search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்பாசமுத்திரம்"

    • வடிவேலு நடிக்கும் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சில வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • பொது மக்கள் போட்டா போட்டி போட்டு அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, முக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சில வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த படத்திற்காக அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி ரெயில்வே நிலையங்களின் எதிரே கடந்த 2 நாட்களாக படப்பிடிப்பு பணி முழு வீச்சில் நடை பெற்று வருகிறது. இந்த காட்சிகளில் நடிப்பதற்காக நகைச்சுவை நடிகர் வடிவேலு அங்கு முகாமிட்டுள்ளார்.

    இந்நிலையில் நேற்று அந்த இடத்தில் ஒரு கேரவனில் வடிவேலு தங்கியிருப்பதை கேள்விப்பட்டு அவரை பார்ப்பதற்காக அப்பகுதி மக்கள் திரண்டனர். அவர்கள் கேரவினை முற்றுகையிட்டு நின்று கொண்டிருந்தனர்.

    இதனை அறிந்த வடிவேலு, வேனில் இருந்து இறங்கி வெளியே வந்து முகம் கோணாமல் அனைவருடனும் தனித்தனியாக நின்று கொண்டு செல்பி எடுக்க போஸ் கொடுத்தார். பொது மக்கள் போட்டா போட்டி போட்டு அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஜோடி கரடிகள் அட்டகாசம் செய்து வருகிறது.
    • மரங்களில் ஏறி பழங்களை சாப்பிட்டுக்கொண்டு ஹாயாக உலா வருகிறது.

    நெல்லை:

    பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கு யானை, கரடி, சிறுத்தை, மிளா உள்பட பல்வேறு வகை வனவிலங்குகள் உள்ளது.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள கிராம பகுதியில் புகுந்து அச்சுறுத்துவதும், விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாக வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பாபநாசம் அருகே உள்ள கோட்டை விளைப்பட்டி கிராமத்திற்குள் புகுந்து ஜோடி கரடிகள் அட்டகாசம் செய்து வருகிறது.

    அந்த பகுதிகளில் உள்ள மரங்களில் ஏறி பழங்களை சாப்பிட்டுக்கொண்டு ஹாயாக உலா வருகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலையில் கோட்டை விளைப்பட்டி நடுத்தெருவில் வசித்துவரும் குமார் என்பவரின் வீட்டை சுற்றி 2 கரடிகள் ஜோடியாக சுற்றி திரிந்தது.

    இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைத்துள்ளனர். வனத்துறை உடனடியாக கூண்டுவைத்து கரடிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • அம்பாசமுத்திரம் அருகே மயில் ஏறி முருகன் கோவில் உள்ளது.
    • ஆலயத்தை அடைய 500 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.

    'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான்' என்பார்கள். அப்படி ஒரு குன்றின் மேல் அமைந்த ஆலயம்தான், அம்பாசமுத்திரம் அருகே உள்ள மயில் ஏறி முருகன் கோவில். இந்த குன்றின் மீதுள்ள முருகன் ஆலயத்தை அடைய 500 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். குன்றின் அடிவாரத்தில் சிறிய பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது. மலை ஏறிச் செல்லும் வழியில் இடும்பன் சன்னிதியும், அகத்தியர் சன்னிதியும் உள்ளன 

    குன்றின் உச்சியில் சிறிய அளவிலான முருகன் கோவில் அமைந்துள்ளது. கருவறையில் வள்ளி-தெய் வானையுடன் கல்யாண கோலத்தில், மயில் வாகனத்துடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். அருகிலேயே உற்சவ மூர்த்தங்களும் காணப்படுகின்றன. கருவறையின் முன்பாகவும் மயில் வாகனம் இருக்கிறது.

    தல வரலாறு

    தூத்துக்குடியில் துறைமுகம் அமைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு தேவையான பாறைகளை அருகில் உள்ள மலைக் குன்றில் இருந்து வெட்டி எடுத்தனர். இந்த பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், அயர்ச்சியையும் சோர்வையும் போக்குவதற்காக தங்களின் இஷ்ட தெய்வமான முருகப்பெருமானை வேண்டிக்கொண்டனர். அதற்காக அங்கிருந்த பாறை ஒன்றில், வேல், மயில், ஓம் என்ற எழுத்துக்களை புடைப்புச் சிற்பமாக செதுக்கி வைத்து வழிபடுவதையும் வழக்கமாக்கிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் அவர்கள் வந்த வேலை முடிந்ததும், தொழிலாளர்கள் அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

    காலப்போக்கில் மலையடிவாரத்தில் மக்கள் வீடு கட்டி குடியேறத் தொடங்கினர். மக்கள் நடமாட்டம் அதிகரித்த நிலையில், அனுதினமும் காலையிலும் மாலையிலும் ஒரு மயில் எங்கிருந்தோ பறந்து வந்து, தொழிலாளர்கள் புடைப்புச் சிற்பமாய் முருகனை வணங்கிய பாறையில் நின்று தோகை விரித்து நடனமாடிச் சென்றது.

    தினம் தினம் இது நடக்கவே, என்ன காரணமாக இருக்கும் என யோசித்த மக்கள், ஒருநாள் மலை மீது ஏறிச் சென்று பார்த்தனர். அங்கு பாறையில் புடைப்புச் சிற்பத்தை கண்டு மெய்சிலிர்த்த அப்பகுதி மக்கள், இவ்விடத்தில் முருகன் கோவில் அமைத்து வழிபட நினைத்தனர்.

