என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவாலங்காடு"

    • ரெயில்வே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
    • தண்டவாளத்தில் இருந்த போல்ட்- நட் மற்றும் சிறிய இரும்பு துண்டுகளை மர்ம நபர்கள் கழற்றி சென்று விட்டனர்.

    திருவள்ளூர்:

    சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் நோக்கி செல்லும் ரெயில்கள் திருவாலங்காடு ரெயில் நிலையம் வழியாக கடந்து செல்லும். மின்சார ரெயில்கள், சரக்கு ரெயில்கள் மற்றும் விரைவு ரெயில்கள் போக்குவரத்திற்கு இந்த ரெயில்பாதை முக்கியமானதாக உள்ளது.

    இதில் திருவாலங்காடு- அரிச்சந்திராபுரம் இடையே பிரதான தண்டவாளத்தில் இருந்து பிரியும் "லூப் லைன்" பாதை உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை 1.15 மணியளவில் இந்த இணைப்பு தண்டவாளத்தில் இருந்த போல்ட்- நட் மற்றும் சிறிய இரும்பு துண்டுகளை மர்ம நபர்கள் கழற்றி சென்று விட்டனர். இதனால் அங்கிருந்த சிக்னலில் கோளாறு ஏற்பட்டது.

    ரெயில் பாதையில் சிக்னல் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த திருவாலங்காடு நிலைய அலுவலர் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக தண்டவாளத்தை ஆய்வு செய்தனர்.

    அப்போது திருவாலங்காடு- அரிச்சந்திராபுரம் அருகே இணைப்பு தண்டவாளத்தில் இருந்த போல்ட்-நட் மற்றும் இரும்பு துண்டுகளை மர்ம நபர்கள் கழற்றி எடுத்துச் சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனால் பிரதான தண்டவாளத்தில் இருந்து லூப்லைனுக்கு மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. நள்ளிரவு நேரத்தில் அவ்வழியே மற்ற பயணிகள் ரெயில் மற்றும் சரக்கு ரெயில் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இல்லையெனில் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும்.

     

    இதுகுறித்து உடனடியாக ரெயில்வே அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இரவு நேரம் என்பதால் லூப்லைனை உடனடியாக சரிசெய்வதில் சிரமம் ஏற்பட்டது. பிரதான தண்டவாளத்தில் எந்த பிரச்சினையும் இல்லாததால் அவ்வழியே மற்ற ரெயில்கள் பாதிப்பு இல்லாமல் இயக்கப்பட்டன.

    தகவல் அறிந்ததும் தெற்கு ரெயில்வே பாதுகாப்புப் படை ஐ.ஜி.ஈஸ்வர ராவ், சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத், தமிழக ரெயில்வே ஐ.ஜி ஏ.ஜி.பாபு திருத்தணி டி.எஸ்.பி.கந்தன், கைரேகை நிபுணர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்தனர். சென்னையில் இருந்து மோப்ப நாய்கள் ஜான்சி, தாராவும் வரவழைக்கப்பட்டன.

    போலீசார் மற்றும் அதிகாரிகள் தண்டவாளத்தில் போல்ட்-நட்டுகள் கழற்றப்பட்ட இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய்கள் அங்கிருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி நின்றது.

    அதிகாலை முதல் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தண்டவாளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். காலை 8.30 மணி அளவில் தண்டவாள இணைப்புகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டது. பின்னர் அரக்கோணத்தில் இருந்து வந்த சரக்கு ரெயிலை சரி செய்யப்பட்ட தண்டவாளத்தில் இயக்கி சரிபார்த்தனர். திருவாலங்காட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் இறந்து உள்ள நிலையில் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டம் ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் திருவாலங்காடு அருகே தண்டவாளத்தில் இருந்து போல்ட்-நட்டுகளை மர்ம நபர்கள் கழற்றி சென்று உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரெயிலை கவிழ்க்கும் முயற்சியாக இது நடந்து இருக்கலாம் என்று ரெயில்வே போலீசாரும், அதிகாரிகளும் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக அரிச்சந்திராபுரம் பகுதியை சேர்ந்த சிலரிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதேபோல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் லூப்லைனில் போல்ட்-நட்டுகள் கழற்றப்பட்டதால் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்கியது.

    சரக்கு ரெயில் மீது கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 19 பயணிகள் காயமடைந்தனர். எனினும் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.

    இந்தநிலையில் தற்போது மீண்டும் திருவாலங்காடு அருகே அதேபோல் தண்டவாள லூப்லைன் பகுதியில் போல்ட்-நட்டுகள் கழற்றப்பட்டு உள்ள சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக அரக்கோணம் ரெயில்வே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • புதிய தடுப்பணையின் மூலம் சுமார் 30 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கமுடியும்.
    • வருடத்திற்கு 2 போகம் நெல்விளைவிக்க முடியும் என்று விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    ஆந்திர மாநிலம், அம்மப்பள்ளி அணைக் கட்டில் இருந்து வெளியேறும் நீர், திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே, கொசஸ்தலை ஆற்றில் கலந்து, திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியம், வழியாக பாய்ந்து பூண்டி நீர்த்தேக்கத்தை சென்றடையும்.

    ஒவ்வொரு ஆண்டு பருவமழையின் போதும் கொசஸ்தலையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பூண்டி ஏரி நிரம்பியதும், தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.

    இதையடுத்து கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டி தண்ணீரை சேமித்து விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து திருத்தணி இழுப்பூரில் தற்போது கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுமார் 30 கிராமமக்கள் பயன்பெறுவார்கள். மேலும் வருடத்திற்கு 2 போகம் நெல்விளைவிக்க முடியும் என்று விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் திருவாலங்காடு அருகே லட்சுமிவிலாசபுரம் பகுதியில் 230 மீட்டர் அகலத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் புதிதாக ஒரு தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்கான பணி ரூ.22 கோடியில் நடைபெற உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய தடுப்பணையின் மூலம் சுமார் 30 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கமுடியும். இதன் மூலம் சுற்றி உள்ள கிராமமக்கள் பயன் பெறுவார்கள். நிலத்தடி நீர்மட்டமும் உயரும். புதிய தடுப்பணை பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவாலங்காடு அருகே எல்விபுரம் கொசஸ்தலையாற்றில் புதிதாக தடுப்பணை கட்ட இடம் தேர்வு செய்து மண் பரிசோதனை செய்தனர். இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனையும் தொடங்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×