என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொழுப்பு நீக்கும் அறுவை சிகிச்சை"

    • வீட்டுக்கு வந்ததும் நீதுவுக்கு வாந்தி-மயக்கம் என பல உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.
    • நீதுவின் உடலில் ரத்தஓட்டம் சீராக இல்லாமல் போனதால் இடது காலில் 5 விரல்கள் மற்றும் வலது கையில் 3 விரல்களை துண்டிக்கும் நிலை ஏற்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் முத்தத்தரா ஸ்ரீவராகம் பகுதியை சேர்ந்த இளம்பெண் நீது (வயது31). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.

    இந்தநிலையில் அவர் தனது வயிற்று பகுதியில் இருந்த கொழுப்புகளை நீக்குவதற்காக திருவனந்தபுரம் கஜக்கூட்டம் பகுதியில் உள்ள தனியார் அழகுசாதன மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதற்காக அந்த மருத்துவமனையில் நீதுவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.

    அறுவை சிகிச்சை முடிந்து மறுநாள் வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும் நீதுவுக்கு வாந்தி-மயக்கம் என பல உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ரத்த அழுத்தமும் மிகவும் குறைந்தது. இதையடுத்து நீதுவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மருத்துவமனையை, அவரது கணவர் பத்மஜித் தொடர்பு கொண்டு பேசினார்.

    ஆனால் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மருத்துவர்கள் இல்லை. ஆகவே மறுநாள் வருமாறு மருத்துவமனை தரப்பில் கூறியிருக்கின்றனர். ஆனால் நீதுவின் உடல்நிலை மிகவும் மோசமாகியபடியே இருந்தது. இதனால் நீதுவை அவரது கணவர் வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தார்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நீதுவின் உடலில் ரத்தஓட்டம் சீராக இல்லாமல் போனதால் இடது காலில் 5 விரல்கள் மற்றும் வலது கையில் 3 விரல்களை துண்டிக்கும் நிலை ஏற்பட்டது.

    அவற்றை அகற்றாவிடில் நீதுவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால், அவரது கையில் 3 விரல்களும், காலில் 5 விரல்களும் வெட்டி அகற்றப்பட்டன. கொழுப்பு அகற்றும் அறுவை சிகிச்சை தவறாக செய்ததன் காரணமாகவே தனது மனைவி 9 விரல்களை இழந்துவிட்டதாக நீதுவின் கணவர் பத்மஜித் குற்றம்சாட்டினார்.

    மேலும் அதுகுறித்து நீதுவுக்கு கொழுப்பு அகற்றும் அறுவை சிகிச்சை செய்த தனியார் அழகுசாதன மருத்துவமனையின் மீது போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், அந்த மருத்துவமனையின் உரிமையாளரான டாக்டர் பிபிலாஷ் மீது வழக்கு பதிந்தனர். மேலும் அவரது மருத்துமனை உடனடியாக மூடப்பட்டது.

    கொழுப்பு அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளம்பெண் 9 விரல்களை இழந்த சம்பவம் திருவனந்தபரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உடல் எடை குறைக்கும் அறுவை சிகிச்சையில் அபாயங்கள் இருக்கின்றன.
    • அறுவை சிகிச்சை பற்றி பரவும் செய்திகளும் உயிரிழப்பும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

    உடல் பருமனாக இருப்பவர்களை வேடிக்கையாகப் பார்த்து வியந்த காலம் மாறி, இன்று பெரும்பாலானோருக்கு அது பொதுப் பிரச்சனையாகிவிட்டது. வாழ்க்கை முறை மாற்றம், உணவுப்பழக்கம், வளரும் சூழல் என உடல் பருமனுக்கான காரணங்கள் நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன. அதனால் இன்று உலகை ஆட்டுவிக்கும் பெரும் பிரச்னையாக உடல் பருமன் உருவெடுத்து நிற்கிறது.

