search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்"

    • வேலைநிறுத்த போராட்டம் காரணமாக கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவிற்கு விசைப்படகுகளை இயக்க மாட்டோம் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
    • வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு படகுகளில் செல்ல பதிவு செய்த நபர்கள் ராமேசுவரம் துறைமுகத்திற்கு வரவேண்டாம்.

    மண்டபம்:

    இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இது ராமேசுவரத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும், இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் இந்த ஆண்டிற்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை (23-ந்தேதி) மற்றும் 24-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் இந்திய தரப்பிலிருந்து சுமார் 3 ஆயிரத்து 500 பக்தர்களும், இலங்கை தரப்பிலிருந்து 4 ஆயிரம் பக்தர்களும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது.

    இதற்கிடையே ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடிக்க சென்ற நான்கு மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்தது. இதை கண்டித்து, ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினா் கடந்த சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

    அதைத்தொடர்ந்து இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நாளை 23, 24-ந்தேதிகளில் நடைபெறும் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். வேலைநிறுத்த போராட்டம் காரணமாக கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவிற்கு விசைப்படகுகளை இயக்க மாட்டோம் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து விழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்க போவதில்லை. மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தால் கச்சத்தீவு திருவிழாவுக்கான பயண ஏற்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு படகுகளில் செல்ல பதிவு செய்த நபர்கள் ராமேசுவரம் துறைமுகத்திற்கு வரவேண்டாம்.

    விசைப்படகிற்காக அவர்கள் செலுத்திய பணம் விரைவில் திருப்பித் தரப்படும் என கலெக்டர் விஷ்ணு சந்திரனுக்கு நேற்று கச்சத்தீவு சர்ச் விழா திருப்பயண குழு ஒருங்கிணைப்பாளர் ராமேஸ்வரம் பாதிரியார் சந்தியாகு கடிதம் அனுப்பியுள்ளார். மீனவர்கள் பிரச்சனையால் இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழா புறக்கணிக்கப்பட்டது தமிழக பக்தர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×