என் மலர்
நீங்கள் தேடியது "சுரேந்திரன்"
- ராகுல்காந்தியை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் கம்யூனிஸ்டு வேட்பாளராக ஆனிராஜா களமிறக்கப்பட்டுள்ளார்.
- யாரும் எதிர்பார்க்காத வகையில் கேரள மாநில பா.ஜனதா தலைவர் சுரேந்திரன் களம் இறக்கப்பட்டு உள்ளார்.
திருவனந்தபுரம்:
பாராளுமன்ற தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்று கேரள மாநிலம் வயநாடு. இங்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் களம் இறங்குகிறார். கடந்த முறை அமேதி மற்றும் வயநாட்டில் போட்டியிட்ட அவர், அமேதியில் தோல்வியடைந்தார். அதே நேரம் வயநாட்டில் வெற்றி பெற்றார். எனவே வருகிற தேர்தலிலும் அவர் வயநாட்டில் போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவித்தது.
இதனை தொடர்ந்து அவரது வெற்றிக்காக காங்கிரஸ் கட்சியினர் தற்போதே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல்காந்தி பாரத் ஜோடா யாத்திரை முடிந்ததும் வயநாடு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இதுவரை வரவில்லை. இருப்பினும் வேட்பு மனு தாக்கலுக்காக அவர் விரைவில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வருகையை பெரிய நிகழ்வாக மாற்ற காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கேரளாவில் 2-ம் கட்ட தேர்தலான ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
ராகுல்காந்தியை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் கம்யூனிஸ்டு வேட்பாளராக ஆனிராஜா களமிறக்கப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் கேரளாவில் காங்கிரசும் கம்யூனிஸ்டும் தனித்தனியாக எதிர்த்து களமிறங்குகின்றன. ஆனிராஜா ஏற்கனவே தொகுதி முழுவதும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்த தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் களம் இறங்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கேரள மாநில பா.ஜனதா தலைவர் சுரேந்திரன் களம் இறக்கப்பட்டு உள்ளார்.
அவர் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஆரம்பத்திலேயே கூறி வந்த நிலையில் திடீரென வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், வயநாட்டில் ராகுலை வீழ்த்த வலுவான வேட்பாளரை களமிறக்க கட்சி திட்டமிட்டதால், தன்னை போட்டியிட வலியுறுத்தியதாகவும் அதனை ஏற்று களம் இறங்குவதாகவும் தெரிவித்தார். கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு என்ன முடிவு கிடைத்ததோ, அது இந்த தேர்தலில் வயநாட்டிலும் கிடைக்கும். இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்கள் ஏன் ஒரே தொகுதியில் போட்டியிடுகிறார்கள் என்று மக்கள் தற்போதே கேள்வி எழுப்ப தொடங்கி விட்டனர். இது வாக்குப்பதிவின் போது நிச்சயம் வெளிப்படும். இன்று மாலை வயநாட்டில் ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்க உள்ளேன் என்றும் அவர் கூறினார்.
கேரளாவில் 3 முக்கிய தலைவர்கள் களம் இறங்கி உள்ளதால் வயநாடு தொகுதி எதிர்பார்க்கப்படும் முக்கிய வி.ஐ.பி. தொகுதியாக மாறி உள்ளது.
- கேரள மாநிலத்தில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தொகுதி வயநாடு மக்களவை தொகுதி.
- வயநாடு தொகுதியில் இருகட்சிகளும் தனித்தனியாக களம் காணுகின்றன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கிவிட்ட நிலையில், தற்போது அந்த பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்டு கட்சிகள் அறிவித்துவிட்டன. இதையடுத்து கட்சி வேட்பாளர்கள் தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட பிரதான கட்சிகளின் தலைவர்கள் ஏப்ரல் மாதம் தொடங்கியதும், கேரள மாநிலத்தில் பிரசாரம் செய்ய உள்ளனர். கேரள மாநிலத்தில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தொகுதி வயநாடு மக்களவை தொகுதி.
அதற்கு காரணம் அந்த தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக உள்ள ராகுல் காந்தியே, இந்த முறையும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். மேலும் இந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளரான டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் களம் காணுகிறார்.
இதன்காரணமாக இந்த தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியிருக்கிறது. காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டுகட்சிகள் இந்திய அளவில் ஒரே கூட்டணியில் இருக்கும் நிலையில், வயநாடு தொகுதியில் இருகட்சிகளும் தனித்தனியாக களம் காணுகின்றன. அவர்களுடன் வயநாடு தேர்தலில் களம் காணப்போகும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் யார்? என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில், அக்கட்சியின் மாநில தலைவரான சுரேந்திரனே அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
வயநாடு தொகுதியை பொறுத்தவரை 2009-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்த தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போதைய தேர்தலில் ராகுல்காந்தியை, சுரேந்திரன் எதிர்கொள்ள உள்ளார்.
சுரேந்திரன் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பத்தினம்திட்டாவில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு அடுத்த படியாக மூன்றாவது இடத்தை பிடித்தார். மேலும் அவர் 2016-ம் ஆண்டு நடந்த சட்மன்ற தேர்தலில் மஞ்சேஸ்வரம் தொகுதியில் போட்யிட்டு வெறும் 89 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலிலும் சுரேந்திரன் போட்டியிட்டார். அந்த தேர்தலிலும் அவர் தோல்வியடைந்தார். இந்நிலையில் தான் 2020-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அடுத்தடுத்து பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய சுரேந்திரனுக்கு தற்போது வயநாடு தொகுதியில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சி வாய்ப்பு வழங்கியிருக்கிறது.
அவர் வயநாடு தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிடும் ராகுல் காந்தி மற்றும் ஆனி ராஜா ஆகியோருக்கு சவால் விடும் வகையில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருவதாக பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, பாரதிய ஜனதா ஆகிய மூன்று கட்சிகளுமே வயநாடு தொகுதியை கைப்பற்றி விடவேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அங்கு நிலவும் முன்முனைப் போட்டியில் வெற்றி பெறப்போவது யார்? என்பது தேர்தல் முடிவு வந்தபிறகே தெரியவரும்.