search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு கட்டுரை Special article"

    • உணவு, உடை, உறையுள் ஆகிய மூன்றும் மனிதர்களின் அடிப்படைத் தேவைகள்.
    • வஸ்திர தானமும் சிறப்பானதாகப் போற்றப் படுகிறது.

    உணவு, உடை, உறையுள் ஆகிய மூன்றும் மனிதர்களின் அடிப்படைத் தேவைகள். நமது இலக்கியங்களும் புராணங்களும் உடை பற்றி நிறையப் பேசுகின்றன.

    பட்டாடை அணிந்த ராஜகுடும்பத்தைச் சேர்ந்த ராமனும், சீதையும், லட்சுமணனும் வனவாசம் செல்லும்போது மரவுரியையே ஆடையாகத் தரித்துச் சென்றார்கள். மரத்திலிருந்து உரித்து எடுக்கப்படும் மெல்லிய பட்டையே மரவுரி எனப்பட்டது.

    மரவுரியை எப்படிக் கட்டிக்கொள்வது எனத் தெரியாது சீதை தவித்தாளாம். அப்போது, தான் கட்டிக்கொண்ட மனைவிக்கு மரவுரி கட்டிக்கொள்ளக் கற்றுத் தந்தவன் ராமன்தான் என்கிறது ஓர் அபூர்வ ராமாயணக் கதை.

    பாஞ்சாலிக்கு கண்ணன் ஆடை கொடுத்து மானத்தைக் காத்ததை நாம் அறிவோம். கண்ணனின் இளமைக் காலத்தில் அவன் விரலில் ஒரு காயம் பட்டு ரத்தம் சொட்டியதாம். அதைப் பார்த்துப் பதறினாளாம் பாஞ்சாலி.

    தான் கட்டியிருந்தது விலையுயர்ந்த பட்டுத் துணி என்றும் பாராமல் பட்டென்று அதைக் கிழித்து கண்ணனின் காயத்தின்மேல் அவசர அவசரமாகக் கட்டி மேலும் குருதி பெருகாமல் தடுத்தாளாம்.


    அந்த அன்பில் நெகிழ்ந்த கண்ணன் அதற்குப் பிரதிபலனாகத்தான் கவுரவர் சபையில் அவளது ஆடையை வளரச் செய்து அவள் மானத்தைக் காத்தான் என்று ஒரு கதை சொல்கிறது.

    துச்சாதனன் துகிலுரியத் தொடங்கியபோது பாஞ்சாலி உள்ளம் உருகிக் கண்ணனைத் துதித்ததையும் துகில் வளர்ந்ததையும் பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் உணர்ச்சி பொங்க எழுதுகிறார்:

    `வையகம் காத்திடுவாய் -

    கண்ணா

    மணிவண்ணா என்றன்

    மனச்சுடரே!

    ஐய நின் பதமலரே - சரண்

    ஹரி ஹரி ஹரி என்றாள்!

    பொய்யர்தம் துயரினைப்

    போல் - நல்ல

    புண்ணிய வாணர்தம் புகழினைப் போல்

    தையலர் கருணையைப் போல் - கடல்

    சலசலத்தெறிந்திடும் அலைகளைப் போல்

    பெண்ணொளி வாழ்த்திடுவார் - அந்தப்

    பெருமக்கள் செல்வத்தில் பெருகுதல்போல்

    கண்ணபிரான் அருளால் - தம்பி

    கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்

    வண்ணப் பொற் சேலைகளாம் - அவை

    வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே!

    எண்ணத்தி லடங்காவே - அவை

    எத்தனை எத்தனை நிறத்தனவோ!

    பொன்னிழை பட்டிழையும் - பல

    புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைகளாய்

    சென்னியிற் கைகுவித்தாள் - அவள்

    செவ்விய மேனியைச் சார்ந்து நின்றே

    முன்னிய ஹரிநாமம் - தன்னில்

    மூளுநற் பயனுல கறிந்திடவே

    துன்னிய துகில் கூட்டம் - கண்டு

    தொழும்பத் துச்சாதனன் வீழ்ந்துவிட்டான்!`

    முப்பெருந் தேவியரில், கலைமகள் வெள்ளை ஆடை உடுத்திக் காட்சி தருபவள்.

    `வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப்

    பணிபூண்டு

    வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் -

    வெள்ளை

    அரியா சனத்தில் அரசரோ டென்னைச்

    சரியாசனம் வைத்த தாய்.'

    என்று பாடுகிறார் காளமேகப் புலவர். கலை என்பது உடைக்கான பழந்தமிழ்ச் சொல். சரஸ்வதி வெள்ளை ஆடை புனைபவள் என்பதையே `வெள்ளைக் கலை உடுத்து` என்ற சொற்களால் குறிக்கிறார் அவர்.

