என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியர்க்குருவிற்கு வீட்டு வைத்தியம்"

    • பாக்டீரியாக்களால் அடைப்பு ஏற்படும் போது வேர்க்குரு உண்டாகிறது.
    • காற்றோட்டமான குளிர்ந்த படுக்கை அறையில் தூங்க வேண்டும்.

    வேர்க்குரு அல்லது வெப்ப சொரி என்பது மருத்துவ ரீதியாக மிலியாரியா என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படுகிறது. முகம், கழுத்து, மார்பு, இடுப்பு, அக்குள் மற்றும் தொடைகளில் வேர்க்குரு பொதுவாகக் காணப்படுகிறது.


    கோடை காலத்தில் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக வியர்வை சுரப்பிகளில் இறந்த தோல் செல்கள் மற்றும் ஸ்டெபைலோகாக்கஸ் எபிடெர்மிடிஸ் போன்ற பாக்டீரியாக்களால் அடைப்பு ஏற்படும் போது வேர்க்குரு உண்டாகிறது.

    இது மிலியாரியா கிரிஸ்டலினா (படிக வேர்க்குரு), மிலியாரியா ருப்ரா (சிவப்பு வேர்க்குரு), மிலியாரியா ப்ரோஃபுண்டா (உட்புற வேர்க்குரு) என்று மூன்று வகைப்படும். வேர்க்குரு ஏற்பட கீழ்க்கண்டவை முக்கிய காரணிகளாகும்.

    வியர்வை சுரப்பிகள் முதிர்ச்சி அடையாத நிலை (பிறந்த குழந்தைகள்), அதிக வெப்பமான அல்லது ஈரப்பதமான சூழல், காய்ச்சல், தீவிர உடற்பயிற்சி, மரபணு காரணங்கள், மருந்துகளின் பக்க விளைவுகள் (டையூரிடிக்ஸ்), உடல் பருமன், நீரிழிவு நோய், புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம்.

    சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலோருக்கு காணப்படும் நரம்பு பாதிப்பு (நியூரோபதி) மற்றும் ரத்த நாளங்களின் அடைப்புகளால் (பெரிபெரல் வாஸ்குலர் நோய்) தோல் வறட்சி உண்டாகி வேர்க்குரு ஏற்பட வழி வகுக்கிறது.


    இதனை தடுக்க கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:

    காற்றோட்டமான குளிர்ந்த படுக்கை அறையில் தூங்க வேண்டும். ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை தவிர்த்து மெல்லிய பருத்தியாலான தளர்வான ஆடைகளை அணியவும். பாலியஸ்டர் துணிகளை அணிய கூடாது. சருமத்திற்கு எரிச்சலூட்டும் வாசனை சோப்பு மற்றும் இதர அழகு சாதன பொருட்களை தவிர்க்கவும்.

    வெயில் காலங்களில் ஏற்படும் நீர் இழப்பைத் தடுக்க குறைந்த பட்சம் தினமும் 3 அல்லது 4 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். வெயிலில் குறிப்பாக மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படி கண்டிப்பாக செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால், குடை அல்லது தொப்பியை பயன்படுத்த வேண்டும்.


    உடலை நீரேற்றமாக வைத்திருங்கள். நீர்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, வெள்ளரிக்காய் ஆகியவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள். தினமும் குறைந்த பட்சம் இரண்டு முறையாவது குளிக்க வேண்டும். புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும்.

    பெரும்பாலும் வேர்க்குரு குளிர்ந்த சூழலுக்கு மாறும் போது தானாகவே சரியாகிவிடும். அரிப்பு குறையவில்லையெனில் மருத்துவரை கலந்தா லோசித்து காலமைன் லோஷன் அல்லது ஸ்டீராய்ட் கிரீம்களை பயன்படுத்தலாம்.

    • ஒருபுறம் வெயில் என்றால், மறுபுறம் வியர்க்குரு.
    • மக்கள் முடிந்த வரை வீட்டில் இருப்பது தான் நல்லது.

    பத்து நிமிடங்களுக்கு மேல் வெயிலில் நின்றாலே மழையில் நனைந்ததுபோல வதைக்கிறது வியர்வை. கொட்டும் வியர்வை, ஆடைகளையும் தொப்பலாக நனைத்துவிடுகிறது. வெயிலின் உக்கிரம் ஒவ்வொரு வருடமும் அதிகமாகிக்கொண்டே போய் தாங்கிக்கொள்ளவே முடியாததாக ஆகிவிடுகிறது. ஒருபுறம் வெயில் என்றால், மறுபுறம் வியர்க்குரு. தட்பவெப்பநிலைக்கு ஏற்ப உணவு முறைகள், நடைமுறை பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் வியர்க்குருவை எதிர்கொள்ளலாம்.

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். கோடைகாலமும் ஆரம்பிக்க உள்ளதால் மக்கள் முடிந்த வரை வீட்டில் இருப்பது தான் நல்லது. இந்நிலையில் வெப்பத்தால் வரும் வியர்க்குருவை தடுப்பதற்கு அனைவரும் பின்பற்ற வேண்டிய வைத்திய முறைகளை பார்க்கலாம்.

     வியர்க்குரு

    உடலின் வெப்பநிலையைப் பராமரிப்பவை வியர்வைச் சுரப்பிகள். உடல் வெப்பம் அதிகமாகும்போது, வியர்வைச் சுரப்பிகள் தேவைக்கு அதிகமாக உடலில் தேங்கும் உப்பு, கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும். இந்த வியர்வைச் சுரப்பிகளின் வாயிலில் தூசி, அழுக்கு படிந்து அடைத்துக்கொள்வதால் தோன்றுகிறது வியர்க்குரு.

    எப்படி தடுப்பது...?

    * உடலுக்கு குளுமை அளிக்கும் சந்தனத்தை கொஞ்சம் மஞ்சளும் தண்ணீருக்கு பதில் ரோஸ் வாட்டரும் கலந்து உடம்பு, கழுத்து என தடவினால் வியர்க்குரு வருவதை தடுக்கலாம்.

    * முல்தானி மெட்டியையும் ரோஸ் வாட்டரில் கலந்து வியர்குருவை விரட்ட பயன்படுத்தலாம்.

    * பருத்தித் துணியை குளிர்ந்த நீரில் நனைத்து உடலில் போர்த்தி ஈரம் காயும் வரை வைத்திருப்பதும் வியர்க்குரு வருவதை தடுக்கும்.

    * அறுகம்புல், மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் குளிக்கலாம். இது 'அறுகன் தைலம்', 'தூர்வாரி தைலம்' என்ற பெயர்களில் நாட்டு மருந்துக் கடைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது.

    * மஞ்சள், சந்தனம், வேப்பிலை மூன்றையும் சம அளவு எடுத்து, மைபோல் அரைக்கவும். வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு குளிக்கவும்.

    * பாசிப் பயறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கலந்த பொடியை தேய்த்துக் குளிக்கவும்.

    * கற்றாழையின் உள் பகுதியை எடுத்து சோப்புபோல தேய்த்துக் குளித்தால், வியர்வை பிரச்னை நீங்கும்.

    ×