என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டிசம் குறைபாடு"

    • ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சி குறைபாட்டால் குழந்தைகளுக்கு உண்டாகும் புற உலகச் சிந்தனை குறைபாடு ஆகும்.
    • அது ஆட்டிச குறைபாடு கொண்ட குழந்தைகள் உருவாவதற்கு வித்திடும் என்று சொல்லப்படுகிறது.

    உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

    உலக ஆட்டிசம் குறைபாடு விழிப்புணர்வு தினம் இன்று (ஏப்ரல் 2) கடைபிடிக்கப்படுகிறது. 2008-ஆம் ஆண்டு முதல், ஐ.நா. சபை ஏப்ரல் 2 -ந் தேதியை உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினமாக அறிவித்தபோது இருந்ததை விட தற்போது ஆட்டிசம் தொடர்பாக மக்கள் மத்தியில் அதிக புரிதல் ஏற்படுத்தியுள்ளது.

    ஆஸ்திரியாவை சேர்த்த லியோ கன்னர் என்பவர்தான் முதன் முதலாக ஆட்டிசம் என்பதை தெரியப்படுத்தியவர். இவர் 1943-ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில், ஆட்டிசம் பாதிப்பு கொண்ட குழந்தைகளின் பிரச்சினைகளை பற்றி கூறியிருந்தார்.

    ஆட்டிசம் (Autism spectrum disorder) என்பது மூளை வளர்ச்சி குறைபாட்டால் குழந்தைகளுக்கு உண்டாகும் புற உலகச் சிந்தனை குறைபாடு ஆகும். மதியிறுக்கம் அல்லது புற உலகச் சிந்தனைக் குறைபாடு என்றும் கூறலாம்.

    இது ஒரு மூளை நரம்பியல் தொடர்பான வளர்ச்சிக் குறைபாடாக இருந்தாலும், மனஅளவில் பல சிக்கல்களால் இக்குழந்தைகள் இடர்படுகிறார்கள். உலக அளவில் 68-க்கு ஒரு குழந்தை ஆட்டிசத்தின் பிடியில் உள்ளது.

    இந்தியாவில் மட்டும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன் உள்ளிட்ட பிரபல விஞ்ஞானிகள் முதல் கலைஞர்கள் உள்ளிட்ட உலகப் பிரபலங்கள் பலருக்கும் ஆட்டிசம் குறைபாடு இருந்துள்ளது.

     ஆட்டிசம் பாதிப்புகளுக்கான அறிகுறிகள் என்ன?

    குழந்தை பிறந்து மூன்று வயது நிறைவடைவதற்கு முன் இக்குறைபாடு ஏற்படும். இக்குறைபாடுடையக் குழந்தைகளின் உடலில் எந்த விதமான குறைபாடும் இருக்காது. அவர்களின் நடத்தையிலேயே குறைபாடுகள் காணப்படும்.

    இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மற்றவர்களுடன் பேசும் மற்றும் பழகும் திறனில் வேறுபாடு இருக்கும். ஒரே மாதிரியான செயலைத் திரும்பத் திரும்பச் செய்வார்கள்.

    தனது உணவுர்களை அழுகை, முனுமுனுத்தல், கூக்குரல்கள் மூலம் வெளிப்படுத்துதல் வாய்மொழியற்ற பிற உணர்வுகள் மூலம் வெளிப்படுத்துதல், இயந்திரக் குரலில் பேசுதல், சமூக தொடர்புகளில் பிரச்சினை மற்றும் மொழித் தொடர்பில் பிரச்சினை, கண்களைப் பார்த்து பேச முடியாதது போன்றவை ஆட்டிசத்துக்கான அறிகுறிகள்.

    இதைதவிர்த்து ஆட்டிசத்தைக் கண்டறிய இதற்கென்று தனிப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் ஏதும் இல்லை. பெற்றோர், ஆசிரியர், உறவினர், குழந்தைகள் நலமருத்துவர், மூளை நரம்பியல் நிபுணர், மனநல மருத்துவர் போன்றவர்களே இந்தக் குறைபாட்டைக் கண்டறிந்து சொல்ல முடியும். நரம்பியல் தொடர்பான ஆட்டிசக் குறைபாடுகளை சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் என்ன குறைபாட்டினால் ஆட்டிசம் ஏற்பட்டது என்பதைக் கண்டறியலாம்.

    இது ஒரு நோய் கிடையாது. குறைபாடு மட்டுமே. சாதாரண குழந்தைகளுக்கு ஒரு முறை சொல்லிக்கொடுப்பதை, கூடுதலாக இரண்டு மூன்று முறை சொல்லிக்கொடுக்கும்போது, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளும் அதைக் கற்றுக்கொள்வார்கள்.

    ஆட்டிசம் குறைபாடு ஏற்பட காரணங்கள் என்ன?

    ஆட்டிசம் வருவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் கிடையாது. மரபு ரீதியாக வரலாம். மதுப்பழக்கம், கருவில் குழந்தையை சுமக்கும்போது ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடாமல் இருப்பது போன்றவற்றாலும் ஆட்டிசம் குறைபாடு ஏற்படலாம்.