    சிவபெருமான் புலித்தோலை அணிபவர்.

    `பொன்னார் மேனியனே! புலித்தோலை

    அரைக்கசைத்து

    மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை

    அணிந்தவனே!'

    என்று சிவபெருமானைப் பாடிப் பரவுகிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். புலித்தோல் அணிந்த தந்தையின் இளைய மகனான முருகன் வெறும் கோவணத்தை மட்டுமே அணிந்த ஆண்டியாகப் பழனியில் காட்சி தருகிறான்.

    புகழேந்திப் புலவர் நளவெண்பாவில் நளனுக்கு கார்க்கோடகன் என்ற பாம்பு ஆடை கொடுத்ததைப் பற்றி எழுதுகிறார்.

    நளன் பகைவர்கள் அறியாதவாறு மறைந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டதால் கார்க்கோடகப் பாம்பு அவனைக் கடித்து விஷத்தால் அவன் நிறத்தையும் வடிவத்தையும் மாற்றுகிறது. முற்றிலும் தன் உரு மாறிவிட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நளனிடம், தான் அவனுக்கு உபகாரமே செய்திருப்பதாக விளக்குகிறது அது.

    இனிப் பகைவர்கள் அவனை அடையாளம் காண இயலாது என்று சொல்லி தன் ஆடை ஒன்றையும் அது நளனுக்குக் கொடுக்கிறது. தோலுரிக்கும் பழக்கமுள்ள பாம்பின் தோலாடையாகத் தான் அது இருக்க வேண்டும்.

    பின்னாளில் நளனுக்கு அவனது பழைய உருவம் தேவைப்படும்போது அந்த ஆடையை அணிந்தால் அவன் மீண்டும் பழையபடி மாறுவான் என அது தெரிவித்து ஊர்ந்துசென்று மறைகிறது.

    கண்பார்வையற்ற கவிஞரான சூர்தாஸ் துவாரகைக் கண்ணன் கோவிலில் ஆஸ்தான பாடகராக நியமிக்கப் பட்டிருந்தார்.

    ஒவ்வொரு நாளும் கிருஷ்ண விக்கிரகத்திற்கு ஆடை மாற்றுவார்கள். அன்றன்று சூர்தாஸ் பாடும் கீர்த்தனைகளில் அந்த ஆடையின் நிறம் எதுவென்று தன் அகக்கண்ணால் தானே கண்டு கீர்த்தனையிலும் ஆடையின் வண்ணத்தைக் குறிப்பிட்டுப் பாடுவாராம்.

    சகோதரி நிவேதிதை தம் குருநாதரான விவேகானந்தர்மேல் அளவற்ற பக்தி செலுத்தியவர். விவேகானந்தர் காலமானபோது துயரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

    விவேகானந்தரின் சடலம் எரிகிறபோது தள்ளி அமர்ந்து கண்ணீர் வழியப் பார்த்துக் கொண்டிருந்த நிவேதிதையின் உள்ளத்தில் ஓர் எண்ணம்.

    `குருநாதரே! இதுவரை நான் வெள்ளை உடைதானே அணிகிறேன். எனக்கு நீங்கள் ஏன் காவி உடை வழங்கவில்லை? நான் துறவின் அடையாளமாக காவி உடை தரிக்கும் அளவு மனப்பக்குவம் பெறவில்லை என்று கருதினீர்களா?` என அவர் எண்ணினார். அடுத்த கணம் விந்தையான ஒரு நிகழ்வு நடந்தது.

    எரிந்து கொண்டிருந்த விவேகானந்தரின் காவி உடையிலிருந்து ஒரு துண்டுக் காவித்துணி காற்றில் பறந்து நிவேதிதையின் மடியில் வந்து விழுந்தது!

    தன் துறவு மனநிலையை விவேகானந்தர் அங்கீகரித்ததற்கான அடையாளம் அது எனக் கருதிய நிவேதிதை அந்தக் காவித் துண்டைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு பத்திரப் படுத்திக் கொண்டார் என்கிறது நிவேதிதையின் திருச்சரிதம்.

    பழந்தமிழ் இலக்கியங்களில் ஆடை பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கின்றன.

    அவ்வையாரின் நல்வழி நூலில் உள்ள ஒரு வெண்பா, எல்லா மனிதர்களுக்கும் உண்பது நாழியளவு தான், உடுப்பது நான்கு முழம்தான், பிறகு அளவுக்கு மீறி ஆசைப்பட்டு வாழ்வில் சஞ்சலம் கொள்வது ஏன் என்று வினவுகிறது.

    `உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்

    எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த

    மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்

    சாந்துணையும் சஞ்சலமே தான்!`

    நாழி உணவும் நான்கு முழ ஆடையும் போதுமானதாய் இருக்க, எண்பது கோடி விஷயங்களுக்கு ஆசை ஏன்? மண்கலம்போல் உடையப் போகும் வாழ்வில் அளவுக்கு மீறிய ஆசை எப்போதும் சஞ்சலத்தையே தரும் என்கிறார் அவ்வை.

