search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவெக விஜய்"

    • அரசியலில் வெற்றியின்றி காணாமல் போனவர்களும் உண்டு.
    • பெரியாரை தவிர்த்து அரசியல் செய்வது எளிய காரியமில்லை.

    தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையை பிரிக்கவே முடியாது. திரைப் பிரபலங்களாக இருந்து அரசியலில் சாதித்தவர்கள் தமிழகத்தில் அதிகம். இதே போன்று பிரபலங்களாக இருந்தும், அரசியலில் வெற்றியின்றி காணாமல் போனவர்களும் உண்டு.

    திரைத்துறை சார்பு மட்டுமின்றி தமிழக அரசியலில் இன்றும் பெருமளவு வாக்கு வங்கி பெரியார் மற்றும் திராவிட சித்தாந்தங்களின் அடிப்படையில் தான் சுழல்கிறது. திராவிட சித்தாந்தம் கொண்டவர்களால் பெரியார் மண் என்று அழைக்கப்படும் தமிழ் நாட்டில்- திராவிடம், பெரியார், சமூக நீதி, சமத்துவம் போன்றவற்றை தவிர்த்து அரசியல் செய்வது எளிய காரியமில்லை.


     

    பெரியார் வழி வந்த தமிழக அரசியல் தலைவர்களான அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் திராவிட சித்தாந்தம் பேசியே தமிழக அரசியலில் சாதித்தனர். தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சியாக உள்ள அதிமுக-வும் திராவிடம் மற்றும் சமத்துவ கொள்கைகளை பேசியே மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ளது.

    இடையில் திரைத்துறையில் இருந்து அரசியலில் களமிறங்கிய நடிகர் கேப்டன் விஜயகாந்த். இவரும் கூட தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்ததோடு, திராவிட கொள்கைகளை ஒட்டியே தனது அரசியல் பயணம் மேற்கொண்டார். உணர்ச்சிகர பேச்சு, வெளிப்படைத் தன்மை காரணமாக தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்த விஜயகாந்த் தமிழ்நாடு சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராகவும் உயர்ந்து வெற்றி பெற்றார்.


     

    அந்த வரிசையில், தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக உள்ள விஜய்- தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ளார். இதுவரை கட்சி பெயர், கொடி மற்றும் அறிமுக பாடலை மட்டும் வெளியிட்டுள்ள விஜய், தனது கட்சியின் கொள்கை பற்றி இதுவரை பேசவில்லை. தமிழக அரசியலில் புதுவரவு கட்சியான "தமிழக வெற்றிக் கழகம்" 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறது.

    அரசியல் கட்சி தொடர்பான முதல் அறிவிப்பில் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற சமத்துவ கொள்கைப்பற்று கொண்டிருப்போம் என்று உரக்க தெரிவித்தார் விஜய். அதன்பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அறிக்கைகள் அனைத்திலும் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பது அக்கட்சியின் வாசகமாக இடம்பெற்று வருகிறது.

    விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றிக் கழக கட்சியின் ஒவ்வொரு நகர்வுகளையும் உற்று நோக்கும் போது, அவர் திராவிட வழியில் பயணம் செய்வதாகவே தெரிகிறது. இதனை விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி பொது நிகழ்வுகளுக்கு கூறும் வாழ்த்து செய்திகளும் அப்பட்டமாக எடுத்துக் காட்டியுள்ளன. மேலும், மாணவர்களிடையே பேசிய விஜய் அவர்களிடம், அம்பேத்கர், பெரியார் பற்றி படிக்க வலியுறுத்தி இருந்தார்.


     

    இந்த வரிசையில், பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளில் அவரது நினைவிடம் அமைந்துள்ள பெரியார் திடலுக்கு நேரில் சென்ற பெரியார் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக பொது இடத்தில் விஜய் நேரில் சென்று மரியாதை செலுத்தி இருக்கிறார்.

    அரசியல் தலைவராக முதல்முறை பொது நிகழ்வை தந்தை பெரியார் பிறந்த நாளில் அவரது நினைவிடத்தில் விஜய் நடத்தி இருப்பது தமிழக அரசியலில் பல்வேறு கேள்விகளுக்கு வழி வகுத்துள்ளது. இதுவரை விஜய் மேற்கொண்டு வரும் அரசியல் நகர்வுகள் சமத்துவம், சமூக நீதி ஆகிய கருத்துக்களை சார்ந்தே இருந்து வந்துள்ளது.