    சாதாரணமாக உடல் எடையை குறைக்க மாத்திரை, டயட் என பல வழிமுறைகள் உண்டு. ஆனால், குறிப்பிட்ட உடல் எடையை தாண்டியவர்களுக்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வாக இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

    ஆனால், உடல் எடை குறைக்கும் அறுவை சிகிச்சையில் பல அபாயங்கள் இருக்கின்றன. மேலும் எல்லோருக்கும் இது பொருந்திப் போவதும் இல்லை. சில மருத்துவமனைகள் அந்த அபாயங்களை மறைத்து அனைவருக்கும் அறுவை சிகிச்சை செய்து காசு பார்ப்பதும் நடக்கிறது.

    உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை செய்து உடல் எடையைக் குறைக்க சோம்பல் படும் இளம் தலைமுறையை, இந்த அறுவை சிகிச்சை ஈர்க்கிறது. இச்சூழலில் அண்மைக்காலமாக இந்த அறுவை சிகிச்சை பற்றி பரவும் செய்திகளும், தற்போது ஏற்பட்டுள்ள உயிரிழப்பும் பெரும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.

     கொழுப்பை அகற்றும் சிகிச்சை முறைகள்

    கேஸ்ட்ரிக் பைபாஸ் அறுவை சிகிச்சையிலும் இரைப்பையின் அளவில் ஒரு பகுதி நீக்கப்பட்டு விடும். நாம் உண்ணும் உணவு சிறுகுடல்களில் தான் சத்துகளை உட்கிரக்கும். சிறுகுடலின் ஒரு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவதால், உணவின் மூலம் கிடைக்கக் கூடிய சத்துகள் குறைக்கப்படுகிறது. அதனால் எடை கட்டுக்குள் வரும்.

    உடலில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தேங்கியிருக்கும் கொழுப்பை நீக்க லைப்போசக்ஷன் (Liposuction) அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

    லைப்போசக்ஷன் சிகிச்சையின் மூலம் கை, வயிறு, இடுப்பு, தொடை, மார்புப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பு அகற்றப்படும்.

    அல்ட்ரா சவுண்ட் துணையுடனும், சாதாரண ஊசி மூலமாகவும் உடலில் உள்ள கொழுப்பு உறிஞ்சி எடுக்கப்படும்.

    பொதுவாக, உடல் பருமன் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு ஏற்கெனவே தைராய்டு, சர்க்கரைநோய், இதயம் தொடர்பான நோய்கள் இருக்கலாம். எனவே, அறுவை சிகிச்சைக்கு முன்பாக, அவரது உடல்நிலை தொடர்பான முழுமையான விவரங்களைக் கேட்டு, பரிசோதித்து அறிந்துகொள்ள வேண்டும்.

    யாரெல்லாம் செய்துகொள்ளலாம்?

    நாள்பட்ட டைப் 2 சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், இதயநோய், அதிகக்கொழுப்பு, தூக்கத்தில் மூச்சுத்திணறல், நீண்டநாள் செரிமானக் கோளாறுகள், சர்க்கரை நோய் போன்ற மருத்துவப் பிரச்னை உள்ளவர்களுக்கு பி.எம்.ஐ. அளவு 35-க்கு மேலும் இருந்தால் இந்த அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம். ஆனால், இந்த பி.எம்.ஐ அளவு குறைவாக இருக்கும் நிலையில், அழகுக்காக சிலர் இந்த அறுவை சிகிச்சை செய்துகொள்ள வருகிறார்கள்.

    உடல் எடையை குறைக்க, உடற்பயிற்சிக் கூடங்கள், உணவுக் கட்டுப்பாடுகள், நடைபயிற்சி, சைக்ளிங் போன்ற சில வழிகள் இருக்கின்றன. அவற்றை மேற்கொண்டு ஆரோக்கியமான முறையில் உடல் எடையை கட்டுக்குள் வைப்பதே சிறந்தது.

    ×