    மானம் மறைக்க நான்கு முழம் போதுமென்றாலும் மனிதர்கள் பற்பல வகையான உடைகளில் நாட்டம் கொள்கிறார்கள்!

    காந்தி எளிய ஆடைகளை அணிவதென்று, நம் தமிழகத்தைச் சார்ந்த மதுரையில்தான் முடிவெடுத்தார். பின்னர், இடுப்பில் ஒரு வேட்டியும் மேலே ஒரு துண்டுமாக மட்டுமே காட்சி தந்தார்.

    நம் சுதந்திரப் போராட்ட காலத்தில் உடையும் ஒரு முக்கியப் பங்கு வகித்தது. கதர் உடையையே அணியுமாறு காந்திஜி வேண்டுகோள் விடுத்தார். ஏராளமான மக்கள் கதர் அணிந்தார்கள்.

    இப்போதும் காந்தியச் சிந்தனையின் தாக்கத்தால் கதரே அணிபவர்கள் இருக்கிறார்கள்.

    வள்ளலார் போன்ற மிகச் சில துறவிகள் வெள்ளை ஆடை தரித்தாலும் பொதுவாக இந்தியாவில் துறவுக்கான நிறம் என்று காவியே கருதப்படுகிறது.

    சில வண்ண ஆடைகள் மனத்தில் சில உணர்வுகளைத் தூண்டுகின்றன என்றும் நாம் அணியும் ஆடைகளின் நிறத்தின் மூலம் மற்றவர்கள் மனத்தில் நாம் விரும்பிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றும் நம்புகிறவர்கள் உண்டு.

    அதனால் வாரத்தின் ஏழு நாட்களுக்கும் இன்னின்ன ஆடை என வகுத்துக் கொண்டு அந்தந்த நாட்களில் அந்தந்த வண்ண ஆடைகளையே அணிபவர்களும் உண்டு.

    கடையெழு வள்ளல்களில் ஒருவனான பேகன் மயிலுக்குக் குளிருமே என அதற்குப் போர்வை போர்த்தினான் என்கிறது சங்கப் பாடல்.

    கிடைத்தற்கரிய நீல நாகத்தின் ஆடை, கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் என்பவனுக்குக் கிடைத்தது. ஆனால் ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருக்கும் சிவபெருமானுக்கு அதை வழங்கிவிட்டான் அவன். இந்தச் செய்தியைச் சிறுபாணாற்றுப் படையில் காணலாம்.

    ஐதராபாத் அருங்காட்சியகத்தில் ஓர் அபூர்வமான கற்சிலை இருக்கிறது. அது ஒரு பெண்ணின் சிலை. அவள் மெல்லிய சல்லாத் துணியால் தன் முகத்தை மூடியிருப்பதைப் போல் சிற்பி செதுக்கியிருக்கிறான்.

    மெல்லிய துணியின் ஊடாக உள்ளே அவளது விழிகள் நாசி உதடு போன்றவை யெல்லாம் நிழல்போல் தெரிவதாக சிற்பம் செதுக்கப்பட்டிருக்கிறது.

    கல்லில் உள் உறுப்புக்களைச் செதுக்கிவிட்டுக் கல்லால் ஆன மெல்லிய துணியை மேலே ஒட்டவைப்பதென்பது இயலாது. அப்படியிருக்க இத்தகைய ஜாலத்தை அந்த சிற்பி எப்படித்தான் நிகழ்த்தினான் என்பது இன்றுவரை பார்ப்போரை யெல்லாம் வியக்க வைக்கும் ஒரு சிற்ப அற்புதம்.

    அன்னதானத்தைப் போலவே ஒருவருக்கு வழங்கப்படும் வஸ்திர தானமும் சிறப்பானதாகப் போற்றப் படுகிறது. உணவு உடை உறையுள் என்ற மூன்று அடிப்படைத் தேவைகளில் ஒன்றை அது நிறைவு செய்து விடுகிறது இல்லையா?

    ஆலயத்தில் தெய்வங்களுக்கு வெவ்வேறு ஆடை அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது. தெய்வங்கள் மட்டுமல்ல, தெய்வங்களின் அடியவர்களும் ஆடைகளால் தங்களை வேறுபடுத்திக் கொண்டு தாங்கள் யாருடைய பக்தர்கள் என்பதை அறிவிக்கிறார்கள்.


    ஐயப்ப பக்தர்கள் கறுப்பு ஆடையும் முருகனது அடியவர்கள் பச்சை ஆடையும் மேல்மருவத்தூர் பராசக்தி அடியவர்கள் சிவப்பு ஆடையும் அணிகிறார்கள்.