    தமிழக அரசியலில் திராவிடம், சமூகநீதி, சமத்துவம் தவிர்த்து பிரதான கட்சியாக வளர்ச்சி பெற முடியாது என்பதில் விஜய் கவனமுடன் செயல்பட்டு வருவதையே இவை உணர்த்துகின்றன. அரசியலில் தனது சீனியர்கள் பயணத்த பாதை, தமிழக அரசியல் வரலாறு ஆகியவற்றை கூர்ந்து கவனிக்கும் நபராக விஜய்யின் அரசியலை பார்க்க முடிகிறது.


     

    தமிழகத்தில் திராவிடம், கடவுள் மறுப்பு, சமூகநீதி கருத்துக்களை பேசி வரும் ஆளும் கட்சியான திமுக, பெயரளவில் திராவிட, சமூகநீதி கருத்துக்களை வலியுறுத்தும் அதிமுக, தமிழ் தேசம் பேசும் நாம் தமிழர் என அரசியல் கட்சிகளின் பயணத்தை நாம் வரையறுக்கலாம். 

    இந்த நிலையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை, திராவிடம், சமூகநீதி ஆகியவற்றை வலியுறுத்துமா? ஆன்மிக அரசியல் குறித்து விஜய் என்ன நிலைப்பாடு கொண்டுள்ளார்? தமிழக அரசியலில் அவர் முன்னெடுக்கப் போகும் பாதை எதை சார்ந்து இருக்கும்? என அரசியல் விமர்சகர்கள், தலைவர்கள், பொது மக்கள் மற்றும் அவரது ரசிகர் பட்டாளம் என ஒட்டுமொத்த தமிழகத்தின் கேள்விகளுக்கு விஜயின் முதல் அரசியல் மாநாட்டில் பதில் கிடைக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்..!

    • பெரியார் நினைவிடம் வந்த விஜய் அமைதியாக மரியாதை செலுத்தினார்.
    • விசிக தலைவர் தொல் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை எழும்பூர் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய் பொது வெளியில் தலைவர் ஒருவருக்கு நேரில் மரியாதை செலுத்தி இருப்பது இதுவே முதல்முறை ஆகும். இன்று காலையே பெரியார் நினைவிடம் வந்த விஜய் அமைதியாக மரியாதை செலுத்தி, அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

    இந்த நிலையில், பெரியார் பிறந்தநாளில் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய விஜய்-க்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான பதிவில், "தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்பு இளவல் விஜய் அவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறேன். தந்தை பெரியாரின் பிறந்தநாளான சமூகநீதி நாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர்த்தூவி வணக்கம் செலுத்தியிருப்பது அவர் விளிம்புநிலை மக்களுக்கானவர் என்பதையும் அவருக்கு சமத்துவமே இலக்கு என்பதையும் உணர்த்துகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • அவருடன் செல்கிறேன் என்று கூறிக் கொண்டு இருக்க முடியாது.
    • நான் என் மக்களை முழுமையாக நம்புகிறேன், நேசிக்கிறேன்.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 2026 சட்டமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறார். முன்னதாக நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய்யுடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விகளுக்கு நேரடி பதில் அளிப்பதை சீமான் தவிர்த்து வந்த நிலையில், தற்போது தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

    நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சீமான் 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, "நான் தனித்து போட்டியிடுகிறேன். என்னுடன் சேர வேண்டுமா என்பதை மற்றவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நானாக இவருடன் செல்கிறேன், அவருடன் செல்கிறேன் என்று கூறிக் கொண்டு இருக்க முடியாது."

    "நான் பிரபாகரன் மகன், என் பாதை தனி, என் பயணமும் தனி, என் இலக்கு தனி. எனக்கு ஒரு கனவு இருக்கிறது. என் நாட்டை எப்படி படைக்க வேண்டும் என்று என் முன்னோர்கள் தூக்கி சுமந்த கனவு அது. பூமியின் சொர்க்கமாக என் நாட்டை படைக்க நான் ஆசைப்படுகிறேன். அதற்கு இவரோடு சேரலாம், அவரோடு சேரலாம் என்றில்லை."

    "என்னுடன் சேர்ந்தால் நாடும் மக்களும் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் வாருங்கள். இல்லையெனில் விடுங்கள். ஒரு தலைவனுக்கு முதல் தகுதி, தன் மண்ணையும், மக்களையும் முழுமையாக நேசிக்க வேண்டும். நான் என் மக்களை முழுமையாக நம்புகிறேன், நேசிக்கிறேன். அதனால் நான் தனித்து போட்டியிடுகிறேன்," என்று தெரிவித்தார். 

