவசாய பண்ணை ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது அந்த பண்ணை செயல்படவில்லை.

    சாலையின் இருபுறமும் அடர்ந்த தைலம் மரங்கள் கருவேல மரங்கள், காட்டு மரங்கள் அதிகமாக உள்ளன. அதனால் மாலை 6 மணிக்கு மேல் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. 20-க்கும் மேற்பட்டோர் பலியான பகுதியில் இறந்தவர்களின் ஆன்மா சுற்றி திரிவதாக அந்த பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.


    மாலை 6 மணிக்கு மேல் அந்த பகுதியில் திடீரென சுழல் காற்று வீசுகிறது. அலறல் சத்தம் கேட்கிறது. சாலையின் குறுக்கே வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் மர்ம உருவம் நடமாடுவது போல அமானுஷ்ய சக்திகள் நடமாட்டம் உள்ளது என அந்த பகுதி மக்களிடையே தகவல் பரவியது.

    இதனால் பொதுமக்கள் விபத்து நடந்த பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். அவ்வழியாக செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

    இந்த பேய் பீதி நாளுக்கு நாள் அங்குள்ள மக்களை முடங்க செய்து வருகிறது. இதனால் வீடுகளின் முன்பு வேப்பிலை கட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும். விபத்தில் உயிர் சேதம் நடைபெறாமல் இருக்க வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பம்பை மேளத்துடன் கோவிலில் இருந்து சாமி ஆயுதங்களுடன் ஊர்வலமாக சென்றனர்.

    விபத்து நடந்த சாலையின் குறுக்கே மஞ்சள், குங்குமம், விபூதி, கற்பூரம் ஏற்றி பூசணிக்காய் உடைத்தனர். மேலும் கோழி பலி கொடுத்து வழிபாடு செய்தனர்.

    • சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.
    • பழைய நோட்டுகளை வங்கியில் மாற்ற ஊர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கண்ணகுருக்கை மேல் நாச்சிப்பட்டு பகுதியில் பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.

    இக்கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, வரவு செலவு சம்பந்தமாக இரு தரப்பினரிடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.

    இதன் காரணமாக உண்டியல் திறக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் திருவிழாவும் நடத்தப்படவில்லை. கோவில் மட்டும் தொடர்ந்து கிராம மக்கள் வழிபாட்டில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் செங்கம் தாசில்தார் முருகன் தலைமையில், பாச்சல் போலீசார் முன்னிலையில் சமரச பேச்சு வார்த்தை கூட்டம் கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. அதில் இருதரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது.

    தொடர்ந்து மீண்டும் கோவில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

    7 ஆண்டுகளாக உண்டியல் திறக்கப்படாததால் அதிலிருந்த பெரும்பாலான ரூபாய் நோட்டுகள் மக்கி நிறம் மாறியதோடு கிழிந்திருந்தது.

    மேலும் 2016-ம் ஆண்டு செல்லாததாக அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளும், சமீபத்தில் செல்லாததாக அறிவித்து மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்ட ரூ.2000 நோட்டுகள் சில இருந்ததாகவும் தெரிகிறது. இந்த பழைய ரூபாய் நோட்டுகளை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உண்டியலில் இருந்து சேதமடையாமல் இருந்த புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறைகள் மட்டுமே எண்ணப்பட்டது.

    மேலும், பழைய நோட்டுகளை வங்கியில் மாற்ற ஊர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    7 ஆண்டுகளாக இருதரப்பு பிரச்சினையால் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்படாமல் அதிலிருந்த பணம் வீணானது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.

    ×