    கேரளத்தில் ஆண்கள் ஆலயத்திற்குள் செல்லும்போது மேலாடை அணியக் கூடாது என்ற விதி இருக்கிறது. எனவே அவர்கள் மேலாடையை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு தான் கோவிலுக்குள் பிரவேசிக்கிறார்கள்.

    ஆக இந்தியா எங்கும் மக்களின் மனங்களில் ஆன்மிக உணர்வைத் தோற்றுவிப்பதில் அவர்கள் அணியும் ஆடையும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • கபோதகம்’ என்றால் புறா என்று பொருள்.
    • பல ஆன்மிகக் கதைகளில் புறாக்கள் பாத்திரங்களாக வருகின்றன.

    நமது ஆன்மிக நெடும்பரப்பில் படபடத்துப் பறக்கும் பறவையினங்களில் முக்கியமான ஒன்று புறா. `விருந்தோம்பல், செய்நன்றியறிதல், சரணடைந்தோரைக் காப்பாற்றுதல்' போன்ற உயரிய விழுமியங்களை உணர்த்துவதற்குக் கூறப்படும் பல ஆன்மிகக் கதைகளில் புறாக்கள் பாத்திரங்களாக வருகின்றன. தங்கள் பேச்சாலும் செய்கையாலும் அவை மனித குலத்திற்குப் பற்பல அறநெறிகளை எடுத்துச் சொல்கின்றன.

    இரண்டு புறாக்கள் செய்த தியாகத்தைப் பற்றி உருக்கமாக விவரிக்கிறது `கபோத உபாக்யானம்' என்ற சமஸ்கிருத நூல்.

    `கபோதகம்' என்றால் புறா என்று பொருள். `உபாக்யானம்' என்றால் சிறிய கதை. விருந்தோம்பலின் உயர்வைச் சொல்லும் அந்த அழகிய சிறிய கதை சுவாரஸ்யமானது.

    வேடன் ஒருவன் காட்டில் வேட்டையாட வந்தான். வலை வீசி ஒரு பெண் புறாவைப் பிடித்தான்.

    அப்போது திடீரெனக் கடும் மழை பொழியத் தொடங்கியது. வலையில் பிடிபட்ட பெண் புறாவும் அதன் ஜோடியான ஆண் புறாவும் எந்த மரத்தில் வசித்தனவோ அந்த மரத்தடியிலேயே அவன் மழைக்கு ஒதுங்கி நின்றான்.

    சிறிது நேரத்தில் மழை நின்றது. ஆனால் அதற்குள் கானகத்தில் இருள் சூழ்ந்துவிட்டது. இருளில் எப்படி திரும்பிப் போகும் வழியைக் கண்டுபிடிப்பது?

    ஒரே குளிர் வேறு. வேடனால் உடனே அங்கிருந்து புறப்பட முடியவில்லை. குளிரில் உடல் நடுங்கவே அந்த மரத்தடியிலேயே ஒடுங்கி உட்கார்ந்து விட்டான்.

    இதைப் பார்த்தது மரத்தின் மேலிருந்த ஆண் புறா. தன் ஜோடியான பெண் புறாவை வலைவீசிப் பிடித்தவன் அவன் என்பதை அது தெரிந்து கொண்டது.

    ஆனாலும் அவனுக்கு அந்த ஆண் புறா கெடுதல் நினைக்க வில்லை. நம் பாரத தேசத்தின் மிக உயர்ந்த விருந்தோம்பல் பண்பு அந்தச் சிறிய பறவை யிடமும் குடிகொண்டிருந்ததுதான் ஆச்சரியம்.

    என்ன செய்வது இப்போது? நாம் வசிக்கிற மரத்தின் கீழ் இவன் வந்துவிட்டான். அதனால் இவன் நம் விருந்தாளி ஆகிறான். `அதிதி தேவோ பவ! விருந்தாளியைத் தெய்வமாக நினை' என்கிறதே வேதம்!

    `இந்த விருந்தாளிக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும்' என்று நினைத்தது அந்த ஆண்புறா.

    முதலில் குளிரில் நடுங்குகிறவனின் குளிரைப் போக்க வேண்டும். தன் கூட்டையே பிரித்து அதிலிருந்த காய்ந்த குச்சிகளை அலகால் தூக்கிவந்து வேடனுக்கு முன்னால் போட்டது. அவன் நெருப்பு மூட்டிக் கொள்ள உதவியாக சிக்கி முக்கிக் கற்களையும் தேடிக் கொண்டுவந்து அவன்முன் போட்டது.

    ஆண்புறாவின் செயல்களைப் பார்த்துக் கொண்டே இருந்த வேடன் வியப்படைந்தான். சிக்கிமுக்கிக் கற்களை உரசி நெருப்பு உண்டாக்கி அந்த நெருப்பில் சுள்ளிகளைப் பற்றவைத்துக் குளிர் காயலானான்.