    • மாநாடு தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    • தளபதி மாநாடு நடத்துவதற்கு எந்த தேதியை அறிவிக்கிறாரோ அந்த நாள் எங்களுக்கு வெற்றி திருநாள்.

    விக்கிரவாண்டி:

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.

    அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இந்த அறிவிப்புக்கு பிறகு கட்சியின் முதல் மாநாட்டை நடத்த நடிகர் விஜய் தீவிரம் காட்டினார்.

    இதற்காக முதல் கட்டமாக அவர், கடலூரில் உள்ள பிரபல ஜோதிடர் சந்திரசேகரிடம் கட்சி கொடி மற்றும் மாநாடு நடத்த தேதி ஆகியவை குறித்து கேட்டதாக தெரிகிறது.

    அதன்படி, நடிகர் விஜய் கடந்த ஆகஸ்டு 22-ந் தேதி கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி, முதல் மாநாட்டில் கட்சியின் கொள்கை, கொடியின் விளக்கம், கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து விளக்குவதாக அறிவித்தார். இது விஜய் கட்சியின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

    இதைத் தொடர்ந்து சேலம், திருச்சி உள்ளிட்ட சில இடங்களில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மாநாடு நடத்துவதற்கான இடத்தை பார்வையிட்டனர்.

    இதனால் மாநாடு எங்கு நடைபெறும் என்ற ஆர்வம் மேலோங்கியது. இப்படி இருக்கும் பட்சத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் வருகிற 23-ந் தேதி மாநாடு நடத்துவதற்கு பாதுகாப்பு அளித்திட அனுமதி கேட்டு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி அக்கட்சியினர் மனு அளித்தனர். இதையடுத்து 21 கேள்விகள் பட்டியலிடப்பட்டு தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு கடந்த 2-ந் தேதி விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் கடிதம் அனுப்பியிருந்தார்.

    தொடர்ந்து போலீசார் கேட்ட 21 கேள்விகளுக்கான பதிலை கடிதமாக புஸ்சி ஆனந்த் கடந்த 6-ந் தேதி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேசிடம் அளித்தார். அதன் பிறகு மாநாட்டுக்கு அனுமதி வழங்கி 33 நிபந்தனைகளுடன் கூடிய கடிதம் ஒன்றை கடந்த 8-ந் தேதி காவல்துறை வழங்கியது.

    இதற்கிடையில் முதல் மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்த பல்வேறு கெடுபிடி போடப்பட்டதால், அதற்கான பணிகள் தொடங்காமல் உள்ளது. மேலும் 23-ந் தேதி திட்டமிட்டபடி மாநாடு நடைபெறுமா? என்ற சூழல் உருவானது.

    இது ஒருபுறம் இருக்க விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஜய் கட்சியினர் சுவர் விளம்பரங்களில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இந்த சூழ்நிலையில் மாநாட்டிற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் என்று தொண்டர்களுக்கு நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இதனால் மாநாடு தேதி தள்ளிப்போவது உறுதியானது.

    இதுகுறித்து, கட்சி நிர்வாகிகள் கூறுகையில், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் உள்ள நிலங்களின் உரிமையாளர்கள் 27 பேரிடம் மாநாடு நடத்த செப்டம்பர் 23-ந் தேதி வரை ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. மொத்தம் 85 ஏக்கர் நிலத்தில், ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் கொடுப்பதாக கூறி ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த நிலையில் ஒப்பந்த காலம் 23-ந் தேதியுடன் முடிவடைவதால், ஒப்பந்த தேதியை நீட்டிக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது என்றனர்.

    மேலும் நடிகர் விஜய்யின் ஜாதகப்படி மாநாட்டை அக்டோபர் மாதம் 20-ந் தேதி முதல் 27-ந்தே திக்குள் நடத்தலாம் (அதாவது ஐப்பசி முதல் வாரத்தில்) என ஜோதிடர் ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீண்டும் கடலூர் ஜோதிடரை இந்த வாரத்தில் சந்திக்க உள்ளதாகவும், அதன் பிறகு மாநாடு தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இது குறித்து மாவட்டத் துணைத் தலைவரும், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான பனையபுரம் வடிவேல் கூறியதாவது:-

    தளபதியின் தமிழக வெற்றி கழக கட்சியின் அரசியல் முதல் மாநாடு எங்களது மாவட்டத்தில் நடத்துவதற்கு இடம் தேர்வு செய்த எங்கள் தளபதிக்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம்.