    ஆனால் இங்கு கோவில் அமைப்பதில் இறைவனுக்கு விருப்பமா என்பதை அறிய, அந்த ஊரில் இருந்து ஒரு சிறுவனிடம் வேல் ஒன்றைக் கொடுத்து, "உனக்கு விருப்பமாக இடத்தில் இந்த வேலை ஊன்று" என்று கூறினர்.

    உடனே அந்த சிறுவன், தன்னுடைய குடியிருப்பு பகுதியில் இருந்து மலைக் குன்றை நோக்கி ஓடினான். குன்றின் மீது ஏறிச் சென்று அங்கு புடைப்புச் சிற்பங்கள் இருந்த இடத்தில் வேலை ஊன்றினான். எனவே மக்கள் அனைவரும் ஒரு மனதாக அங்கே கோவில் அமைத்து வழிபாடு செய்யத் தொடங்கினர் என்பது இந்த ஆலயத்தின் வரலாறாக சொல்லப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானை வழிபாடு செய்தால், திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. தொடர்ந்து 13 செவ்வாய்க்கிழமைகளில், இத்தல முருகனுக்கு செவ்வரளி மாலை சூட்டி, எலுமிச்சைப் பழம் சமர்ப்பித்து, விளக்கேற்றி வழிபட்டால், விரைவில் திருமணம் நடந்தேறும் என்கிறார்கள். வேலை கிடைக்கவும், கடன் தொல்லை அகலவும் இந்த முருகனை வழிபாடு செய்கிறார்கள்.

    இந்த ஆலயத்தில் தெற்கு நோக்கியவாறு தொழிலாளர்கள் அமைத்த பாறை சிற்பம் அமைந்துள்ளது. அதன் பின்புறம் உள்ள பாறை, இயற்கையாக நந்தி அமர்ந்திருப்பது போல் காட்சி தருகிறது. அதன் அருகில் காசியில் இருந்து கொண்டுவந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். மலையில் இருந்து கீழிறங்கி வர தனியாக படிகள் உள்ளன.

    இங்கு பவுர்ணமி இரவில் அகத்தியருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது. அன்றைய தினம் கூட்டு வழிபாடும் உண்டு. மயிலேறி முருகனுக்கு கார்த்திகை நட்சத்திரம் மற்றும் சஷ்டி திதியில் அபிஷேக அலங்கார ஆராதனை சிறப்பாக நடைபெறும். வைகாசி விசாகம் அன்று சிறப்பு வழிபாடும் நடக்கிறது.

    அமைவிடம்

    அம்பாசமுத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆலங்குளம் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் டீச்சர்ஸ் காலனி பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு இறங்கி நடந்து செல்லும் தொலைவில் என்.ஜி.ஓ. காலனியில் இருக்கிறது, மலையேறி முருகன் கோவில்.

    • பிரதமர் மோடி வருகையையொட்டி அம்பை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
    • ஹெலிபேடு உள்ள மைதானம் முழுவதும் மத்திய பாதுகாப்பு படை மற்றும் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளது.

    நெல்லை:

    தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    17-ந்தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய உள்ள நிலையில், தேசிய கட்சிகள் மற்றும் மாநிலத்தின் பிரதான கட்சிகளின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், நட்சத்திர பேச்சாளர்கள் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேசிய கட்சியான பா.ஜனதா இந்த பாராளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் வலுவான கூட்டணி அமைத்து பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது.

    பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்கள் தமிழகத்தை முற்றுகையிட்டு பரப்புரை செய்து வருகின்றனர்.

    பிரதமர் மோடி ஏற்கனவே 7 முறை தமிழகத்திற்கு வந்து பா.ஜனதா-கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிய நிலையில் தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நாளை(திங்கட்கிழமை) தமிழகத்திற்கு மீண்டும் வருகிறார். அவர் நெல்லை மாவட்டம் அம்பையில் நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார்.

    நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 4 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்து பேசுகிறார்.

    நாளை மதியம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் அம்பை வரும் பிரதமர் மோடி அகஸ்தியர்பட்டியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் ஹெலிபேடில் வந்திறங்குகிறார்.


    அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள பொதுக்கூட்ட மேடைக்கு குண்டு துளைக்காத காரில் செல்லும் பிரதமர் மோடி பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு மேடைக்கு செல்கிறார். அங்கு வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி அம்பை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒருபுறம் பள்ளி மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வரும் நிலையில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    ஹெலிபேடு உள்ள மைதானம் முழுவதும் மத்திய பாதுகாப்பு படை மற்றும் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளது. அங்கு சுற்றிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. அந்த இடத்திற்கு வெளியாட்கள் யாரும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

    அம்பை பொதுக்கூட்ட மேடையில் இருந்து சுற்றிலும் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு டிரோன்கள் பறப்பதற்கு இன்றும், நாளையும் தடை விதித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் அந்த பகுதியில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மோடி வருகைக்காக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து நேற்று முதல் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில், இன்றும் நாளையும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதற்காக விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு சுமார் 5 ஆயிரம் பேர் அம்பையில் முகாமிட்டுள்ளனர். இதுதவிர வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், மோப்பநாய் பிரிவு அதிகாரிகளும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாளை அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மோடியின் வருகையையொட்டி பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    ×