என் மலர்
நீங்கள் தேடியது "சீரக தண்ணீரின் மகத்துவம்"
- சருமம், கூந்தல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
- குறிப்பாக அஜீரணத்தை போக்கும். வயிற்று வலிக்கு தீர்வு தரும்.
தினமும் காலையில் எழுந்ததும் சிறிது சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை பருகும் பழக்கத்தை பின்பற்றுவது நல்லது. அது சருமம், கூந்தல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். குறிப்பாக அஜீரணத்தை போக்கும். வயிற்று வலிக்கு தீர்வு தரும். மேலும் பல்வேறு உடல் நல பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் அமையும்.
ஒரு டீஸ்பூன் சீரகத்தில் 7 கலோரிகளே உள்ளன. இது மற்ற பானங்களுடன் ஒப்பிடும்போது குறைவானதுதான். சீரக தண்ணீரை தொடர்ந்து பருகி வந்தால் செரிமான தொந்தரவு பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதிலும் சீரகத்திற்கு முக்கிய பங்கு உண்டு.
உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை எரித்து உடல் பருமன் பிரச்சினையை போக்கும் தன்மையையும், புற்றுநோயை தடுக்கும் பண்புகளையும் கொண்டது. மேலும் சீரக தண்ணீர் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தக்கூடியது. அதன்மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதையும் தடுக்கும்.
கர்ப்பிணி பெண்களும் டாக்டரிடம் ஆலோசனை பெற்று சீரக நீர் பருகலாம். அது கர்ப்ப காலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவி புரியும். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்திற்கு தேவையான நொதிகளை தூண்டும். அதிக பால் சுரப்புக்கும் வழிவகுக்கும்.
உடல் நலனுக்கு இரும்புச்சத்து மிக அவசியமானது. அதன் குறைபாட்டை போக்க தொடர்ந்து சீரக தண்ணீர் பருகி வருவது நன்மை பயக்கும். மாதவிடாய் காலத்தில் சீரக தண்ணீர் பருகுவதன் மூலம் வலி கட்டுப்படும். சிறந்த வலி நிவாரணியாகவும் செயல்படும்.
நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்கவும் சீரக தண்ணீர் துணைபுரியும். உடல்நலக் குறைவின்போது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும். சிறுநீரக நோயாளிகளும் சீரக தண்ணீர் பருகலாம். காலையில் வெறும் வயிற்றில் அதனை பருகும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க போராடும். சளியை குணப்படுத்தவும் சீரக தண்ணீர் உதவும்.
சீரகத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. ரத்த அழுத்தத்தை சீராக கட்டுப்படுத்த உதவும். உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் செய்யும். பித்தப்பைக்கும் பாதுகாப்பு அளிக்கும். அதனால் கல்லீரலுக்கு நன்மை சேர்க்கும்.
சரும பளபளப்புக்கும் சீரக தண்ணீர் வித்திடும். சீரகத்தில் பொட்டாசியம் மட்டுமின்றி கால்சியம், செலினியம், மாங்கனீசு போன்றவை உள்ளன. அவை சருமத்துக்கு புத்துணர்ச்சி கொடுக்கக்கூடியவை.
சீரக தண்ணீருடன் மஞ்சள் கலந்து முகத்தை கழுவி வரலாம். அது முகத்துக்கு பொலிவு சேர்க்கும். சீரகத்தில் வைட்டமின் ஈ சத்தும் உள்ளது. சீரக தண்ணீரை தொடர்ந்து பருகி வருவதன் மூலம் முன்கூட்டியே முதுமை எட்டிப்பார்ப்பதையும் தவிர்க்கலாம். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முடியை வலுவாக்கும். முடி உதிர்தலையும் தடுக்கும்.