    கருவுற்று இருக்கும் காலத்தில் பெண்களிடம் மன அழுத்தம் அதிகமாக இருந்தால், அது ஆட்டிச குறைபாடு கொண்ட குழந்தைகள் உருவாவதற்கு வித்திடும் என்று சொல்லப்படுகிறது.

    அதேபோல் தைராய்டு பிரச்சினை உள்ள பெண்கள், வலிப்பு நோய்க்கு மாத்திரை எடுத்து கொள்ளும் பெண்கள், போலிக் அமிலம் குறைவாக இருக்கும் பெண்களுக்கும், ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்பிருப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆட்டிசம் குறைபாட்டுக்கான தீர்வு என்ன?

    ஆட்டிசம் ஒரு நோய் அல்ல என்பதால் அதற்கான முழுமையான குணப்படுத்தும் முறை கிடையாது. மாறாக பயிற்சிகள் மற்றும் அதிக கவனம் செலுத்தி வளர்ப்பதே ஆட்டிசத்தின் பின்விளைவுகளை குறைப்பதற்கான வழிமுறைகள்

    ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மன இறுக்கத்தை புரிந்து கொண்டு அவர்களை பராமரிப்பு செய்வது நமது கடமை. சமூகத்தில் ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர் சமூக அழுத்தங்களை பொருட்படுத்தாமல் தங்கள் குழந்தைகள் மேல் கவனம் செலுத்துதல் வேண்டும்.

    ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் குறைபாட்டின் விரைவுத்தன்மை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். எனவே, அவர்களுக்கு உள்ள குறைபாடு என்ன? என்பதைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு சிகிச்சை மற்றும் பயிற்சிகள் அளிக்க வேண்டும்.

    அவர்களின் அதிகப்படியான துறுதுறுப்புத் தன்மையைக் குறைப்பதற்கான மாத்திரைகள் உள்ளன. அதேபோல் அவர்களுக்கென்று சில பயிற்சி முறைகளும் உள்ளன.

    பயிற்சி முறைகள்:

    ஆக்குபேஷனல் தெரபி: பல் தேய்த்தல், குளித்தல், சாப்பிடுதல், தூக்கம் போன்ற தினசரிப் பழக்கவழக்கங்களை ஒழுங்குபடுத்தப் பயிற்சிகள் தர வேண்டும். இவைகளைச் சிறு வயதிலேயே குழந்தைகளுக்குப் பயிற்றுவிப்பதன் மூலம் மற்றவர்களைப் போல் தாமாக இயங்க முடியும்.

    பேச்சுப் பயிற்சி: மொழி மற்றும் பேச்சுப் பயிற்சிகளைச் சிறுவயதிலேயே தொடங்கிவிட வேண்டும். பெற்றோர்கள் குழந்தைக்குப் புரியும் விதமாக நிறையவே பேச வேண்டும்.

    ஆட்டிசத்தில் பேச்சுப் பயிற்சியாளின் பங்கு: பயிற்சியின் மூலம் தொடர்புத் திறனை மேம்படுத்துதல், சரளமாக தடையின்றி பேச பயிற்சி அளித்தல், ஒரு வார்த்தை பேசுவதற்கு நாக்கு, மேல்வாய், தாடை மற்றும் உதடுக்கான தொடர்புகளை புரிய வைத்தல் (Aritculaction Skills), உடல் மொழியையும் முக பாவனையும் மேம்படுத்துதல், செய்யும் வேலைகளை குவிந்த கவனத்துடன் செய்யவைப்பது, சமூக தொடர்புகளை மேம்படுத்துவது ஆகியவை அடங்கும்.

    உளவியல் சார்ந்த பயிற்சிகள்: குழந்தைகளுக்கு உடலளவில் மட்டுமல்லாமல், மனத்தளவிலும் நெகிழ்வுத்தன்மை, மற்றவர்களோடு பழகும்முறை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.

    கல்விக்கான பயிற்சிகள்: ஐ.ஈ.பி முறை ஆட்டிசக் குழந்தைகளுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். அதாவது, கல்வித் திட்டத்தை, ஒரு குழந்தை கற்றுக்கொள்ளும் திறன், அதை வெளிப்படுத்தும் திறன் உட்பட, பலவற்றை ஆராய்ந்து அதற்குத் தகுந்தாற்போல் வடிவமைத்துக் கொடுப்பதே ஐ.ஈ.பி ஆகும். இதற்கென்று சிறப்புப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் சேர்த்துக் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும்.

    பெற்றோரின் பங்கு 

    ஆட்டிச பாதிப்பு கொண்ட ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறுவிதமான சவால்களைச் சந்திக்கிறது என்பதால், பெற்றோரும் நிபுணர்களும் சேர்ந்து விவாதித்து, அந்தக் குழந்தைக்குச் சிறந்த, பலன்தரக்கூடிய சிகிச்சை எது என்று தீர்மானிக்கிறார்கள், அதனைத் தொடர்ந்து செயல்படுத்துகிறார்கள்.