    எங்கள் தளபதி மாநாடு நடத்துவதற்கு எந்த தேதியை அறிவிக்கிறாரோ அந்த நாள் எங்களுக்கு வெற்றி திருநாள். அன்று மாநாட்டு வெற்றி திருவிழாவை எங்கள் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து வெற்றிகரமாக நடத்தி காட்டுவோம். எங்கள் தளபதியின் உத்தரவுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம் என்றார்.

    பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கியது. மதராஸ் மாநிலம் என்ற பெயரைத் தமிழ்நாடு' என மாற்றியது. தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்தியது என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில், அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மாநாட்டிற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
    • விஜய் முக்கிய அறிவிப்பு வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாகிகளுக்கு மாநாடு குறித்த முக்கிய அறிவிப்பு நாளை காலை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கிய அறிவிப்பு அடங்கிய அறிக்கையை தவெக தலைவர் விஜய் நாளை காலை 11 மணி அளவில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த அறிக்கையில் மாநாடு குறித்த முக்கிய தகதவல் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இம்மாதம் 23 ஆம் தேதி தவெக கட்சியின் மாநில மாநாடு நடைபெற திட்டமிடப்பட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடத்துவதற்கு சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 'சாலை' என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மாநாடு நடக்க உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்பு வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் மாநில மாநாடு தொடர்பான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
    • மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து இந்த ஆண்டு துவக்கத்தில் அறிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து கட்சியின் பெயர்- தமிழக வெற்றிக் கழகம் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு, கட்சி கொடி மற்றும் அறிமுக பாடல் உள்ளிட்டவை வெளியிடப்பட்டன.

    இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்து இருந்தார். அதன்படி நடிகர் விஜய், தமிக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு தொடர்பான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி சாலையில் மாநாடு நடத்துவதற்காக 85 ஏக்கர் நிலத்தை அக்கட்சியினர் தேர்வு செய்துள்ளனர். இங்கு வருகிற 23 ஆம் தேதி மாநாடு நடைபெற இருப்பதாகவும், அதற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் அக்கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

    இதனிடையே மாநாடு நடத்த அனுமதி அளிப்பது தொடர்பாக 21 கேள்விகளை போலீசார் கேட்டு இருந்தனர். போலீசார் கேட்ட 21 கேள்விகளுக்கும் விஜய் தரப்பு நேற்று பதிலளித்தது. இந்த பதில் மனுவிற்கு ஓரிரு நாட்களில் போலீசார் பதிலளிப்பதாக தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறினார்.

    இந்த நிலையில், த.வெ.க. கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சி தலைவர் விஜய் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நளை காலை 11.17 மணிக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடக்கும் தேதியை விஜய் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    • நாடு முழுக்க அரசு மருத்துவமனைகள் உள்ளன.
    • ஏற்கனவே பதிவு செய்திருந்தால் தான் அங்கு சிகிச்சை பெற முடியும்.

    தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், சமீபத்தில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான எச். ராஜா நடிகர் விஜயை தான் விமர்சிக்கவில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.

    இது குறித்து பேசிய அவர், "நான் நடிகர் விஜயை விமர்சிக்கவே இல்லை. அவர் தன்னோட மெர்சல் படத்தில் சொன்ன பொய்யை தான் விமர்சித்தேன். நாடு முழுக்க கல்வி மற்றும் மருத்துவம் இலவசமாகவே வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் ஏழைகள் கல்வி கற்க அரசு பள்ளிகளில் கல்வி இலவசம். நாடு முழுக்க அரசு மருத்துவமனைகள் உள்ளன. அங்கு இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது."

    "மலேசியா, சிங்கப்பூரில் நம் நாட்டில் இருப்பது போல் எளிதில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாமா. ஏற்கனவே பதிவு செய்திருந்தால் தான் அங்கு சிகிச்சை பெற முடியும். எனவே அங்கு இலவசமாக இருக்கிறது, இங்கு இலவசமாக இல்லை என்று சொன்ன பொய்க்கு எதிராக நான் அறிக்கை கொடுத்திருந்தேன்."