    கூடவே அவன் மனத்தில் யோசனைகள் ஓடின. ஒரு புறா தனக்கு இத்தனை உதவி செய்கிறதே என அவன் மனம் இளகியது. தான் வலையில் பிடித்திருந்த அதனுடைய பெண் துணையை வெளியே விட்டு விட்டான்.

    பெண்புறா பறந்து தப்பிக்கவில்லை. 'விருந்தோம்பல் என்றால் சாப்பாடு போடுவதுதான். இந்த வேடன் நம் விருந்தா ளியாக வந்துவிட்டுப் பட்டினி கிடக்கி றானே? இவனுடைய பசியைப் போக்குவதே நம் தர்மம்' என்று நினைத்தது பெண் புறா.

    `வேடனே, உன் பசிதீர என்னை உணவாக எடுத்துக்கொள்' என்று சொல்லி அந்த நெருப்பில் சடாரென விழுந்து உயிர்த்தியாகம் செய்துவிட்டது.

    இதைப் பார்த்துக்கொண்டிருந்த அதனுடைய ஜோடிப் பறவை `என்னையும் உணவாக ஏற்றுக்கொள்' என்று சொன்னவாறே தானும் அந்த நெருப்பிலேயே விழுந்து தன்னையும் அவனுக்கு உணவாக அளித்துவிட்டது.

    திகைத்துப்போன வேடன் சிந்தனையில் ஆழ்ந்தான். பறவைகளுக்கு இத்தகைய பண்பு நலனா? என்று எண்ணியெண்ணி வியந்தான். தன் வில்லையும் அம்பையும் ஒடித்துப் போட்டுவிட்டான்.

    அன்றுமுதல் அவன் வேட்டையாடுவதையே விட்டுவிட்டான். விருந்தோம்பலின் சிறப்பை புறாக்களைப் பாத்திரங்களாக்கிச் சொன்ன பழைய கதை இது.

    சரணடைந்தவரை என்ன செய்தாகிலும் காப்பாற்ற வேண்டும் என்ற உயர்ந்த கருத்தைச் சொல்கிறது சோழ வம்சத்தின் முன்னோரான சிபிச் சக்கரவர்த்தியின் வரலாற்றில் வரும் நிகழ்ச்சி.

    அவனது அரண்மனையின் மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்தது ஒரு பருந்து. அதன் விழிகள் கீழே தனக்கு இரை கிட்டுமா எனப் பார்த்துக் கொண்டிருந்தன.

    அரண்மனை முற்றத்தில் ஒரு புறா தரையில் சிந்தியிருந்த தானியங்களைக் கொத்தித் தின்று கொண்டிருந்தது.

    இரை தின்னும் புறாவை இரையாக்கிக் கொள்ள நினைத்த பருந்து மேலிருந்து கீழே சடாரென இறங்கியது.

    பருந்திடமிருந்து தப்பிக்க வேண்டுமே? என்ன செய்வது இப்போது? தர்மநெறி தவறாத சிபிச் சக்கரவர்த்தியைச் சரணடைவோம். இப்படி எண்ணிய புறா, விருட்டென அரண்ம னைக்குள் பறந்து சென்று ராஜசபையில் வீற்றிருந்த சிபிச் சக்கரவர்த்தியின் பாதங்களின் கீழ் தஞ்சமடைந்து அமர்ந்துகொண்டது. அதன் உடல் அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருந்தது.

    சரணடைந்த புறாவை அன்போடு எடுத்து அதன் உடலின் நடுக்கத்தை நீக்கும் வகையில் ஆதரவோடு அதன் முதுகைத் தடவிக் கொடுத்தான் அரசன்.

    இதன் அச்சத்திற்குக் காரணம் என்ன என மன்னன் யோசிப்பதற்குள் அந்தக் காரணம் அவன் முன்னே பறந்துவந்து நின்றது! புறாவைத் துரத்திக் கொண்டுவந்த பருந்து மன்னனிடம் கடுமையான குரலில் பேசலாயிற்று.

    `புறா என் இரை. அதை நான் தின்னக் கொடுத்துவிடு.'

    `சாத்தியமே இல்லை பருந்தே! என்னைச் சரணடைந்துள்ளது இந்தப் புறா. சரணடைந்தவர்களைக் காப்பாற்றுவதே தர்ம நெறி. அப்படிச் செய்யாவிட்டால் பெரும் பாவம் என்னை வந்து சேரும்.`

    `புறாவைக் காப்பாற்றினால் என்னைப் பட்டினி போட்ட தேவை உன்னை வந்து சேரும். எந்தப் பாவம் தேவலாம் எனச் சிந்தித்துச் செயல்படு!` என்று அதட்டியது பருந்து.

