search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.கே.சேகர்பாபு"

    • பவுர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
    • நேற்று கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

    சென்னை:

    திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்களும், பவுர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தும் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

    இந்த கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கிடும் வகையில் பெருந்திட்ட வரைவின் கீழ் ரூ.36.41 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும், 2024 - 2025-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்ட மன்ற மானியக் கோரிக்கையின்போது, "திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலின் கிரிவலப் பாதையில் பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ஏதுவாக ரூ.23 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்" எனவும், "கோவிலில் பக்தர்களின் வசதிக்காக புதியதாக பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்" எனவும் அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்புகளை நிறைவேற்றிடும் வகையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் நேற்று கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை, கிரிவலப் பாதையில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் அரசுக்கு சொந்தமாக 15 இடங்களில் கழிவறைகள் மற்றும் குளியலறைகள் ஏற்படுத்துதல் மற்றும் 2 இடங்களில் 7 பக்தர்கள் இளைப்பாறும் கூடங்கள் அமைத்தல், ரூ.50 கோடி மதிப்பீட்டில் பக்தர் கள் தங்கும் விடுதி – 2 அமைத்தல் போன்றவை குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி விளக்கப்பட்டது.

    கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், "திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, பிற மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நாம் நல்லமுறையில் செய்து தந்திட வேண்டும்.

    கிரி வலப்பாதையில் அமைக்கப்படும் கழிவறைகள் மற்றும் குளியலறைகளின் உயரம் சுமார் 13 அடி உயரம் கொண்டதாகவும், நல்ல காற்றோட்டத்துடன் சர்வதேச தரத்தில் அமைக்கப்படுவதோடு, அதற்கான அணுகு சாலை கலை நயத்துடன் செம்மையாக அமைக்கப்பட வேண்டும்.

    பக்தர்கள் தங்கும் விடுதியானது நீருற்றுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டதாக இருந்திட வேண்டும். இதுகுறித்த விரிவான திட்ட அறிக்கையினை உடனடியாக தயார் செய்து பணிகளை விரைவுபடுத்திட அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

    கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் சுகுமார், ஹரிப்ரியா, தலைமைப் பொறியாளர் பெரியசாமி, கோவில் இணை ஆணையர், செயல் அலுவலர் ஜோதி, அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கால அவகாசம் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24 , 25 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.

    இம்மாநாட்டில் பங்கேற்கவும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் https://muthamizhmuruganmaanadu2024.com/ என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டு, மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் 15.7.2024-ம் தேதிக்குள்ளும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்புபவர்கள் 10.7.2024-ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 1,003 ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டு, அவற்றை பரிசீலிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்பதற்கு பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்கிட வேண்டுமென பல்வேறு தரப்பினரிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழு முடிவுகளின்படி பங்கேற்பாளர்கள் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஆகவே, மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் இறையன்பர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கோவில்களில் ஓதுவாா் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்படும்.
    • 50 கோவில்களில் 100 இசைக் கலைஞா்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படுவா்.

    சென்னை:

    தமிழக சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்புகளில் கூறியிருப்பதாவது:-

    ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் பயன்பெறும் 17 ஆயிரம் கோவில்களுக்கு வைப்புத் தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயா்த்தி அளிக்கப்படும். இதற்காக ரூ.85 கோடி அரசு நிதியாக அளிக்கப்படும்.

    இந்த திட்டத்தில் நிகழாண்டு ஆயிரம் நிதி வசதியற்ற கோவில்களும் இணைக்கப்படும். அத்தகைய கோவில்களில் உள்ள அா்ச்சகா்களுக்கு மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

    ஆறு கோவில்களில் பக்தா்களுக்கான ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஏதுவாக பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு ரூ.177.10 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் நிகழாண்டில் அழகா்கோவில், மருதமலை முருகன் கோவிலுக்கு விரிவுபடுத்தப்படும்.

    பழனியில் உள்ள முருகன் கோவில் சாா்பாக நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டியுடன் இனி மதிய உணவும் வழங்கப்படும். நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் ஐந்து கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

    அதன்படி, கோவை ஈச்சனாரி விநாயகா் கோவில், சோளிங்கா் லட்சுமி நரசிம்மசுவாமி கோவில், குலசை முத்தாரம்மன் கோவில், கும்பகோணம் உப்பிலியப்பன் கோவில், திருச்சி தாயுமானசுவாமி கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம் அளிக்கப்படும்.

    ஒருவேளை மட்டும் அன்னதானம் வழங்கும் திட்டம், சென்னை மதுரவாயல் மாா்க்கசகாயேஸ்வரா், புழல் திருமூல நாதசுவாமி, திருச்சி லால்குடி பிடாரி அய்யனாா், பெரம்பலூா் அபராதரட்சகா், திருப்பூா் அழகு நாச்சியம்மன், கடலூா் காரத்தொழுவு அழகா் கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

    சென்னை மாநகரம் மற்றும் புறநகரில் அமைந்துள்ள 115 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். கோவை லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், தென்காசி இலஞ்சிகுமாரா் கோவிலுக்கு புதிய தங்கத்தேர்களும், திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயா், குமாரவயலூா் முருகன், மணப்பாறை நல்லாண்டவா், திருநாகேஸ்வரம் கோவில்களுக்கு புதிதாக வெள்ளித்தோ்கள் செய்யப்படும்.

    ராமேசுவரம், காசி ஆன்மிகப் பயணத்துக்கு நிகழாண்டு 420 மூத்த குடிமக்கள் அழைத்துச் செல்லப்படுவா். கடலூா் மாவட்டம் வடலூா் அருட்பிரகாச வள்ளலாா் அவதரித்த இல்லம் மறுசீரமைத்து கட்டப்படும்.

    மேலும், 22 வழிபாட்டு மடங்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். கோவில்களின் ஆவணங்களை காக்கும் நோக்குடன் முதல் கட்டமாக முக்கிய கோவில்களின் ஆவணங்கள் பாதுகாக்கப்படும்.

    மயிலாப்பூா் கபாலீஸ்வரா், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி, ஸ்ரீவில்லிபுத்தூா் நாச்சியாா், சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி, கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோவில்களின் கோபுரங்கள், விமானங்கள் இரவு நேரங்களில் ஒளிரும் வகையில் ஒளிரூட்டப்படும்.

    19 கோவில்களில் புதிய ராஜகோபுரங்களும், 17 கோவில்களில் புதிதாக திருமண மண்டபங்களும், 23 கோவில்களில் புதிய வணிக வளாகங்களும், 35 கோவில்களில் அடிப்படை வசதிகளும், 12 கோவில்களில் அா்ச்சகா்கள், பணியாளா்கள் குடியிருப்புகளும் ஏற்படுத்தப்படும்.

    பக்தா்களின் வசதிக்காக, பழனி, திருவண்ணாமலையில் புதிதாக தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் ரூ.23 கோடியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்.

    திருவாரூா் தியாகராஜ சுவாமி, திருவாலங்காடு ஆலாங்காட்டு ஈசுவரா் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடத்தப்படும். 50 கோவில்களில் 100 இசை கலைஞா்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படுவா். பழனி, சென்னை மயிலாப்பூா் கோவில்களில் ஓதுவாா் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறி உள்ளார்.

    ×