    "நான் விஜய்-க்கு எதிராக அறிக்கை கொடுக்கவில்லை. அந்த படத்தில் சொல்லப்பட்ட பொய், அதை உண்மை என நம்பவைக்க முயற்சித்ததை பன்ச்சர் செய்திருப்போம். அவ்வளவு தான். விஜய் கட்சி ஆரம்பிக்கும் போது, நான் வாருங்கள் என்று கூறிவிட்டேன். 18 வயது நிரம்பிய அனைவருக்கும் மக்கள் பணி செய்யும் உரிமை இருக்கு, அவர் செய்கிறார். தற்போது கோவிலுக்கு சென்றிருக்கிறார், வரவேற்கிறோம். நான் அவர் கட்சி ஆரம்பிக்கும் போதே வரவேற்றிருக்கிறேன்," என்று தெரிவித்தார்.

    • தமிழக வெற்றிக் கழம் கட்சி கொடி சில நாட்களில் அறிமுகமாகிறது.
    • த.வெ.க. கொடி அறிமுக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வருகிற 22 ஆம் தேதி கட்சி கொடி அறிமுக விழா நடைபெற உள்ள நிலையில், கொடியேற்றி ஒத்திகை செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

    எனினும், இது தான் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. வருகிற 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை விஜய் அறிமுகம் செய்ய இருக்கிறார். இதற்காக சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடி அறிமுக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மேலும், 45 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. கட்சி கொடி அறிமுக விழாவில் பங்கேற்க தொகுதி வாரியாக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • புதிய அரசு ஆட்சி அமைக்க குடியரசு தலைவரிடம் உரிமை கோரியது.
    • குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்தியாவில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஆட்சி அமைக்கும் பணிகளில் மும்முரம் காட்டிய தேசிய ஜனநாயக கூட்டணி பிரதமர் மோடி தலைமையில் புதிய அரசு ஆட்சி அமைக்க குடியரசு தலைவரிடம் உரிமை கோரியது.

    இதை ஏற்றுக் கொண்ட குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நரேந்திர மோடியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

     


    பிரதமர் மோடியை தொடர்ந்து 72 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்றுக் கொண்ட பிரதமர் மோடிக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்றுக் கொண்ட திரு. நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார். 


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கடந்த மாதம் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
    • புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் விஜய் நியமனம் செய்தார்.

    விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது வரை 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கினார் நடிகர் விஜய். இதைத் தொடர்ந்து கட்சியின் சின்னம், கொடி வடிவமைப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த கட்டமாக கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு செயலி மூலம் புதிய உறுப்பினர்கள் கட்சியில் சேர்க்கப்படுகின்றனர் என அறிவித்த விஜய் முதல் உறுப்பினராக கட்சியில் சேர்ந்தார்.

    இந்நிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் விஜய் நியமனம் செய்தார்.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை கடந்த 8-ம் தேதி சிறப்பு செயலி மூலம் தொடங்கியது. தொடங்கிய 3 நாட்களில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

    • 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம்.
    • சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

    தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கடந்த மாதம் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். இதைத் தொடர்ந்து கட்சியின் சின்னம், கொடி வடிவமைப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த கட்டமாக கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இதையொட்டி விஜய் ஆலோசனையின் பேரில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்வாகிகளுடன் நேரடியாகவும், தொலைபேசி மூலமும் ஆலோசனை நடத்தி உறுப்பினர் சேர்க்கைக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வந்தார்.

    இந்நிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் விஜய் நேற்று நியமனம் செய்தார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றோம். 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம்.

    இதன் முதற்கட்டமாக உறுப்பினர்கள் சேர்க்கை அணியை உருவாக்கியுள்ளோம். மகளிர் தலைமையில் முதன் முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினர் கழக தோழர்களோடு இணைந்து மக்களுக்கு உதவி செய்வார்கள்" என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை இன்று மாலை சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

    உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு செயலி மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

    முதல் உறுப்பினராக கட்சி தலைவர் விஜய் சேர்ந்தார். இதன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    வீடியோவில், "தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக நான் பதிவு செய்துவிட்டேன், நீங்களும் பதிவு செய்ய வேண்டும்" என தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும்,"வாட்ஸ் அப், டெலிகிராம், தொலைபேசி எண் வாயிலாகவும் கட்சியில் உறுப்பினராக இணையலாம் எனவும், தமிழ்நாட்டு வெற்றிக்கான நமது பயணத்தில் தோழர்களாய் ஒன்றிணைவோம்" எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    ×