    மன்னன் தீவிரமாக யோசித்தான். இரண்டு பாவங்களும் தனக்குச் சேராமல் இருக்க என்ன வழி? புறாவும் இறக்கக் கூடாது. பருந்தும் பசியைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதானே?

    ஏவலரை அழைத்து ஒரு தராசைக் கொண்டுவரச் சொன்னான். தராசின் ஒரு தட்டில் புறாவை அமர்த்தினான். தன் வாளை உருவி தன் காலின் தொடைச் சதையை வெட்டி எடுத்து இன்னொரு தட்டில் வைத்தான்.

    சமமான எடையளவு சதை தட்டில் வைக்கப்பட்டதும் `இந்த மாமிசத்தை உணவாக எடுத்துக் கொண்டு போ. புறாவைத் தொடாதே!` என்றான் மன்னன்.

    இந்தச் செய்தி பழைய தமிழ் இலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்ற மன்னனின் கொடைச் சிறப்பைப் பற்றிப் பேசும்போது, `பருந்துக்குத் தன் சதையை உணவாகக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தியின் மரபில் வந்தவன்' என்கிறது புறநானூறு. புலவர் மாறோக்கத்து நப்பசலையார், புலவர் கோவூர் கிழார் இருவரும் இந்தச் செய்தியைத் தங்கள் பாடல்களில் பேசுகிறார்கள்.

    சிலப்பதிகாரத்தில் தன் கணவன் கொலைக்குப் பாண்டிய மன்னனிடம் நியாயம் கேட்கும் கண்ணகி, தான் பிறந்த சோழநாட்டு மன்னனின் அருளாட்சி பற்றி விவரிக்கும்போது சிபிச் சக்கரவர்த்தி புறாவைக் காப்பாற்றிய வரலாற்றை எடுத்துரைக்கிறாள்.

    `சரணடைந்தோரைக் காப்பாற்றும் சிபிச் சக்கரவர்த்தியின் நாட்டில் இருந்து வந்தி ருக்கிறேன். ஒரு புறாவைக் காப்பாற்றிய அவன் எங்கே? என் கணவனை கொலை உண்ணக் காரணமான நீ எங்கே?` என்பதுதான் கண்ணகி கேட்ட கேள்வியின் மறைபொருள்.

    செய்ந்நன்றியறிதல் என்ற உயரிய குணத்தை விளக்கவும் புறாவைப் பாத்திரமாகக் கொண்ட ஒரு கதை சொல்லப்படுகிறது.

    பொய்கைக் கரையில் வளர்ந்தி ருந்த ஒரு மரத்தின் மேல் அமர்ந்திருந்தது ஒரு புறா. கீழே குளத்தில் ஒரு கட்டெறும்பு எப்படியோ விழுந்து தத்தளித்துக் கொண்டி ருப்பதைப் பார்த்தது அது.

    புறாவின் மனத்தில் இரக்கம் பொங்கியது. எப்படியாவது இந்த எறும்பைக் காப்பாற்ற வேண்டுமே? மரத்தில் இருந்து ஓர் இலையை அலகால் கொத்திப் பறித்து, எறும்பின் அருகே விழுமாறு குளத்து நீரில் வீசியது.

    கட்டெறும்பு மெல்லத் தத்தித் தத்தி வந்து அந்த இலையின் மேல் ஏறிக் கொண்டது. இலை காற்றில் அசைந்தசைந்து கரையில் ஒதுங்கிய போது எறும்பும் உயிர் போகாமல் கரைசேர்ந்து விட்டது. மேலே கிளையில் அமர்ந்து தன்னைக் காப்பாற்றிய மேலான செயலைச் செய்த புறாவை நன்றியோடு பார்த்தது எறும்பு.

    காலம் கொஞ்சம் சென்றது. பொய்கைக் கரைக்கு வந்தான் ஒரு வேடன். அதே புறா அன்று மரக்கிளை ஒன்றில் தன்னை மறந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. வேடன் ஒலியெழுப்பாமல் வில்லில் அம்பைப் பூட்டினான். புறாமேல் எய்ய வேண்டிக் குறிபார்த்தான்.

    அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டது கட்டெறும்பு. என்ன இது? புறா வேடனைக் கவனிக்கவே இல்லையே? தன்னைக் காப்பாற்றிய புறாவின் உயிரைத் தான் காப்பாற்ற வேண்டுமே?

    யோசித்த கட்டெறும்பு, ஊர்ந்துவந்து வேடனின் காலை நறுக்கெனக் கடித்தது. ஆ என அலறினான் வேடன். அவன் வைத்த குறி தவறி அம்பு புறாவைத் தாக்காமல் எங்கோ போய் விழுந்தது. அவன் அலறல் ஒலிகேட்டு திகைத்த புறா பறந்துசென்று தப்பித்துக் கொண்டது.