    இங்கே கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு விஷயம், ஒரு குழந்தைக்கு நல்ல பலனைத் தரும் ஒரு சிகிச்சை இன்னொரு குழந்தைக்குப் பலன் தராமல் இருக்கலாம், இதற்குக் காரணம் ஆட்டிசம் வெவ்வேறு குழந்தைகளை வெவ்வேறு விதமாகப் பாதிக்கிறது.

    பள்ளியோ, பயிற்சி வகுப்புகளோ குழந்தைகளுக்குத் தேவையான அனைத்தையும் முழுமையாகக் கற்றுக் கொடுத்துவிட முடியாது. பெற்றோரின் பங்கே முதன்மையானது என்பதை, ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோர்கள் உணரவேண்டும்.

    என்னதான் ஆட்டிசத்திற்கு என்று மாத்திரைகள் பல இருந்தாலும் அன்பும், அரவணைப்புமே இதற்கான மருந்துகள். இந்தக் குழந்தைகளுடன் அன்போடு நெருங்கிப் பழகும்போதுதான், அவர்கள் நம்மை நெருங்கி வருவார்கள்.

    எனவே, இவர்களோடு நாம் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்; பூங்கா, கோயில், கடற்கரை, பொருட்காட்சி போன்ற வெளி இடங்களுக்கு அடிக்கடி அழைத்துச் செல்ல வேண்டும். நீச்சல், மிதிவண்டி ஓட்டுதல், யோகா, நடனம் போன்ற பயிற்சிகளை ஆட்டிசக் குழந்தைகளுக்கு அளிக்கும்போது அவர்களின் உடல் திறனை அதிகப்படுத்துவதுடன், தத்தம் வேலைகளைத் தாமே செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையும் வளர்கிறது.

    • மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
    • தேர்வு எழுதுவதில் சில முன்னுரிமைகளை அரசு வழங்குகிறது.

    இது பள்ளி இறுதித்தேர்வுக்கான காலகட்டம். 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிவிட்ட நிலையில், 10 வகுப்பு தேர்வுகள் தொடங்க உள்ளன. சாதாரண மாணவர்களைப் போல மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். எனவே அவர்களுக்கு தேர்வு எழுதுவதில் சில முன்னுரிமைகளை அரசு வழங்குகிறது.

     மாற்றுத்திறனாளி மாணவர்களை 18 வகையாக வகைப்படுத்தி உள்ளனர். மெல்ல கற்போர், செவித்திறன் குறைபாடு உடையோர், பார்வை திறன் குறைபாடு உடையோர், ஆட்டிசம் குறைபாடு உள்ளோர், போலியோவால் பாதிக்கப்பட்டோர், வாய் பேச முடியாதோர் போன்றவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு எழுதுவதிலும், செய்முறைத்தேர்வு எழுதுவதிலும், சில சலுகைகளையும், விலக்குகளையும் அளிக்கிறது. அவை...

     1. தேர்வு நேரத்தில் கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்குவது.

    2. சொல்லுவதை எழுதுவதற்கு தனியாக ஆசிரியரை (ஸ்கிரைப்) நியமித்தல்.

    3. மொழித்தாள்களான ஆங்கிலம் அல்லது தமிழ் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றுக்கு மாணவனின் விருப்பத்தின் பேரில் விலக்கு அளித்தல்.

    4. செய்முறைத் தேர்வுகளுக்கு விலக்கு கோருதல்.

    5. தேர்வின்போது உபயோகப்படுத்தப்படும் கால்குலேட்டர், அச்சடிக்கப்பட்ட அட்டவணைகள் போன்றவற்றுக்கு அனுமதி அளித்தல்.

     6. தேர்வு எழுதுவதற்கு உதவியாளராக (ஸ்கிரைப்) தன்னுடைய தாய் அல்லது தந்தை அல்லது தனக்கு தனியாக கற்பித்த ஆசிரியரை நியமித்துக்கொள்ள உரிமை.

    7. மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அவர்கள் எளிதில், தேர்வு எழுதும் அறையை அடைய சாய்தள வசதி.

    8. மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தரைத்தளத்திலேயே அவர்களின் பதிவெண் வருமாறு அமைத்துக் கொடுத்தல்.

     இதுபோன்ற பல சலுகைகளை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசு வழங்கி வருகிறது. இவற்றை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட மாற்றுத் திறன் அலுவலகத்தை அணுகி மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை பெற்று இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி என்பதற்கான மருத்துவக் குழு பரிந்துரைத்த மருத்துவச் சான்றும் பெற்றிருக்க வேண்டும். இச்சான்றுகளை வைத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்டக் கல்வி அதிகாரிக்கு எழுதி அனுப்பினால் அதற்கான அனுமதி பெற்று தரப்படும்.

    பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்போ, தேர்வு நடக்கும்பொழுதோ விபத்து நடந்து எழுத முடியாத சூழல் ஏற்பட்டாலும் அந்த மாணவர், மருத்துவரின் சான்றிதழின் பேரில் தலைமை ஆசிரியருக்கு விண்ணப்பித்து, தான் சொல்லுவதை எழுதுகின்ற ஆசிரியரை (ஸ்கிரைப்) நியமித்து தேர்வு எழுதலாம்.

    ×