search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஜிதா திருநங்கை"

    • அஜிதா 373 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.
    • பல கல்லூரிகளுக்கு சென்று சீட் கேட்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

    கோவை:

    கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் அஜிதா (வயது 17). திருங்கை மாணவியான இவர் வடகோவை பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-2 படித்தார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அஜிதா 373 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய ஒரே திருநங்கை மாணவி அஜிதா தான்.

    பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி அடைந்ததும், அவருக்கு பி.எஸ்.சி உளவியல் படிப்பு படிக்க ஆசை. ஆனால் பல கல்லூரிகளுக்கு சென்று சீட் கேட்டும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. தற்போது அவருக்கு கோவை கொங்குநாடு கல்லூரியில் படிப்பதற்கான இடம் கிடைத்துள்ளது.

    இதுகுறித்து திருநங்கை மாணவி அஜிதா கூறியதாவது:-

    நான் வடகோவையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-2 படித்தேன். எனது வீடு சிங்காநல்லூரில் உள்ளது. பள்ளிக்கு தினமும் பஸ்சில் தான் சென்று வந்தேன்.

    பிளஸ்-2 தேர்வில் நான் தேர்ச்சி பெற்றதும் எனக்கு கல்லூரியில் சேர்ந்து உளவியல் படிப்பு படிக்க வேண்டும் என்பதே ஆசை.

    இதற்காக தேர்வு முடிவு வந்ததும் நான் கோவையில் உள்ள பல கல்லூரிகளுக்கு சென்று எனக்கு சீட் கேட்டேன். 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு போன் செய்தும், 4 கல்லூரிகளுக்கு நேரில் சென்றும் விண்ணப்பம் கேட்டேன்.

    ஆனால் திருநங்கை என்பதால் கல்லூரியில் சேர்த்தால் சிரமம் ஏற்படும் என நினைத்து பல இடங்களில் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.

    கொங்குநாடு கல்லூரியில் இருந்து அவர்களே அழைத்து எனக்கு படிப்பதற்கு சீட் தருவதாக தெரிவித்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்தேன். நான் பல இடங்களுக்கு சென்று கேட்டபோது கிடைக்கவில்லை. ஆனால் அவர்களாகவே அழைத்ததும் நானும் சென்று கல்லூரியில் சேர்ந்து கொண்டேன்.

    இந்த கல்லூரியில் சேர்ந்த பிறகு நான் ஏற்கனவே சென்று சீட் கேட்ட கல்லூரிகளில் சில கல்லூரிகள் மீண்டும் போன் செய்து, என்னிடம் மன்னிப்பு கேட்டதுடன், உங்களுக்கு எங்கள் கல்லூரியில் சீட் தருகிறோம் என்றனர். ஆனால் நான் எனக்கு முதன் முதலில் அழைத்து வாய்ப்பு கொடுத்த கொங்குநாடு கல்லூரியில் படிக்கவே விருப்பம் என்று தெரிவித்து விட்டேன்.

    பெரும்பாலான கல்லூரிகளில் திருநங்கை என்று சொல்லி சீட் கேட்டால் கல்லூரியில் சீட் கிடைப்பதில்லை. இருப்பினும் பல கல்லூரிகளில் என்னை போன்ற திருநங்கைகள் படிக்கின்றனர். ஆனால் அவர்கள் தங்களை ஆணாக அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்.

    ஆண் உடை அணிந்து படித்து வருகின்றனர். நான் பெண் உடை அணிந்திருந்ததை பார்த்ததும் மறுத்து விட்டனர். என்னை நான் ஒரு பெண்ணாகவே கருதுகிறேன். அதேபோல் உடை என்பது எனது தனிப்பட்ட விஷயம். அதில் எவரும் தலையிடகூடாது.

    எனக்கு தற்போது நல்ல கல்லூரியில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை பயன்படுத்தி நன்றாக படித்து அரசு பணியில் சேர்ந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம். அதனை நோக்கி நான் பயணித்து கொண்டிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×