    நாம் ஒருவருக்கு நன்மை செய்தால் அது நமக்கே திரும்ப வரும் என்ற நீதியைச் சொல்லும் இக்கதை பஞ்சதந்திரக் கதைகளில் ஒன்று.

    புறாக்கள் காலம் காலமாக நம் மனத்தில் பற்பல ஆன்மிகச் சிந்தனைகளை எழுப்புகின்றன. புறாக்கள் தூது செல்லப் பயன்பட்டிருக்கின்றன. சமாதானச் சின்னமாகவும் கொண்டாடப்படுகின்றன. சண்டையிடாமல் சமாதானமாக இருப்பதிலும் விருந்தினர்களை உபசரிப்பதிலும் துன்பத்தில் ஆழ்வோருக்கு உதவி செய்வதிலும் நாம் புறாக்களைப் பின்பற்றலாம்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • கட்டியிருந்த பட்டுப்புடவை யுடனேயே படப்பிடிப்புக்கு சென்றேன்.
    • மறக்க முடியாத நினைவுகள் உண்டு.

    மதுரை டூ காரைக்குடி... தினசரி பயணமாகி விட்டது. அதிகாலையில் ஆஸ்பத்திரியில் இருந்து புறப்பட்டு காரைக்குடி செல்வேன்.

    இரணியன் பட காட்சியில் நடித்து விட்டு இரவில் மதுரை ஆஸ்பத்திரிக்கு வருவேன். அம்மாவை பார்த்துவிட்டு எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் இரவில் தூங்குவேன்.

    தினமும காரைக்குடிக்கு சென்று இரணியனுக்காக நடித்தாலும் மனம் மட்டும் பிரகலாதனை போல் என் அம்மா மீதே இருந்தது என்பதே உண்மை.

    அந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் காட்சிகளில் சொதப்பாமல் சிறப்பாக நடித்ததாக டைரக்டர் பாராட்டினர். அது மனதுக்கு நிறைவாக இருந்தது.

    அம்மா உடல் நலம் தேறிக்கொண்டிருந்தார். ஒரு நாள் டாக்டர் என்னை அழைத்தார்.

    'மேடம், அம்மா ரொம்ப டென்ஷனாக இருக்கிறார்கள். அந்த அளவு டென்ஷனை கொடுக்காதீர்கள்' என்று ஆலோசனை வழங்கினார்.

    அதை கேட்டதும் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் அம்மா டென்ஷன் ஆகும் வகையில் நடந்ததில்லை.

    ஆனால் இரவு-பகல் பாராமல் உழைத்தது. சரியான சாப்பாடு கிடையாது. தூக்கம் கிடையாது. அதையெல்லாம் அருகில் இருந்து பார்த்து கொண்டிருந்தவர் அம்மா.

    ஒரு தாயாக பிள்ளைபடும் கஷ்டங்களை பார்க்கும் போது இயல்பாகவே அவரது மனமும் கஷ்டப்படத்தானே செய்யும். அப்படித்தான் அவரது மனமும் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகி இருக்கும் என்பதை புரிந்து கொண்டேன்.

    முடிந்தவரை அம்மா மனம் கஷ்டப்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று மனதுக்குள் முடிவு செய்து கொண்டேன்.

    ஆடத்தெரியாதவர் தெருகோணல் என்று சொல்வாராம். அப்படியானால் ஆடத் தெரிந்தவர்....?

    பாரம்பரிய நடனத்தை முறையாக கற்றிந்த நானே அய்யய்யோ நம்மால் ஆட முடியுமா? என்று தயங்கியதும் உண்டு.

    நடிகர் சிரஞ்சீவியுடன் தெலுங்கு படமான முட்டா மேஸ்திரியில் நடித்தேன். அந்த படத்தில் 'சிக்கி சிக்கி சான்....' என்ற சூப்பரான பாடல் காட்சி. நானும் சிரஞ்சீவியும் ஆடும் டூயட் பாடல் அது.

    அந்த கால கட்டத்தில் தான் 'ஹிப்-ஹாப்' நடனம் நமது திரை உலகிலும் அறிமுகம் ஆனது. அந்த படத்தில் நடன மாஸ்டர் பிரபுதேவா.

    சிக்கி சிக்கிச்சான் பாடலில் அவர் ஹிப்-ஹாப் நடனத்தையும் புகுத்தி இருந்தார். அது ஒரு மேற்கத்திய இசை நடனம்.

    அமெரிக்காவில் உருவானதாக சொல்வார்கள். இதில் அப்ராக், பிரேக்கிங் மற்றும் பங்க் ஸ்டைலும் அடங்கும்.

