search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒத்தி வைப்பு"

    • செந்தில் பாலாஜி ஏற்கெனவே விசாரணைக்கு உரிய முறையில் ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறார்.
    • கடைசி நேரத்தில் மிக தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்.

    புதுடெல்லி:

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    அவருக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில் செந்தில் பாலாஜி மீதான வழக்கினை கீழமை நீதிமன்றம் 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு எதிராகவும், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியும் செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த மனுக்கள் மீது பதில் அளிக்க ஏற்கெனவே அமலாக்கத்துறைக்கு நோட்டீசு அனுப்பி இருந்தது.

    இதையடுத்து அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று இரவு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில் அமலாக்கத்துறை கூறி இருப்பதாவது:-

    சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, ஏற்கெனவே விசாரணைக்கு உரிய முறையில் ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறார். அவர் வெளியே வந்தால் சாட்சியங்களை கலைக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. வழக்கின் விசாரணையிலும் அவர் முட்டுக்கட்டை போட நிறைய வாய்ப்பு இருக்கிறது.

    எனவே செந்தில் பாலாஜியின் மனுக்கள் எதையுமே விசாரிக்கக் கூடாது. 3 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என்பதை எதிர்த்து போடப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும், அவரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது.

    இவ்வாறு பதில் மனுவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஒரு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதில், 'இந்த வழக்கில் ஆஜராக வேண்டிய சொலிசிட்டர் ஜெனரல் வேறு ஒரு வழக்கில் ஆஜராகி இருக்கிறார். எனவே சற்று நேரம் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும்' என்று கோரப்பட்டது.

    அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல்கள், 'இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு தான் பதில் மனுவை தாக்கல் செய்து இருக்கிறார்கள். இப்படி காலதாமதம் செய்வதன் மூலமாக இந்த வழக்கு விசாரணையை அவர்கள் தாமதப்படுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள். நாங்கள் வாதங்களை முன்வைக்க தயாராக இருக்கிறோம்' என்றனர்.

    இதையடுத்து நீதிபதிகள், 'பதில் மனுவை காலதாமதமாக தாக்கல் செய்திருப்பதால் எந்தவித பலனும் இல்லை' என்றனர்.

    அதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், 'கடைசி நேரத்தில் மிக தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்' என்றார்.

    இதையடுத்து நீதிபதிகள், 'அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவை நாங்கள் இன்னும் படித்து பார்க்கவில்லை. எனவே எங்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது' என்றனர்.

    பின்னர் இந்த வழக்கு விசாரணையை மே 6-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

    • கொடநாடு எஸ்டேட் பணியாளர்கள் தேவன், ரமேஷ் மற்றும் சயானின் நண்பர்கள் பாபு, அப்துல்காதர் ஆகிய 4 பேருக்கு தற்போது சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
    • வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர் வருகிற ஜூன் மாதம் 21-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    கோவை:

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த சயான் உள்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி அவற்றை வாக்கு மூலமாக பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மேலும் 4 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். கொடநாடு எஸ்டேட் பணியாளர்கள் தேவன், ரமேஷ் மற்றும் சயானின் நண்பர்கள் பாபு, அப்துல்காதர் ஆகிய 4 பேருக்கு தற்போது சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

    அவர்கள் 4 பேரும் தனித்தனியாக நாளை(30-ந் தேதி) கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ்நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று ஊட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்ற த்தில் நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    இதில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் கேரள மாநிலத்தை சேர்ந்த வாளையார் மனோஜ் ஆஜர் ஆனார். அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ், வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர் வருகிற ஜூன் மாதம் 21-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    பின்னர் அரசு தரப்பு வக்கீல் ஷாஜகான் நிருபர்களிடம் கூறியதாவது:- கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற பங்களாவில் தடவியல் நிபுணர் குழு உட்பட பல்வேறு துறையினர் மேற்கொண்ட ஆய்வு அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது எதிர்தரப்பினர் பங்களாவிற்குள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக புலன் விசாரணை நடைபெற்று வருவதால், எதிர்தரப்பினர் பங்களாவில் ஆய்வு மேற்கொண்டால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என அரசு தரப்பு சார்பில் நீதிபதியிடம் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆபத்தான மெசேஜ்களை கண்டறிந்து அனுப்பியவர் யார் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது
    • டெல்லி ஐகோர்ட்டு இந்த வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைத்தது.

    மத்திய அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய ஐடி விதிகளை அமலுக்கு கொண்டு வந்தது. இந்தியாவில் செயல்பட விரும்பும் அனைத்து சமூக வலைத்தள நிறுவனங்களும் இந்த புதிய விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

    எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் முறையை உடைக்க கட்டாயப்படுத்தினால் இந்தியாவில் இருந்து வெளியேற நேரிடும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்தது. மேலும் இந்த புதிய சட்டத்திற்கு எதிராக வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.




    "வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமையை பாதிக்கும் வகையில் End to End Encryption-ஐ உடைக்க இந்திய அரசு எங்களை கட்டாயப் படுத்தினால், நாட்டை விட்டே இச்செயலி வெளியேற நேரிடும்" என டெல்லி உயர்நீதி மன்றத்தில் அந்நிறுவனம் வாதம் செய்தது.

    எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் என்பது யூசர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதாகவும் அதில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்தது.

    இந்த சட்டத்திற்கு இணங்குவது என்பது என்க்ரிப்ஷன் பிராசஸை அர்த்தம் இல்லாமல் செய்துவிடும் என்றும் அது தனியுரிமையை மீறும் ஒரு செயல் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் வாதம் செய்யப்பட்டது.




    ஆபத்தான மெசேஜ்களை கண்டறிந்து ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு மெசேஜ்ஜை அனுப்பியவர் யார் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது என்று மத்திய அரசு சார்பில் வாதம் செய்யப்பட்டது.

    தவறான தகவல்களை பரப்புபவர்கள் , வன்முறையை தூண்டுபவர்களை அடையாளம் காண உதவும் பொறுப்பு சமூக வலைத்தளங்களுக்கு இருப்பதாக மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி ஐகோர்ட்டு இந்த வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைத்தது.

    ×