    அந்த பாடல் காட்சியில் நடிக்க அந்த வகை நடனத்தை மாஸ்டர் சொல்லித் தந்தார். டான்சர்ஸ் ஆடிக் கொண்டே இருந்தார்கள். நானும் சொல்லித் தந்தபடி ஆடினேன். ஒரே மூவ்மென்ட்டை 4 தடவை ஆடனும். எனக்கு ஒரு தடவை ஒழுங்காக வரும். பின்னர் வராது. அய்யய்யோ நமக்கெல்லாம் இந்த 'ஸ்டெப்' வராது போயிருக்கேன் என்று மனசுக்குள் நினைத்தேன். அதை எப்படி வெளியே சொல்வது?

    மீனா என்றால் பெரிய டான்சர்.... அவளே ஆட முடியாது என்றால்... மனசுக்குள் அவ மானமாக இருந்தது.

    நான் தயங்கியதை பார்த்து சிரஞ்சீவி என்னை ஊக்கப்ப டுத்தினார். ம்.... ஆடு.... உன்னால் நிச்சயம் முடியும் என்று உற்சாகப்ப டுத்தினார். இருந்தாலும் என்னால் முடியவில்லை என்பதை மாஸ்டரிடம் சொல்லி விட்டேன். பின்னர் நான் சரியாக நடித்த 2 டேக்குகளை எடுத்து காட்சியில் சேர்த்தார்கள்.

    அந்த பாட்டு தெலுங்கில் சூப்பர் ஹிட்டானது. ஆந்திராவில் பட்டி தொட்டி யெல்லாம் ஒலித்தது. அந்த படத்தில் நடித்த போது ஒருநாள் சிரஞ்சீவி அவரது வீட்டில் இருந்து டிபன் கொண்டு வந்து எல்லோருக்கும் பரிமாறினார்.

    தோசையும், சிக்கனும் தான். பரிமாறியதுமே வாசனை மூக்கை துளைத்தது. வாவ்..... தோசை இவ்வளவு மிருது வாக இருக்குமா?

    மிருது வான தோசை... கூடவே சிக் கன்... செம டேஸ்ட். அந்த மாதிரி ருசி யான மிருது வான தோசை. நான் சாப்பிட் டது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

    மேடம் சூப்பரா பண்ணியி ருக்காங்க என்றேன். அது மட்டு மல்ல. அதை பார்த்து விட்டு என் அம்மா அவரது மனைவியை பார்த்து பேசி 'நானும் இந்த மாதிரி தோசை சுட கத்துக்கணும்' என்று ஆசைப்பட்டார்.

    அந்த சமயத்தில்தான் நடிகர் விஜய்-சங்கீதா திருமணம் சென்னையில் நடந்தது. நானோ பயங்கர பிசியாக இருந்தேன். ஐதராபாத், சென்னை, கோவை என்று ஓடிக் கொண்டிருந்தேன்.

    எப்படியாவது திருமணத்துக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அவசரமாக சென்னைக்கு வந்தேன்.

    என்னிடம் ஒரு பழக்கம் உண்டு. நிகழ்ச்சியை பொறுத்து உடை அணிந்து செல்வேன். திருமண நிகழ்ச்சிகளுக்கு எப்படி செல்ல வேண்டும்? கோவில்களுக்கு சென்றால் எந்த மாதிரி செல்ல வேண்டும்? குடும்ப விழாக்களில் கலந்து கொள்ளும்போது எப்படி இருக்க வேண்டும்? சினிமா தொடர்புடைய நிகழ்ச்சிகளுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்? என்று எனக்கு நானே வரையறை வைத்துள்ளேன்.

    திருமண நிகழ்ச்சி என்றால் பட்டு புடவை கட்டி, தலையில் பூ வைத்து, நிறைய நகைகள் அணிந்து செல்வேன். எனவேதான் விஜய் கல்யாண வரவேற்பு நிகழ்ச்சிக்காகவும் பட்டு புடவை அணிந்து சென்றேன். துணைக்கு அப்பாவை அழைத்து சென்றேன். விஜய்க்கு வாழ்த்து சொல்லி விட்டு உடனே ஷூட்டிங் செல்ல வேண்டும். வீட்டுக்கு சென்று உடை மாற்றி செல்லக்கூட நேரமில்லை.

    திருமண நிகழ்ச்சியை யை முடித்து விட்டு காரில் வைத்தே நகைகளை கழட்டி அப்பாவிடம் கொடுத்தேன். கட்டியிருந்த பட்டுப்புடவை யுடனேயே படப்பிடிப்புக்கு சென்றேன். இரவு 10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து கோவைக்கு ரெயிலில் புறப்பட்டேன். தொடர்ந்து பொள்ளாச்சியில் படப்பிடிப்பு. தல.. தளபதி... என்று ரசிகர்கள் கொண்டாடும் இருவரோடும் மறக்க முடியாத நினைவுகள் உண்டு. அதுபற்றி அடுத்த வாரம் விவரிக்கிறேன். பை.... பை..

    (தொடரும்)

    ×